தாடகைமலைமனிதர்- கடிதங்கள்

 

Nanjil Lunch SFE, NM

அன்பு ஜெ,

வணக்கம்.நலமா?

சிங்கப்பூருக்கு வந்துவிட்டுச்சென்றபின் உங்களைத் தனிமடல் வழி தொடர்பு கொள்ளவில்லை எனினும் வெய்யோன் வழி தினமும் உங்களைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன். மனம் நெகிழ்ந்து, கதறுதலுக்குத்தயாராகி ,வெளிப்படுத்தத் தயங்கி, இறுகிக்கிடந்த தருணங்கள் வெய்யோனின் மகனுக்குரியவை. மிகவும் நன்றி.

மண்ணுக்கு அடியில் வாழும் உரகர்களின் கதை பலவேறு விரிவுகளைக் கொண்டு வருகின்றது. சிங்கப்பூரிலும், தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரைக்கடியில்தான் வாழ்வுவிழைவோடு ஓடிக்கொண்டிருக்கிறோம் ரயில்களில்.

வருகிற மார்ச் 5ஆம் தேதி மாலையில், சிங்கப்பூரில் வாசகர் வட்ட ஆண்டு விழா நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. 2014ஆம் ஆண்டு நீங்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில், இந்த வருடம் திரு. நாஞ்சில்நாடன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார். எனக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த செய்தி என்னவென்றால் நாஞ்சில் நாடன் அவர்கள் இதுவரை சிங்கப்பூருக்கு வந்ததில்லையாம். தமிழகப் பட்டிமன்றப்பேச்சாளர்கள் பலருக்கு இங்கே நிரந்தரவாச விசாவே கொடுக்கும் அளவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

தக்கநேரத்தில், நாஞ்சில் சார் பற்றிய  தங்களது குறிப்புகளை (தாடகைமலையடிவாரத்தில் ஒருவர்) மீள்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. அவரைப்பற்றிய சித்திரத்தை இயல்பாக அறிந்தறிய உதவுகின்றன.

அன்பும் நன்றியும்

எம்.கே.குமார்

 

அன்புள்ள எம் கெ குமார்,

நாஞ்சில்நாடனின் வருகை சிங்கப்பூருக்கு ஒரு நல்வாய்ப்பாகவும், ஒரு நட்பனுபவமாகவும் அமையும்.

ஆனால் பொதுவாக நான் சொல்ல ஒன்றுண்டு. எழுத்தாளர்களை, குறிப்பாக நாஞ்சில் போன்ற எழுத்தாளர்களை, ஃபேஸ்புக்கிலும் பிற ஊடகங்களிலும் நாம் கொண்டாடும் சமூகவியல் விவாதம், அரசியல் அலைகள், வம்புகள் அடங்கிய உலகைச்சேர்ந்தவர்களாக எண்ணக்கூடாது. அவர்கள் வாழ்வது இங்குள்ள இந்த உலகில் அல்ல

நாஞ்சில்நாடன் போன்ற படைப்பாளிகள் ஒரு குறிப்பிட்ட நிலத்தின், பண்பாட்டின் அடையாளங்கள். ஒரு அழிந்துபோன காட்டில் இருந்து எஞ்சிய விதைத்தொகுதி போல. பாரம்பரியம்சார்ந்த உள்ளுணர்வுகளும் நினைவுகளும் மொழிவெளிப்பாடுகளும் நிறைந்தவர்கள். எழுத்தாளன் என்பவன் ஒருவகை பழங்குடியினன் என ஃபாக்னர் சொன்னார். அதை நாஞ்சில்நாடன் போன்றவர்களை வைத்தாவது உணரலாம்

நாஞ்சிலிடம் சென்று நாம் அறிந்ததை அவர் அறிந்திருக்கிறாரா, நாம் ஏற்றுக்கொண்டதை அவரும் ஏற்றுக்கொள்வாரா என்று ஆராய்வதே நாம் செய்யக்கூடிய பெரும்பிழை. அவர் குரலைக் கேட்கும் செவி நமக்கிருக்கவேண்டும்

ஜெ

அன்பின் ஜெயமோகன்

 

நாஞ்சில் பற்றி நீங்கள் எழுதி, திரும்பவும் பதிந்துள்ளதை மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி.  2012 ல் நா.நா எங்களுடன் தங்கியிருந்ததில், எல்லோருக்கும் இன்றும் மனநிறைவு, முக்கியமாக அண்மையில் 80 வயதைத் தொட்ட அப்பாவுக்கு.   குமரி மாவட்டத்துக்காரரும், முன்னாள் தஞ்சை மாவட்டத்துக்காரரும் (81 லிருந்து பெற்றோர்கள் யூ எஸ் வாசிகள்)  சளைக்காமல் கதைத்து எப்படியோ இருவர்களுக்கும் பொதுவாக தெரிந்த நண்பர்களை குறித்து பேசியது ஆச்சரியமாக இருந்தது. – நா நா  – “உண்மையான” (authentic) மெக்ஸிக்கன் உணவகத்தில் மதிய உணவு சாப்பிடும் போது எடுத்தப்படம் இணைந்துள்ளது.  முதலில் பிராக்கெலி அவரை மிரட்டியது ஞாபகமுள்ளது. மீதம் வைக்காமல் புது வகை உணவை ரசித்து உண்டார்.

அன்புடன்,

வாசன்

Vassan Pillai

http://vassan.koLLidam.com

 

அன்புள்ள வாசன் ,

நாஞ்சில் நிரந்தரப்பயணி. ஆனால் எல்லா பயணமும் அவருக்கு குமரிமாவட்டத்தின் நுண்ணிய விரிவாக்கங்கள்தான். புரொக்கோலியை இங்குள்ள எந்தக்காயுடன் உவமித்தார் என எண்ணிக்கொள்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 73
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு