அன்பின் ஜெ.எம்.,
நலம்தானே.
’ஊர் புகுதல்’, ’தீ அறியும் ’வாசித்தேன்.
அனந்தன்,அம்மா ,தங்கம்மா,போத்தி – ஏன் அப்பாவும் கூடத்தான் மனதைக் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு மகத்தான நாவலாக வளர்ந்து வரும் அசோகவனத்தை எழுதும்போதே உடனுக்குடன் வாசிக்க முடியும் அனுபவம் இணையத்தால் வாய்ப்பதில் கிட்டும் மகிழ்ச்சி அளவற்றது.
சிலுவையின் பெயரால் நூல், பேராயரின் பாராட்டுக்கு உரித்தானது ,மதம் சார்ந்த நிறுவனங்கள் மீதான அவநம்பிக்கையைச் சற்றே குறைக்கிறது.
’மதங்கள் காட்டும் கிருஷ்ணனையும் கிறிஸ்துவையும் இன்னும் அண்மையாகச் சென்று இன்னும் நேரடியாக அறிய முடியுமா என்று முயல்கிறேன்’ என்று நீங்கள் உங்கள் மறுமொழியில் எழுதியிருந்ததால் அது சார்ந்து நெடுநாளாக என் உள்ளத்திலுள்ள ஐயத்தை முன் வைக்கிறேன்.
கேரளத்தில் பாதிரியாராக வாழ்வைத் தொடங்கிப் பின் அதிலிருந்து விலகி வந்து விட்ட ஜோசஃப் இடமருகு என்பவர் மலையாளத்தில் எழுதிப் பின்பு தமிழிலும்மொழியாக்கம் செய்யப்பட சிறு நூலாகிய ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் இரண்டும் கற்பனையே’என்ற நூலில் இடம் பெற்றுள்ள தரவுகள்..அவற்றை ஒட்டிய ஆதாரங்கள் ஆகியவற்றின் நம்பகத் தன்மை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலோடிருக்கிறேன்.
தாங்கள் முன் வைப்பது தத்துவார்த்தத் தளம் என்பதை நன்கறிவேன்;எனினும் அந்த நூல் சில வரலாற்று ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டு போவதால் அவை குறித்த மேலதிக விவரங்களை உங்கள் வழி தெரிந்து கொள்ளப் பெரிதும் விழைகிறேன்.
நன்றி,
எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
http://www.masusila.blogspot.com
http://www.google.com/profiles/susila27
அன்புள்ள சுசீலா,
தனிப்பட்டமுறையில் எனக்கு திரு ஜோசப் இடமறுகு அவர்களை தெரியும். அவரை நான் சச்சிதானந்தனின் சாகித்ய அக்காதமி அலுவலக அறையில் 1991ல் முதன்முறையாக சந்தித்தேன். அதன் பின் இருமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். தனிப்பட்ட சில கடிதங்களும் அனுப்பியிருக்கிறார். நேர்மையானவர் , தன்னுடைய கொள்கையில் உறுதியானவர் என்று அவரை என் மனம் மதிப்பிட்டது. இன்றும் அந்த மதிப்பு நீடிக்கிறது
1934ல் கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் இடமறுகு. [இடமறுகு என்பது குடும்ப பெயர். அதையே பெயராக கொள்வது கேரள மரபு. உலகெங்கும் உள்ளதும்கூட] ஆரம்பத்தில் கத்தோலிக்க மதப்பிரச்சாரகராக இருந்தார். தன் பத்தொன்பதாவது வயதில் ’கிறிஸ்து ஒரு மனிதர்’ என்ற நூலை வெளியிட்டார். ஆகவே அவரை சபை வெளியேற்றியது. ஈழவப் பெண்ணான ஸோலியை மணந்ததனால் அவரை சாதி விலக்கமும் செய்தார்கள்.
இடமறுகு ஆரம்பம் முதலே செய்தியாளராகவே பணியாற்றினார். இடதுசாரி அரசியலிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார். ரெவலூஷனரி சோஷலிஸ்டுப் பார்ட்டி [ஆர் எஸ் பி] யிலும் பின்னர் ரெவலூஷனரி கம்யூனிஸ்டு பார்ட்டி [ஆர் சி பி] யிலும் சேர்ந்து பணியாற்றினார். ஆர் சி பியின் மாவட்டப்பொறுப்பிலும் இருந்தார். அக்கட்சிகளின் இதழ்களை நிறுவி நடத்தினார்
1955ல் கம்யூனிஸ்டுக் கட்சி அரசியலில் நம்பிக்கை இழந்து அரசியல்பணியை நிறுத்திக்கொண்டார். மலையாள மனோரமா இதழின் டெல்லி செய்தியாளராக பணியாற்றினார். நெடுங்காலம் டெல்லியில் இடமறுகு செய்தியாளராக இருந்தார். விளம்பரம், தேராளி, யுக்தி போன்ற இதழ்களை தொடங்கி நடத்தினார்.
அவர் நிறுவிய இந்தியன் எதீஸ்ட் பப்ளிகேஷன் நாத்திகப்பிரச்சார நூல்களை வெளியிட்டிருக்கிறது. அவரது மகன் சனல் இடமறுகு இப்போது அதை நடத்தி வருகிறார்.
மதங்களும் ஆன்மீகமும் மனிதனை உலகவாழ்க்கையில் அவன் சந்திக்க நேரும் அநீதிகள் மற்றும் சுரண்டல்களை பொருட்படுத்தாமல் வாழ்வதற்கு பயிற்சி அளிக்கும்பொருட்டு உருவானவை என அவர் நம்பினார். அவற்றை உதறும் மனிதனே உண்மையான ஒழுக்கம் மற்றும் நீதியுணர்ச்சியுடன் வாழமுடியும் என அவர் வாதிட்டார். இலங்கையின் நாத்திகசிந்தனையாளரான கோவூரின் மாணாவர் இடமறுகு.
இடமறுகுவின் சிந்தனைகளை நாம் ஈ.வே.ரா அவர்களின் சிந்தனைகளுடன் ஒப்பிட முடியும். ஈ.வே.ராவை தன் முன்னோடியாக அவர் குறிப்பிடுவதும் உண்டு. ஆனால் முக்கியமான மூன்று வேறுபாடுகளை நாம் இருவரிடமும் காணலாம்.
இடமறுகு ஒட்டுமொத்தமாக சாதியையும், மதங்களையும், கடவுளையும் நிராகரித்தார். பழமைவாதம் மற்றும் மதநம்பிககிகளை நிறுவி பேணுவதில் அனைவருக்குமே சமமான பொறுப்பு இருப்பதாக அவர் நினைத்தார். ஆகவே அவர் எந்த குறிப்பிட்ட சாதியிடமும் காழ்ப்பு கொண்டவர் அல்ல. நாத்திகவாதத்தை பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்சாதி எதிர்ப்பு அரசியலின் கருவியாக ஆக்கிக்கொள்ள அவர் மறுத்தார். அதை ஒரு சமரசமில்லாத கருத்தாகவே முன்வைத்தார். அவரது நோக்கில் எல்லா கடவுள்நம்பிக்கைகளுமே மூடநம்பிக்கைகள்தான்.
இரண்டாவதாக இடமறுகு தன் கருத்துக்களை கோபதாபங்கள் , காழ்ப்புகள் இல்லாமல் தர்க்க ரீதியாக முன்வைத்தார். விவாதங்களுக்கு தயாராக இருந்தார். மூலநூல்களை கூர்ந்து வாசித்து ஆராய்ச்சிநோக்கில் அவர் பேசினார். ஆகவே அவர் எப்போதுமே எந்த ஆன்மிக , மத சிந்தனையாளனுக்கும் உரிய நியாயமான மறுதரப்புதான்.
மூன்றாவதாக, இடமறுகு எல்லா மதங்களையும் ஒரே நிலைபாட்டில் நின்று விமர்சனம் செய்தார். இந்து ,கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஆய்வுசெய்ய ஒரே அளவுகோலையே பயன்படுத்தினார். அதில் கடைசிவரை சமரசம் செய்துகொள்ளவில்லை.
இடமறுகுவின் நூல்களில் முக்கியமானவை ஐந்து. 1. கிறிஸ்துவும் கிருஷ்ணனும் ஜீவிச்சிருந்நில்ல 2. உபநிஷத்துக்கள் ஒரு விமர்சன படனம் 3. பகவத்கீத ஒரு விமர்சன படனம் 4. குரான் ஒரு விமர்சன படனம் 5. யுக்திவாத ராஷ்ட்ரீயம். 2006ல் தன்னுடைய எழுபத்திரண்டாம் வயதில் இடமறுகு மரணமடைந்தார்.
நான் இடமறுகு அவர்களின் நூல்களை கூர்ந்து வாசித்திருக்கிறேன். ஒரு ஆன்மீக சிந்தனையாளருக்கு நாத்திகசிந்தனையாளன் மிகச்சிறந்த விவாதத்துணை என்றே நான் நினைக்கிறேன். என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதி அவர்களுக்கு இடமறுகு அவர்களிடம் நல்லுறவும் தொடர்பும் இருந்தது. அவரது நூல்களில் உபநிஷத்துக்கள் ஒரு விமர்சன படனம் , பகவத்கீத ஒரு விமர்சன படனம் ஆகியவை முக்கியமானவை.
’கிறிஸ்துவும் கிருஷ்ணனும் ஜீவிச்சிருந்நில்ல’ என்ற நூலே இடமறுகுவை பரவலாக அடையாளம் காட்டியது. அந்நூல் ஒரு பரபரப்புநூல் என்று நினைக்கிறேன். ஆனால் உபநிஷத்துக்கள் ஒரு விமர்சன படனம், பகவத்கீத ஒரு விமர்சன படனம் ஆகியவை ஒரு நல்ல நாத்திகர் கேட்கச்சாத்தியமான முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன.
உபநிடதங்களிலும் கீதையிலும் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டும் இடமறுகுவின் நூல்கள் அவற்றைப்பற்றிய விமர்சன ஆய்வுக்கு பெரிதும் உதவக்கூடியவை. அவற்றில் உள்ள பல்வேறு இடைச்செருகல்கள், சமரசங்கள், போலிகளை சுட்டிக்காட்டுபவை. அவரது விமர்சனங்களை எதிர்நிலையாகக் கொண்டு உபநிடதங்களையும் கீதையையும் ஆராய்வது நம்மை கண்மூடித்தனமான மதநம்பிக்கையில் நின்று அவற்றை ஆராய்வதில் இருந்து காக்கும் என்பது என் எண்ணம்.
*
இடமறுகுவின் சிந்தனைகள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி குறித்து என் கருத்துக்களை மிகவிரிவாக எழுதவேண்டும். இப்போது சுருக்கமாக. இடமறுகு முன்வைக்கும் நாத்திகசிந்தனை என்பது ஐரோப்பாவில் ஐரோப்பிய மறுமலர்ச்சியின்போது உருவான ஒன்று. அது ஐரோப்பாவை அடக்கியாண்ட கத்தோலிக்க திருச்சபையின் வல்லாதிக்கத்துக்கு எதிரான ஒரு அறிவியக்கம். மேலைச்சிந்தனையில் கிரேக்கதத்துவத்தின் பொற்காலம் முதலே அது இருந்துவந்தது. மறுமலர்ச்சிக்காலத்தில் அது புத்துயிர் பெற்றது.
அந்நிலையில் அது ஒரு நேர்நிலையான சிந்தனையாக இல்லை, ஒரு மறுப்புச்சிந்தனையாக, ஒரு எதிர்வினையாக மட்டுமே இருந்தது. அதற்கு வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் விளக்கும் பொறுப்பு இருக்கவில்லை. சமூக உருவாக்கத்தையும், சமூகச்செயல்பாட்டையும் ,அதில் மனித அகம் கொள்ளும் பங்கையும் குறித்து முழுமையான தர்க்கபூர்வமான பதில் எதையும் இது அளிக்கவில்லை. ஆகவே நாத்திகம் என்பது நாத்திகவாதமே ஒழிய ஒரு தத்துவமோ தரிசனமோ ஆகவில்லை.
பின்னர் பல்வேறு தளங்களில் புறவயமான ஆய்வுத்தன்மையுடன் நாத்திகமரபு வளர்ச்சி அடைந்துள்ளது. உதாரணமாக ஐரோப்பிய நாத்திக மரபின் தர்க்கபூர்வமான வளர்ச்சிநிலையே மார்க்ஸியம். மார்க்ஸியம் வாழ்க்கையையும் பிரபஞ்சவியலையும் தன் நோக்கில் முழுமையாகவே விளக்க முயல்கிறது. ஆகவே அது ஒரு தத்துவமாகவும் தரிசனமாகவும் உள்ளது.
சமூக உருவாக்கம், செயல்பாடு,அதில் மானுடமனத்தின் பங்களிப்பு ஆகியவற்றை விளக்க மார்க்ஸியம் வரலாற்று முரணியக்க பொருள்முதல்வாதம் என்ற தத்துவ ஆய்வுமுறையை கையாள்கிறது. அப்படி ஒரு தத்துவக்கருவி இந்த ஆரம்பகட்ட எளிமையான நாத்திகவாதத்துக்கு இல்லை. ஆகவே அது அடிப்படை வினாக்களைச் சந்திப்பதில்லை. அல்லது மிக எளிமையான பதில்களை முன்வைத்தபின்னர் மேலே செல்கிறது.
இந்திய சிந்தனைத்தளத்தில் நாத்திகவாதம் நூறாண்டுகளுக்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. தமிழகத்தில் நாத்திகவாதம் ஈவேரா அவர்களால் வலுவாக முன்வைக்கப்பட்ட அதேகாலத்திலேயே சகோதரன் அய்யப்பன், எம்.சி.ஜோசப் போன்றவர்களால் கேரளத்தில் இன்னமும் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழகம் தவிர எங்குமே அது சிந்தனையின் மையஓட்டத்துக்கு வரவில்லை. காரணம் கேரளத்தில் மார்க்ஸிய சிந்தனை அடைந்த வெற்றிதான். மார்க்ஸியம் என்பது தத்துவ அடிப்படை கொண்ட நாத்திகம்.
நாத்திகசிந்தனை என்ற பண்படாத நேரடி எதிர்நிலை என்ற தளத்தில் இருந்து வெகுவாக முன்னகர்ந்த ஒன்றுதான் மார்க்ஸியத்தின் தத்துவநோக்கு. அதன் முன்னால் நாத்திகசிந்தனை மேலோட்டமான ஒன்றாக அப்பட்டமாக தென்பட்டது. கருத்துமுதல்வாதிகளையும் மதவாதிகளையும் எதிர்க்க மார்க்ஸியமே வலுவான ஆயுதமாக இருந்தது. அவர்களும் அதனுடனே மோதினார்கள். ஆகவே ஜோசப். கோவூர், இடமறுகு போன்றோரால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட நாத்திகவாதம் ஒரு குறுங்குழுவாகவே நின்றுவிட்டது.
இடமறுகு உட்பட நாத்திகர்கள் தத்துவக்கேள்விகளுக்குள் புகமறுத்து சமூகசீர்திருத்த நோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்கள். மூடநம்பிக்கை என அவர்கள் நினைத்தவற்றுக்கு எதிரான நேரடியான அப்பட்டமான எதிர்ப்புப் பிரச்சாரம் மட்டுமே அவர்களின் செயல்பாடு. இந்தச் செயல்பாட்டுக்கு அவர்களுக்கு இருக்கும் ஆயுதம் என்பது பகுத்தறிவு [Rationality] என அவர்கள் சொல்லும் புறவய ஆய்வுமுறை மட்டுமே.
இந்தபுறவய ஆய்வுமுறை என்பது மட்டுமே உண்மையான ஒரே ஆய்வுமுறை என்றும் இதற்கு மாறான எதுவும் பிழையானவை என்றும் இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மதத்துக்கு எதிரான போராட்டத்தில் கிட்டத்தட்ட மதம் போலவே தங்களை கட்டமைத்துக்கொண்டவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட 200 வருடம் முன்னால் உறைந்து நின்றுவிட்ட சிந்தனை இவர்களுடையது. இவர்களின் எல்லைக்கு அப்பால் வளர்ந்து சென்ற சிந்தனைகள் குறித்து இவர்களுக்கு கவலையில்லை.
இடமறுகு போன்றவர்களின் பகுத்தறிவுவாதம் இருநூறுஆண்டுகளுக்கு முன்னர் சிலவகையான இருமைகளை உருவகித்துக்கொண்டது. கருத்துமுதல்வாதம் x பொருள்முதல்வாதம் என்பது அதில் முதன்மையானது. மூடநம்பிக்கைxபகுத்தறிவு , நாகரீகம் xகாட்டுமிராண்டித்தனம், இயற்கை x மனிதன் , அறிவியல் x மதம் , என அது பல இருமைகளை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. அவர்களின் மொத்தச் சிந்தனையும் இந்த இருமைகளின் அடிப்படையில் அமைந்தவை.
ஆனால் ஒரு நவீனச் சிந்தனையாளன் இந்த வகையான எளிய இருமைகளை ஒட்டி ஒருபோதும் யோசிக்க முடியாது. இவை வரலாற்றை, சமூக இயக்கத்தை, பிரபஞ்சவியலை மிகமிக எளிமைப்படுத்தி பிழையான முடிவுகளை நோக்கியே கொண்டுசெல்லும் என அவன் அறிவான். இன்றைய வானியற்பியலையோ அல்லது அணுவியற்பியலையோ புரிந்துகொள்ள கருத்துமுதல்வாதம் x பொருள்முதல்வாதம் என்ற பிரிவினையை ஒருவர் பயன்படுத்தினால் எதைச் சென்றடைவார்?
இவர்களின் நவீன நாத்திகவாதத்தில் அடிப்படையாக ஓடக்கூடிய ஒரு முக்கியமான போதாமை அல்லது பிழையான சிந்தனை ஒன்றுண்டு. நாகரீகம் xகாட்டுமிராண்டித்தனம் என்ற இருமை வழியாக அவர்கள் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதை இவ்வாறு சொல்லலாம். மனிதன் நாகரீகமில்லாத விலங்காக இருந்தான். தன் அறிவுத்திறமையால் அவன் கருவிகளை கண்டுபிடித்தான். அவற்றைக்கொண்டு மெல்லமெல்ல அவன் நாகரீகத்தை உருவாக்கிக்கொண்டு முன்னகர்ந்தான். ஆகவே இன்றைய நாகரீக மனிதன் அன்றைய காட்டுமிராண்டியில் இருந்து முற்றிலும் வேறானவன். நேர் எதிர்திசையில் நகர்பவன். ஆகவே காட்டுமிராண்டியின் செயல்பாடுகள் நம்பிக்கைகள் வழக்கங்கள் ஆகிய அனைத்தையுமே அவன் நிராகரிக்கக் கடமைப்பட்டவன்.
ஆரம்பகால பகுத்தறிவுசிந்தனையாளர்கள் அனைவருமே இந்த ’நாகரீக மனிதன்’ என்ற கருத்தை வெகுவாக வலியுறுத்துவதை காணலாம். நாகரீக மனிதனின் இயல்பே பகுத்தறிவு. ஈவேரா அவர்களின் சிந்தனையின் அடிப்படையே நாகரீகம் xகாட்டுமிராண்டித்தனம் என்ற எளிமையான இருமைதான்.
[இன்றைய பின்நவீனத்துவச் சிந்தனைகள் இத்தகைய இருமைநோக்குகளுக்கு முற்றிலும் எதிரானவை. தமிழகத்தில் பின்நவீனத்துவச் சிந்தனைகள் அறிமுகமானபோது அதன் பெருந்தாக்குதல் ஈவேரா அவர்கள் உருவாக்கிய இவ்வகையான எளிமைப்பாடுகள் மீதுதான் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆனால் இங்கே பின்நவீனத்துவம் பேசியவர்களில் பிரேம் அன்றி எவருக்குமே அதைப்பற்றிய தத்துவப்புரிதல் இருக்கவில்லை என்பதற்கான ஆதாரமே அவர்கள் ஈவேராவையே பின்நவீனத்துவர் என விளக்க முற்பட்டதே. பின்நவீனத்துவம் என்றால் கிண்டல்செய்தல், வசைபாடுதல், கலகபாவனை மேற்கொள்ளுதல், எதிர்நிலை எடுத்தல் என்று சாதாரணமாகப் புரிந்துகொண்ட அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு ஈவேரா பின்நவீனத்துவப் பிதாமகனாகவும் ஆனார்]
இந்த நவீனமனிதன் என்ற கருதுகோள் அப்போது ஐரோப்பிய சிந்தனையில் உருவான தனிமனிதன் என்ற கருதுகோளின் நீட்சியே. தனிமனிதன் என்பவன் தன்னுடைய சொந்த சிந்தனைகளாலும் சொந்த இச்சைகளாலும் ஆனவன். தன்னை தானே தீர்மானித்துக்கொள்பவன். அவனை புறவயமான பகுத்தறிவுச்செயல்பாடு கொண்டவன் என்று வகுத்து நவீனமனிதன் என்றார்கள் இவர்கள்.
இந்தக்கருத்து மிக விரைவிலேயே மேலைச்சிந்தனையில் நிராகரிக்கப்பட்டது. தன் பாரம்பரியத்தில் இருந்தும் சூழலில் இருந்தும் முற்றாக துண்டுபட்டு ஒரு தனிமனிதன் இருக்க முடியாது. அவனுடைய சுயம் என்பதே ஒரு கால-இடச் சூழலில், ஒரு பண்பாட்டு வெளியில் [அல்லது மொழிவெளியில்] அவனாலும் பிறராலும் வரையறை செய்துகொள்ளப்படுவதுதான்.
இன்றைய மனிதனை இதுவரையிலான மனிதனின் ஒரு பரிணாம சித்திரத்தில் வைத்தே நாம் பார்க்கமுடியும். அவனது மனமும் பரிணாமத்தின் விளைவே. அதுவும் அவனுடைய பாரம்பரியத்தின், சூழலின் விளைவே. மனிதனின் பிரக்ஞைநிலை, அல்லது தர்க்கமனம் அவனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அவனுடைய ஆழ்மனத்தை கட்டமைத்துள்ள குறியீடுகள் அவனுடைய மரபில் பரிணாமம் கொண்டவையாகவே இருக்கும். அங்கே எது நவீனம் எது காட்டுமிராண்டித்தனம் என்ற பிரிவினைக்கே இடமில்லை.
இந்த நவீனநாத்திகவாதிகள் மதம்சார்ந்த அடையாளங்களையும் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் எப்படி அணுகுவார்கள் என நாம் அறிவோம். அவர்களுக்கு அவை வெறும் மூடநம்பிக்கைகள் மட்டுமே. சுரண்டலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டவை. பண்டைய காட்டுமிராண்டிக்கால வாழ்க்கையின் எச்சங்கள். இவ்வணுகுமுறையை இந்த நாத்திகவாத மரபின் வளர்ச்சிநிலைகளான பிற தத்துவசிந்தனைமுறைகள் எப்படி அணுகும் என்பதை ஒப்பிட்டுப்பார்த்தால் இவற்றின் போதாமை நமக்கு தெளிவாகப்புரியும்.
மார்க்ஸியசிந்தனையாளரான டி.டி.கோசாம்பி ‘தொன்மமும் உண்மையும்’ [The Myth And Reality] என்ற புகழ்மிக்க நூலில் தொன்மங்களை வரலாற்றுக்குறியீடுகளாக, சமூகப்பரிணாமத்தின் அடையாளங்களாக அணுகி அவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்றை புரிந்துகொள்ள முயல்கிறார். அவை வேறுவகையான வரலாறுகள். குலச்சின்னங்களும், குறியீடுகளும், நம்பிக்கைகளும், விழுமியங்களும் கலந்த வரலாறுகள்.
பின்நவீனத்துவ சிந்தனைகளின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவராக கருதப்படும் கிளாட் லெவிஸ் ஸ்டிராஸ் [Claude Lévi-Strauss] எழுதிய பண்படா மனம் [ The Savage Mind] என்ற நூலில் குலச்சின்னங்கள் [Totems]எப்படி மதச்சின்னங்களாகவும் அடிப்படைக் குறியீடுகளாகவும் ஆயின என்பதை ஆராய்கிறார். அவை எவ்வாறு அடிப்படைமனம் இயற்கையை புரிந்துகொள்ளும் மொழியாக உருவாயின என்று விளக்குகிறார்.
தொன்மவியலாளரான ஜோசஃப் கேம்பல் [Joseph Campbell ] ‘வாழ்வதற் தொன்மங்கள் ’ Myths to Live By’ என்ற நூலில் உலகம் முழுக்க உள்ள தொன்மங்களை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து அவை பல்வேறு உருமாற்றங்கள் வழியாக இன்றும் எவ்வாறு வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் அறிவதற்கான வழிமுறைகளாக நீடிக்கின்றன என்பதை பரிசீலிக்கிறார்.
இவர்கள் எவரும் தொன்மங்களை ஒட்டுமொத்தமாக மூடநம்பிக்கை என்று சொல்லி நிராகரிக்கவில்லை. அச்சொல்லே அறியாமையின் வெளிப்பாடு மட்டும்தான். தொன்மங்கள் என்பவை உருமாறிய வரலாறுகள். வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் அறிய மனித மனம் கண்டடைந்த கருவிகள் என்றே இவை எடுத்துக்கொள்கின்றன.
இன்றைய சிந்தனைக்கு தொன்மங்களை புறவயமாக, நாத்திகக் கோணத்தில், ஆராய்வதற்கான மிகச்சிறந்த வழிகள் இவையே. ஆன்மீக, கருத்துமுதல்வாத தரப்பினர் எதிர்கொள்ளவேண்டிய தரப்பும் இவையே. இடமறுகு போன்றவர்கள் முன்வைக்கும் எளிமையான இருமைநோக்குகள் நம் வரலாற்றையும் வாழ்க்கையையும் மனித மனத்தையும் அறிவதற்கு கொஞ்சமும் உதவாது. அவை நம்மை காழ்ப்புகளும் முன்முடிவுகளும் அபத்தமான தன்னம்பிக்கையும் கொண்டவர்களாகவே ஆக்கும். வரலாறும் வாழ்க்கையும் மனிதமனமும் இவ்வாறு ஒற்றைச்சூத்திரங்களுக்குள் அடக்கிவிடும்படி எளியவை அல்ல. அவற்றை அறிவார்ந்த ஆய்வுக்கு உட்படுத்த மிக விரிவான வாசிப்பும் திறந்த மனம் கொண்ட தொடர் ஆய்வும் அவசியம்.
[மேலும்]