கேள்வி பதில் – 26

படைப்புகளைப் பிழை திருத்தியே அச்சிலேற்றும் பத்திரிகைகள் போல், புத்தகப் பதிப்பாளருக்கென்று ஏதும் கடமைகள் இல்லையா?

— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

தமிழில் இன்று இதழியல்துறை ஒரு பெருந்தொழில். கோடிக்கணக்கான முதலீடு உள்ளது. சிற்றிதழ் மற்றும் சிறுபதிப்பகத்துறை குடிசைத்தொழில். மிஞ்சிப்போனால் சில லட்சங்களே முதலீடு. உரிமையாளரே குமாஸ்தா, அலுவலக உதவியாள் எல்லாமே. ஆகவே இதழ்களில் உள்ள தொழில்நேர்த்தியை நாம் புத்தகங்களிலும் சிற்றிதழ்களிலும் எதிர்பார்க்க இயலாது. உதாரணமாக ஆனந்தவிகடனின் இரு இதழ்களுக்கு ஒரு இதழ் ‘உயிர்மை’ மாத இதழ் சமம்– பக்க அளவில். விகடனுக்கு ஏறத்தாழ 6 உதவி ஆசிரியர்கள் இரு மெய்ப்புநோக்குநர். உயிர்மைக்கு உதவியாளரே இல்லை. அது சக்கரநாற்காலியில் இருக்கும் ஒற்றைநபரால் வெளியிடப்படுகிறது. ஆயினும் உயிர்மையில் பிழைகள் மிகமிகக் குறைவே.

இதன் நடைமுறைச் சிக்கல்களை நான் இங்கே எழுதுவது எதிர்காலத்துக்கான பதிவாக. ஒரு சிறு பதிப்பகம் அல்லது சிற்றிதழ் தட்டச்சுசெய்யப் பலரை நியமித்து அவருக்கு ஊதியமளிக்க முடியாது. உண்மையில் அந்த அளவு ஊதியமே அந்த உரிமையாளருக்கும் கிடைக்கும். பலசமயம் வெளியே கொடுத்துச் செய்வார்கள். இரு மெய்ப்புத்தான் அதிக பட்சம் பார்க்க முடியும். ஒரு மெய்ப்பு அதன் ஆசிரியரால் பார்க்கப்படும். இரண்டாம்மெய்ப்பு அந்த வெளியீட்டாளர் தானே பார்ப்பார். அல்லது ஊதியமில்லா நண்பரிடம் சொல்வார்.

தமிழில் கணிப்பொறி வளர்ச்சி அரைகுறை. அச்சு ஊடகம் முழுக்கவே கணிப்பொறி மயமாகிவிட்டது. ஈய அச்சு இருந்தபோது வருடம் நூறு புத்தகம் வெளிவரும். இப்போது வருடம் 12000 நூல்கள். ஆனால் அதற்கு இன்றியமையாத பல அமைப்புகள் இன்னும் வரவில்லை. குறிப்பாக பிழைதிருத்தி மென்பொருள். ஆங்கிலம் பிழையின்றி அச்சிடப்படுகிறதென்றால் அதற்குக்காரணம் அந்த மென்பொருள்தான். இங்கே அது முழுக்க முழுக்க மனித உழைப்பையே நம்பியிருக்கிறது. அதில் செலுத்தப்படும் மனித உழைப்பின் அளவு பிரமிப்பும் வருத்தமும் அளிக்கக் கூடியது. மெய்ப்பு பார்ப்பதற்கு இருமுறை பிரதிஅச்சிடவேண்டும். திருத்தங்களை மீண்டும் கணிப்பொறியில் ஏற்றுவது சிரமமான வேலை. அதைவிட இப்போதுள்ள மென்பொருட்களில் சிக்கல்களினால் பிழைதிருத்தும்போதே புதுப்பிழைகள் விழ வாய்ப்பு அதிகம். இடைவெளியை சிறிதுமாற்றினால்கூட மொத்த பிரதியும் மாறிவிடக்கூடும். ஒவ்வொரு வருடமும் இவ்வாறு கடைசிப்பிரதியில் ஏற்படும் சிக்கல்களினால் பக்கங்கள் குளறுபடியாகி எல்லா பதிப்பகமும் பல ஆயிரம் ரூபாயை இழக்கின்றன. சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’-ன் பலபகுதிகள் அப்படி இருமுறை மாற்றி அடிக்கப்பட்டது. தமிழினி, உயிர்மை பதிப்பகங்கள் இவ்வருடம் மட்டும் மூன்று நூல்களை அவ்வாறு மாற்றி அமைக்க நேர்ந்தது. இவ்விழப்புகளை நூல்விலைமீது ஏற்றமுடியாது. ஆங்கிலமளவுக்கு சிறந்த மென்பொருட்கள் வரும்போது இச்சிக்கல் தீரக்கூடும்.

தமிழ்ப்பதிப்புத் துறையின் எல்லைகள் அடுத்த சிக்கல். ஆயிரம் பிரதிகள். அது ஒருவருடத்தில் விற்றுத் தீர்ந்தால் பதிப்பு பெரிய வெற்றி. ஆனால் அதற்கு சாதாரணமாக 3 வருடம் ஆகும். பல நூல்கள் 5 வருடம். அதில் 600 பிரதி நூலகக் குழு எடுக்கும். 16 பக்கத்துக்கு 2.25ரூ என்ற கணக்கில். கெட்டி அட்டை போட்டாலும் மேப்லித்தோ காகிதம் போட்டாலும் வண்ணபடங்கள் போட்டாலும் இதே விலைதான். [அதாவது விஷ்ணுபுரம் விலை ரூ 350. அதன் நூலக விலை ஏறத்தாழ 120 தான் வரும்]. தமிழ்நாட்டில் இதுதான் முக்கியமான விற்பனை. நூலகம் நூல்களை எடுப்பது நின்றுவிட்டால் தமிழில் வருடம் 200 நூல்கூட வராது. பிறகு 40 சத தள்ளுபடிக்குக் கடைகளுக்கு அளிக்கவேண்டும். நூல் விலை இந்தியமொழிகளிலேயே தமிழில்தான் குறைவு. மலையாளத்தில் இங்கிருப்பதைவிட 30 சதவீதம் விலை அதிகம். அங்கே ஒருபதிப்பு சாதாரணமாக 5000 பிரதிகள். வங்காளத்தில் 20 சதவீதம். அங்கே ஒரு பதிப்பு சாதாரணமாக 20000 பிரதிகள். இந்நிலையில் ஒரு பதிப்பாளர் மெய்ப்பு நோக்கப் பணம் செலவிட்டால் அவரால் நூல்களை வெளியிடவே இயலாது.

இருந்தும் தமிழின் முக்கியப் பதிப்பகங்களான தமிழினி, காலச்சுவடு, உயிர்மை, க்ரியா ஆகியவை மிகச்சிறந்த முறையில் மெய்ப்புநோக்கியே நூல்களை வெளியிடுகின்றன. கணனி வசதி நிரம்பிய ஆங்கிலத்தில் பல லட்சம் பிரதிகள் வெளியிடும் பதிப்பக நூல்களில் பிழைகள்பல நான் கண்டதுண்டு. தமிழ் நூல்கள் அனைத்துமே பிழைமலிந்தவை என்ற பொத்தாம்பொதுக் கூற்று கடும் உழைப்பைச் செலுத்தி அந்நூல்களை உருவாக்கும் பெயரறியா பின்புலத்தவரை அவமானப்படுத்தும் நோக்கமோ அல்லது முற்றான அறியாமையோ கொண்டது. பிழைதிருத்தி இல்லாத மொழியில் எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு பிழைதிருத்தப்பட்ட நூல்கள் இவை. சர்வதேசத் தயாரிப்புத்தரம் கொண்டவை- சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பங்கு விலையில்.

இப்பதிப்பகங்கள் மெய்ப்புச்செலவை நூல்விலையில் ஏற்றாமல் இருக்க எடுத்துக் கொள்ளும் உழைப்பு என்னை மிக வருத்தம் கொள்ளச்செய்கிறது. வசந்தகுமார் [தமிழினி], மனுஷ்யபுத்திரன் [உயிர்மை], எம்.எஸ் [காலச்சுவடு] ஆகியோர் இரவுபகலாக மெய்ப்புப் பார்ப்பதைக் காணும்போது நானே சற்று பிழைகளுடன் நூல்கள் இருப்பதில் தவறில்லை, தமிழின் நிலை இன்று அது என்றால் அப்படி ஆகட்டும் அதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையையே இழக்கவேண்டியதில்லை என வாதிட்டிருக்கிறேன். மிதமிஞ்சிய மெய்ப்புநோக்கு மூலம் மனுஷ்யபுத்திரனின் உடல்நிலையே பலவீனமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன்.

இந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இந்நூல்களை உண்மையிலேயே வாசிக்கக் கூடிய வாசகர்கள் அறிவார்கள். வாசகர்களே தமிழினி வசந்தகுமாரிடம் நூல்களுக்கு இந்த அளவுக்குச் செலவு செய்யவேண்டியதில்லை, அவை நேர்த்தியாக இருந்தால்போதும் அழகாக இருக்கவேண்டியது இல்லை, அவரது லாபவிகிதத்தை மேலும் அதிகப்படுத்தலாம் என வாதிடுவதை நான் பல முறை கேட்டிருக்கிறேன். அப்படிச் சிலர் எழுதியுமுள்ளனர். இந்த ஒட்டுமொத்த இயக்கத்தை மட்டம்தட்ட விரும்பும் சிலர் வெளியே நின்று உருவாக்கும் மாயைதான் தமிழ்நூல்களின் மெய்ப்பு குறித்த பொதுவான குற்றச்சாட்டு.

தமிழ்மக்கள் இன்று உலகம் முழுக்க உள்ளனர். ஆடம்பரப்பொருட்களுக்கு இவர்கள் செலவிடும் தொகையில் லட்சத்தில் ஒருபகுதி நூல்களுக்காக செலவிடப்பட்டால் இன்றைய நிலை மாறும். ஒட்டுப்பொட்டுத் தொழிலில் தமிழ்நாட்டில் வருடம் 3கோடி ரூபாய் புழங்குகிறது. பதிப்பகத்துறையில் மொத்தமாகவே 2 கோடிக்கும் குறைவு. தமிழ்மக்கள் பக்திக்குச் செலவிடும் பணத்தில் பத்தாயிரத்தில் ஒருபங்கு புத்தகங்களுக்குச் செலவிட்டால் இன்றையநிலை தலைகீழாகிவிடும். நான் வெளிநாடுகளில்வாழும் தமிழர்கள் உள்ளிட்ட பல செல்வந்தர் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மிகப்பெரிய வீட்டுத்திரையரங்கு, இசைக்கருவிகள், திரைப்படத்தட்டுகள் எல்லாம் இருக்கும். நூறு புத்தகமாவதுகொண்ட ஒரு நூலகம் இருக்காது. இது தமிழ் மனநிலை. அவர்கள் அதற்குக் காரணமாக ‘என்ன சார் எல்லாம் தப்பு தப்பா போடறாங்க’ என்றும் சொல்லக் கூடும்.

உங்களுக்குப் பிழை தீர்ந்த படைப்புகள்மட்டுமே திருப்தியளிக்கும் என்றால் நீங்கள் தமிழில் படிக்கவேண்டாம். அதனால் தமிழுக்கு இழப்பு ஏதும் இல்லை. தமிழ் யதார்த்தத்தில் வாழ்ந்துகொண்டு அதனுடன் போராடும் மக்களுக்காக அப்படிப் போராடுபவர்களால் தமிழில் நூல்கள் எழுதப்படுகின்றன.

முந்தைய கட்டுரைகேள்வி பதில் – 25
அடுத்த கட்டுரைகேள்வி பதில் – 27, 28