பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 10
மஞ்சத்தறையின் எடைமிக்க கதவு கிரீச்சிட்டு திறக்க, அழுந்தி ஒலித்த காலடிகளுடன் உள்ளே வந்த முனிவரை காய்ச்சல் படிந்த கண்களால் கர்ணன் நிமிர்ந்து நோக்கினான். மரவுரி உடுத்த கொழுத்த உடல், மார்பில் விழுந்த சாம்பல்கலந்த வெண்தாடி, இரு குருதிக் குமிழிகள் போல அசைந்த ஒளியற்ற விழிகள். மெல்ல அவனை நெருங்கி அருகே நின்று குனிந்து பார்வையற்ற கைகளால் அவன் மேல் துழாவினார். “யார்?” என்று அவன் கேட்டான். ஆனால் குரல் பாலைநிலத்துக் கிணற்றுநீர் போல ஆழத்தில் எங்கோ நலுங்கியது. அவர் கை அவன் தோளை தொட்டது. “அங்கரே” என்றொரு குரல் கேட்டது. “அங்கரே” என்று நெடுந்தொலைவில் எங்கோ அது எதிரொலித்தது. மிக அருகே அறிந்த குரலாக “அங்கரே” என மீண்டும் அழைத்தது.
அதை உணர்ந்ததும் அவன் கைகளை மஞ்சத்தில் அறைந்து உடல் உந்தி எழுந்து அமர்ந்து செவ்வரியோடிய விழிகளால் தன்னை நோக்கி குனிந்து நின்ற துரியோதனன் முகத்தை ஏறிட்டு “யார்?” என்றான். “அங்கரே, என்ன ஆயிற்று? கனவா?” என்றான் துரியோதனன். குழறிய குரலில் “ஆம், ஒரு கனவு” என்றபின் அவன் வாயை துடைத்தான். துரியோதனன் அவன் கையை பற்றி “உடல் நலமில்லையா?” என்றபின் “ஆம், சுடுகிறதே” என்றான். அவன் நெற்றியில் கைவைத்து “காய்கிறது” என்றபின் சிவதரை நோக்கி “என்ன ஆயிற்று?” என்றான். “அரசர் நேற்றிரவு நன்கு துயிலவில்லை. புரண்டு படுக்கும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது” என்றார் சிவதர்.
நகைத்து “யவனமது கனவுகளை நிறைப்பது” என்றான் துரியோதனன். “அதிலுள்ள ஒவ்வொரு குமிழியும் கனவு என்கிறார்கள் அந்நாட்டுக் கவிஞர்கள்.” கர்ணன் ஒன்றும் சொல்லாமல் காலை ஊன்றி எழுந்து நின்றான். துரியோதனன் “மறந்துவிட்டீர்களா? இன்று காலை நம்மை பாண்டவர்கள் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். ஐம்பத்து நான்கு நாடுகளின் அரசர்களும் அவைமகிழ்வு கொள்ள வரவிருக்கிறார்கள்” என்றான். கைகளை சிறுவனைப்போல விரித்து “எங்கு அவ்விருந்து நிகழ்கிறது தெரியுமா? அசுரசிற்பி மயனின் அறுநூற்றுப் பன்னிரண்டாவது தலைமுறையைச் சார்ந்த கர்க்கன் என்னும் சிற்பி சமைத்த மாயக்கூடம் அது என்கிறார்கள். அதை நீர்மாளிகை என்று இங்கே அழைக்கிறார்கள். வெண்பளிங்காலும் கரும்பளிங்காலும் கட்டப்பட்ட அது ஆடிப்பாவைகள் செறிந்த நீர்ப்பரப்பு போல் மாயம் காட்டும் என்கிறார்கள். இளையோர் காலையிலிருந்தே அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
கொட்டாவி விட்டபடி “துச்சாதனன் எங்கே?” என்றான் கர்ணன். “அனைவரும் காலையிலேயே அணிகொண்டு சித்தமாகிவிட்டார்கள். தங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம். ஒளிஎழுந்தும் தங்களை காணவில்லை என்றதும் நானே அழைத்து வருகிறேன் என்று சொல்லி வந்தேன்” என்றான் துரியோதனன். கர்ணன் “நான் உடனே நீராடி உடைமாற்றி வருகிறேன்” என்றபின் திரும்பி சிவதரிடம் “நீராட்டறை சித்தமாகட்டும்” என்றான். “அனைத்தும் சித்தமாக இருக்கின்றன அரசே” என்றார் சிவதர். “நன்று” என்றபின் கர்ணன் திரும்ப துரியோதனன் “நான் மட்டும் இங்கு அமர்ந்து என்ன செய்யப்போகிறேன்? நானும் வருகிறேன்” என்று எழுந்து பின்னால் வந்தான்.
“தாங்களா…? தாங்கள் அஸ்தினபுரியின் அரசர்” என்றான் கர்ணன். “அஸ்தினபுரியின் அரசன் தன் தோழமைநாட்டரசன் அங்கனின் முழுஉருவை காண விழைவாக இருக்கிறார். அது அரசுசூழ்தலுக்கு இன்றியமையாதது என்று எண்ணுகிறார்” என்று நகைத்தான் துரியோதனன். இடைநாழியில் செல்கையில் “நேற்றிரவு நீங்கள் முன்னரே வந்துவிட்டீர்கள். இரவெல்லாம் களியாட்டு. சிசுபாலனைப்பற்றி நாம் எண்ணியதெல்லாம் பிழை. இத்தனை விளையாட்டும் வேடிக்கையும் கொண்டவன் அவன் என்று நான் எண்ணவே இல்லை” என்றான். “சூதர்கள் மூடர்கள். ஒவ்வொருவரையும் பற்றி அவர்கள் வரையும் திரைஓவியத்தை அவர்களுக்கு முன்னால் தொங்கவிட்டிருக்கிறார்கள். நாம் அந்த ஓவியங்களுடன்தான் விளையாடுகிறோம், அரசு சூழ்கிறோம்” என்றான். கர்ணன் ஆர்வமில்லாமல் “ஆம்” என்றான்.
உடன் நடந்தபடி “நேற்றிரவு ஜராசந்தனுடன் இருந்தேன். சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் களியாட்டையும் கவிதையையும் நிரப்ப அவனால் முடிகிறது. அங்கரே, அவன் ஒரு மனிதன் அல்லன், இருவன். பகலில் ஒன்று இரவில் ஒன்று என்று இரண்டு தெய்வங்கள் குடிகொள்ளும் ஆலயச்சிலை ஒன்று நம் மேற்குமலைக்காட்டில் இருக்கிறதல்லவா? அது போல. ஒரு குழந்தை, ஓர் அரக்கன். இருவரையும் எனக்கு பிடித்திருக்கிறது” என்றான் துரியோதனன். “அரக்கனை குழந்தை என்றும் குழந்தையை அரக்கன் என்றும் எண்ணி விளையாடும் ஆடலை அவனுடன் ஆடுகிறேன்” என்று நகைத்தபடி சொன்னான். கர்ணன் புன்னகைத்தான்.
“நேற்று சிசுபாலனும் நானும் விளையாட்டாக தோள்பொருதினோம். அவனும் மற்போரில் அத்தனை எளியவன் அல்ல அங்கரே. அரைநாழிகை ஆயிற்று அவனை நான் தூக்கி அடிக்க” என்றபின் “ஜராசந்தன் பீமனுடன் தோள் கோக்க இப்பொழுதும் பெருவிழைவுடன் இருக்கிறான்” என்றான். “என்ன ஆயிற்று? அவர்களை சந்திக்க வைப்பதாக சொன்னீர்களே?” என்றான் கர்ணன். “நேற்றிரவு இந்திரன் ஆலயத்திலும் பின்பு உண்டாட்டிலும் பாண்டவர்களை நாங்கள் தனியாக பார்க்கவே முடியவில்லை. பீமன் முற்றிலும் அடுமனையிலேயே இருந்தான். இளைய பாண்டவனும் இளைய யாதவனும் விருந்தினரை வரவேற்றபடியே இருந்தனர். தனியாக அவர்கள் எங்களருகே வரவேயில்லை. ஆனால் அவர்களை இன்று சந்திக்கலாம் என்றிருக்கிறேன்” என்றான். “எப்படியும் அரசர்களின் மன்றுக்கு அவர்கள் வந்துதானே ஆக வேண்டும்?” கர்ணன் புன்னகைத்தபடி தலையசைத்தான்.
அணியறை வாயிலில் சமையர்கள் தலைவணங்கி அவர்களை உள்ளே வரும்படி கையசைத்தனர். திடுக்கிட்டு கர்ணன் திரும்பி நோக்கினான். “என்ன?” என்றான் துரியோதனன். அணியறையின் கதவு கிரீச்சிட்ட ஓசைதான் அவ்வெண்ணத்தை எழுப்பியது என்று கர்ணன் உணர்ந்தான். “என்ன?” என்றான் துரியோதனன். “ஒரு கனவு… அதை இப்போது நினைவு கூர்ந்தேன்” என்றான் கர்ணன். “என்ன கனவு?” என்றான் துரியோதனன். “தாங்கள் உள்ளே வரும்போது…” என அவன் நெற்றியை வருடினான். “ஆம், நான் உள்ளே வரும்போது என் காலடியோசை கேட்டு உங்கள் உடல் விதிர்த்ததை கண்டேன்” என்றான் துரியோதனன். “என்ன கனவு அங்கரே?” அது போகட்டும் என்று கையசைத்தபடி கர்ணன் உள்ளே சென்றான்.
“இங்கு கனவுகள் சற்று மிகுதியாகவே எழுகின்றன” என்றபடி துரியோதனன் உள்ளே வந்தான். “எனக்கும் வகைவகையான கனவுகள் உள்ளே கொப்பளிக்கின்றன. நான் எண்ணுகிறேன், இங்குள்ள பளிங்குச் சுவர்கள்தான் அவற்றை எழுப்புகின்றன என்று. நம்மைச் சுற்றி அவை ஆடிப்பாவைகளை நிறைத்துவிடுகின்றன. ஒவ்வொரு பாவையும் நம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது. அவற்றின் நோக்குகள் விதைகளாக நம் உளச்சதுப்பில் முளைத்து கனவில் எழுகின்றன.” கர்ணன் அவனை திரும்பி நோக்கி மீசையை முறுக்கினான். “நேற்றிரவு கண்ட கனவில் நான் இருளில் நடந்துகொண்டிருந்தேன். என் அருகே என்னைப்போன்ற உடல் கொண்ட ஒருவர் நடப்பதை பார்த்தேன். நெடுநேரம் அவரை என் தந்தையென்றே எண்ணியிருந்தேன். பின்பு பீடத்தில் அமர்ந்து திரும்புகையில் நோக்கினேன், அவர் தந்தையல்ல. கொழுத்த உடல் கொண்ட முனிவர். மரவுரி அணிந்து குருதிக்கட்டிபோல் அசைந்த கண்களுடன் என்னை பார்த்தார். அவரை தந்தையென்று நான் எண்ணியது அவரது பார்வையின்மையால்தான் என்றுணர்ந்தேன். உடலசைவுகளில் தெரிந்த பார்வையின்மை அது. அவ்வளவுதான். விழித்துக்கொண்டேன்.”
கர்ணன் சற்று திறந்த வாயுடன் துரியோதனனை நோக்கிக் கொண்டிருந்தான். சமையர்கள் அவன் ஆடைகளை கழற்றினர். “என்ன பார்க்கிறீர்கள்?” என்றான் துரியோதனன். இல்லை என அவன் தலையசைத்தான். அவனை கைபற்றி அழைத்துச்சென்று மஞ்சள்பொடியும் வேம்புச்சாறும் கலந்த வெந்நீர் ஆவியெழக் கொப்பளித்த வெண்பளிங்கு தொட்டிக்குள் இறங்கி அமரச்செய்தனர். துரியோதனன் பீடம் ஒன்றை இழுத்துப்போட்டு அமர்ந்தபடி “ஆனால் இந்த நாட்கள் மிகவும் உவகை நிறைந்தவை. இங்கு நான் முழு மனிதனாக உணர்கிறேன். இங்குளது போல நட்பும் நகைப்புமாக வாழ்ந்து நெடுநாட்களாகிறது” என்றான்.
சமையர்கள் இளவெந்நீரால் கர்ணனை நீராட்டத் தொடங்கினர். ஒருவர் அவன் கால்களை கடற்பஞ்சால் தேய்த்தார். வெண்கல்லால் அவன் முதுகை ஒருவர் உரசினார். அவன் கைகளை நீருக்குள் நாகம்போல் நெளியவிட்டபடி அமர்ந்திருந்தான். “நேற்று தாங்கள் யவனமதுவை அருந்திக்கொண்டே இருந்தீர்கள். அவ்வளவு வெறியுடன் நீங்கள் மது அருந்துவதை நான் கண்டதே இல்லை” என்றான் துரியோதனன். கர்ணன் “நான் நேற்று நாகநஞ்சு அருந்தினேன்” என்றான். திகைத்து “நாகநஞ்சா?” என்றான் துரியோதனன். திரும்பி சிவதரை பார்த்தான். “ஆம், நாகநஞ்சு. அதை நாகமது என்று அவர்கள் சொல்கிறார்கள்.”
“நஞ்செப்படி மதுவாகும்?” என்றான் துரியோதனன். சிவதர் “அனைத்து மதுவும் நஞ்சு. நஞ்சனைத்தும் மதுவே” என்றார். துரியோதனன் “ஆம்” என்று சிரித்து “அதை எங்கு அருந்தினீர்கள்? கனவிலா?” என்றான். “இல்லை… இந்நகருக்கு அடியில், நாகர்களின் இருளறையில்” என்றான். “இந்நகருக்கு அடியிலா?” என்று மீண்டும் சிவதரை நோக்கினான் துரியோதனன். “ஆம். ஆயிரம் குகைகளின் பின்னலாக இந்நகர் முழுக்க உரகர்களின் கரவுவழிகள் உள்ளன.” “எலிவளைகளா?” என்றான் துரியோதனன். “அவைதான் வளைகளில் வாழும்.” கர்ணன் “உரகர்கள் எலிகளை உணவாகக் கொண்டு அங்கே வாழ்கிறார்கள்” என்றான். “யாரவர்கள்?” என்று விழிகளைச் சுருக்கி கேட்டான் துரியோதனன். கர்ணன் நகையாடவில்லை என்று அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் அவன் ஐயம் விலகவில்லை.
“இந்நகரின் தொல்குடிகள்” என்றான் கர்ணன். “அவர்கள் எங்கே இங்கே இருக்கிறார்கள்?” என்று துரியோதனன் கேட்டான். “காண்டவக்காடுமேல் பாண்டவர் கொண்ட எரிபரந்தெடுத்தலில் பெரும்பாலோர் இறந்தனர். எஞ்சியவர்கள் இங்கிருந்து அன்றே கிளம்பிச் சென்றனர். உரகர்கள் இங்கு சேற்றுப் படுகைகளில் நாகருலகுக்குள் வாழ்ந்தனர். நகர் எழுந்தோறும் அவர்களும் விலகிச்சென்றனர் என்று அறிந்திருக்கிறேன்.” கர்ணன் “இல்லை, அவர்கள் முழுமையாக செல்லவில்லை” என்றான். துரியோதனன் “ஆம், நாகர்களில் ஒரு குடியினர் மட்டும் இன்றைக்கு இந்திரகீலத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் குடிகளாக தொடர்கிறார்கள்” என்றான்.
“அரசே, குத்துவாளில் படிந்த குருதி ஒருபோதும் முற்றிலும் விலகுவதில்லை. அதை தாங்கள் அறிவீர்கள்” என்றான் கர்ணன். “ஆணிப்பொருத்தில், அணிச்செதுக்கில் எங்கோ சற்றேனும் அது எஞ்சியிருக்கும்.” “ஆம்” என்றான் துரியோதனன். “ஆனால் வாளை கையாள்வது ஷத்ரியரின் கடன். குருதியின்றி அரியணையில்லை, அறமில்லை. குருதியோ ஒருபோதும் முற்றிலும் மறையாத தன்மை கொண்டது. எங்கோ ஒரு துளி முளைத்தெழும். அது அவன் குலத்தை அழிக்கவும் கூடும். அதைப்பற்றி அவன் அஞ்சுவதற்கில்லை.” கர்ணன் நீள்மூச்செறிந்தான். துரியோதனன் “இந்நகர்கள் அனைத்திற்கும் அடியில் எங்கோ குருதியின் துளி ஒன்று காத்திருக்கிறதென்று சூதர்கள் சொல்வதுண்டு” என்றான். கர்ணன் பெருமூச்சுவிட்டான்.
“என்ன சொன்னார்கள்?” என்றான் துரியோதனன். கர்ணன் ஒன்றும் சொல்லாமல் கைகளை நீரில் நெளியவிட்டு அமர்ந்திருந்தான். “நாகர்களை சந்தித்தீர்கள் என்றீர்கள்” என்று அவன் மேலும் கேட்டான். கர்ணனின் அமைதி அவனை பொறுமையிழக்கச் செய்தது. கால்களை அசைத்தபடி அவன் மேலும் சொல்வானென்று அமைதியாக காத்திருந்தான் துரியோதனன். அவன் சொல்லாதபோது தானே பேச்சை வளர்த்தான். “ஜராசந்தன் நேற்று நடந்த அங்கத நாடகத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தான்” என்றான். “களியாட்டென தொடங்கி புகழ்பாடலென அதை முடித்த விந்தையைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.”
கர்ணன் அதை செவிமடுக்காமல் தலையசைத்தான். “அது இயல்பாக நிகழ்ந்ததல்ல. நாடகம் அவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்று அவன் சொன்னான். ஏனெனில் நேற்று அங்கு அமர்ந்திருந்த அனைவருமே மாற்று அரசர்கள். பாண்டவர்களின் புகழ்பாடலுக்கு அவர்கள் செவிகொடுக்க மாட்டார்கள். எனவே நகையாட்டெனத் தொடங்கி அவர்களை ஈர்த்து உள்ளே அழைத்துச்சென்று அமரச்செய்து மெல்ல புகழ்பாடத் தொடங்கிவிட்டார்கள்” என்றான். “ஆம், அது உண்மை” என்றான் கர்ணன் மீசையை நீவியபடி. “அவன் முதன்மைச்சூதன். அவன் பணியை நன்கறிந்தவன்” என்றான் துரியோதனன். “அவையில் அவன் இளைய யாதவனை ஆழிவெண்சங்கு கொண்ட அலையமர்ந்தோன் என நிறுவிவிட்டான்.”
கர்ணன் எழுந்து நீர்சொட்ட நடந்து சென்று நின்றான். சமையர்கள் அவன் உடலை மரவுரியால் மெல்ல ஒற்றி துடைத்தனர். துரியோதனன் அவனை நிமிர்ந்து நோக்கி “அங்கரே, இன்று காலை விழித்ததுமே நான் உணர்ந்தேன். இது என் வாழ்வில் முதன்மையான நாட்களில் ஒன்று என. இன்று நான் இறந்து மீண்டும் பிறக்கவிருக்கிறேன். இதுவரை இருந்த ஒன்றும் இனி எஞ்சப்போவதில்லை. பிறிதொரு கரு, பிறிதொரு அன்னை” என்றான். அவன் எழுந்து கர்ணனின் அருகே வந்தான். “இன்றுபோல் என்றும் நான் எண்ணி எண்ணி அணிசெய்துகொண்டதில்லை. இன்றுபோல என் உணவு சுவை கொண்டதில்லை. அங்கரே, காலையின் புட்குரலும் இலைத்தளிர் ஒளியும் இத்தனை இனியதென்று நான் இதற்குமுன் அறிந்திருக்கவில்லை.”
அவன் குரல் சிறுவர்குரல் என கிரீச்சிட்டது. “இன்று சிசுபாலனையும் ருக்மியையும் ஜராசந்தனையும் அழைத்துக்கொண்டு அவை புகவிருக்கிறேன். தேவயானியின் மணிமுடி சூடி இந்திரப்பிரஸ்தத்தின் அரசி இன்று அவை அமர்வாள். அவள் அருகே என் ஐந்து இணைக்குருதியினரும் நின்றிருப்பார்கள். ஐம்பத்தைந்து நாட்டு மன்னர்களும் கூடிய அவை. அதில் நான் எழுந்து என் குருதியை அவர்களுக்கு வாக்களிப்பேன். இன்று மாலை இந்திரப்பிரஸ்தத்தின் அணையாப் பெருவிளக்கு ஏற்றப்படுகிறது. அவ்விழவில் உடைவாள் உருவி நின்று உயிர் இருக்கும் வரை இந்நகரை காப்பேன் என்று உறுதி கொள்ளவிருக்கிறேன்.”
கர்ணன் விழிவிலக்கி, ஆழ்ந்த குரலில் “ருக்மி என்ன சொன்னான்?” என்றான். துரியோதனன் வெடித்து நகைத்து “வஞ்சத்தால் எரிந்து கொண்டிருக்கிறான். மூடன்… வஞ்சத்தின்பொருட்டு சிவஊழ்கம் செய்து அருட்கொடை கொண்டிருக்கிறான். வஞ்சஈட்டை தெய்வங்களிடம் கேட்டுப்பெறுபவரைப்போல மூடர் எவர்?” என்றான். “அது ஆழமானது, களைவது எளிதல்ல. ஆனால் அது தோல்வியின் வஞ்சம். ஒருகணம் அவைநடுவே இளைய யாதவன் அவன் முன் தலைதாழ்த்தினால் போதும். நுரையென அணைந்துவிடும். ஆனால் சிசுபாலனின் வஞ்சம் அவ்வளவு எளிதில் அணையாது. ஏனெனில் அது பிறவிப்பகை. அதை தெய்வங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.”
“எனினும் அன்பு பெருகும் அவையில் அவனும் குளிரத்தான் வேண்டும்” என்று துரியோதனன் தொடர்ந்தான். “ஜராசந்தனைப் பற்றி எனக்கு ஐயமே இல்லை. பீமனின் தோள் அவன் தோளைத்தொட்டால் அக்கணமே அவர்கள் இருவரும் ஓருடலாகி விடுவர்.” கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. சமையர் அவனை அணி செய்யத்தொடங்கினார். ஆடையை அவனுக்கு அணிவித்தனர். இடைக் கச்சையை இறுக்கி அவனைச்சுற்றி வந்தார் ஒருவர். இரு கைகளையும் தூக்கி அவன் நிற்க அவன் கையில் கணையாழிகளை ஒருவர் அணிவித்தார். அணிகள் ஒவ்வொன்றாக எடுத்தளிக்க முதிய சமையர் அவற்றை அணிவித்தார்.
துரியோதனன் “அங்கரே, என் தந்தைக்கு நிகரானவர் மூத்த யாதவர். அவரும் நீங்களும் அன்றி எவரும் என் ஆழத்தை அறிந்தவர் அல்லர். எந்நிலையிலும் என்னை கைவிடாதவர் நீங்களிருவர் மட்டுமே. இன்று அவரைத்தான் தேடிச் செல்லவிருக்கிறேன்” என்றான். ஏதோ எண்ணி தொடைதட்டி நகைத்து “என்னை கதை பயிற்றுவிக்கும்போது அவர் சொன்னார், அவர் ஏன் அதை தேர்ந்தெடுத்தார் என்று. வாளும் வேலும் வில்லும் கூர் கொண்டவை, குருதியை நாடுபவை. கதையோ இருந்த இடத்திலிருந்து அசையமாட்டேன் என்று அடம் பிடிப்பது. கொலைக்குத் தயங்கும் படைக்கலமேந்திய மாவீரர் என் ஆசிரியர். அவரிடம் சென்று தாள்பணிந்து நிற்பேன். என் விழைவை சொல்வேன். பின்பு அவர் பார்த்துக்கொள்வார்” என்றான்.
மேலும் நகைத்து “அவரது உடல்மொழியில் தெரியும் கள்ளமின்மைக்கு நிகரான பேராற்றல் இங்கு வேறில்லை அங்கரே. அவரால் சுட்டுவிரல் சுட்டி இளைய யாதவரை அழைக்க முடியும். தலைமயிர் பற்றி பீமனை கொண்டுவந்து நிறுத்தவும் முடியும். இன்று என் உளம் நிறைந்து அகம் கனிந்து செல்லும் பாதையின் முடிவில் என் ஆசிரியர் நின்றிருக்கும் அந்தப் பொற்றாமரைப் பீடத்தின் அருகே சென்று நிற்பேன். ஐயமில்லை அங்கரே, இன்றோடு நான் தேவன்” என்றான்.
கர்ணன் பொருளற்ற விழிப்புடன் துரியோதனனை நோக்கிக் கொண்டிருந்தான். துரியோதனன் “ஐயம் கொள்கிறீர்களா?” என்றான். “ஆம்” என்றான் கர்ணன். கண்கள் சுருங்க “ஏன்?” என்றான் துரியோதனன். “நீங்கள் இந்நகரின் உச்சியில் ஆலயத்தில் அமைந்த தேவர்களை மட்டுமே கண்டீர்கள்” என்றான் கர்ணன். “ஆம், அது போதும்” என்றான் துரியோதனன். “நீங்கள் செல்லாத இருண்ட ஆழங்களுக்கெல்லாம் நான் சென்று மீண்டிருக்கிறேன் அங்கரே. நான் கண்ட இருளையும் இழிவையும் நீங்கள் காணவில்லை. அவற்றைக் கண்டதனாலேயே நான் என்னை வருத்தி பிழையீடு செய்தேன். என் தந்தையின் கைகளால் அறைந்து துவைத்து தூய்மையாக்கப்பட்டேன். ஆகவே எந்த உச்சங்களுக்கும் ஏற தகுதி கொண்டவனாகிறேன்” என்றான் துரியோதனன்.
கர்ணன் பெருமுச்சுடன் “தெய்வங்கள் அருள்க!” என்றான். “அருளியாகவேண்டும். இன்று காலை என்னருகே யயாதியும் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் சந்தனுவும் விசித்ரவீரியரும் நின்றிருப்பதை உணர்ந்தேன். ஐயமே இல்லை. இன்று நான் அவர்களின் மானுட வடிவமே” என்றான் துரியோதனன். அணி முடிந்ததை உணர்த்தி சமையர் பின்வாங்கினர்.
துச்சாதனன் எடைமிக்க காலடிகளுடன் வந்து அணியறைக்கு வெளியே நின்று உரத்த குரலில் “மூத்தவரே, பொழுது பிந்துகிறது என்கிறார் கனகர்” என்றான். “அங்கர் சித்தமாகிவிட்டார்” என்றபடி துரியோதனன் எழுந்தான். விரைவாக என கர்ணன் கையசைக்க முதிய சமையர் அவனுக்கு மேலாடையை அணிவித்தார். திரும்பி ஆடியில் நோக்கி தன் மீசையை பற்றி முறுக்கி கூர் செய்தான். நேர்நின்று தலைதூக்கி நோக்கிவிட்டு “செல்வோம்” என்றான் கர்ணன்.
“இன்று தாங்களும் தேவர் போல் இருக்கிறீர்கள்” என்றான் துரியோதனன். “முன்பிருந்ததைவிட ஒளி கொண்டிருக்கிறீர்கள்.” ஆடியில் அவன் விழிகளைப் பார்த்து கர்ணன் மெல்ல புன்னகைத்தான். “அருமணி ஒன்றை மூடி வைத்த பொற்கிண்ணம் போல என்று எங்கோ ஒரு சூதன் சொன்ன ஒப்புமை நினைவுக்கு வருகிறது” என்றான் துரியோதனன். துச்சாதனன் “ஆம் மூத்தவரே, சூரியன் மைந்தர் போலிருக்கிறீர்கள்” என்றான். கர்ணன் “செல்வோம்” என்று சொல்லி புன்னகைத்தான்.
துச்சலன் உள்ளே வந்து கர்ணனை நோக்கி “மூத்தவரே” என்றான். “என்ன?” என்றான் கர்ணன். “இன்றுதான் தாங்கள் முழுதணிக்கோலத்தில் அவைக்கு வருகிறீர்கள்.” “ஆம்” என்றான் கர்ணன். “இங்கு வந்தபின் தாங்கள் அணி கொண்டதே இல்லை” என்று துச்சலன் சொன்னான். துச்சாதனன் ”ஆம், உண்மை” என்றான். அப்போதுதான் அதை உணர்ந்து சிவதரைப் பார்க்க சிவதர் புன்னகைத்து “அங்கநாட்டின் மணிமுடியையும் கொண்டு வந்திருக்கலாம்” என்றார். துரியோதனன் “இன்று அவையில் உங்களிடமிருந்து விழிகள் விலகப்போவதில்லை அங்கரே. வெறும் தோற்றத்திலேயே வெய்யோன் ஒளிகொண்டவர் நீங்கள்” என்றான்.
கர்ணன் சிரித்தபடி நடக்க உடன் நடந்தபடி துரியோதனன் “எனது பொற்தேர் வரட்டும். அங்கர் என்னுடன் வருவார். நான் இன்று அவருக்கு அணுக்கன்” என்றான்.