அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம் நலமறிய விழைவு.
உதகையின் குளிர்சிலிர்ப்பில், மலையுச்சியில், ஒத்த இயல்புடைய நண்பர்கள் சூழ, இளமை ததும்பும் இலக்கிய ஆளுமை கொண்ட, உலகின் முக்கிய இலக்கிய ஆளுமையுடன் இரண்டு நாட்கள் உரையாடல், கேலிப்பேச்சுகள், விசாரிப்புகள் என்பது எவ்விதத்திலும் இந்திய இலக்கிய உலகில் கனவிலும் சாத்தியமற்றதே!
அதிலும், நான் எழுதிய சிறுகதைகளை நண்பர்கள் படித்து அவற்றைப் பற்றிய சிறிய விவாதம் தங்கள் முன்னிலையில் நடைபெற்றதை பெரும்பேறன்றி என்னவென கொள்வேன். உண்மையில் எனக்கு சிறுகதைகளை விட என் கவிதையினைப் பற்றியே எனக்கு சில அறிவுரைகள் தேவைப்பட்டது. நேரம் காரணமாக அவற்றை பற்றிய வாதம் ஏற்படவில்லை. அதில் பாதகம் ஒன்றுமில்லை.
இப்படி ஒரு நிகழ்வில் நானும் ஒரு அங்கம் என்பதே என்னை வரலாற்றின் துளி என்பதிலிருந்து சற்றே இனிமை கொண்ட தேன் துளியாக மாற்றிவிடுகிறது.
தங்களின் ஞாபகத்திறன் உங்களை கவனிக்கும் அனைவரும் அறிந்து வியந்து வருவதே. ஆனால் அதை தாங்கள் எப்படிச் செய்கிறீர்கள் என்பதை அருகிருந்து சற்றே அறிய முடிந்தது.
முகம் அறிமுகம் கொண்ட பின் `பெயர்` என்ற முதல் வார்த்தை மூலமே அறிமுகம் நிகழ்கிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உடனே அதை அதற்கு தொடர்பான பெயர்களுடனோ, சம்பவங்களுடனோ, படிமங்களுடனோ தொடர்பு படுத்திக்கொள்கிறீர்கள். அது உருவாக்கும் காட்சிகள் மூலம் நாங்கள் எங்களை நீங்கள் கவனித்ததாக நினைப்பதைத் தாண்டி அதிகம் கவனித்துக்கொள்கிறீர்கள்.
என் பெயர் கமலக்கண்ணன். கூடவே நண்பரின் பெயர் தாமரைக்கண்ணன். உண்மையில் என் பெயரின் மேல் எனக்கு ஈர்ப்பு அதிகம். என் பெயரை நான் பலவகைகளில் எழுதி பார்ப்பதுண்டு. ஆனால் `அரவிந்தாக்ஷன்` என்ற பதமும் என் பெயரைக் குறிப்பது என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். அது என்னை வியக்க வைத்தது. அது நான் அவ்வப்போது தேடியலையும் புனைவுப்பெயரோ என்று தோன்றியது.
அடுத்ததாக தங்கள் நகைச்சுவைத் திறன். அது பல கட்டுரைகளிலும், வெண்முரசின் சில பாகங்களிலும் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. இருப்பினும், சில பள்ளித் தோழர்கள் அனைவரையும் சிரிக்கவைப்பதற்காக தன் முகத்தைக் கோணி, அழுவது போல் நடித்து, பாவங்களுடன் செய்யும் நகைச்சுவையைத் தங்களிடமும் கண்டது அரியது. அதை எண்ணி எண்ணி மனம் சிரிப்பில் கொப்பளித்து அதன் குமிழ்கள் என் முகத்தைப் புன்னகை என வெளி காண்பித்தது. `ஏன் சிரிக்கிறீர்கள்` என்று என் சூழலில் உள்ளோர் கேட்பதும் நிகழ்ந்தது.
உங்களைப் பெரிதும் விவாதங்களுக்கு உள்ளிழுக்காமல், பல இழைகளில் கருத்துக்களை விளக்கவேண்டிய ஆசிரியராக மாற்றிவிட்டது சற்றே எனக்கு அதிருப்தியைத் தந்தது. உதாரணமாக, `விவாதத்தின் வழிமுறைகள்`. ` கதை, கதைகோர்வு, மைய இழை – வேறுபாடுகள்` போன்ற விசயங்களில் அதிக நேரம் விரயமானதென தோன்றுகிறது.
இவற்றிற்கு காரணம் எங்களின் அறியாமையாகவோ அல்லது ஈரோட்டில் தங்களுக்கு ஏற்பட்ட முன் அனுபவத்தின் விளைவாகவோ (அல்லது இரண்டுமாகவோ) இருக்கலாம் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
இவையன்றி, தங்கள் நடைத்திறன், இசையின் மீதுள்ள காதல், நீங்கள் மேற்கோளிட்ட கமல்ஹாசன் சொன்ன நகைச்சுவைகள், சிவாலய ஓட்டம் போன்ற அரிய பல கருத்துகள் எண்ண எண்ண எனக்குள் தேனில் ஊறும் கரும்பென இனிக்கிறது.
இரண்டு நாட்கள் அருமையான உணவும் அன்பான சூழலும் வயிற்றையும் மனதையும் முழுதாய் நிறைத்தன. ஆனால் அறிவு மட்டும் விசித்திரமானது, பெறும்தோறும் பெரும்பசி கொள்கிறது.
பெரும்பசியுடன்
அன்புள்ள
கோ.கமலக்கண்ணன்.
அன்புள்ள ஜெ,
நான் எதிர்பார்க்கவே இல்லை, ஈரோடு சந்திப்பு இவ்வளவு கொண்டாட்டமாக அமையும் என்று. சந்திப்பிற்கு முதல் நாள் மாலை கிருஷ்ணன் அவர்கள் என்னை அழைத்து’ ரியாஸ், ஜெயும் நீ வருகிற அதே வண்டியில் தான் வருகிறார். ஈரோட்டில் ஜெயை எழுப்பவேண்டியது உன் பொறுப்பு, இல்லாவிட்டால் அடுத்து திருப்பூர் தாம்பா’ என்று உங்கள் எண்ணை கொடுத்து அழைக்கச் சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
இரண்டு நாளும் மிகச் செறிவான உரையாடல். வாசிப்புமுறை, நாவல்களைப் பற்றி உங்கள் பார்வை போன்றவை எனக்கு நல்ல ஒரு திறப்பு. உரையாடலின் போது உங்களுடன் ஒரு நெருக்கத்தை உணர முடிந்தது. சனி இரவு வேறுவொருவராகவே உருமாறிவிட்டீர்கள். கிருஷ்ணன், மீனாம்பிகை, செந்தில் (செந்தில் தானே அவர்பெயர்?), அரங்கசாமி ஆகியோர் இயல்பாக உணரச்செய்தனர்.
இச்சந்திப்பின் மூலம் தூயன், சச்சின் ஆகியோர்களுடன் நட்பும் சாத்தியமாயிற்று.
உங்களுக்கும், சந்திப்பை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றிகள்.
அன்புடன்
ரியாஸ்