அரசியல்வெளி

 

அன்புள்ள ஜெ,

குமரகுருபரனின் நிகழ்வில் நீங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டே உங்கள் தளத்திற்கு வந்தால் அமெரிக்கத் தேர்தல் பற்றிய உங்கள் குறிப்பைக் கண்டு சிரித்தேன். என்னுடைய குழப்ப நிலை அரங்காவுக்கு வியப்பாக இருக்கலாம். இங்கே அரசியலை கரைத்துக் குடித்து அனுதினமும் அது பற்றியே பேசவும் எழுதவும் செய்கிறவர்களுக்கே இத்தேர்தலில் மக்களின் மனப் போக்கை கணிக்கவோ புரிந்துக் கொள்ளவோ முடியாமல் மூச்சடைத்துப் போயிருக்கிறார்கள். உண்மையிலேயே கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நடந்த எந்த தேர்தலிலும் இல்லாத குழப்பம் இன்று இங்கே நிலவுகிறது.

என் தளத்தில் குறிப்பாக டோனால்ட் டிரம்ப் பற்றி எழுதிய ஒருப் பதிவினை மட்டும் உங்கள் பார்வைக்கு
http://contrarianworld.blogspot.com/2015/08/donald-trumps-candidacy-and-americas.html?m=0

ஒரு சுருக்கமான சித்திரத்தை பிறகு எழுதுகிறேன். வீட்டில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உங்கள் உரை ரசிக்கத் தக்கதாய் இருந்தது. நீங்கள் எல்லா தரப்பினோருடனும் at least முகம் கொடுத்து பேசுமளவில் இருப்பது காண முடிந்தது. தமிழகத்து லோஸாவை நீங்கள் சந்தித்தது உங்கள் பாக்கியம்

அரவிந்தன் கண்ணையன்

 

அன்புள்ள அரவிந்தன் கண்ணையன்,

உங்கள் கட்டுரைகளை வாசிக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. நான் என் பத்தாம் வகுப்பு நாட்களிலிருந்து அமெரிக்கத்தேர்தல்களைக் கவனித்து வந்திருக்கிறேன். இங்குள்ள ஊடகங்கள், தினத்தந்தியேகூட, அவற்றை தொடர்ந்து முன்வைத்துவந்துள்ளன. அந்த அளவுக்கு அவை நமக்கு முக்கியமாக இருந்துள்ளன

டிரம்ப் வெல்வது , வெல்லமாட்டார் என நினைக்கிறேன், கசப்பானது. ஆனால் வேறுவழியில்லை. உலகம் துருவங்களாக ஆகிக்கொண்டிருக்கிறது.
ஜெ

 

 

 

ஜெ

சமீபத்தில் தளத்தில் வந்த உங்கள்அரசியல் சம்பந்தமான இரண்டு பதிவுகளுமே எனக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்தன. ஒரு பொதுப்பார்வையில் இரண்டுமே பெருமளவில் சரியாகத் தோன்றலாம், நாம் அன்றாடம் சந்திக்கும் பலரிடமும் வெளிப்படும்,” யார் வந்து என்ன சார் பண்ணப்போறாங்க எல்லாப் பயலும் அயோக்கியப் பயலுக” என்ற ஒரு பொத்தாம்பொதுவான முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வரிகளின் எதிரொலியாகவே இந்தப் பதிவுகளைக் காண்கிறேன்.தவிர 1989ம் ஆண்டுக்குப்பிறகு, இந்தத் தேர்தலில்தான் ,சென்ற 49 ஆண்டுகளாகத் தமிழகத்தை மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் இந்தக் கட்சிகளுக்கெதிரான சிறு நம்பிக்கையூட்டக் கூடியதொரு அணி உருவாகியுள்ளது. மேலும் ஆளுமை சார்ந்த அரசியலுக்குப் பதில் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்தான சொல்லாடல்களும் இடம்பெறத் தொடங்கியுள்ளன என்றும் நினைக்கிறேன்.

இந்த சூழலில் தான் சார்ந்த துறையில், எப்போதுமே உயர் விழுமியங்களையும், தரத்தையும் வலியுறுத்தும், ஒரு அறம் சார்ந்த லட்சியவாத எழுத்தாளர், அந்தத் துறையயைவிடவும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கக் கூடிய இன்னொரு முக்கியமான துறையயைக் குறித்து இப்படி ஒரு பதிவினை இடுவதும், தன ஜனநாயகக் கடமையயைக் கூடத் துறந்து வாக்களிக்கும் உரிமையைக் கூட பயன்படுத்தாமல் சுற்றுப் பயணம் போய்விடுவேன் (ஒரு பொறாமைதான்) என்று அறிவிப்பதும், கொஞ்சம் கூட நியாயமல்ல என்றே சொல்வேன். (நினைக்கிறேன் என்றுதான் எழுத வந்தேன் செல்வாவின் நினைவு வந்ததால் மாற்றிவிட்டேன்.)

சுரேஷ்

 

அன்புள்ள சுரேஷ்,

நீங்கள் சொல்வது உண்மை. அவை ஜனநாயக விரோதக் கட்டுரைகளே. நானும் அவற்றுக்காக வருத்தமே படுகிறேன். ஆனால் அதுவே என் மனநிலை

பொதுவாக அனைத்து உலகியல் விஷயங்களும் சலிப்பை அளிக்கின்றன. தினந்தோறும் வீட்டுக்கு வரும் தமிழ் ஹிந்துவை வாசித்தே 18 நாள் ஆகிறது. தொலைக்காட்சி பார்ப்பதுமில்லை. மின்னஞ்சலில் வரும் கடிதங்கள் அன்றி பிற தொடர்புகள் இல்லை

ஒன்று, எழுதும் மனநிலை. அது வெளியே விடுவதில்லை. இன்னொன்று பொதுவான ஒரு விலகல். அதை வெல்ல நானே என்னை எங்காவது கொண்டு சென்று தைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒரு தப்பித்தல்தான். நான் என்னை அரசியலாளனாக, அரசியல் சிந்தனையாளனாக எண்ணவில்லை. சாதாரண மனிதன். எழுத்தாளன். எழுத்தாளனின் அரசியல் என்பது எப்போதும் ஒருவகை அரசியலின்மைதான்.

ஜெ

 

 

 

முந்தைய கட்டுரைதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71