வணக்கம்,
அன்புள்ள நிர்மல்,
நலம்தானே? நீண்டநாட்களாகிவிட்டது கடிதம் பெற்று.
இந்தியமரபில் ’தத்துவம்’ என்பது உண்டா என பேராசிரியர் குந்தர் முதல் அஹேகானந்த பாரதி வரை ஒரு விவாதம் நீள்வதை ஒருமுறை நித்ய சைதன்ய யதி, பீட்டர் மொரெஸ், பீட்டர் ஓப்பன்ஹைமர் ஆகியோர் விவாதிக்கக் கேட்டிருக்கிறேன்.
எந்தச் சரியானபொருளில் மேலைச்சிந்தனையில் தத்துவம் என ஒன்று குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறு இந்தியசிந்தனையில் இல்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. அந்த வேறுபாட்டைக் குறித்துக்கொள்ளாமல் இருசிந்தனைகளையும் புரிந்துகொள்ளமுடியாது. ஒன்றைவைத்து இன்னொன்றை மட்டம்தட்டுவதெல்லாம் சிந்திப்பவர் செய்வதுஅல்ல.
[இத்தகையவிவாதங்களில் பாலகங்காதரா, ராஜன் குருக்கள் போன்றவர்களின் குரல்களுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் இருவரையுமே நான் வாசித்திருக்கிறேன்.பொதுவாக இந்தியக் கல்வித்துறையாளர்கள் , அதிலும் நம்மூர் ஜேஎன்யூ அறிஞர்களை, நான் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் எதையும் நமக்குக் கற்றுத்தரமுடியாது, அவர்களின் ஆழமான முன்முடிவுகளையும் காழ்ப்புகளையும் அன்றி]
மேலைச்சிந்தனையில் தத்துவம் என்பது அடிப்படையில் ‘தூயதர்க்கம்’ என பொருள்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் சிந்தனைக்கு ஆதாரமாக உள்ள ஒழுங்குமுறையை மட்டும் கொண்டு அமைந்த ஓர் அறிவுத்துறை அது. ராபர்ட் ஆடியின் கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி ஆஃப் ஃபிலாசஃபி ஒவ்வொரு துறையின் தத்துவத்தையும் தனித்தனியாக பிரித்து வரையறுக்கிறது.
இந்தியசிந்தனையில் தத்+வம் என்பது மெப்பொருள் அறிதல் என்று உத்தேசிக்கப்பட்டது. அதற்கான மூன்றுவழிகள் தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. இவைமூன்றுமே ஒன்றையொன்று நிரப்பி, ஒன்றுக்கொன்று உதவும்வகையில்தான் இங்குள்ள மெய்காண்முறை செயல்பட்டது.
ஆகவே தர்க்கம் அதில் ஓர் அடித்தளம் மட்டுமே. நியாய சாஸ்திரமாக அதுவரையறைசெய்யப்பட்டு அனைத்துவிவாதங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. சந்தஸ் சாஸ்திரத்தையும் ஒருவகையில் தர்க்கம் எனலாம். அது மொழியைவகுத்துரைத்தது
ஆனால் அனைத்துவிவாதங்களிலும் கற்பனைக்கான இடம் இருந்தது. உவமைகள் அறிதலின் அடிப்படைகளாகவே கொள்ளப்பட்டன. நமது பெரும்பாலான தத்துவமேதைகள் கவிஞர்களும்கூட. திருமூலரை கவிஞர் என்பீர்களா தத்துவமேதை என்பீர்களா? மேலைச்சிந்தனை கற்பனையை விலக்கியது, அதன் வழியாக ஒரு புறவயத்தன்மையை அடைந்தது. இந்தியசிந்தனையில் அந்தப்புறவயத்தன்மை பெரிதாகக் கருதப்படவில்லை.
அத்துடன் திருமூலர் ஒரு யோகியும்கூட. உள்ளுணர்வு அவரது முதல் ஆயுதம். மேலைச்சிந்தனை இதை மறைஞானம் [mysticism] என்று சொல்லி விலக்கி தனித்துறையாகக் கண்டது. மேலைநோக்கில் இந்தியாவின் கணிசமான தத்துவஞானிகள் மறைஞானத்தை பூடகமான மொழியில் முன்வைத்தவர்கள் என்றே தெரிவார்கள்.
இந்தியதத்துவம் என்பது தத்துவம் அல்ல இறையியலே [Theology] என பலர் வாதிட்டிருக்கிறார்கள். இந்தியதத்துவம் அறத்தை கையாளும் திராணியற்றது, எனவே அது பயனற்றது என்று கூறியிருக்கிறார்கள். அதை அறியாமல் வழிமொழிபவர்களே இங்குள்ள கல்வியாளர்களில் பலர். அது முற்போக்கெனக் கருதப்படுகிறது.
புறவயமான தர்க்கத்தை காலப்போக்கில் பிரித்து வகுத்துக் கொண்டமையால் மேலைத்தத்துவம் ஒரு பாரபட்சமற்ற கருவியாக ஆகியது. ஆகவே அறவரையறை அதன் ஒரு சவாலாக ஆகியது, ஏனென்றால் காலந்தோறும் மாறுவது, காட்சிதோறும் வளர்வது அறம். Universal Ethics மேலைச்சிந்தனையின் மையப்பேசுபொருள். அதில் அது அடைந்த வெற்றிகள் இன்று உலகமெங்கும் உள்ள சமூக அமைப்பை உருவாக்கியுள்ளன. அடுத்ததாக அறிவியல் விவாதிக்கும் முறைமைகளை மேலைத்தத்துவம் உருவாக்கிய முறைமையைச் சுட்டிக்காட்டலாம். அதுவும் இன்று உலகளாவ உள்ளது
இந்தியதத்துவம் அப்படி ‘புறவயமானதாக’ ஆகவேயில்லை. அதன் ஒருபகுதி மட்டுமே புறவயமான தர்க்கத்துக்குள் நிற்பது. அது ஓர் விவாத அரங்க ஒழுங்கு மட்டுமே. மற்றபடி அதன் மெய்காண்முறை கற்பனை, உள்ளுணர்வு சார்ந்து விரிவது. ஒரு மேலைச்சிந்தனையாளன் இந்தியதத்துவத்தை அறிகையில் இது என்ன கவிதையா இல்லை மறைஞானமா என்று குழம்புவது ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது.
ஆகவேதான் குரு- சீட உறவு இன்றி இந்தியதத்துவம் முறையாகக் கற்கப்பட முடியாததாக உள்ளது. அதை நூல்களிலிருந்து புறவயமாகக் கற்பது வெறும் தகவல்களையே அளிக்கும். நம் கல்வித்துறையாளர்கள் தங்கள் அகந்தையால் குரு என எவரையும் ஏற்கும் தன்மை அற்றிருக்கிறார்கள் என்பதனால் அது அவர்களுக்கு அன்னியமாகவும் உள்ளது.
இந்த இயல்பால் இந்தியதத்துவம் மேலைத்தத்துவம் போல ஒரு தனித்துறையாக வளரவில்லை. அது இந்திய மெய்யியல், இந்தியக்கலை, இந்திய இலக்கியம் ஆகியவற்றுடன் இணைந்துபயிலப்படவேண்டிய ஒன்றாக மட்டுமே உள்ளது. பிரித்துக்கற்றால் பிழையாகப் புரிபடக்கூடியதாகவும் உள்ளது.
ஆகவே அதை மேலைத்தத்துவம் போல மருத்துவம், நீதி போன்ற துறைகளுக்கான அடிப்படைச்சிந்தனையாக நேரடியாகப் பயன்படுத்தமுடியாது. அத்தளங்களில் அதன் செல்வாக்கு என்பது அவற்றின் மையத்தரிசனம் சார்ந்து மட்டுமே செயல்படமுடியும்.
ஆனால், இந்தியதத்துவத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மேலைத்தத்துவத்தில் இல்லாதது. வரண்ட புறவயக் கட்டுமானமாக அல்லாமல் உயிர்ப்புள்ள மெய்யறிவுப்பயணமாக தத்துவத்தை வைத்திருப்பது அதுதான்
ஜெ