வேளிமலை அடிவாரத்திலிருந்துதான் எங்களுக்குப் பால்வருகிறது. அங்கே எருமை ஒரு நல்ல உற்பத்திக்கருவி. நிறையப்புல். நிறையத்தண்ணீர். நிறையக் காற்று. ஆகவே பொதுவாக எருமைகள் மெருகுடன் இருக்கும். கண்களில் வண்டு ஒளிவிடும்.
நடக்கச்சென்றபோது எருமையுடன் சென்ற ஏசுவடியான் “செத்த சவமே. உனக்க ஆமக்கன் வாறாண்ணு பாக்குதியா? காலுவச்சு நடந்துவாடி“ என எருமையை வசைபாடுவதைக் கண்டேன். அது வால்சுழற்றி சாணிகழித்துவிட்டு கொம்புசரிய தலைசுழற்றி என்னை நோக்கியது. “ஆளாரு? தெரியலியே?” என்று எருமைமொழியில் கேட்டது.
“நடக்காது இல்லியா?” என்றேன். “ஆமா சார். எருமை வளக்கதிலே உள்ள பிரச்சினைண்ணா இதாக்கும். பாரச்சனி, காலெடுத்து வச்சு நடக்காது பாத்துக்கிடுங்க. நமக்கு இத மட்டும் பாத்தா போதாதுல்லா? ஆயிரம் சோலி கெடக்கு. இதக் கொண்டுபோயி கெட்டிப்போட்டு பஞ்சாயத்தாப்பீஸுக்கு போயி உரம் வேங்கணும். உரம் வீசி தண்ணிய விட்டுப்போட்டா உச்சைக்கு சந்தைக்கு போணும்… ஓடினாலும் நேரமில்ல. செறகு வேணும்னு நிக்கேன். இது இந்தா கல்லுமாதிரி நின்னிட்டிருக்கு”
நான் எருமையைப் பார்த்தேன். அது புன்னகைப்பதுபோலத் தோன்றியது. “அதுக்கு அது என்ன செய்யும்? அது நாம இருக்குத இந்த உலகத்து சீவன் இல்ல பாத்துக்கிடுங்க. அதுக்க லோகத்திலே கிளாக்கு கொஞ்சம் மொள்ளமாத்தான் ஓடும்” ஏசுவடியான் ஆச்சரியத்துடன் “உள்ளதாக்குமா?” என்று எருமையைப்பார்த்தார். அது காதை அடித்தபடி தலையை அசைத்து பெருமூச்சுவிட்டது.
“இப்பம் நாம காக்காய்க்க லோகத்திலயா இருக்கோம்? அது பத்து தெங்குமேலே பறக்குத நேரத்திலே நாம ஒரு வாய் சோறுதான் திங்க முடியும். காக்கா வேகமா நடலேன்னு சொல்லி நம்மள கொத்தவந்தா சரியா இருக்குமா?” என்றேன். ஏசுவடியான் எருமையை நோக்கியபின் “உள்ளதாக்கும்” என்றான். “வாடி மக்கா… சோலிகெடக்குல்லா?” என்றார்
எருமை இரங்கி வாலைச்சுழற்றியபடி நடக்கத்தொடங்கியது. “நல்ல எருமையாக்கும் மூணு ஈணியிருக்கு…. இப்பம் நாலுமாசமா இருக்கு”. நான் “அப்பம் இதுக்க பாலாக்கும் நமக்கு நாலஞ்சு வருசமாட்டு தாறீரு?” என்றேன். “பின்ன? நல்ல நெய்யுள்ள பாலாக்கும்”
நான் எருமையை நோக்கினேன். இமைசிலிர்த்தது. “அப்பம் இவ நம்ம அம்மையாக்கும்…” என்றேன். ஏசுவடியான் சிவந்த பற்களைக்காட்டி சிரித்தார். “அம்மை அப்டித்தான் ஏலாம நிப்பா… அவளுக்க காலம் வேறல்லா?” என்றேன்
ஏசுவடியான் அதை நோக்கியபின் “ஆமா, நமக்க அம்மைக்கெளவி இப்பமும் கெடக்கா பாத்துக்கிடுங்க. வயது தொண்ணூறாச்சு. பீடி குடிப்பா. ஒரு பீடிய வலிச்சு குடிச்சு தீரதுக்கு ஒருமணிக்கூர் ஆகும். சினிமாவில பொம்ம ஆடுதது காட்டுவாள்லா, அந்த ஸ்பீடு”
“அதாக்கும் பளைய காலத்துக்க ஸ்பீடு. அப்பம் மாட்டுவண்டி. இப்பம் பஸ்ஸு” என்றேன். ஏசுவடியான் எருமையின் கொம்பை பிடித்து “வா பிள்ள…நேரமாச்சுல்லா?” என்றார்
நான் நடந்து வியர்த்து திரும்பி வரும்போது எருமை சாலையோரம் மேய்ந்து கொண்டிருக்க ஏசுவடியான் கையில் கோலுடன் அமர்ந்திருந்தார். “வரமாட்டேங்குதா கேட்டியளா? பளைய காலமாக்கும்” என்றார். “அம்மையில்லா?” என்றேன்
மறுபிரசுரம்/ முதற்பிரசுராம் Feb 18, 2016