உயிர்மை வெளியீடாக வந்த குமரகுருபரனின் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கமுடியாது’ கவிதைத்தொகுதியை நான் வெளியிட்டு உரையாற்றிய நிகழ்ச்சியை என் தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் உயிர்மைக்காக திரு. பிரபு காளிதாஸ் அவர்கள் எடுத்த என் படங்களைப் பயன்படுத்தியிருந்தேன். அது உயிர்மையின் பதிப்புரிமையை மீறும் செயல் என்றும், சுரண்டல் என்றும், ஆகவே அடிப்படை அறமே அறியாதவன் நான் என்றும் சொல்லி திரு பிரபு காளிதாஸ் அவர்கள் எழுதிய கடுமையான கண்டனத்தை வாசிக்க நேர்ந்தது.- அதை ஒரு கடிதமாக எனக்கே அனுப்பியிருக்கலாம்.
அந்நூல் உயிர்மை வெளியீடு. அச்செய்தியும் உயிர்மையைக்குறித்ததே. வணிகரீதியாகச் சொல்லப்போனால் அது அவர்களின் நூலுக்காக நான் அளித்த ஒரு ’பிரமோ’. . அப்படங்கள் எடுக்கப்படுவதே அதற்காகத்தான். வேறு நோக்கத்துக்காக அப்படங்கள் பயன்படுத்தப்படவில்லை. எவ்வகையிலும் என் நலனுக்காக அதைச் செய்யவில்லை.
ஒரு பதிப்பகம் வெளியிட்ட நூலுக்கு வாசக அறிமுகம் செய்வதற்காக என்னைப்போன்று வேலைபபளு மிக்க ஒருவன் இரண்டுநாட்களைச் செலவிட்டுச் செல்வது அது வணிகம் என்பதற்காக அல்ல, அப்படைப்பின் மேல் உள்ள ஈடுபாட்டின் காரணமாகவே. இலக்கியம் மீதான நம்பிக்கை காரணமாகவே. இலக்கியமென்னும் இயக்கம் நிகழவேண்டும் என்பதற்காகவே.
அப்படங்கள் அக்கவிதைநூலின் ஆசிரியரின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.அவற்றை நான் வெளியிட அனுமதியில்லை என உயிர்மைசார்பில் எனக்குச் சொல்லப்படவில்லை. உயிர்மைசார்பில் பணம் பெற்றுக்கொண்டு அப்படங்களை எடுத்த ஒருவர் இவ்வாறு சொல்லும்போது அது உயிர்மையின் கருத்து என்றே எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. எப்படியானாலும் அவரது உள்ளம் புண்பட்டிருப்பதனால் அப்படங்களை விலக்கிக்கொள்கிறேன். திரு பிரபுகாளிதாஸ் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.முற்றிலும் நல்லெண்ணத்தால் செய்யப்பட்ட செயல் இது என அறிவிக்கிறேன்
ஜெ . .