‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை -6

அரங்குசொல்லி மெல்ல அரங்கின் மையத்தில் வந்து நின்று கைவிரித்து “ஆக, ஓர் அங்கத நாடகத்தில் ஒருபோதும் வரமுடியாத வஞ்சங்களும், பெருவிழைவுகளும், விளைவான முற்றழிவும் இந்நாடகத்தில் வரவிருக்கின்றன. இக்கவிஞன் எந்த முறைமைக்குள்ளும் அடங்காதவன். ஏனெனில் இந்த நாடகத்தை அவன் தனக்காகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறான். இதற்குமேல் இதில் எனக்குப் பங்கென ஏதும் இல்லை. இதோ நான் அணியறைக்குச் சென்று இந்தத் தலைப்பாகையை கழற்றி வைத்துவிட்டு என் உடைகளை அணிந்துகொண்டு என் இல்லத்திற்கு செல்லப்போகிறேன்” என்றான்.

தலைப்பாகையை கையில் எடுத்தபடி “அங்கே என் சிற்றில்லத்தில் என் மனையாட்டியும் இரு மகவுகளும் காத்திருக்கின்றனர். சிறுகிளிக்கூடு. பெருங்காற்றுகள் நுண்வடிவில் உறையும் விரிவானுக்குக்கீழே எந்த நம்பிக்கையில் கூடுகட்டுகின்றன பறவைகள்? அறியேன். ஆனால் கூடு நல்லது. அவையோரே, சென்றமர்ந்து கண்மூடி வெளியே உள்ளது இன்னும் பெரிய ஒரு கிளிக்கூடே என எண்ணி பொய்யில் மகிழ்ந்து சுருண்டு பதுங்கி உவகைகொண்டிருக்க அதைவிடச் சிறந்த இடமென ஏதுள்ளது? நான் கிளம்புகிறேன். செல்லும் வழியில் எனக்கு அரசப்படைகளாலும் அவர்களின் அணுக்கப்படைகளாலும் தீங்கெதும் நிகழலாகாது என்று என் சொல் கற்பித்த ஆசிரியர்களை வேண்டிக்கொள்கிறேன். ஓம் அவ்வாறே ஆகுக!” என்றபின் தலைகுனிந்து மறுதிசையில் சென்று அரங்குக்குப்பின் மறைந்தான்.

அரங்கை ஒளி நிறைத்தது. நான்கு திசைகளில் இருந்தும் சூதர்கள் அரங்குக்குள் வந்து தொட்டிகளில் பூத்தமலர்கள் நிறைந்த செடிகளை அரங்கில் நிறைத்துவிட்டுச் சென்றனர். அச்சோலை நடுவே நீலநிற நீள்பட்டாடை ஒன்றை இருபெண்கள் அரங்கின் இருமூலையில் இருந்தும் பற்றி பிடித்துக்கொண்டு மெல்ல அசைக்க அது நீரலைகளை எழுப்பி யமுனையாயிற்று. பெண்களின் சிரிப்பொலி தொலைவில் கேட்டது. அதன் பின் மூன்று சேடிப்பெண்கள் குழலிலும் கழுத்திலும் மலர் நிறைத்து கூவிச் சிரித்தபடி அரங்குக்குள் ஓடி வந்தனர். ஒருத்தி யமுனைக்குள் பாய இன்னொருத்தி பாய்வதற்குள் அவளை ஓடி வந்து பற்றிக்கொண்டான் பின்னால் வந்த அர்ஜுனன்.

அவர்களுக்குப் பின்னால் தன் வேய்குழலைச் சுழற்றியபடி ஓடிவந்த இளைய யாதவன் “அவளையும் நீருக்குள் விடுக பாண்டவரே! நமக்கு காடெங்கும் மகளிர் இருக்கிறார்கள்” என்றான். “நிறைய பேரை கூட்டி வந்துவிட்டோம் போலிருக்கிறதே! யாதவரே, முகங்களையே நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை” என்றான் இளைய பாண்டவன். “முகங்களை எதற்காக நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்றான் யாதவன். “சற்று முன் நான் வந்து கொண்டிருக்கும்போது ஒரு தொலைமொழியை கேட்டேன். அல்லது நானே நினைவு கூர்ந்தேன்.” எண்ணம்கூர்ந்து “கடல் ஒன்றே, அலைகள்தான் மாறிமாறி வந்துகொண்டிருக்கின்றன” என்றான். அர்ஜுனன் “நன்று இதையொட்டி நாமிருவரும் ஏதாவது தத்துவ உரையாடல் நிகழ்த்தவிருக்கிறோமா?” என்றான்.

“நான் எப்போது பேசத்தொடங்கினாலும் ஒரு தத்துவப் பேருரைக்கு சித்தமாக நீ ஆகிறாய். இது நன்றல்ல. தத்துவம் பேசும் தருணமா இது? தத்துவம் உரைப்பதற்கு இதென்ன போர்க்களமா? இங்கு காதல்மகளிருடன் கானாட வந்திருக்கிறோம்” என்றான் இளைய யாதவன். “அப்படியென்றால் நாம் நீராடுவோம்” என்றபடி அர்ஜுனன் நீரில் குதிக்கப்போக அப்பாலிருந்து அனலவன் அவனருகே வந்து கைகூப்பினான். “நரநாராயணர்களை வாழ்த்துகிறேன்” என்று கூவினான்.

இளைய யாதவன் திரும்பி “யாரிவன்? நான் முன்பு செய்ததுபோல மகளிர் ஆடைகளை திருடி தானே அணிந்து கொண்டிருக்கிறான் போலிருக்கிறதே!” என்றான். “ஆம், இந்த செந்தழல் ஆடையைத்தானே சுநீதியும் சுசரிதையும் அணிந்திருந்தார்கள்” என்றான் அர்ஜுனன். “முகங்கள் நினைவில்லாத உனக்கு பெயர்கள் மட்டும் எப்படி நினைவிருக்கிறது?” என்றான் இளைய யாதவன். “பெயர்களை சொல்லித்தானே கூப்பிட முடியும்?” என்றான் பார்த்தன்.

அனலவன் கைகூப்பி “நான் ஆடை திருடியவன் அல்லன். நான் அனலோன். என் உடலே இப்படித்தான்” என்றான். “அனலோன் என்றால்…?” அவன் பணிந்து “தென்கிழக்குத் திசைக்காவலன்” என்றான். “தென்கிழக்கா?” என்றான் பாண்டவன். “ஆம், அங்கிருந்துதான் வந்து கொண்டிருக்கிறேன். என்னை நீங்கள்தான் காத்தருள வேண்டும்” என்றான். “நானா?” என்றான் இளைய யாதவன். “நான் எத்தனை பேரைத்தான் காப்பது? அறிந்திருப்பாய், என் மகளிர்மாளிகையிலுள்ள பதினாறாயிரத்தெட்டுபேரையும் நான் அன்றாடம் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“நீங்கள் இருவரும்… நீங்கள் இருவரும் மட்டுமே ஆற்றக்கூடிய கடமை அது. மேலும் நீங்கள் ஆற்றுவீர்கள் என்று எனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.” “யார் அளித்த வாக்குறுதி?” என்றான் பார்த்தன். “உங்கள் அரசி திரௌபதிதேவி. என் பசியை அடக்குவதாக அவள் அளித்த சொல்லை நம்பியே இங்கு வந்துள்ளேன்” என்றான் அனலோன். “எப்போது அச்சொல்லை அளித்தாள்?” என்றான் பார்த்தன். “மிக இளமையில். அவள் கனவுக்குள் புகுந்து அச்சொல்லை பெற்றேன்.” புன்னகைத்து “அனல்பசி அடக்குவது எளிதா என்ன?” என்றான் இளைய யாதவன். “எளிதல்ல… ஆனால் இப்போதைக்கு அடக்கலாமே” என்றான் எரியன்.

பார்த்தன் “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றான். “அதோ யமுனையின் மறுகரையில் தெரிகிறதே, அதன் பெயர் காண்டவக்காடு” என்றான் அனலோன். “கேட்டுள்ளோம்” என்றபின் அர்ஜுனன் திரும்பி நோக்கினான். “அணுகமுடியாத பெருங்காடென்று சொல்வார்கள். வேரும் தளிரும் மலரும் தேனும் கூட நஞ்சாக நின்றிருப்பது. இறப்பில்லா மாநாகங்கள் வாழ்வது.” எரியன் “ஆம், அங்கு வாழ்கின்றன தட்சர்குலத்து மாநாகங்கள். அவற்றை வெல்ல எரிபரந்தெடுத்தல் ஒன்றே வழி. அவற்றை எரியூட்டி எனக்கு அவியாக்க வேண்டும் நீங்கள். நுண்சொல் எடுத்து வில்குலையுங்கள். அக்காட்டை ஒரு மாபெரும் எரிகுளமாக்குங்கள். உங்களால் முடியும்… உங்கள் எரியம்புகள் திறன் மிக்கவை” என்றான்.

இளைய யாதவன் திரும்பி நோக்கி “அங்கு எரி எழாது என்று இங்கிருந்து நோக்கினாலே தெரியும். மலைகளின் அமைப்பால் அதன் மேல் எப்போதும் கார்முகில் நின்றுகொண்டிருக்கிறது. நாள்தோறும் மழைபொழிந்து விண்ணில் அழியா வில்லொன்றை சமைத்திருக்கிறது” என்றான். “ஆம், அதனால் நான் அவர்களை அணுகவே முடியவில்லை. உங்களைப் போன்ற பெருவீரர் உதவினால் அன்றி நான் அதை வெல்ல இயலாது.”

இமைக்காது நோக்கி சிலகணங்கள் நின்றுவிட்டு “நான் அதை எதற்காக வெல்ல வேண்டும்?” என்றான் அர்ஜுனன். “இவர் சற்று அப்பால் செல்வாரென்றால் ஏன் என்று நான் விளக்குவேன்” என்றான் அனலோன். “நன்று” என்றபடி இளைய யாதவன் எழுந்து அப்பால் விலகி மேலே அசைந்தாடிய மரக்கிளையை நோக்கியபடி நின்றான். “அது விழைவின் பெருங்காடு” என்று குனிந்து அர்ஜுனனிடம் சொன்னான். “விழைவால் கட்டுண்டவர் தாங்கள். இதோ இங்குள்ள அத்தனை பெண்களிடமும் கட்டுண்டிருக்கிறீர்கள். இல்லையென்று சொல்லுங்கள் பார்ப்போம்.”

அர்ஜுனன் திரும்பி நோக்கியபின் “உண்மை” என்றான். “அதற்கப்பால் வெற்றியெனும் விழைவால் கட்டுண்டவர். புகழெனும் விழைவால் கட்டுண்டவர். அதற்கும் அப்பால் பாஞ்சாலப் பேரரசியின் முன் ஐவரில் முதல்வரென நின்றிருக்கும் விழைவால் கட்டுண்டவர். அதற்கும் அப்பால் மெய்மை எனும் பெருஞ்சொல் சூடி காலத்தில் ஒளிர்முடி கொண்டு நின்றிருக்கவேண்டும் என்ற அழியா விழைவால் கட்டுண்டவர். இல்லையா?” “ஆம்” என்றான் அர்ஜுனன்.

“அவ்விழைவு இக்காடு” என்று கைசுட்டி சொன்னான் அனலோன். “முன்பு முக்கண்ணன் நுதல்விழி திறந்து காமனை எரித்தான். அதன் பின்னரே அவன் முழுமை கொண்ட யோகியானான். காமனை எரிக்காது கருதுவது ஒன்றில்லை என்றறிக! இதோ வறனுறல் அறியா நறுஞ்சோலையென அறிந்திருக்கும் இக்காண்டவத்தை உங்கள் அனல் எரிக்குமா என்று பாருங்கள். அந்த ஈரத்தை, பசுமையை, முகிலை, முகிலாளும் இந்திரனை உங்கள் வில் வெல்லுமென்றால் அதன் பின்னரே நீங்கள் உங்களை கடந்துசெல்லமுடியும்.” மேலும் குனிந்து “மெய்மைக்கும் அப்பால் உள்ளது முழுமை. இளவரசே, நீங்கள் வெறும் வீரர் அல்ல. யோகி. யோகமுடிமேல் அமர்பவர்கள் மல்லிகார்ஜுனர்கள் மட்டுமே” என்றான்.

அர்ஜுனன் திரும்பி நோக்கி “ஆனால் அது அத்தனை எளிதல்ல என்று தோன்றுகிறது” என்றான். “எளிது! மிக மிக எளிது” என்றான் அவன். “அதற்கு முதலில் தேவையானது துறத்தல். ஒவ்வொரு விழைவையாக தொட்டு இதுவன்று இதுவன்று என்று அகன்று செல்லுங்கள். யாதெனின் யாதெனின் என்று நீங்கி அதனின் அதனில் இலனாகுங்கள். ஒவ்வொரு அம்பும் ஓர் எண்ணம். ஒவ்வொரு முறை வளைவதும் உங்கள் ஆணவம். ஒவ்வொரு முறை இழுபட்டு விம்முவதும் உங்கள் தனிமை. ஒவ்வொரு இலக்கும் நீங்கள் அடிவைத்து ஏறவேண்டிய ஒரு படி. ஒவ்வொரு எய்தலும் நீங்கள் உதறிச்செல்ல வேண்டிய ஓர் எடை”.

“இதை வென்றபின் நீங்கள் உங்களை வெல்லத்தொடங்கலாம். அதுவரை இவை அனைத்திலும் கட்டுண்டிருப்பீர்கள். மீட்பிலாதவராக.” அர்ஜுனன் சொல்லுக்காக தயங்கியபின் காண்டவத்தை நோக்கினான். “கருநாகக் காடு!” என்றான். “இங்குள்ள நாகங்கள் எவை?” அனலோன் “அங்கே மண்ணுக்கு அடியில் வேர்களென பின்னிப்பிணைந்து கரந்துருக்கொண்டவர்கள் உரகர்கள். மண்ணுக்கு வெளியே அடிமரம் போல் வேரெழுந்து கிளைவிரித்து படம் பரப்பி நின்றிருப்பவர்கள் பன்னகர்கள். உரகர்கள் வஞ்சம். பன்னகர் விழைவு. உரகர்கள் எண்ணம். பன்னகர் செயல். உரகர் தனிமை. பன்னகர் உறவு. ஒன்றிலாது அமையாத பிறிது” என்றான்.

அவன் குனிந்து குரல்தாழ்த்தி “அங்கு பசுமைக்குள் குடி கொள்கிறாள் மகாகுரோதை என்னும் அன்னை. விழைவின் காட்டுக்குள் அன்றி பிறிதெங்கு அவள் வாழமுடியும்? அழியுங்கள் அத்தெய்வத்தை. கோட்டுகிர்களும் வளையெயிறுகளும் எரிவிழிகளும் குருதிவிடாய்கொண்ட செந்நாக்கும் கொண்டு அவள் அமர்ந்திருக்கும் காட்டை. அக்காட்டைச் சூடி உள்ள நிலத்தின் மேல் உங்கள் வெற்றியின் புரி என கொடியொன்று எழட்டும். அது உங்கள் நெற்றிமையத்தில் எழும் நீலச்சுடருக்கு நிகர். அதுவே உங்கள் யோகம்” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்று தலையசைத்தான்.

அனலோன் தலைவணங்கி திரும்பி “இளைய யாதவரே, தங்களிடம் சொல்கிறேன். இங்கு வருக!” என்றான். மேடையின் மறுபக்கம் அவனை அழைத்துச் சென்றான். “சொல்! எதற்காக இக்காண்டவக் காட்டை நான் அழிக்க வேண்டும்?” என்றான் இளைய யாதவன். எரியன் “ஏனெனில் அது விழைவின் பெருங்காடு. விழைவால் ஆனது இப்புவி. தன் வாலை தான் சுவைக்கும் பாம்பு போல விழைவும் அவ்விழைவுக்கு உணவும் தாங்களேயாகி இங்கிருக்கிறார்கள் இந்த நாகர்கள். எரியிலாது காடுதழைக்காது என்று அறியாதவரா தாங்கள்? இப்புவி முழுக்க நிறையவேண்டிய விதை எல்லாம் இக்களஞ்சியத்திற்குள் அடைபட்டிருக்கிறது. இதை அழிக்காமல் அவை சிதறா. காற்றில் நீரில் விதைகள் பரவிப் பரந்து பாரதவர்ஷம் எங்கும் முளைத்து பெருக வேண்டும். எரியெழுக! வளம்பெருகுக!” என்றான்.

“அறிக! விழைவே யோகமென்பது. பெருவிழைவே முழுமை என்பது. விழைவின் உச்சத்தை நோக்கி காற்றறியாச் சுடர் என விழிதிறந்து அமர்ந்திருத்தலே விடுதலை என்பது.” இளைய யாதவன் திரும்பி காண்டவத்தை நோக்கி “ஆம், அரிது. ஆனால் இயற்றியே ஆகவேண்டியது” என்றான். “ஆம், அவ்வாறே ஆகட்டும்!” என்றான் எரி.

திரும்பி இருவரையும் நோக்கி “உங்களில் ஒருவர் நினைத்தால் இக்காட்டை வெல்வதரிது. அம்பின் முனை இளைய பாண்டவர். அதை காற்றில் நிகர்நிறுத்திச் செலுத்தும் இறகு இளைய யாதவர். எங்கு நீங்கள் இருவரும் இணைகிறீர்களோ அங்கே போர் வேள்வியாகிறது. இறப்பு யோகமாகிறது. அழிவு ஆக்கமாகிறது. இங்கு நிகழவிருப்பது முதல் வேள்வி. பின்னர் எழுக பெருவேள்வி!” என்றான் எரியன். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றான் இளைய யாதவன். “ஆம், அது நிகழ்க!” என்றான் இளைய பாண்டவன்.

அனலவன் தலைவணங்கி “நன்றி இளையோரே. நீங்கள் இருவரும் கொள்ளும் பெருவெற்றியால் என் வெம்மை பெருகும். நான் செல்லும் இடங்களில் உயிர் எழும்” என்றான். அவர்கள் தலைவணங்கி நிற்க “உங்களுக்குரிய படைக்கலங்களை உரியதேவர்கள் அருள்க!” என்று அருளி மறைந்தான். அவன் சென்றபின்னர் இளைய யாதவனும் பார்த்தனும் ஒருவரையொருவர் நோக்கி யமுனைக்கரையில் நின்றனர். இசை மெல்ல எழத்தொடங்கியது. முழவின் ஏறுநடைத்தாளம் இணைந்துகொண்டது. இருவர் உடல்களிலும் தாளம் படர்ந்தேறியது. கட்டைவிரலில் பாம்புவால் என நெளிவு. பின்பு துடிக்கும் காலடிகளுடன் அவர்கள் நடமிடத் தொடங்கினர். ஒருவருடன் ஒருவர் பிரியாது முதுகொட்டி நான்குகைகளும் நான்கு கால்களுமாக ஆடினர்.

தாளம் புரவிநடை கொள்ள அவற்றை ஏற்று உடற்தசைகள் ஆடின. ஒவ்வொரு தசையும் ஆட அவை ஒன்றாகி நின்றாட ஒற்றை ஆடல் நிகழ்ந்தது. அங்கு சுழன்று சுழன்றாடுவது ஒரு விந்தை மானுடஉடல் என்ற விழிமயக்கு ஏற்பட்டது. ஒருகணம் இளைய யாதவனாக தெரிந்து மறுகணமே பாண்டவனாக தன்னைக் காட்டி விழியோடு விளையாடியது. ஒரு கை அழிவு என காட்ட மறுகை ஆக்கமென காட்டியது. ஒரு கை அனல் காட்ட மறுகை நீர் காட்டியது. ஒரு கை அருள் காட்ட மறுகை கொல்படை காட்டியது. ஆடிச்சுழன்று அசைவின் உச்சத்தில் நின்று மெல்ல அமைந்து ஒற்றை உடலென மண்ணமர்ந்து ஊழ்கத்தில் அமைந்தனர்.

இசையடங்கிய அமைதியில் தொலைவில் பேரோசை என கடல் ஒலித்தது. ஆடிகள் முன் பந்தங்கள் அசைந்து நீரொளி எழுந்தது. அரங்கெங்கும் அலைகள் எழுந்து பரவின. அரங்கின் ஒரு மூலையில் நீலப்பேரலையாக மென்பட்டு சுருண்டெழ அதன் மேல் ஏறியபடி ஒருகையில் சங்கும் மறுகையில் தாமரையும் ஏந்தி வருணன் எழுந்து வந்தான். “இளையோனே!” என்று அவன் அழைக்க கைகூப்பியபடி அர்ஜுனன் எழுந்து நின்றான். வருணன் “அலைகளாகவே என்னை முன்வைக்கும் முடிவின்மை நான். ஓயாதவற்றின் பெருவல்லமையை நானே அறிவேன். விழைவெனும் பசுங்காட்டை வெல்லும் வில்லொன்றை உனக்களிக்கிறேன்” என்றான்.

“விண்நின்ற பெருமரமாகிய கண்டியின் தடியால் இதை பிரம்மன் சமைத்தார். நூறுயுகம் இது அவரிடமிருந்தது. தொடுவானை, மலைவளைவுகளை அவர் சமைக்க அளவுகோலாகியது. பின்னர் காசியப பிரஜாபதியிடம் சென்று நாணேறி அம்புகள் கொண்டது. அவர் பிறப்பித்த பறவைகள் அனைத்திற்கும் முதல்விசை இதுவே. பின்னர் இந்திரனிடம் முறுக்கவிழா விழைவென்று ஆகியது. என்னிடம் வந்து ஓயா அலைவளைவுகள் என மாறியது. நிலவுவிரிந்த அலைவெளியிலிருந்து நான் உனக்கென கொண்டுவந்த இதற்கு சந்திரதனுஸ் என்று பெயர்” என்று தன் கைகளை தூக்கினான்.

மேலிருந்து பட்டுநூலில் பெரிய வெண்ணிற வில் ஒன்று இறங்கியது. “நூற்றெட்டு நாண்கள் கொண்டது இந்த வில். உன் கையிலன்றி பிறரிடம் நாண்கொள்ளாது என்று அறிக!” அந்த வில் அவர்களின் தலைக்குமேல் ஒரு மாளிகை முகடுபோல் நின்றது. “இது வெல்லற்கரியது. பிறிதொன்றிலாதது. இளையோனே, உன் பொருட்டன்றி பிறர்பொருட்டு பொருதுகையில் மட்டுமே இது படைக்கலம் என்றாகும். இதை ஏற்றுக்கொண்டாயென்றால் ஒவ்வொன்றாக இழப்பதுவே உன் ஊழென்றாகும். இதை ஏந்தி நீ அடைவதென ஒன்றும் இருக்காது” என்றான்.

“நான் அடைவதன் வழியாக அணையும் அமைதலை நாடவில்லை. இழத்தலின் ஊடாக எய்தும் வீடுபேற்றையே விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். “அவ்வண்ணமெனில் இதை கொள்க!” என்ற வருணன் அதை அர்ஜுனனுக்கு அளிக்க அவன் குனிந்து வணங்கி அதை பெற்றுக்கொண்டான். மும்முறை அதை சுழற்றியபோது அது சிறு வில்லாக மாறி அவன் கையில் இருந்தது. அதை தன் தோளில் மாட்டினான். வருணன் பிறிதொரு கைநீட்டியபோது மேலிருந்து வெண்பட்டு ஆவநாழி அவன் கையில் வந்தமைந்தது. அதை அர்ஜுனனிடம் கொடுத்து “இதன் அம்புகள் என்று உன் நெஞ்சில் இறுதி விழைவும் அறுகிறதோ அதுவரை ஒழியாது” என்றான்.

“ஆம், இது ஒழியவேண்டுமென்று ஒவ்வொருமுறை அம்பெடுக்கையிலும் விழைவேன்” என்றான் அர்ஜுனன். “அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி வருணன் அதை அளித்தான். “ஒன்றிலிருந்து ஒன்று தாவும் குரங்கை உனக்கு கொடியென அளிக்கிறேன். ஒன்றிலும் நிற்காதது. ஒவ்வொரு கணமும் தன் நிலையின்மையால் துரத்தப்படுவது. ஆனால் பற்றியதை பிறிதொன்றமையாமல் விடாதது” என்று தன் கையில் விண்ணிறங்கி வந்தமைந்த குரங்குக் கொடியொன்றை அர்ஜுனனுக்கு கொடுத்தான். அதை அவன் பெற்றுக்கொண்டதும் “இதோ, ஒளிமிக்க நான்கு திசைகளும் நான்கு வெண்புரவிகளாக உனக்கு அளிக்கப்படுகிறது. விழைவுகள் எழும் எல்லா திசையிலும் இவை உன்னை கொண்டு செல்லும். வில்லேந்தி நீ அமர்ந்திருக்கையில் என்றும் உன் முன் வெண்ணிற ஒளியென இவை விரையும்” என்றான் வருணன்.

“இவை தங்களுக்கென விசையும் விரைவும் கொண்டவை என்றுணர்க!” என்றான் வருணன். “என்று இவை ஆணவத்தாலன்றி அறிவால் ஓட்டப்படுகின்றனவோ அன்று நீ முழுமைகொள்வாய்.” அர்ஜுனன் தலைவணங்கினான். வருணன் “எழுக! உன் படைக்கலங்கள் இலக்கு கொள்க! உன் இலக்குகள் தெளிவுகொள்க!” என்றபின் பின்வாங்கி அலைகளுக்குள் மறைந்தன். காண்டீபத்துடன் நின்ற அர்ஜுனனை அணுகிய இளைய யாதவன் “அதோ தெரிகிறது காண்டவம். நீ வெல்லவேண்டிய வேர்க்கிளைப்பெருக்கு. உயிர்ச்சுனைக் காடு” என்றான்.

இளைய பாண்டவன் காண்டீபத்தை தொட்டு வணங்கி நிலத்தில் ஊன்றி தன் கால்விரலால் அதன் நுனிபற்றி நிறுத்தி நாணிழுத்து பூட்டினான். அந்த ஓசை இடியோசையென எழுந்து முகில்களில் எதிரொலித்தது. ஆவநாழியிலிருந்து முதல் அம்பை எடுத்து நெற்றி தொட்டு வணங்கி நாண் பூட்டி கண்மூடினான். அவன் அதை எய்தபோது தீச்சரடெனப் பாய்ந்துசென்று மேடையின் மூலையில் விழுந்தது. ஓர் அலறல் அங்கே எழுந்தது. நாகமுதுமகள் ஒருத்தி அலையும் சடைக்கொடிகளுடன் எழுந்து நெஞ்சில் அறைந்து “மைந்தா! மைந்தா” என்று கூவினாள். உடலெங்கும் தீப்பற்ற கூந்தலாக கனல்நின்றெரிய அலறியபடி விழுந்தாள். அவளிடமிருந்து தீக்கொழுந்துகள் சூழப்பற்றி மேலேறத்தொடங்கின.

இளைய பாண்டவன் இரண்டாவது அம்பை எடுத்து நெஞ்சில் வைத்து விழிமூடி உளமொருக்கி மறு எல்லை நோக்கி எய்தான். அங்கே மரங்களுக்குமேல் கருநாகப்பெண் ஒருத்தி அவிழ்ந்துபறந்த நீள்கூந்தலுடன் எழுந்து கைவீசி கூக்குரலிட்டாள். “அனல்! அனல்!” என்று அழுதபடி அவள் ஓட அவள் சென்ற திசையெங்கும் எரிபரந்தது. அவள் அலறிவிழுந்து புரண்டு பொசுங்கினாள். மூன்றாவது அம்பை எடுத்து மண்ணைத்தொட்டு எய்தான். அங்கே நாகமுதுமகன் ஒருவன் எரிகொண்டான். காண்டவம் செந்தீயால் சூழப்பட்டது. நெளிந்த கருநாகப்பரப்புகள் எழுந்து நின்றாட உடனாடின தழல்கற்றைகள்.

வலிக்கூக்குரல்களும் இறப்பலறல்களும் அடைக்கலக்குரல்களும் எழுந்து அரங்கை சூழ்ந்தன. பசிகொண்டு இரைதேரும் பல்லாயிரம் சிம்மங்களைப்போல உறுமியது தீ. நாக்குகள் முளைத்து நாக்குகளாகிப் பெருகி அள்ளிச்சுழற்றி சுவைத்து உறிஞ்சி ஒலியெழுப்பி உண்டன. பெண்களும் குழந்தைகளும் எழுப்பிய கூச்சல்களுடன் விலங்குகளும் பறவைகளும் இணைந்து இரைச்சலாயின. எரிசுட பாய்ந்தெழுந்த மாநாகங்கள் விண்ணில் சொடுக்கப்பட்ட பெரும்சாட்டைகள் போல வளைந்து விழுந்தன. கொந்தளிக்கும் அலைகள்போல் நாகச்சுருள்கள் எழுந்தமைவது தெரிந்தது.

பச்சைமரம் வெட்டுண்டு விழும் ஓசையுடன் நாகங்கள் எரிகாட்டின் மேலேயே விழுந்தன. அந்தப்பகுதியே பாறாங்கற்கள் மழையென விழும் நீர்ப்பரப்பு போல கொந்தளித்தது. ஒருகணம் பாம்புகளாக மறுகணம் மானுடராக எழுந்து எழுந்து விழுந்தனர் நாகர்கள். பல்லாயிரம் பட்டுத்துணிகளை உதறுவதுபோல அனல் ஓசையிட்டது. உறுமியது. பிளிறியது. பாறைபோல் பிளவொலி எழுப்பியது. மண்சரிவென முழங்கியது. பறவைகள் எரிந்து தீயில் விழுந்தன. நச்சுப்புகை விண்ணை எட்ட அங்கே பறந்த வலசைப்பறவைகளும் அனல்மேல் விழுந்தன. அர்ஜுனன் இடைவிடாது எரியம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான். அவன் வில்லின் நாணோசை அரங்கில் களிற்றுப்பிளிறலென ஒலித்தது.

அனலுக்குமேல் பெரியதோர் குடைபோல பதினெட்டு தலைகளுடன் தட்சகியின் படம் எழுந்தது. பதினெட்டு நாக்குகள் பறந்தன. செவ்விழிகள் சுடர்ந்தன. உரத்தபெருங்குரல் “விண்ணவர்க்கரசே” என்று எழுந்தது. “எங்கள் குலக்காவல்தேவா! எந்தையரின் இறைவா! விண்நிறைந்த பெருமானே! நீயே காப்பு!” விண்ணில் இந்திரனின் இடி முழக்கம் எழுந்தது. மின்னல்கள் அரங்கை வெட்டிச்சென்றன. அவ்வொளியில் இருவரும் எரிதழல்களெனத் தெரிந்து அணைந்தனர். அருகே நின்றிருந்த ஒர் அரசமரம் மின்னல்தொட்டு தீப்பற்றி எரிந்தது. அந்த ஒளியில் முகில் ஓர் யானைமுகமென உருக்கொள்ள அதன்மேல் இந்திரன் தோன்றினான்.

“மைந்தா, விலகு! இவர்கள் என் குடிகள்” என்று இந்திரன் சொன்னான். அவன் தூக்கிய வலக்கையில் வஜ்ராயுதம் மின்னியது. அதிலிருந்து மின்னல்கள் இருண்டபுகைவானில் அதிர்ந்தன. இடியோசை எனும் குரலில் “இனி ஓர் அம்பு விண்ணிலெழுந்தால் உன்னை அழிப்பேன். செல்!” என்றான். அவன் இடக்கை அசைய விண்ணில் சிறுமின்னல்கள் நிறைத்து நின்றிருந்த முகில் கிழிந்து பெருமழை அனல்காட்டின் மேல் கொட்டியது. தீ பொசுங்கிச்சுருங்கும் ஒலி எழுந்தது. புகை எழ அதன்மேல் விழுந்தன மழைமுகில்கள்.

இளைய யாதவன் “அந்த முகிலை கிழி! அதை துண்டுகளாக்கு!” என்று கூவினான். அர்ஜுனனின் அம்புகள் எழுந்து சென்று முகிலை கிழித்தன. கீற்றுகளாக விண்ணில் சிதறியது. “தென்திசைக் காற்று எழட்டும். வளிவாளியை செலுத்து!” என்றான் இளைய யாதவன். அர்ஜுனனின் அம்புகள் தென்சரிவை சென்று தொட அங்கிருந்து வீசிய காற்றில் முகில்கற்றைகள் அள்ளிச்சுழற்றிக் கொண்டுசெல்லப்பட்டன. மீண்டும் காண்டவம் அனல்கொண்டெழுந்தது.

“இது போர். நீ என்னை போருக்கழைக்கிறாய்!” என்று இந்திரன் சினந்து கூவினான். “ஆம், தந்தையே. இது போரேதான்” என்றான் அர்ஜுனன். “எவர் இருக்கும் துணிவில் இதை சொல்கிறாய்? மூடா. அவன் மானுடன். மண்ணிலும் நீரிலும் உடல்கொண்டவன். காற்றில் மூச்சுகொண்டவன்… அவன் உன்னை காக்கப்போவதில்லை” என்றான் இந்திரன். “எடுத்த பணி முடிப்பேன். என்னை கடந்துசெல்ல இதுவே வழி” என்றான் அர்ஜுனன். “மூடா. அழியாதே! உன்னை என் கையால் கொல்லமுடியாது. எனக்கு… விலகு!” என்று இந்திரன் கூவினான். “யாதவனே, உன்னுடன் எனக்கொரு பழங்கணக்கு உள்ளது. அதை பிறகு தீர்க்கிறேன். விலகு!”

“இல்லை… இது என் யோகம்” என்றான் அர்ஜுனன். “இது என் கனவு. இவை என் அகத்தடைகள்.” உடல் பற்றி எரிந்தபடி ஓர் அன்னை ஓடி அவன் முன் வந்தாள். அவள் இடைக்குக்கீழே பாம்புடல் நெளிந்தது. தன் இடையில் இரு நாகமைந்தரை வைத்திருந்தாள். அவள் முதுகில் ஒருமைந்தன் தொங்கிக்கிடந்தான். “இளையோனே” என்று அவள் கூவினாள். “வேண்டாம்… பெரும்பழி சூழும். வீரனுக்கு உகந்ததல்ல இச்செயல்.” விழிதிருப்பி “விலகு!” என்று கூவினான் அர்ஜுனன். “விலகு!” எனச்சீறி வாள்வடிவ அம்பை எடுத்தான். அவள் அவன் காலில் விழுந்தாள். “அன்னையிடம் அளிகொள்க! என் மைந்தருக்காக இரங்குக!” என்று கதறினாள்.

அர்ஜுனன் கைகள் நடுங்கின. காண்டீபம் சற்று சரிந்தது. அவன் திரும்பி இளைய யாதவனை நோக்கினான். அவன் விழிகளை விலக்கிக்கொண்டு நின்றான். அவன் அம்பு சரிந்து நிலம் தொட்டது. மறுகணம் சினந்து திரும்பி “விலகு இழிகனவே!” என்று கூவியபடி அவள் தலையை அம்பால் வெட்டினான். அவள் நாக உடல் கிடந்து துடித்தது. தலை உருண்டு விழித்து பல்காட்டி கிடந்தது. நாகக்குழவிகள் நிலத்தில் நெளிந்தோடின. அவன் மூன்று அம்புகளால் அவற்றை கொன்றான்.

“இனி பொறுப்பதில்லை. உன்னை நானே கொல்லவேண்டுமென்பது தெய்வங்களின் ஆணை” என்று கூவியபடி இந்திரன் தன் மின்கதிர்படைக்கலத்தை சுழற்றியபடி அரங்குக்கு வந்தான். அவனுக்கு இருபுறமும் அஸ்வினிதேவர்கள் வந்தனர். பின்னால் நிழலுருவென கரியவடிவில் காலன் வந்தான். குபேரனும் சோமனும் தங்கள் படைக்கலங்களுடன் திசைமூலைகளில் எழுந்தனர்.

இடிக்குரலில் “இன்றே உன்னை அழிக்கிறேன்” என்றான் இந்திரன். அர்ஜுனனை நோக்கி வந்த மின்படையை இளைய யாதவனின் ஆழிப்படை இரு துண்டுகளாக்கியது. யமனின் கதைப்படையை சிதறடித்தது. சோமனும் குபேரனும் அப்படையாழியால் மண்ணில் வீழ்த்தப்பட்டனர். இருவரும் ஒருவர் முதுகுடன் ஒருவர் ஒட்டி ஓருடலாக நின்று போர்நடனமிட்டனர். அரங்கு முழுக்க அவர்கள் பலநூறு வடிவில் நிறைந்திருப்பதாக விழிமயக்கு ஏற்பட்டது. விண்ணிலெழுந்த படையாழி பேருருவம் கொண்டு இறங்கி இந்திரனின் மணிமுடியை வெட்டி வீசியது. முகில்யானையின் மேலிருந்து அவன் குப்புற மண்ணில் விழுந்தான்.

திகைத்து கையூன்றி எழுந்த இந்திரனின் தலைமேல் எழுந்து நின்றது இளைய யாதவனின் இடக்கால். அவன் கையில் சுழன்றுகொண்டிருந்த படையாழி கன்னங்கரிய நீர்ச்சுழி போல பெருகியது. இந்திரன் அச்சத்துடன் கைகூப்பி “எந்தையே! எம்பிரானே! நீங்களா?” என்று கூவினான். “அடியேன் அறிந்திருக்கவில்லை. பிழைபொறுக்கவேண்டும். அடிபணிகிறேன் இறைவா” என்றான். யமனும் அஸ்வினிதேவர்களும் கைகூப்பினர். பின்புலத்தில் காண்டவம் அனல்பரப்பென விண்தொட்டு எரிந்தது. அலறல்கள் நின்றுவிட்டிருந்தன. எரிதழல் ஓசைமட்டும் கேட்டது.

பின்னணியில் பெருஞ்சங்கம் முழங்கியது. முரசுகள் இமிழ்ந்தன. இந்திரனும் எமனும் சோமனும் குபேரனும் கைகூப்பி எழுந்து இருபக்கங்களிலும் அமைய வலப்பக்கம் அர்ஜுனன் நிற்க இளைய யாதவன் கையில் படையாழியுடன் அரங்குநிறைத்து நின்றான். அவன்மேல் விண்ணிலிருந்து ஆழியும் வெண்சங்கும் மெல்ல இறங்கி வந்து அமைந்தன. அவற்றின்மேல் ஒளி பரவியது. “ஓம்! ஓம்! ஓம்!” என்றது ஒரு குரல்.

மங்கலப்பேரிசை முழங்க சீனப்பட்டாலான கரந்துவரல் எழினி அலையலையாக மெல்ல இறங்கிவந்து மூடியது. “அன்னையே, சொல்லரசியே, இங்கு எழுந்த இவ்வரங்காடலின் பிழைகள் எங்களுடையவை. நிறைகளோ உன்னுடையவை. இங்கமைக! மலரென நீரென ஒளியென படையலென எங்கள் சொற்களை கொள்க! ஓம் அவ்வாறே ஆகுக!” என முதுசூதரின் சொல் திரைக்கு அப்பால் எழ சங்கொலி முழங்கி அமைய மேடை அமைதிகொண்டது.

முந்தைய கட்டுரைதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
அடுத்த கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 6