அன்பின் ஜெ,
உடன் கலந்துகொண்ட நண்பர்களிடம் பகிர்ந்தது.
நண்பர்களே!!!!
சூடான பசுஞ்சாணத்தின் மணம். நான் ஊட்டி பேருந்து நிலையத்தில் இறங்கிய உடனே, என் நாசியை தழுவ, உடனே தர்க்க மணம் விழித்துக்கொண்டது. ஊட்டி குளிரில் பசுக்கள் உண்டா என, விழிகள் சுற்று முற்றும் தேடின.
ஏற்கெனவே காலதாமதமானதால், ஆட்டோவைத் தேடினேன். ஒரு ஆட்டோவினை அணுக, அவர் அடுத்ததை கைகாட்டினார். அவரிடம் ஃபெர்ன் ஹில் என ஆரம்பிக்க, ‘குருகுலமா’ என பதிலினார். ஆம் என சொல்லிகொண்டே உட்கார்ந்தேன். ஏறும்போதோ இறங்கும்போதோ எந்த பேரமும் இல்லை. அவர் கேட்ட தொகை, பயணத் தொலைவுக்கு நியாயமாய் தோன்றியது ஒரு காரணமாய் இருக்கலாம்.
தேயிலைத்தோட்டத்தின் நடுவில் பசும்புல் சூழ்ந்த வெளியில், வரவேற்ற நண்பர் சொன்னது, நீங்கள்தான் நண்பா கடைசியாய் நுழைபவர் என சிர்த்ததும், சில விநாடிகள் தாருங்கள் உடை மாற்றி வருகிறேன் என ஓடினேன். அந்த சில விநாடிகளில், முன் தினம் கிளம்புவதற்குள் ஏற்பட்ட சகுனத்தடைகள் நிழலிலாடின. முன்பதிவு செய்திருந்த பேருந்தை தவறவிட்டது, பாப்பா நானும் வருவேனென அடம் பிடித்து 5 நிமிடங்களை விழுங்கியது, இரு சக்கர வாகனத்தை நிறுத்த நிலையத்தில் இடம் இல்லாமல் தடுமாறியது, என ஒவ்வொன்றாக வரிசையிலாடின.
பனிக்கட்டியிலிருந்து உருக்கிய தண்ணீரில் குளித்ததாக பெயர் பண்ணிவிட்டு, காலையுணவை தவிர்த்து, நித்ய சைதன்ய யதியின் நூலக அரங்கினுள் நுழைந்த தருணம், அமர்ந்திருந்த நண்பர்களின் முகத்தை கண்டதுமே ஒரு இணக்கமான சூழலை உணர்ந்தேன்.
அங்கு சிரித்தது, உணர்ந்தது, உரையாடியது, கேட்டது, பார்த்தது பற்றியெல்லாம், இதை விட நல்ல மொழியில் வேறு நண்பர்கள் சொல்ல இயலுமென்று நம்புகிறேன்.
ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு இலக்கிய முகாம், அதுவும் இலக்கியம் என்றால் என்ன என்று கேட்பவர்கள் பாதிக்கும் மேல் நிறைந்தவர்கள் உள்ள சூழலில், அவர் நிகழ்வை கொண்டு சென்ற விதம், நிச்சயம் கலந்து கொண்டவர்களின் இலக்கிய அறிவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்.இலக்கிய அனுபவங்களைத் தாண்டி, ’ஜெ’ போன்ற ஒரு ஆளுமையுடனான நடைப்பயணம், மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். உள்ளரங்கத்தில் பயின்றதை விட, தேயிலைகளின் நடுவிலும், ஓங்கி உயர வளர்ந்த மரங்களின் நடுவிலும், ஒரு புறம் மலையும் மறுபுறம் ஆழமான பள்ளமும் உள்ள பாதையிலும் பயின்ற பாடங்கள்தான் எனது துவக்கப் பாடம் என நினைக்கிறேன்.
நடைப்பயணத்தின் உரையாடலின்போது நான் உணர்ந்தது, இப்போதுதான் நடை பயிலத் துவங்கிய மழலையின் கைப்பிடித்து (இலக்கிய) நடை பழக்கும் தந்தையென/குருவென அவரை உணர்ந்ததுதான்.
எழிலனின் தந்தை
சிவக்குமரன்
அன்புள்ள சிவக்குமரன்
நல்ல சந்திப்பு, நல்ல நினைவுகள்.
ஊட்டி குருகுலம் இன்று வருடந்தோரும் நிகழும் இச்சந்திப்புகளால்தான் உயிர்கொள்கிறது. நித்யா விரும்பியது அங்கே இலக்கியமும் கலைகளும் பயிலப்படவேண்டும் என்றுதான்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
ஏற்கனவே ஏற்காடு மற்றும் ஊட்டி வருடாந்திர சந்திப்புகளில் கலந்துகொண்டிருந்தாலும் என் தயக்கம் காரணமாக தங்களுடன் உரையாட முடியாமல் போய்விட்டது.
அடுத்த புதியவர்களின் சந்திப்பு கொல்லிமலையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். அதில் கலந்து கொள்வதற்கு மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.
நன்றி
அன்புடன்,
பாலாஜி பிருத்விராஜ்