அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
ஊட்டி சந்திப்பில் பங்கேற்க அனுமதி அளித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் .
தங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என் கணவர் பிரவீன் மூலமாக சில மாதங்கள் முன்பு கிடைத்தது .யானை டாக்டர் சிறுகதை மூலமே தங்கள் எழுத்து எனக்கு அறிமுகம் ஆயிற்று.
ஒரு காணொளியில் தாங்கள் கடல் திரைப்படத்தின் கதாபாத்திரங்களும் மொழியும் அன்னியமாக தெரிந்ததாக வந்த விமர்சனகளுக்கு காரணம் மீனவ சமூகம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிய இலக்கிய படைப்புகள் இல்லாததே காரணம் என்றும் ஒரு சமூகத்திற்கான சான்றாக இலக்கிய படைப்புகளே அமைகின்றன என்ற மிக பெரிய உண்மையை தாங்கள் கூறக்கேட்ட அந்த நொடியில் உங்கள் எழுத்துக்களை தாண்டி ஒரு மிக பெரிய சிந்தனை ஆளராக என்னை கவர்ந்தீர்கள் .
பின்பு மற்றொரு காணொளியில் சிறுகதை மற்றும் புதினம் எவ்வகையில் வேறுபடும் என்று கூறுகையில் தாங்கள் கூறிய other side logic , பெரியார் பற்றிய தங்களின் கட்டுரை, இப்படி தங்களின் எழுத்துக்களிலும் உரைகளிலும் தங்களின் உயரிய சிந்தனைகளும் , ஒரு விஷயத்தை தாங்கள் அணுகும் முறையும், எதிலும் other side ஐ காணும் நேர்மையும், கருத்துக்களின் நடுநிலையும் அதற்கு எழும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதமும்,ஒரே விஷயத்தை பலர் பல முறை கேட்டாலும் அதனை பொறுமையுடன் விளக்கும் தன்மையும், உயரிய சிந்தனைகள் எண்ணங்கள் சமூகத்தில் வளர தாங்கள் எடுத்துகொள்ளும் மெனக் கெடல்களும் தங்களை ஒரு சிறந்த ஆசானாகவே என் மனதிற்கு உணர்த்தியது
ஊட்டி சந்திப்பில் தங்கள் குருவை பற்றியும் தங்கள் குருகுல அனுபவங்கள் பற்றியும் தாங்கள் கூறுகையில் ஒரு நல்ல குருசிஷ்ய உறவு எத்தகைய நற்பலனை இச்சமூகத்திற்கு அளிக்கும் என்ற எண்ணமே என் மனதில் தோன்றியது.
ஊட்டியில் தாங்கள் சொன்ன “நான் அப்டி சொல்லலையே” என்ற வார்த்தைகளை எண்ணி எண்ணி புன்னகைப்பேன். அதற்கு காரணம் நானும் பல முறை அப்படி சொல்ல நேர்ந்ததுண்டு. என் வாழ்வில் என்றுமே other side logic ஐ பயன்படுத்தியே சிந்தித்திருக்கிறேன். அதனால் பல முறை நண்பர்கள் உறவினர்களால் சரியாக புரிந்துகொள்ளப்படாமலும், நான் அப்படி சொல்லலையே என்று பல முறை என்னை புரிய வைக்க முயன்று தோற்றும் இருக்கிறேன்.ஒரு சிறிய வட்டத்தில் அப்படி வாழ்வதே கடினமாக இருக்கையில் பல சமூகப்பிரச்சனைகளை தாங்கள் இம்முறையில் அனாயாசமாக அணுகுவதை எண்ணி நான் வியந்த தருணங்கள் பல.
ஊட்டி சந்திப்பில் ஒரு உயரிய சிந்தனையாளனின் சிந்தனைகளை நம்மால் இயன்ற வரை க்ரஹித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலேயே பங்கேற்றேன். அந்த சந்திப்பு எனக்களித்த மனநிறைவு சொல்லில் அடங்காதது. தாங்கள் சிறுகதைகளை கூறுகையில்,பத்து ஆண்டுகளுக்கு முன் இழந்த என் தந்தையிடம் கதை கேட்கும் உணர்வை பெற்று என்னை அறியாமல் என் விழிகளில் கண்ணீர் நிறைந்தது.
தங்களிடம் உரையாட எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டலும் போதாது என்றே தோன்றுகிறது. எவ்வளவோ பேசவேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் எண்ணங்களை எழுத்து வடிவமாக கொண்டு வர இயலவில்லை. இக்கடிதத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் தங்களை மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்..
ரமா பிரவீன்குமார்
அன்புள்ள ரமா
ஊட்டிகுருகுலத்தின் பின்னணியில் உங்களைச் சந்தித்தது ஓர் அரிய அனுபவம். குருகுல சூழலே ஒரு நல்ல மனநிலையை உருவாக்குகிறது. எதையேனும் பெரியதாக நினைக்கத்தூண்டுகிறது. அங்குள்ள குளிரும் ஒரு காரணம்
நீங்கள் வாசிக்க ஆரம்பித்திருப்பது ஒரு பெரிய விஷயம். அறிதலின் இன்பம் போல இனியது ஏதுமில்லை. அதை நமது பெண்கள் பெரும்பாலும் இழந்துவிடுகிறார்கள். ஒரு அரிய தொடக்கம் அமைவதாக
ஜெ
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.
ஈரோடு, ஊட்டி சந்திப்புகள் இலக்கியத்திற்கும் படைப்பாளிகளுக்கும் எத்தனை காத்திரமானது..? வந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமான உறவு பேணுதல், இலக்கியத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தல், வசைகளையும் விமர்சனங்களையும் கண்டு சுணங்காது தனக்கான கருத்தை தொடர்ந்து முன் வைத்தல் என தங்கள் பாணியே தனிதான். விழா தொடர்பான செய்திகள், அதையொட்டிய தங்களின் மனநிலையே என நகைச்சுவையை தொட்டுக் கொண்டு சொல்லி வருவது கூட நல்ல இலக்கிய வடிவுதான்.
மேற்கூறியவையெல்லாம் தங்களுக்கானது.
கீழ் உள்ள செய்தி எனக்கானது.
மேலும் பல நண்பர்கள் இன்னொரு சந்திப்பு வைக்கும்படி கோரினர். நாமக்கல் அருகே கொல்லிமலையில் நண்பர் ஒருவருக்கு ஒரு ஓய்வுவிடுதி உள்ளது. அங்கே ஒரு சந்திப்பை நிகழ்த்தலாமென சொன்னார் அவர். இவ்விரு சந்திப்புகளிலும் பங்குபெறாத புதியவாசகர்களுக்காக அங்கே ஒரு சந்திப்பை மார்ச் மாதம் 20,21 தேதிகளில் நடத்தினாலென்ன என்று ஓர் எண்ணம் உள்ளது. பார்ப்போம்.
நிச்சயம் இந்த வாய்ப்பு நழுவிடாது இருக்கவேண்டும்
கலைச்செல்வி
அன்புள்ள கலைச்செல்வி
கொல்லிமலைச் சந்திப்பு இன்னமும் முடிவுசெய்யவில்லை. பத்துப்பதினைந்துபேர் விருப்பம் தெரிவித்தால் மட்டுமே நிகழ்த்துவதாக எண்ணம்.
ஊட்டி சந்திப்பு மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. பலகோணங்களில் அடுத்த தலைமுறை எப்படி வாசிக்கிறது என்பதை அறிந்துகொள்ள உதவியது
ஜெ
ஜெ
என்னால் ஊட்டி சந்திப்பு போன்ற எந்நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள முடியாது. காரணம் என் குடும்பச்சூழ்நிலை. நம்மூரில் பெரும்பாலான பெண்கள் இந்நிலையில்தான் இருப்பார்கள் என நீங்களும் அறிந்திருப்பீர்கள். ஆகவேதான் அத்தனை ஆண்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஓரிரு பெண்களே தட்டுப்பட்டனர்
ஆனால் என்னைப்போன்ற பலர் மானசீகமாக இதில் கலந்துகொண்டிருக்கிறோம். உங்களிடம் பேசி உலாவந்து சிரித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆகவேதான் நான் கடிதங்களை மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கிறேன். மனம் நெகிழ்கிறேன்
அங்கே வராமலேயே நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். ஒருநாளைக்கு பத்துமுறையாவது உங்கள் இணையதளத்துக்குள் வருபவள் நான் நான். ஆகவே எனக்கு நீங்களோ உங்கள் தளமோ அன்னியம் அல்ல
ஜெயலட்சுமி