‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 67

 பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை -4

மேடையின் பின்புறம் பெருமுரசுகள் எழுப்பிய தொடர் இடியோசை எழுந்து சூழ்ந்தது. ஆடிகளின் எதிரொளிப்புகளால் உருவாக்கப்பட்ட மின்னல்கள் மேடையை வாள்களாக வீசிக்கிழித்தன. இடியோசை வலுக்க எங்கோ ஒரு கொம்பொலி எழுந்தது. அனைத்துப் பந்தங்களும் சுடர் இழுபட்டு மெல்ல அடங்க இருள் பரவிய மேடையில் அரங்குசொல்லி பதறி திகைத்து நான்குபுறமும் பார்த்து “யார்? என்ன நடக்கிறது இங்கு? ஐயோ! யாரங்கே?” என்று கூவினான். அச்சத்தில் தன் இடைக்கச்சையை அவிழ்த்து தலையை மறைத்துக்கொண்டு மேடையில் பல இடங்களில் பதுங்க முயன்றான். இடியோசை நின்று மின்னல்கள் மட்டும் அதிர்ந்து கொண்டிருந்தன.

பின்பக்கம் எங்கோ பெருஞ்சங்கம் எழுந்து ஓய்ந்தது. “நானே கடல்! நானே அலைகளென எழுபவன்!” என வாய்க்குவையால் பெருக்கப்பட்ட குரல் ஒலிக்க, மணியோசையும் மங்கல முழவுகளும் ஒலித்து அடங்கின. முரசுகளின் தோல்பரப்பில் கோல்களை இழுத்து இழுத்து உருவாக்கிய அலையோசை மேடையை நிரப்பியது.

தரையோடு தரையாக பதுங்கி பல்லிபோல தலைதூக்கி அரங்குசொல்லி மேலே நோக்கினான். மேடைமேல் புகை எனச் சூழ்ந்திருந்த முகில்பரப்பில் சிறிய மின்னல்கள் வெடித்தன. “இதோ மண் நிகழ்ந்திருக்கிறேன்! மறம் வென்று அறம் நாட்ட! ஓம்! ஓம்! ஓம்!” என்று தொலைதூரத்திலென ஒரு பெருங்குரல் ஒலித்து ஓய்ந்தது. அதன் எதிரொலிகள் முகில்களில் பட்டு தொலைவுச்சரிவில் உருண்டு மறைந்தன. மேலிருந்து சங்கும் சக்கரமும் மெல்ல இறங்கி வந்து அரங்கின்மேல் நின்றன. பந்தங்கள் எரியத்தொடங்க அவ்வொளி ஆடிகளால் எதிரொளிக்க வைக்கப்பட்டு மேடைக்குமேல் உலவியது. அரங்குசொல்லியை கண்டடைந்து அவன் மேல் நிலைத்தது.

அவன் நடுங்கி கைதூக்கி எழுந்து “இல்லை… நானில்லை” என்றான். பின்னாலிருந்து ஒரு குரல் “மூடா! இது அல்ல உன் மேடையுரை” என்றது. “யார்?” என்றான் அவன் நடுங்கியபடி. “அதற்குள் மறந்துவிட்டாயா? நான்தான் கவிஞன்” என்றது குரல். “அப்படியென்றால் இந்த முகில்மேல் எழுந்தருளியது யார்?” என்றான் அரங்குசொல்லி. “அதுவும் நானே. அறிவிலியே, ஒரு நாடகத்தில் அனைத்தும் அதன் ஆசிரியனே என்று அறியாதவனா நீ?” அரங்குசொல்லி “நீரா? கவிஞரே, இதெல்லாம் நீர்தானா?” என்றபடி உடல் நிமிர்த்தினான். “வேறு யாரென்று நினைத்தாய்? விண்ணுலகிலிருக்கும் தெய்வமா? அதுவே நாங்கள் எழுதிய ஒரு நாடகத்தின் கதைமானுடனல்லவா?” என்றது குரல்.

“அதுதானே பார்த்தேன்!” என்றபடி அரங்குசொல்லி நிமிர்ந்து அவையை பார்த்தான். “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சற்று பயந்தேதான் விட்டேன். மேலே பட்டுநூலில் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். இந்த ஆழியும் வெண்சங்கும் விண்ணெழுந்த பரம்பொருளின் கையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை யார் பார்த்தார்கள் என்றால்…” என்று தயங்கி நெய்யில் அனல்பட்டதுபோல ஒலியெழுப்பிச் சிரித்து “யாரோ பார்த்ததாக, பராசரர் பார்த்ததாக, அவர் புராணத்தில் இருப்பதாக, கவிஞர்கள் சொன்னதாக, சூதர்கள் பாடியதாக, எனது தாத்தா சொன்னதாக எனது அன்னை என்னிடம் சொன்னார். எப்படியோ வந்து சேர்ந்துவிட்டது” என்றபின் நிமிர்ந்து பார்த்து “அதாவது நாராயணன் மண் நிகழ்ந்திருக்கிறான். குறைந்தது யாதவர்கள் அப்படி நம்புகிறார்கள். அவர்கள் வாழ்க!” என்றான்.

அவைக்கு அப்பால் குரவை ஒலிகளும் சிரிப்பொலிகளும் கேட்டன. அரங்குக்குள் நோக்கி “கவிஞரே, மறுபடியும் அரம்பையர், தேவகன்னியர் காமநீராட வருகிறார்களா என்ன?” என்றான் அரங்குசொல்லி. “இல்லை. இது வேறு. மறக்காமல் மேடையுரையை சொல்!” என்றான் கவிஞன். “வெறுமனே மேடைமொழியென்றால் என்ன பொருள்? யாராவது மேடைக்கு வந்தால்தானே அவர்களை நான் அறிமுகம் செய்ய முடியும்?” என்றான் அரங்குசொல்லி. அதற்குள் உள்ளிருந்து கவிஞன் மேடைக்கு பாய்ந்தோடி வந்தான். அவன் முகத்தில் பாதி தெரிந்தது. “இதென்ன பாதி முகமூடி?” என்றான் அரங்குசொல்லி.

“நாடகம் பாதியாகியிருக்கிறது. எனது முகம் இப்போதுதான் பாதியளவு உருப்பெற்றிருக்கிறது” என்ற கவிஞன். “இதோ, சொல்!” என்றபடி ஓர் ஓலையை கையில் கொடுத்தான். “நாடகம் நடக்கும்போதே அதை எழுதுவது முறையல்ல…” என்றான் அரங்குசொல்லி. “பரம்பொருளே அதைத்தான் செய்கிறார்” என்றான் கவிஞன். “ஒரு பெரிய சிக்கல். இப்போது மேடைக்கு வரவேண்டியவர் மையநடிகர் சயனர். கண்ணனாக வரவேண்டிய அவர் கள்ளருந்தி படுத்துவிட்டார். ஆகவே நாடகத்தில் சிறிது மாற்றம்” என்றான் அரங்குசொல்லி. “இந்திரப்பிரஸ்தத்தின் அரசியா வருகிறாள்?” என்றவன் மேலே பார்த்துவிட்டு “ஆனால் ஆழியும் சங்கும் வந்துவிட்டதே” என்றான். கவிஞன் “ஆமாம், மறந்துவிட்டேன்” என்றபின் திரும்பி கைகாட்ட அவை மேலேறிச்சென்று மறைந்தன.

அரங்குசொல்லி ஓலையை வாசித்துவிட்டு மேடையை நோக்கி “ஆகவே… என்ன நடக்கிறது என்றால், அங்கே இமயமலைச்சாரலில் அமைந்த ஐந்துநதிகள் தோள் தொடுத்தோடும் பாஞ்சாலப்பெருநாட்டில் துருபதமன்னனின் மகளாக அனலிடைப் பிறந்த திரௌபதி இப்போது தான் கனவில் கண்ட பெருநகரை மண்ணில் அமைப்பதற்காக இடம் தேடி படகில் சென்று கொண்டிருக்கிறாள்” என்றபின் கவிஞனை நோக்கி “படகிலா? இந்த மேடையிலா?” என்றான். “ஏன், சற்று முன்னால் இங்கு சுனை வரவில்லையா? ஏன் படகு வரமுடியாது? அதெல்லாம் அரங்கமைப்புச் சிற்பியரின் வேலை. எழுதுவது மட்டும்தான் என் பணி” என்றபின் கவிஞன் அந்தச் சுவடியை பிடுங்கிக்கொண்டு உள்ளே ஓடினான்.

அவையை நோக்கிய அரங்குசொல்லி “ஏதோ மேடைநுட்பம் செய்யப்போகிறார்களென்று எண்ணுகிறேன்” என்றபின் மேடையின் வலப்பக்க ஓரமாக ஒதுங்கினான். தொலைவில் கேட்டுக்கொண்டிருந்த சிரிப்பொலியும் நீரைத்துழாவும் ஒலியும் வலுத்தன. தக்கையால் செய்யப்பட்ட படகொன்றை இடையளவில் கட்டி நான்கு சூதர்கள் அது அலைகளில் எழுந்து அமைவதுபோல் எழுந்தமைந்து துடுப்பிடுவதுபோல நடனமிட்டு மேடைக்கு வந்தனர். அவர்களின் கால்களை மறைக்கும்படி நீலப்பட்டுத் திரை இருந்தது. அது அலைபோல் நான்கு பக்கமும் இழுக்கப்பட்டு காணாச்சரடுகளால் அசைக்கப்பட்டது.

குகர்கள் இருபுறமும் மாறிமாறி துடுப்பிட படகுக்குள் ஐந்து சரடுகளாக கூந்தலைப்பகுத்து மணிமுடியணிந்து சரப்பொளிமாலையும் தோள்வளைகளும் பூண்டு அமர்ந்திருந்தாள் திரௌபதி. ஒருத்தி அவளுக்கு சாமரம் வீச பிறிதொருத்தி அவளுக்கு தாம்பூலம் மடித்தளித்தாள். ஒற்றை உடலசைவென அவர்கள் அப்படகை மேடையிலேயே அலைமேல் ஆடிச் செல்லச் செய்தனர். அரங்குசொல்லி திகைப்புடன் “ஆ! மேடையிலேயே படகு!” என்று கூவினான். “விலகு! மறைக்காதே!” என்றான் படகோட்டி.

திரௌபதியை நோக்கி அவள் முன் அமர்ந்திருந்த அடைப்பக்காரி “இளவரசி, கங்கையின் இருகரைகளிலும் தேடிவிட்டோம். தாங்கள் விரும்புவது போன்ற நிலங்களே நூற்றுக்கு மேல் வந்துவிட்டன. அரிய நதிக்கரை கொண்டவை. கரையிலேயே குன்றெழுந்தவை. அணுக முடியாத காவல்காடுகள் கொண்டவை. எங்கு நாம் அமைக்கவிருக்கிறோம் அந்த நகரை?” என்றாள். “நாம் கண்ட அனைத்து இடங்களிலும் மாநகர்கள் அமையமுடியும். ஆனால் என் கனவில் நான் கண்ட அந்த நகரை அங்கெல்லாம் அமைக்கமுடியாது” என்றாள் திரௌபதி. “படகை யமுனைக்கரைக்கு செலுத்துக!” படகை சுக்கான்பற்றி திருப்பினர்.

“தாங்கள் எப்போதும் காணாத நகரென்ற ஒன்று எப்படி தங்கள் கனவில் வரமுடியும்?” என்றாள் சாமரம் வீசியவள். “நாம் காலத்தின் இக்கரையில் இருக்கிறோம் என்பதற்காக காலத்தின் அக்கரை அங்கு இல்லை என்று பொருளல்ல. அந்நகரம் அதற்குரிய நிலத்தில் அமைந்திருக்கிறது. இந்நதியைப்போல் காலம் நம்மை அலைகளிலே ஏற்றி இறக்கி அங்கே இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. அதை நாம் கண்டடைவதொன்றே எஞ்சியுள்ளது” என்றாள் திரௌபதி. அரங்குசொல்லி சிரித்து அவையினரிடம் “அரிய மேடைமொழி! அரசகுடியினருக்கும் அமைச்சர்களுக்கும் மட்டுமே இதெல்லாம் நாடகங்களில் எழுதி அளிக்கப்படுகிறது. நானெல்லாம் இதைச்சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள்” என்றான்.

“யாரது சத்தம் போடுவது?” என்றான் படகோட்டி. அரங்குசொல்லி “நான் அரங்குசொல்லி” என்றான். “அரங்குசொல்லியா? எங்கிருக்கிறாய்?” என்றான் அவன். அரங்குசொல்லி “காலத்தின் இந்தக்கரையில். நீங்கள் வந்து சேர இன்னும் பல ஆண்டுகளாகும்” என்றான். “அதுவரை உன் வாயை மூடிக்கொண்டிரு. எதிர்காலத்தின் குரல் வந்து காதில் கேட்டால் எவரால் நிம்மதியாக காலத்தில் துடுப்புந்த முடியும்?” என்றான் படகோட்டி. “அத்துடன் எதிர்காலத்தை காதால் கேட்டபின் எவராவது எதையாவது கட்டுவார்களா என்ன?” அரங்குசொல்லி “ஆம், அது உண்மைதான்” என்றபின் தன் வாயை கைகளால் மூடினான்.

“அரசி, இந்தக்காடுகூட உகந்ததாகவே உள்ளது. இங்குள்ள மரங்கள் கோபுரங்கள் போல எழுந்திருக்கின்றன. மூன்று சிற்றாறுகளால் இது ஊடுருவப்பட்டுள்ளது. ஒருபோதும் இங்கு நீர்வளம் குறையப்போவதில்லை. இங்கொரு துறைமுகம் அமையுமென்றால் பாரதவர்ஷத்தின் பெருங்கலங்களேகூட இங்கு வந்து சேரமுடியும்” என்றாள் அடைப்பக்காரி. “ஆம், என்றோ இங்கொரு பெருநகரம் அமையவிருக்கிறது. ஆனால் அது இந்திரப்பிரஸ்தம் அல்ல” என்றாள் திரௌபதி. “தாங்கள் ஏன் காம்பில்யம்போல் நமது ஐங்குடிகளுக்குரிய ஒரு நகரை அமைக்கக்கூடாது?” என்றாள் சாமரக்காரி. “இந்திரன் நமது தெய்வமல்ல. இந்திரனுக்கு நாமேன் நகரமைக்கவேண்டும்?”

“அது ஒரு கனவுநிமித்தம்” என்றாள் திரௌபதி. “கனவில் எழுந்தது ஒரு பொன்னிறப் பாம்பு. உருகிய பொன்ஓடை போல் என்னை அணுகி நீர்த்துளிபோல் என் சுட்டுவிரலை தொட்டது. குளிர்ந்த தளிர் என சுற்றி என் மேல் ஏறியது. அன்னையின் வருடல் போல், தந்தையின் அணைப்பு போல், பெருங்காதலின் தழுவல் போல் என்னை முற்றிலும் சுற்றிக்கொண்டது. என்முன் அதன் முழைத்தலை எழுந்த போதுதான் அதன் பேருருவை கண்டேன். அதன் நீலமணிக்கண்கள் என் விழிகளுடன் ஒளிகோத்தன. அதன் மூச்சு என் முகத்தில் சீறியது. அதன் அனல் நா என் இதழ்களை தொட்டுச் சென்றது. அக்கனவில் பாம்பென என்னுள் வந்தவர் இந்திரன் என்றறிந்தேன்.”

சிலகணங்களுக்குப்பின் அவள் நீள்மூச்சுவிட்டாள். “அன்று நான் மிகவும் சிறுமி. ஆனால் என் பெண்ணாழம் இந்திரனை அடையாளம் கண்டுகொண்டது. பெருவிழைவின் இறைவன், நிறைவு என ஒன்றிலாதவன். அவனே என் இறைவன். நான் விழைவது அவன் முடிசூடி குடிகொள்ளும் ஒரு பெருநகர். அது ஓர் அனல்துளி. பற்றி எரித்து இப்பாரதவர்ஷத்தை உண்டு மேலும் பசிகொண்டு விண்தொட்டு ஏறும் பெருவிழைவு அது.” அடைப்பக்காரி “பேரவா என்பது பேரழிவுக்குச் செல்லும் பாதை என்றே நம் முன்னோர் கற்பித்திருக்கிறார்கள் அரசி” என்றாள். “அது எளிய மக்களுக்கு. இங்கே மண்நிகழ்ந்து, காலத்தை சமைத்து, கதைகளென எஞ்சி, விண் திகழப்போகும் என்னைப் போன்றவர்களுக்கு அல்ல” என்றாள் திரௌபதி.

“நான் அன்றிரவு இந்திரனின் அணைப்பில் என்னை யாரென்று அறிந்தேன். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி. பிறிதெவருமல்ல.” இரு தோழியரும் அவள் விழிகளை நோக்கி சொல்லின்றி அமர்ந்திருந்தனர். அவள் திரும்பி “ஆ! அதோ அங்கே!” என்றாள். இருவரும் திரும்பி நோக்க அவள் “தோரணவாயிலென விண்வில் வளைந்துள்ளது” என்றாள். “எங்கும் உச்சி வெயில் ஊன்றி நின்றிருக்க அங்கு மட்டும் எப்படி எழுந்தது இந்திரவில்?” என்றாள் சாமரக்காரி. அடைப்பக்காரி “ஆம், அங்கு  மட்டுமென ஒரு கார்முகில் நின்றிருக்கிறது. அதிலிருந்து வெள்ளி நூல்களென மழை அக்காடுமேல் இறங்கியிருக்கிறது” என்றாள்.

திரௌபதி “படகை அங்கு செலுத்துக!” என்றாள். “அங்கா? இளவரசி அங்கே நாம் செல்லலாகாது” என்று குகர்கள் அஞ்சிக்கூவினர். “அது எந்த இடம்?” என்றாள் திரௌபதி. படகை முன்னால் செலுத்திய குகன் திரும்பி “இளவரசி, அதன் பெயர் காண்டவக்காடு. மானுடர் அணுகவொண்ணா மாயநிலம் அது என்கிறார்கள். தலைமுறைகள் என எங்கள் குடிகள் எவரும் அக்கரையை அணுகியதில்லை” என்றான். “சரி, என் ஆணை இது! இப்போது அணுகுங்கள்!” என்றாள் திரௌபதி. தலைவணங்கி திரும்பி “இது இறப்புக்கான பாதை இளவரசி. ஆனால் தங்கள் ஆணையின்பொருட்டு அதை கடைபிடிக்கிறோம்” என்றான் குகன்.

யமுனையின் பெருக்கில் எழுந்தெழுந்து அசைந்து சென்றது படகு. “இளவரசி, இங்கு யமுனை சீற்றம் கொண்டு கொதித்து அமைகிறது. சீறி நெளியும் பல்லாயிரம் நாகங்கள்மேல் என செல்கிறது படகு. அக்காடருகே படகுகள் அணுக முடியாது” என்றான் முதுகுகன். “அணுகுக! நான் அங்கு சென்றாகவேண்டும்” என்றாள் திரௌபதி. “ஆம், அந்த இடம்தான் இந்திரன் எழவிருக்கும் இடம்… அதுதான்!” என்றபடி அவள் கைநீட்டினாள். எழுந்து நின்று “அதே இடம். நான் கனவில்கண்ட நிலம்…” என்றாள்.

“இளவரசி, அங்கு வாழ்பவை மாநாகங்கள். வடக்கே நாகபுரத்தில் முடிகொண்டு ஆண்ட தட்சநாகமான பிரபவர் குலத்துடன் எரித்தழிக்கப்பட்டபோது அவர் பல்லில் எஞ்சிய ஒருதுளி நஞ்சை ஒரு தர்ப்பை புல்நுனியில் தொட்டு எடுத்துக்கொண்டு இங்கு வந்தன அவர் குலத்து நாகங்கள் ஐந்து. அந்நஞ்சை இங்குள்ள அனைத்து உயிர்களுக்கும் அளித்து இங்கொரு நாகஉலகை அவை எழுப்பின. மானுட உருவெடுக்கத்தெரிந்த உரகங்களும் பன்னகங்களும் மண்ணை அடியிலும் மேலுமென நிறைத்து அங்கு வாழ்கின்றன” என்றான் முதுகுகன்.

“இளவரசி, அங்குள ஈக்களுக்கும், கொசுக்களுக்கும், அட்டைகளுக்கும் நஞ்சு உண்டு. வண்ணத்துப்பூச்சிகளும் வண்ணச்சிறகுக் கிளிகளும் சிட்டுகளும் மைனாக்களும் கூட நஞ்சு நிறைந்தவை. மண்ணை நிறைத்து நெளிகின்றன நச்சுநாகொண்ட புழுக்கள். அங்குள்ள வேர்களும், இலைகளும், கனிகளும், மலர்களின் தேனும் கூட நஞ்சே. தட்சர்களின் அழியா தொல்நஞ்சு ஊறிப்பரவிய பெருநிலம் அது” என்றான் இன்னொரு குகன். ஆனால் அவள் கண்கள் வெறிக்க கனவிலென “அந்நிலம்தான். பிறிதொன்றில்லை” என்றாள்.

“எண்ணித்துணியுங்கள் இளவரசி! இதுநாள்வரை இப்புவியில் எந்த மானுடனும் அக்காட்டை அணுகியதில்லை. அதை வெல்லும் ஆற்றலுள்ள எவரும் இன்று பாரதவர்ஷத்தில் இல்லை.” திரௌபதி அலைகளில் ஆடியபடி இடையில் கைவைத்து மேலாடை காற்றில் பறக்க குழல் அலைய காண்டவத்தை நோக்கி நின்றாள். அவள் முகத்தில் செந்நிறச் சூரிய ஒளி படிய குருதிநீராடி நின்றிருக்கும் கொற்றவை என தோன்றினாள். தொலைவில் என காண்டவம் தெரியத்தொடங்கியது. “பெருங்காடு!” என்று கைசுட்டி சொன்னான் குகன். “விண்தொட்டெழுந்த பசுமரங்களுக்கு மேல் துளியறாதிருக்கும் மழைமுகில் நீர்க்காடு. இந்திரன் வந்து தன் தேவியருடன் காதலாடி மீளும் களியாட்டக்காடு என்று அதை சொல்கிறார்கள்.”

அவன் சுட்டிய மூலையில் பெரிய ஓவியத்திரைச்சீலை விரிந்து வந்தது. அதில் பச்சைப்பெருமரங்கள் மலரும் தளிரும் கொண்டு பொலிய பறவைகள் செறிந்த காண்டவக்காட்டின் வண்ண ஓவியம் தெரிந்தது. அதன் மேல் மெல்லிய மின்னல்கள் துடிதுடித்தன. கரிய, பொன்னிற நாகப்பட்டுடல்கள் நிழல்கள்போல நெளிந்திறங்கி வளைந்தாடின. ஒன்று நூறெனப்பெருகி அவை பிறிதொரு காடாயின. “தட்சனின் காடு. மூன்று தெய்வங்களும் அஞ்சும் பிறிதொரு அரசு” என்றான் ஒரு குகன். “அந்நிலம்தான்… அதுவேதான். அங்கு எழும் இந்திரப்பிரஸ்தம். நான் அந்நகரை கண்டுவிட்டேன். காலடி எடுத்து வைத்து இக்காலத்திரையை கடக்க முடிந்தால் அந்நகரில் சென்று அமைந்திருப்பேன்.”

அவள் பரபரப்புடன் கூவினாள் “இதோ… இங்கு இந்திரகீலம்! இந்திரன் பெருஞ்சிலை அமைந்த நுழைவுப்பாதை! அதோ… அங்கே பன்னிரு கிளைகளாக விரிந்து நீருக்குள் நீண்டு நின்றிருக்கும் துறை மேடை அமைந்துள்ளது. அதோ… மாபெரும் சுழற்றலைகள் புகைச்சுருளென எழுகின்றன. நுரைப்பரப்பென எழுந்த நூறு நூறு மாளிகைகள்…” அவள் மூச்சு அலையடித்தது. வெறிகொண்டவள் போல நகைத்தாள். கைவீசி கூச்சலிட்டாள் “அதோ உச்சியில் இந்திரனின் பேராலயம்! பன்னிரு இதழடுக்குகள் எழுந்த பெருமலர். அதோ… என் நகர் மேல் எழுந்த ஏழுவண்ண இந்திரவில்! அதோ!”

படகை ஓட்டிய குகன் “இளவரசி, இதற்குமேல் செல்லவேண்டியதில்லை…” என்றான். “செல்க!” என்று திரௌபதி சொன்னாள். அவள் கண்கள் கனவிலென விழித்திருந்தன. “செல்க…” அவள் அவர்கள் இருப்பதை அறிந்ததாகவே தெரியவில்லை. குகன் சேடியரை நோக்கிவிட்டு துடுப்பிட்டான். அவன் உள்ளத்தின் தயக்கம் படகிலும் தெரிந்தது. நீரின் ஓசை மட்டும் ஒலித்தது. நீர் நூறாயிரம் விழிகளாக ஆகி அவர்களை கண்காணித்தது. சேடிகள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு உடல் ஒடுக்கி அமர்ந்திருந்தனர்.

படகு அணுகியபோது தொலைவில் பசுங்காட்டின் மேல் ஒரு நாகத்தலை எழுந்து அவர்களை நோக்கியது. “இளவரசி!” என குகன் அழைத்தான். அவன் குரல் நடுங்கியது. “செல்க!” என்றாள் திரௌபதி. கொம்புபோல ஓர் ஓசை எழுந்தது. “அது நாகங்களின் ஓசை. அங்குள்ள நாகங்கள் ஓசையிடுபவை” என்றான் குகன். திரௌபதி செல் என கைகாட்டினாள். மேலும் மேலுமென ஓசைகள் வலுத்தன. சட்டென்று அவர்கள் அருகே நீருக்கு மேல் ஓர் நாகத்தலை எழுந்து நீர் சீறியது. குகர்கள் அலற சேடியர் அணைத்துக்கொண்டு பதுங்கினர்.

திரௌபதி அவற்றை அஞ்சவில்லை. செல்க என்று கையசைத்தாள். மேலும் ஒரு நாகம் எழுந்து மூழ்கியது. மேலும் மேலும் என நாகங்கள் எழுந்து எழுந்து விழுந்தன. பின்னர் அலைபுரளும் கருநாக உடல்களால் ஆன பரப்பாக நீர் மாறியது. காட்டின் மேல் பலநூறு நாக உடல்கள் எழுந்தன. நாகங்கள் அங்கிருந்து கரிய அம்புகள் போல பறந்து வந்து அவர்களைச் சுற்றி நீரில் விழுந்தன. வானும் நாகங்களால் நிறைந்தது.

யானையின் துதிக்கைபோல ஓரு நாகம் எழுந்து வந்து திரௌபதியின் அருகே நின்றிருந்த சேடியை அள்ளித்தூக்கி கொண்டுசென்று நீருக்குள் மறைந்தது. அவள் அலறல் நீரில் கொப்புளங்களாக மாறி மறைய இன்னொருத்தி படகுடன் ஒட்டிக்கொண்டாள். எழுந்து வந்த பிறிதொரு நாகம் அவளை சுற்றி சுழற்றித்தூக்கி காற்றில் வீசியது. அவள் அலறியபடி நீரில் விழ ஐந்து நாகங்கள் மீன்களைப்போல வாய்திறந்து எழுந்து கவ்விக்கொண்டன. அவள் குருதிசீற நீருக்குள் விழுந்து மறைந்தாள். அவளுடைய இறுதிக் கையசைவுகள் மட்டும் எஞ்சின.

“இளவரசி… வேண்டாம்… நாம் அணுக முடியாது” என்றான் குகன். அவள் காலை ஒரு நாகம் சுற்றிக்கொள்ள கண்ணசைவுக்கணத்தில் வாளை உருவி அதை வெட்டி வீழ்த்தினாள். உருவிய வாளில் குருதி தெறிக்க “செல்க!” என்றாள். பின்னால் அமர்ந்திருந்த குகனை இருநாகங்கள் கவ்வி இருபக்கமாக இழுத்தன. அவன் அலறித் துடிக்க அவன் கையுடன் ஒரு நாகம் நீரில் மூழ்கியது. கையில்லாமல் அவன் படகினுள் ஓட இன்னொரு நாகம் அவனை தூக்கியபடி பாய்ந்து நீரில் விழுந்தது. திரௌபதி தன்னை நோக்கிப்பாய்ந்த ஒரு நாகத்தை வெட்டி வீழ்த்தியபடி “செல்க!” என்றாள்.

“இளவரசி, நானும் விழுந்துவிட்டால் அதன்பின் நீங்கள் இங்கிருந்து செல்லவே முடியாது… வேண்டாம்” என்றான் எஞ்சிய குகன். “செல்க!” என்றாள். அவள் வாள் சுழல நாகங்கள் வெட்டுப்பட்டு விழுந்தபடியே இருந்தன. அவள் உடலே குருதியால் மூடப்பட்டது. நீருக்குள் எழுந்த மானுடத்தலைகொண்ட நாகம் “இவள் யார்? தெய்வங்களே இவள் யார்?” என்று கூவியது. ஒரு பறக்கும் நாகம் இறுதி குகனை கவ்வி தூக்கிக்கொண்டு சென்றது. அவன் “இளவரசி…” என அலறியபடி எழுந்து வானில் மறைந்தான்.

திரௌபதியின் வாள் சுழல அலறிய நாகன் வெட்டுண்டு விழுந்தான். “இவள் கொற்றவை! குருதிகொள் கொலைத்தெய்வம்!” என்று அலறினான் ஒருவன். பிறிதொருவன் “கலையமர்ச்செல்வி! இளம்பிறைசூடீ!” என்றான். இன்னொருவன் “கொடுந்தொழில் காளி! கொலையாடும் பிச்சி” என்றான். ”விலகுங்கள் தோழர்களே! இவள் நம் குலமறுத்து கூத்தாட வந்துள்ள கூளி! குருதிபலிகொண்டாடும் கூத்தி!” என்று ஒரு நாகன் அலறினான்.

அவள் வாளைத்தூக்கி இரு கைகளையும் விரித்து நின்றாள். மேலே இருந்து சங்கும் சக்கரமும் இறங்கி வானில் நின்றன. “ஆழியும் சங்கும்! இவள் நாராயணி! அலகிலா அளிநிறை அன்னை!” என்றான் ஒருவன். ‘ஆம்! ஆம்! ஆம்!’ என சங்குகள் முழங்கின. அந்தி ஒளிபோல அரங்கு சிவந்தது. அவள் உருவிய வாளுடன் சுடரென உடல் படகுநிலையில் நின்று தழைய சென்றுகொண்டே இருந்தாள்.

முந்தைய கட்டுரைஉள்ளும் புறமும் -மௌனகுரு
அடுத்த கட்டுரைபிழைத்தல், இருத்தல்,வாழ்தல்- கடிதங்கள்