வழுவுச்சம்

va

அன்புள்ள ஜெ.,

உச்சவழு சிறுகதைக்கான prequel முயற்சித்திருக்கிறேன். உரிமை எடுத்துக்கொண்டதை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் :-)

http://www.rajanleaks.com/2016/02/blog-post.html

நன்றி.,

ராஜன் ராதாமணாளன்

அன்புள்ள ராஜன்

அக்கதையிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஆனால் முற்றிலும் வேறு கதை. அதே நிலம், ஆனால் வேறுவகை மனங்கள்.

வாழ்த்துக்கள், உங்களுடைய முக்கியமான கதை என நினைக்கிறேன். சொல்லாமலே உருண்டுருண்டு கதைக்குள் விளையாடிக்கொண்டிருக்கும் கதை மிக அழகானது.

இன்னும் பூடகமாக ஆக்கியிருந்தால் இன்னும் அழகாகியிருக்கும். அந்தப்பெண்ணைப்பற்றிய கதைநாயகனின் நேரடி நினைவு கதைக்குள் இல்லாமலிருந்திருக்கலாம். பிறரது குறிப்பிடுதல்களாகவே அவள் வந்து சென்றிருக்கலாம்

ஆனாலும் இருட்டுக்குப் பயந்தால் இறுகக்கண்ணை மூடிக்கொள்வோமே அதைப்போல தனிமைக்கு பயந்து காட்டுக்குள் வந்து அடைந்துகொள்வதில்  கொஞ்சம் நிம்மதியிருந்தது.

போன்ற வரியில் வாசகனிடம் நேரடியாகப்பேசும் ஒரு தொனி வருகிறது. அதை தவிர்த்திருக்கலாம்

இவையெல்லாம் மிகச்சிறிய திருத்தங்கள். மற்றபடி அழகிய,செறிவான கதை.

குறிப்பாக

கார் வளைவைத் தாண்டும்போது யானைகள் பள்ளத்தில் இறங்கிச் சென்றுகொண்டிருந்தன. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த யானையின் வாலின் மீது பார்வை பதிந்து கொண்டது. அது ஒரு கணம் சிறிய துதிக்கையாகத் தோன்றத்தொடங்கியது. ஏனோ யானைக்குப் பின்புறமும் ஒரு முகம் இருப்பதாகப் பட்டது. விழியில்லாத அந்த முகம் அசைந்து ஆடிப் பின் சென்று வேகமாய் மறைந்தது.

என்னும் வரிக்காக உங்களைத் தழுவிக்கொள்கிறேன். கதையின் மையப்படிமமாகவே ஒரு கோணத்தில் ஆகிவிட்டது அது.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழகத்தில் அரசியல் எழுச்சி
அடுத்த கட்டுரைகோவையில் ஒரு விருது