ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 7

ar

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா? வெகு நாள்களுக்குப் பிறகு தங்களுக்கு எழுதுகிறேன்.   நேற்று தங்களது காந்தி பற்றிய கட்டுரையைப் படித்து உருண்டு புரண்டு சிரித்துக் கொண்டே இருந்தேன். இப்படி சிரித்து வெகு நாள்கள் ஆகின்றன. நண்பனொருவனிடம் கொடுத்து வாசிக்க சொன்னேன். இப்படியெல்லாம் ஜெ எழுதுவாரா என்றான். எப்படியும் எழுத முடிவதால்தான் அவர் ஜெயமோகன் என்றேன். பல நண்பர்களுக்கு கட்டுரையின் இணைப்பை அனுப்பினேன் ஒரு சிறு குறிப்புடன். “சிரிக்காமல் படித்தால் ஆயிரம் பரிசு”

சென்னை புத்தக வெளியீட்டு விழா பதிவையும் வாசித்தேன். இதே மகிழ்ச்சியான மனநிலையோடும் உச்சபட்ச படைப்பூக்க சக்தியுடனும் நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. நன்றி.

சூ.ஆரோக்கிய புஷ்பராஜ்.

***

அன்புள்ள புஷ்பராஜ்

ஆம், சிலநாட்களாக மனதில் தென்றல். காரணம் புதியவாசகர்களைச் சந்தித்தது. ஒரு பெரிய அந்தரங்க வலியாக இருந்த வெய்யோன் முடியப்போவது

ஜெ

Sd

அன்புள்ள ஜெயமோகன்

நான் உங்கள் அருகர்களின் பாதை, குகைகளின் வழியே, ஹொய்ச்சள கலைவெளியில் போன்ற பயணக்கட்டுரைகளை விரும்பி வாசிப்பவன். இவை நூல்களாக வெளிவந்துள்ளனவா? பெயர்களைக்குறிப்பிட்டால் வாங்க விரும்புகிறேன்

சிவராமன்

***

அன்புள்ள சிவராமன்

ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரை மட்டும் புல்வெளிதேசம் என்றபேரில் நூலாக வெளிவந்துள்ளது. மற்ற கட்டுரைத் தொடர்களெல்லாம் அந்தந்த நாட்களின் பதிவுகள். அவற்றை சற்று சீரமைக்காமல் நூல்வடிவில் கொண்டு வரமுடியாது. அதற்கு அவகாசமில்லாததனால் நீண்டு செல்கிறது. விரைவில் வெளிவரும்

ஜெ

Sd

அன்புள்ள ஜெயமோகன் சார்,

எனது வாழ்வின் உச்சகட்ட நம்பிக்கையின் கணங்களுள் ஒன்று தங்களின் பதிலைக் கண்டபோது எனக்குள் எழுந்த உணர்வு. நன்றி சார்.

“அறவுணர்ச்சியும் ரசனையும் கொண்ட ஒருவர் சற்றேனும் இலட்சியவாதம் இல்லாமல் வாழமுடியாது’ என்ற தங்களின் வாக்குத்தத்தம்தான் எனது மனதில்.ஆனால் எத்தகைய,எதற்கான லட்சியவாதம் என்று தெரியவில்லை. நிறைய நாள் காத்திருந்தேன் வெண்முரசில் அதற்கான விடை கிடைக்கும் என. முழுதாய் இல்லை என்றாலும் கிடைத்தது “வெய்யோன்-38 ல்” துரியோதனைப்பார்த்து திருதராஷ்டிரர் கூறுவதாய் “தன்னைத்தானே செலுத்திக்கொள்ளும் பெருங்கனவு இல்லாதவன்” என்று. அது நான்தான்.எவ்வளவு பெரிய உண்மை.

அதற்கடுத்ததாய் ஜயத்ரதனைப்பார்த்து திருதராஷ்டிரர் கூறுகிறார்”அஞ்சாதே” -இது என்னைப்பார்த்து தாங்கள் கூறியதாகவே எடுத்துக்கொள்கிறேன்.ஏனென்றால் நானும் உளம் மெலிந்தவன்தான்.கங்கை பெருகிச்சென்றாலும் நாக்குழியாலே அள்ளிக்குடிக்கும் புத்தியும் உள்ளவிரிவும் கொண்டவன்தான். அது எனக்கு நன்றாய் தெரியும்.

அச்சம், ஐயம், ஆணவம், அறியாமை தான் நமது விதியாய் வரும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். எனது முதல் எதிரி அச்சம் . இளைமையிலேயே கொல்லப்படுவேன் என்ற அச்சம்.அச்சத்தில் பெரியது தெரியாத எதிரிமேல் அச்சம் கொள்வதுதான். நானும் ஒரு ஜயத்ரதன் என்று கண்டுகொண்ட கணம்.

ஜயத்ரதனின் தாழ்மையும் அதனால் அவனுக்கு கிடைத்த திருதராஷ்டிரரின் அணைப்பும் கர்ணனின் அன்பும் மாபெரும் வாழ்க்கையின் தருணங்கள்.

“தன்னைத்தான் செலுத்திக்கொள்ளும் பெருங்கனவு” ,”அச்சமின்மையின் உச்சியில் நின்று அவ்வச்சத்தின் பொருளிண்மையை நோக்கத்தொடங்கினேன்” ……..இனி எனது மனதோடு போராடுவது இந்த இரு மனநிலைக்காகத்தான் இருக்கும்.

பைபிளில் எனக்கு பிடித்த வாசகங்கள்: 1. நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள். 2. நீங்கள் பூமிக்கு வெளிச்சமாய் இருக்கிறீர்கள். ஒன்று சுவை. மற்றொன்று கண் அறிவது. எதும் பருப்பொருட்கள் கிடையாது. அதைப்போல் இருக்கவேண்டும்

ஸ்டீபன் ராஜ்.

***

அன்புள்ள ஸ்டீபன் ராஜ்

தாழ்மை, எளிமை என்பதும் பெருமை நிமிர்வு என்பதும் ஒன்றின் இருபக்கங்களாக இருக்கையில் மட்டுமே பொருளையவை. தன்னை கடவுளின் மைந்தன் என கிறிஸ்து உணர்வதும் எளிமையில் எளிமையாக இருப்பதும் ஒரே செயல்பாடுதான். தன் படைப்பூக்கம், தன் ரசனை, தன் வாழ்க்கைநோக்கு குறித்த ஆழமான பெருமிதம் எவருக்கும் தேவை. அதிலிருந்தே தன்னை உள்ளடக்கிய பிரம்மாண்டங்களைப்பற்றிய அடக்கமும் பணிவும் வருகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 70
அடுத்த கட்டுரைதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)