ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 1

y

 

அன்பிற்கினிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கங்களுடன் அ மலைச்சாமி எழுதுகிறேன்.

ஊட்டி சந்திப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளித்தது. பதில்களை நான் தங்களிடம் கேட்டேன். ஆனால் தாங்களோ மேலும் சில கேள்விகளை என்னுள் விதைத்துவிட்டீர்கள். நான் கேட்டு நீங்கள் பதில் சொல்லா கேள்விகள் எவ்வளவு கேனத்தனமானவை என்பதை இப்போது உணர முடிகிறது. அந்த கேள்விகள் உங்களை இம்சித்தன என்பதை அக்கேள்விகளுக்கான தங்களின் மௌனங்களும், புன்னனகைகளும் எனக்கு உணர்த்தின. அக்கேள்விகளுக்காக தங்களிடம் இப்போது மன்னிப்பை கோருகிறேன்.

என் 32 வருட வாழ்க்கையில் ஊட்டி சந்திப்பு ஒரு திருப்பு முனை. ஒரு புதிய வாழ்வையும், பயணத்தையும்  நான் இங்கிருந்துதான் துவங்குகிறேன்.

ஊட்டி சந்திப்பை ஒரு மகத்தான அனுபவமாக்கியத்தில் பெரும்பங்கு வகித்த நிர்மால்யா,மீனாம்பிகை, விஜய் சூரியன், ஆசிரமத்தின் குரு ஆகியோருடன் மிக முக்கியமாக வென்னீரிலிருந்து சுவையான உணவுகள் வரை  நமக்காக சமைத்த பெயர் தெரியாத பணியாளர்கள் அனைவருக்கும் என் அகம் நிறைந்த நன்றிகளும், வணக்கங்களும் உரியவை. நான் அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன்.

ஊட்டி சந்திப்பில் ஒரு உன்னதமான இலக்கிய, பண்பாட்டு வெளியை அறிமுகம் செய்த தங்களுக்கு என் நன்றிகளும், வணக்கங்களும் என்றென்றும் உரியவை.

அன்பன்

அ மலைச்சாமி.

அன்புள்ள மலைச்சாமி

நன்றி

ஊட்டி சந்திப்பு எனக்கும் மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது. புதியவர்கள் என்றாலும் ஒரு கருத்துகூட பிழையாக, சாதாரணமாக இருக்கவில்லை என்பதை எண்ணி ஆச்சரியப்படுகிறேன்

ஜெ

வணக்கம் ஜெ,

நல்லா இருக்கீங்களா? வெறி கொண்டு ஏங்கி நல்ல படைப்புகளைத் தேடித் தேடிப் படித்து தனக்குரிய இலக்கிய வாழ்வை அமைத்துக் கொள்ளும் ஒவ்வொரு வாசகனுக்கும் தன் ஆதர்ச எழுத்தாளரைச் சந்தித்தல் ஒரு ஞானோதய நிகழ்வு மாதிரி என நினைக்கிறேன். அத்தகைய ஒரு வாய்ப்பை ஊட்டி சந்திப்பின் வாயிலாக தந்தமைக்கு நன்றி ஜெ.

தங்களுடைய எழுத்தாளரைச் சந்தித்தல் சார்ந்த பதிவுகள் தந்த ஊக்கத்தில் இந்த இரண்டு நாட்களும் எப்படி இருக்க வேண்டும் என கடந்த ஒரு மாதமாகவே மனம் முழுதும் சிந்தனைகள். சந்திப்பின் முதல் கேள்வியே ‘mysticism’ என்றால் என்ன? ஒரு வரையறையில் ஆரம்பித்து உதாரணங்களின் வழியாக நீங்கள் விளக்கிய விதம் நம் நண்பர்களை அடுத்தடுத்த தொடர் கேள்விகளுக்கு இட்டுச் செல்ல, அமைதியில் கவனித்திருந்த எனக்கு ஒரு கேள்வி. இந்த சந்திப்பில் ஜெ சொல்லப்போகும் மையக்கருத்து என்னவாக இருக்கும்? இத்தனை படைத்துவிட்ட ஒரு சாதனையாளர் தன் புதிய ரசிகர்களுடன் என்னதான் பகிர்ந்துகொள்ள முடியும்?

நித்யாவுடனான உங்கள் அனுபவங்கள், விவாதித்தல் எப்படி நிகழவேண்டும், ஒரு listener என்னவெல்லாம் செய்ய வேண்டும் செய்யக்கூடாது, விமர்சனம், அபிப்ராயம் மற்றும் கமெண்ட் இவற்றிற்கிடையே என்ன வேறுபாடு, இவை சார்ந்த தங்கள் விளக்கங்கள் நம் சந்திப்பை ஒரு பயிற்சிப் பட்டறையாக மாற்றின.

கடந்த 5 வருடங்களாக வலைப்பக்கத்தில் கவிதை எழுதி வருகிறேன். ஜெவின் கரங்களில் என் படைப்பு இருந்தபோது ஏற்பட்ட உணர்வு உச்சம். ஜெவிற்கு கொஞ்சமாவது பிடிச்சிருக்குமா என்ற கேள்வியோடு இருந்தேன். அன்றைய இரவு ஏதும் சொல்லாமல் சென்று விட்டீர்கள். மறுநாள் முதல் அமர்விலேயே அக்கவிதை குறித்த விவாதத்தைத் தாங்களே தொடங்க மிகவும் மகிழ்ந்தேன். ஒரு கவிதையில் சொற்கள் பயன்பாடு எவ்வளவு தூரம் தொக்கி நிற்க வேண்டும், எதைச் சொல்லி எதைச் சொல்லாமல் விட வேண்டும், சந்தம் எதற்கு, தானே வருத்தி கவிஞன் உட்புகுத்தும் உருவகங்கள் எந்த அளவில் நிற்க வேண்டும் (cerebral impact), வாசகனுக்கு கவிஞன் விட்டுச் செல்வது எதனை – போன்ற மிக ஆழமான வழிகளைத் தங்கள் விமர்சனத்திலிருந்து பெற்றேன்.

இது போலவே சிறுகதை எழுதுதல் குறித்த தங்கள் விமர்சனமும் நம் நண்பர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு அனுபவம். எல்லாவற்றையும் தாண்டி, தங்கள் அருகே அமர்ந்து கை குலுக்கி பேசிக்கொண்டிருக்கும்போது மிகவும் பிடித்த உயிரான ஒரு ஆசிரியருடன் அமர்ந்திருந்த உணர்வே இருந்தது. இன்னும் பல படைப்புகளை ஊக்கத்துடன் உருவாக்க இந்தச் சந்திப்பின் தங்கள் கருத்து ஸ்பரிசம் தூண்டுகிறது.

நிர்மால்யாவின் இயல்பான நட்பு, சேர்ந்து செய்த சில தன்னார்வப் பணிகள் மகிழ்ச்சி. விஜய், மீனாம்பிகை மற்றும் பரமேசின் சிறந்த ஒருங்கிணைப்புக்கு பாராட்டுக்கள். இன்னும் நிறைய சந்திக்க வேண்டும்.

தாங்கள் வழங்கிய அத்தனை அனுபவங்களுக்கும் நன்றி.

Thank You

சுஷீல்

அன்புள்ள ஷீல்

உங்கள் கவிதையின் உத்வேகம் உண்மையானது. கவிதை என்பது தொடர்ச்சியாக உருமாறிக்கொண்டிருக்கும் ஒரு நீள் உரையாடல் என எடுத்துக்கொண்டால் மறுதரப்பின் குரலாக அங்கு வந்த எதிர்வினைகளை அறியமுடியும். அது உங்களுக்கே பெரிய திறப்பாக அமையும்

ஜெ

மதிப்பிற்குரிய ஜெயமோகன் ,

ஊட்டியில் தங்களை சந்தித்து உங்களின் கருத்துக்களை கேட்டது மிகச் சிறந்த கற்றல் அனுபவம். விவாதங்கள் எப்படி நிகழ வேண்டும் கருத்துக்கள் எவ்வாறு நிறுவப்பட வேண்டும் பற்றி நிறைய கற்றுக் கொண்டேன்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் விரிவாக இந்திய கலை மரபுகளைக் குறித்து உரையாட ஆவல். நிகழ்வதற்கு வாய்ப்பு நேரும் என்று நம்புகின்றேன்.

மிக்க நன்றி சார்

ஜெயக்குமார் பரத்வாஜ்

அன்புள்ள ஜெயக்குமார்

உங்கள் பாடல் சந்திப்பின் இனிய அனுபவமாக அமைந்தது. நாகர்கோயில் வரும்போது சொல்லுங்கள், முழுக்கச்சேரி கேட்க ஆர்வமாக உள்ளேன்

ஜெ

ஊட்டி புதியவர்களின் சந்திப்பு

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63
அடுத்த கட்டுரைநவீன விருட்சம் நூறாவது இதழ்