சிற்பங்களைப் பயில…

 

 

 

அன்புள்ள ஜெ,
ஈரோடு புதியவர்களின் சந்திப்பில் நான் சிற்பங்களின் தொன்மத்தை, வரலாறு, குறியீடு எப்படி அறிந்து கொள்வது என்று தங்களிடம் கேட்டேன். நீங்கள் பயிற்சியின் மூலம் அறியலாம் என்று கூறினீர்கள். ஒரு இடத்திற்கு போவதற்கு முன் அவ்விடத்தை பற்றிய ஒரு research செய்வதன் மூலம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்றீகள் .  எனக்கு சிற்பங்கள் மீது மிகுந்த ஆர்வமிருப்பினும் அதற்குரிய பயணங்கள் செய்யினும் அதன் தொன்மங்கள்,  வரலாறு, குறியீடு தெரியாமல் பார்ப்பதனால் சோர்வுக்கு உள்ளாகிறேன்.
இன்று கலையறிதல் என்ற தலைப்பில் சிற்பங்களை ரசிப்பது பற்றிய கடிதத்தில் பயிற்சியின்மூலம் நாம் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியும், சிற்பங்ககளைப்பற்றிய நூல்களை படியுங்கள் என்று கூறியுள்ளீர்கள். நீங்கள் சில சிற்பங்களைப்பற்றிய நூல்களை பரிந்துரைத்தீர்களானால் மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
நன்றி,
சிவா, பெங்களூர்

 

 

அன்புள்ள சிவா,

 

இந்தியாவின் சிற்பக்கலை குறித்தும் , இந்திய ஆலயங்கள் குறித்தும் தேட ஆரம்பித்தால் நிறைய நூல்கள் உள்ளன. நானே பலநூல்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். தமிழில் உள்ள நூல்களைப்பற்றி மட்டும் சொல்கிறேன்

 

இந்தியச்சிற்பக்கலை குறித்து வாசிக்க தொடக்கநூலாக தென்னிந்தியக் கோயில்கள் [கே ஆர் ஸ்ரீனிவாசன்] அது ஓர் எளிய தொடக்கத்தை அளிக்கும்.

 

அதன்பின் ஒவ்வொரு ஆலயத்தைப்பற்றியும் எழுதப்பட்ட தனிநூல்கள் உதவும். பொதுவாக ஓர் ஆலயத்தைப்பற்றி எழுதப்பட்ட நூல் அதேபோன்ற அனைத்து ஆலயங்களையும் விளக்கும்

அ. கா. பெருமாள்

 

அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு, சுசீந்திரம் ஆலயவரலாறு, குமரிமாவட்டத்திருக்கோயில்கள், பறக்கை மதுசூதனப்பெருமாள் ஆலயம் வரலாறு போன்ற நூல்கள் முக்கியமானவை

 

குடவாயில் பாலசுப்ரமணியம்

சோழர்காலகட்ட ஆலயங்களைப்பற்றி குடவாயில் பாலசுப்ரமணியம் விரிவாக எழுதியிருக்கிறார். அவரது அனைத்து நூல்களும் சிற்பங்களைப்பற்றிய விரிவான தகவல்களைக்கொண்டவை. தஞ்சை பெரியகோயில் பற்றிய இவரது நூல் ஒரு சமகாலப்பெரும்படைப்பு.

 

நந்திபுரம்,திருவாரூர் திருக்கோயில்,சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்,கோபுரக்கலை மரபு, இராஜராஜேச்சரம் , தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்),கலையியல் ரசனைக் கட்டுரைகள்,  போன்றவை குறிப்பிடத்தக்க நூல்கள்

 

முனைவர் பாலுச்சாமி மகாபலிபுரம் சிற்பங்களைப்பற்றி எழுதிய நூல்  அர்ச்சுனன் தபசு சமீபத்தில் வெளிவந்த ஒரு முக்கியமான படைப்பு.. அர்ஜுனன் தவம் என்னும் புகழ்பெற்ற சிற்பத்தின் குறியீட்டு அமைப்பை விரிவாக விளக்கும் இந்நூல் பிற சிற்பங்களைப் புரிந்துகொள்ளவும் ஒரு நல்ல வழிகாட்டி

tho

பழைய எழுத்தாளர்களில் தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான் தமிழகத்தின் ஆலயங்கள் தோறும் சென்று சிற்பங்கள் குறித்த விரிவான தகவல்களுடன் நூல்களை எழுதியிருக்கிறார்.  இவரது நூல்கள் பயணக்கட்டுரைத்தன்மை கொண்டவை, எளிமையானவை. ஆனால் சிற்பங்களைப்பற்றிய நுணுக்கமான ரசனை இவருக்குண்டு. மதுரை மீனாட்சிகோயில் ஆலயங்களைப்பற்றிய இவரது நூல் ஒரு முதன்மையான ஆக்கம்
கலைஞன் கண்ட கடவுள்,கல்லும் சொல்லாதோ கவி,இந்தியக் கலைச் செல்வம்
தமிழர் கோயில்களும் பண்பாடும் (கலைக் கட்டுரைத் தொகுப்புகள்),மதுரை மீனாட்சி,வேங்கடம் முதல் குமரிவரை  போன்ற நூல்கள் முக்கியமானவை.

 

bந.சுப்புரெட்டியார் எழுதிய பயணக்கட்டுரைகளும் தமிழ்ச்சிற்பக்கலையைப் புரிந்துகொள்ள பெரிதும் உதவக்கூடியவை. அவரது சோழ நாட்டுத் திருப்பதிகள் இரு தொகுதிகள்,தொண்டைநாட்டுத் திருப்பதிகள்,பாண்டிநாட்டுத் திருப்பதிகள்,மலைநாட்டுத் திருப்பதிகள்,வடநாட்டுத்திருப்பதிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

 

இந்நூல்கள் வழிகாட்டிகளே. இவற்றை வாங்கிச்சேகரிப்பதோ நூலகங்களில் கண்டடைவதோ ஒரு சுவாரசியமான வாழ்க்கைப்பயணமாக அமையும். இவற்றை ஒட்டி பயணம்செய்து சிற்பங்களைப்பார்ப்பது மேலும் பெரிய ஒரு விரிவு.

 

தமிழக அரசு இங்குள்ள ஆலயங்களைப்பற்றி தனித்தனியாக நல்ல வழிகாட்டி நூல்களையும் ஒட்டுமொத்தமாக ஒரு கலைக்களஞ்சியத்தையும் வெளியிடலாம். அதற்கான முயற்சி காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ராஜாஜியின் வழிகாட்டலுடன் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான் பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கைவிடப்பட்டது.

 

இன்று நமது ஆலயங்கள் அரசும் பக்தர்களும் கொண்டிருக்கும் பொறுப்பின்மையால் கைவிடப்பட்டோ பராமரிப்பு என்றபேரில் மணல்வீசியும் பெயிண்ட் அடித்தும் சீரழிக்கப்பட்டு மறைந்துகொண்டிருக்கும் நிலையில் அதை எல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாது.

 

டி கோபிநாதராவ் ஆங்கிலத்தில் எழுதியElements of Hindu iconography, Gopinatha Rao, T. A. இத்துறையின் முக்கியமான முன்னோடி நூல். வெளிவந்து முக்கால்நூற்றாண்டாகியும் இன்னமும் தமிழில் வெளிவரவில்லை. அதை ஒட்டி விரிவாக்கி ஒரு சிற்பக்கலைக்களஞ்சியம் ஒன்றை தனிப்பட்ட முறையில் உருவாக்க அ.கா.பெருமாள் முயற்சிசெய்துகொண்டிருக்கிறார்

ஜெ

 

தென்னிந்தியக் கோயில்கள் கே ஆர் சீனிவாசன்

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

 

சிற்பங்கள்:கடிதங்கள்

முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்

அசைவை கைப்பற்றுதல்

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

 

 

முந்தைய கட்டுரைபிழைத்தல், இருத்தல்,வாழ்தல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 68