ஓர் அழைப்பிதழ்

 

IMG_9055
விருதுகளை துச்சமென நினைக்கும்”அறம்” சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரும் ”நான் கடவுள்”திரைப்படத்தின் வசனகர்த்தாவுமாகிய அன்பு எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் அறம் புத்தகம் பற்றியும் அதில் யானை டாக்டர் கதை பற்றியும் நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.நான் கடவுளும் கடலும் அங்காடி தெருவும் உங்களுடைய பங்களிப்பின் காரணமாகவும் எதிர்பார்த்தவன்.உங்களை இஸ்லாமியர்கள் அவர்கள் இல்ல விழாவிற்கு அழைத்தாளர்களா ?அல்லது ஏன் அழைக்கவில்லை என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.

வரும் பிப்ரவரி 21ம் நாள் எனது திருமணம் மதுரையில் நடைபெற இருக்கிறது. நேரில் வந்து பத்திரிகை வைக்க இயலாத காரணத்தினால் தபால் மூலம் எனது திருமண அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். மாற்று மத நண்பர்களின் வருகையால் மட்டுமே முழுமையடையும் எங்கள் இஸ்லாமிய திருமணத்துக்கு தாங்களும் தங்கள் குடும்பத்தோடு வந்து கலந்துகொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு தங்களது நல்வரவை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் முஸ்லீம் நண்பன்

புஹாரி ராஜா.

துபாய்

With Regards,

N.Buhari Raja

 

*
அன்புள்ள புகாரி ராஜா

உங்கள் அழைப்பிதழ் கிடைத்தது. நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி என் தளத்தையோ நூல்களையோ வாசிப்பதில்லை என்பதனால் என் பயணத்திட்டம் ஏற்கனவே பிரசுரமாகியிருந்ததை அறிந்திருக்க மாட்டீர்கள். நான் 20 அன்று நள்ளிரவில் கோவையிலிருந்து கிளம்பி மும்பை செல்கிறேன். 21 அன்று அங்கே கேட்வே வட்டார இலக்கிய மாநாட்டில் பங்குகொள்கிறேன். [GatewayLitFest Mumbai ] ஆகவே தங்கள் திருமணவிழாவில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன். தங்கள் திருமணவிழா சிறப்பாக நிகழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இஸ்லாமியர் நடுவே அவர்கள் காஃபிர்களைப் புறக்கணிக்கவேண்டும் என்னும் கோரிக்கை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கையில், பலர் அதைத்தெரிவித்து வருத்தம் தெரிவிக்கும் சூழலிலும் ,உங்களைப்போன்ற சிலர் நட்புடனும் இணக்கத்துடனும் இருக்க விழைவது நிறைவளிக்கிறது. நீங்கள் வஹாபிய வெறுப்புப் பிரச்சாரத்தைப் புறக்கணிக்கமுடிவுசெய்துள்ளதாகவே புரிந்துகொள்கிறேன்.

ஆனால் என் நண்பர்கள் நீங்கள் இவ்வழைப்பை இணையத்தில் முன்னதாகவே பிரசுரித்து ஓர் அரசியல்சார்ந்த அறைகூவலாக முன்வைத்துள்ளதாகச் சொன்னார்கள். அது வருத்தமளித்தது. நண்பரே, அரசியல் ,அது எதுவானாலும், மேலோட்டமானது. திருமணம் தலைமுறைகளை இணைக்கும் ஒரு பெருநிகழ்வு. இரண்டையும் நீங்கள் கலந்துகொண்டிருக்கலாகாது என்றே நினைக்கிறேன். அது உங்கள் விவகாரம் மட்டும் அல்ல, அந்த மணமகளின் வாழ்வின் ஒரு நிகழ்வும்கூட.

இன்னொன்று, என்னை இஸ்லாமிய நண்பர்கள் அயலவனாகக் கருதுவதாக நீங்கள் உங்கள் வாசிப்பின்மையின் சிற்றுலகில் இருந்துகொண்டு எண்ணலாம். என்னைப்பொறுத்தவரை என் இஸ்லாமிய நண்பர்களின் நீண்ட பட்டியலை, குடும்ப அளவில் நட்புகொண்டவர்களை என்னை அறிந்த அனைவரும் அறிவார்கள். ஏன், உங்களைச் சீண்டிய அக்கட்டுரையையே கூட என் பிரியத்திற்குரிய ரஷீதுக்கா வீட்டில் இருந்தே எழுதினேன். [அவரது தமையன்தான் கேரள மதச்சார்பின்மையின் முகப்படையாளமாகிய மொய்தீன். எந்நு நின்றே மொய்தீன் சினிமாவின் கதாநாயகன். அதன் உருவாக்கத்தில் எனக்கும் பங்குண்டு]

கேரள இஸ்லாமிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிவருபவன் நான் என்பதை, கேரளக்கலைக்களஞ்சியங்களில் பங்களிப்புள்ளவன் என்பதை, என் நண்பர் சதக்கத்துல்லா ஹசநீயுடன் இணைந்து இங்கும் இஸ்லாம் பற்றி எழுதியவன் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள இன்னும் சில வாசல்களைத் திறக்கவேண்டும்.

உங்கள் அழைப்பிதழ் என் நண்பர்களில் ஒருவராக உங்களை எண்ணச்செய்தது. அது ஓர் அரசியலுத்தியாக உங்களால் இணையதளங்களில் பரப்பப்பட்டதை அறிந்தபோது ஏமாற்றம் அடைந்தது அதனால்தான்

நாம் எப்போதாவது சந்திக்கமுடியும். கைகோர்க்கவும் முடியும் என நினைக்கிறேன். எப்படியென்றாலும் உங்கள் மணநிகழ்வு சிறப்புற,  மக்கள்செல்வமும் மனமகிழ்வும் நிறைந்த மணவாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.

ஜெ