சினிமாவுக்கு எழுதும்போது எழுத்தாளன் என்னும் நிறைவை அடைவதுண்டா? சினிமா சம்பந்தமான கேள்விகளை நீங்கள் விரும்புவதில்லை என்று தெரியும். இருந்தாலும் இது ஒரு சந்தேகமாகவே இருந்தது
சுப்ரமணியம். ஆர்
அன்புள்ள சுப்ரமணியம்,
விரும்புவதில்லை. என்னை சினிமா எழுத்தாளனாக அடையாளப்படுத்துபவர்கள் எழுத்தாளனாக என்னை அறியாதவர்கள்.. அவர்களிடம் எனக்கு உரையாடல் புள்ளியே இல்லை. நீங்கள் நீண்டகால வாசகர் என்பதனால் இப்பதில்
சினிமா முதலில் இருந்து முடிவுவரை இயக்குநரின் கலை மட்டுமே. இயக்குநரின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரது ஆணைப்படி அவர் படைப்பதற்கு உதவிசெய்பவர்கள் மட்டுமே பிற அனைவரும். ஒளிப்பதிவாளர், கலைஅமைப்பாளர், இசையமைப்பாளர், ஏன் நடிகர்கள்கூட. அதில் ஒருவரே எழுத்தாளர். இங்கே அவர் வசனகர்த்தா மட்டும்தான். அதாவது ஒரு கதைக்கு திரைக்கதையின் எழுத்து வடிவை அளிக்கிறார். இறுதியில் சினிமாவில் அவரது பங்களிப்பு மிகமிகக் கொஞ்சம்தான்.
மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர், லோகிததாஸ் போன்றவர்கள் எழுதியவை ‘எழுத்தாளர் படங்கள்’. அவை எழுத்தாளரின் அடையாளம்கொண்டவை. நான் எழுதியவற்றில் ஒழிமுறி அத்தகையபடம். இயக்குநர் என் நண்பரான மதுபால். என் எழுத்தைப்படமாக்குபவராக அவர் இருந்தார். ஆனால் அதற்குத் தமிழில் இடமில்லை.
நான் சினிமாவுக்குள் சென்றது ஒரே காரணத்தால்தான். நான் எழுத்தாளன். அத்தளத்தில் நான் பழகிய கதைக்கட்டமைப்பை உருவாக்குவது, உரையாடல் அமைப்பது என்னும் இருவகைத் திறமைகளை இயக்குநருக்கு ஒரு சேவையாக என்னால் அளிக்கமுடியும். அவர் தனக்குத் தேவையானபடி அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அங்கே எனக்கு இடமில்லை என நான் அறிவேன்.
அதற்கு எனக்கு அவர் அளிக்கும் ஊதியம் நான் பி.எஸ்.என்.எல் அமைப்பில் வேலைசெய்தபோது பெற்றதைவிட பற்பலமடங்கு. என் நேரத்தை எனக்கு அளிக்கிறது. பொருளியல்சார்ந்த அல்லல்கள் இல்லாமல் ஆக்குகிறது. விளைவாக என்னை சுதந்திரமானவனாக ஆக்குகிறது. சினிமா இல்லையேல் நான் வெண்முரசை எழுதியிருக்கமுடியாது. என் எதிர்பார்ப்பு அதுமட்டுமே.
ஆகவே சினிமா எனக்கு உல்லாசமான ஒர் அனுபவமாகவே இருக்கிறது. வருத்தமெல்லாம் இல்லை. நான் எழுதுவது இயக்குநரின் தேவைக்கேற்ப என்றாலும் தன்னிச்சையான எழுத்தின் தருணங்கள் அமைவதுமுண்டு. அப்படிப்பட்ட பல இடங்கள் தமிழ்சினிமாவின் வணிகக் கட்டாயங்களால் படமாக ஆவதில்லை. பெரும்பாலும் அவை மறைந்து போய்விடும். அதைப்பற்றிக் கவலை கொள்வதுமில்லை, என்னால் அதைவிட பலமடங்குத் தீவிரமாக எழுதமுடியும்.
நான் திரைக்கதையின் முழுவடிவை எழுதி பின்னர் அக்கதை திசைமாறியதனால் விலகிக்கொண்ட ஒரு படத்தின் தொடக்கக்காட்சி எனக்கு மிக உவப்பானது. அதை தனிச்சிறுகதையாக ஆக்க முயன்றேன். இத்தகைய காட்சிகள் திரைக்கதையாகவே அமைந்தவை என்பதனால் மாற்றவே முடியாதவை என அப்போதுதான் தெரிந்தது.
காட்சி 1 [பல இடங்கள்/இரவு-பகல்]
[டைட்டில்கள் ஓடும் காட்சி. வசனமில்லாமல் வெறும் மேளம் மட்டும்தான்]
நெரிசலான சாலையில் செல்லும் பொதிவண்டி. அதை இழுக்கும் மாட்டின் தசைகள் இழுபடுவது தெரிகிறது. வண்டி முனகுகிறது. மாடு மூச்சுத்திணறி நுரைதள்ள நின்றுவிடுகிறது
நுகம் சரிய அந்தமாடு சட்டென்று தளர்ந்து சரிகிறது. வண்டியோட்டி அதை எழுப்ப முயற்சிசெய்கிறான். மாடு செத்துவிட்டிருக்கிறது
வண்டியோட்டி அருகே அமர்ந்து மனமுடைந்து அழுகிறான்
.மாடு மீன்பாடி வண்டியில் ஏற்றி கசாப்புக்குக் கொண்டு செல்லப்படுகிறது. பின்னால் அந்த வண்டியோட்டியும் அழுதபடியே செல்கிறான்.
அந்த மாடு உரிக்கப்பட்டு தொங்கும் காட்சி. வண்டியோட்டிக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அவன் அதை எண்ணுகிறான்
அவன் அந்த மாட்டிலேயே ஒரு கிலோ மாட்டிறைச்சி வாங்கி பனை ஓலையில் பொட்டலமாக கட்டி எடுத்துக்கொண்டு செல்கிறான். முகத்தில் சோகம்
மாட்டுத்தோலை ஒருவன் விலைபேசி வாங்கி சுருட்டி எடுத்துச் செல்கிறான்
மாட்டுத்தோல் காய்கிறது
அந்த மாட்டுத்தோலை வெட்டி வாத்தியங்கள் செய்யும் கைகளை நாம் காண்கிறோம்.
ஒரேதோலில் ஒரு பகுதி தவுலாக ஆகிறது. இன்னொரு பகுதி தப்பட்டையாக இழுத்துக்கட்டப்படுகிறது.
அந்த புதுத்தவிலை வாசித்தபடி ஒரு கோயில் சாமி ஊர்வலம் செல்கிறது.
அம்மனும் சிவபெருமானும் அதில் எழுந்தருளியிருக்கிறார்கள். தெருவழியாகச் செல்கிறார்கள். மங்கல இசை
அந்த தப்பட்டையை அடித்தபடி ஒரு சிறிய கூட்டம் பக்கவாட்டு பாதையில் வருகிறது. அவர்கள் சாமிகும்பிட தலையில் வைத்த பானையில் தண்ணீருடன் சென்றுகொண்டிருக்கிறார்கள். நடனமிட்டபடிச் செல்கிறார்கள்.
தவுல் வைத்திருப்பவர் அவர்களிடம் பக்கத்தில் வராதே, தள்ளிப்போ என கையைக் காட்டுகிறார். பலர் ஓடிப்போய் விலகு விலகு என கைகாட்டுகிறார்கள்.
தப்பட்டை வைத்திருப்பவர்கள் பதறி குன்றி இருபக்கமும் விலகி மறைகிறார்கள்.
சாமி ஊர்வலம் சென்று மறைகிறது. தப்பட்டை ஊர்வலம் மீண்டும் ஆரம்பிக்கிறது
கோயிலுக்குள் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள். தவுல் இசைக்கப்படுகிறது. ஒரு எட்டுபேர் மட்டும் நின்றுகொண்டு அதைக் கேட்கிறார்கள். கையால் தாளம் போடுகிறார்கள். தலையை ஆட்டுகிறார்கள்.
மறுபக்கம் ஓர் ஆற்றங்கரையில் தாரை தப்பட்டையை அடித்துப் பட்டையைக் கிளப்புகிறார்கள். புழுதிபறக்க ஆட்கள் ஆடுகிறார்கள். பெருங்கூட்டம்
கோயிலில் தாளம் தனியாக ஆளில்லாத பிரகாரத்தில் அலைகிறது
மறுபக்கம் ஆற்றில் ஆடுபவர்களின் தாளம் இடுப்பிலும் கால்களிலும் உள்ளது. கால்கள் புழுதியை மிதித்து நடனமிட்டு துள்ளுகின்றன.
தவுல் –நாதஸ்வரக் கச்சேரியை கோயிலுக்குள் முருகனும் வள்ளிதெய்வானையும் சிலைகளாக அமர்ந்து விழித்த கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அங்கே ஆற்றுக்குள் தப்பட்டை ஆட்டத்தை அதேபோல மதுரைவீரனும் பொம்மியும் வெள்ளையம்மாளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இரு சாமிகளின் பார்வைகளும் ஒன்றே என்று தோன்றுகிறது
டைடில்கள் முடிவு. இயக்குநர் பெயர் காட்டப்படுகிறது.
முடிவு
*
இவ்வடிவை எப்படி சிறுகதையாக ஆக்கினாலும் வடிவ ஒருமை கூடுவதில்லை என்பதைக் காணலாம். இவ்வடிவிலேயே இதை உருவகிக்க முடியும்
பலசமயம் திரைக்கதை வடிவிலேயே எதையாவது எழுதினாலென்ன என்று தோன்றும். ஆனால் பணம் வாங்காமல் எழுத மனம் வருவதில்லை. பழக்கவாசனை! ;)))
ஜெ