ஒருவேடிக்கைக்காக தமிழகத்தேர்தலுடன் ஒப்பிட அமெரிக்கத்தேர்தல் எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்று நான் சொல்லப்போக நாலைந்து கடிதங்கள், அமெரிக்கத்தேர்தல் பற்றிய சந்தேகங்களைக் கேட்டு. அதில் யார் ஜெயிக்கப்போகிறார்கள், யார் ஜெயிப்பார்கள் என்றெல்லாம்.
உண்மையில் எனக்கு அந்தத்தேர்தலும் பயங்கரமான குழப்பமாகவே இருக்கிறது. ஆனால் இங்கே போலவே அங்கேயும் தேர்தல் வேடிக்கையாகத்தான் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. பல வெடித்துச்சிரிக்கவைக்கும் இடங்கள். பல சிண்டைச்சிக்கலாக்கும் ஊடுபாவுகள்.
ஜனநாயகத்தை நவீனஉலகின் முதல்பெருங்கேளிக்கை என்று சொல்லலாம். இரண்டாவது கேளிக்கை சினிமா என்பீர்களே, இல்லை, பங்குச்சந்தை. சினிமா எல்லாம் சும்மா ஜுஜுபி.
பேசாமல் கடிதமெழுதியவர்களை அரவிந்தன் கண்ணையனுக்கே எழுதிக்கேட்கும்படி சொல்லலாமா என நண்பர் அரங்கசாமியிடம் கேட்டேன். “போங்க சார், அவரோட கம்பேர் பண்றப்ப நீங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க” என்றார்.
“இல்லை, நான் இந்தத்தேர்தலிலே ஒபாமா எந்தத்தொகுதியிலே போட்டியிடறார்னு கேட்டு நீங்க எல்லாரும் சிரிச்சீங்கள்ல?” என்றேன் சந்தேகமாக. “அதைத்தான் சொல்றேன்” என்றார் அரங்கசாமி. மேற்கொண்டு பேசாமலானேன்.
அரவிந்தன் கண்ணையன் அமெரிக்காவில் எந்தக் கட்சி ஜெயிக்கவேண்டுமென முட்டிப்பாக ஜெபிக்கிறாரோ அதற்கு நேர் எதிர் நிலைபாடு எடுக்கும் தெளிவுடன் நேற்றுவரை இருந்தேன். இப்போது அதற்கும் வழியில்லை. இனிமேல் விதிவிட்ட வழி.
பொதுவாகவே தேர்தல் எனக்கு அளிக்கும் திகைப்பு பெரிய புனைவுகளுக்கு நிகரானது. இந்தியாவில் தேர்தல் என்பது வாக்காளரும் வேட்பாளரும் இணைந்து உருவாக்கும் புனைவுவெளி. Readers Response கொள்கைகள் அனைத்தையும் இப்புனைவுவெளியில் நாம் காணலாம்.
வேட்பாளர்கள் சாதிநோக்கியே தேர்வுசெய்யப்படுகிறார்கள். நம்பூதிரி கொள்கைமுதல்வராக இருந்த இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஒருபோதும் நம்பூதிரியை வேட்பாளர் ஆக்கியதில்லை. அவரேகூட ஒரே ஒருமுறைக்குமேல் நின்று விதியை இழுத்துப்பார்க்க துணியவில்லை. அந்தந்தத் தொகுதிகளின் சாதிகளே போதுமான அளவு புரட்சிகரத்துடன் களமிறங்கின.
அந்நிலையில் திராவிட, அதிராவிட, எதிர்திராவிட, குழப்பத்திராவிடக் கட்சிகளைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இங்கே சம்பந்தப்பட்ட நபரின் உள்ளூர் அடியாள்செல்வாக்கும் பொருள்பலமும் இரண்டாவதாக கணிக்கப்படுகிறது. கடைசியாக கட்சிவிசுவாசம்.
கொள்கை? கட்சிகளுக்கே கொள்கை ஏதுமில்லை. அப்படி எவரும் நம்பிவிடலாகாது என்று கடைசிக்கணத்தில் கண்மூடித்தனமாக அத்தனைபேரிடமும் பேரம்பேசி, பூசலிட்டு, பல்லிளித்து, சால்ஜாப்பு சொல்லி, பல்டியடித்து நிறுவியபின்னர்தான் தேர்தலே ஆரம்பிக்கிறது.
ஆனால் அத்தனைபேரும் கொள்கை கொள்கை என்று பேசுகிறாrகள். முகநூலில் முகங்களும் முகமிலிகளும் கொள்கைக் கொப்பளிக்கிறார்கள். கூட்டங்களில் தலைவர்கள் பேசுகிறார்கள். தொண்டர்கள் கொள்கைக்கூச்சலெழுப்பி ஆரவாரம் செய்கிறார்கள். டியூப் லைட்டுகள் கொள்கையே என பிரகாசிக்கின்றன.
சிவாஜி கக்குவது சிவப்புச்சாயம் என்று தெரிந்துதானே நாமெல்லாம் கண்ணீர்மல்கி மூக்கை சிந்தினோம்? வைகோ குமுறி அழுதால் என்ன தப்பு? செந்தில் நேர்ப்பேச்சில் மிகசீரியஸான ஆள் என்று தெரிந்துதானே சினிமாவில் அவரைக் கண்டாலே சிரித்தோம்? சீமானை எண்ணி இறும்பூது எய்துவதில் என்னபிழை?
ஜனங்களுக்கு நல்ல தெளிவு இருக்கிறது. டீ குடித்துக்கொண்டிருந்த கடையில் நாலைந்துபேர் அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். இந்துத்துவக் கொள்கையும் இடதுசாரிக்கொள்கையும் கொம்புமுட்டி கடும்போர். சம்பந்தமே இல்லாமல் நடுவே திமுக கொள்கை உள்ளே புகுந்து உதைவாங்கி அவ் என்று பம்மி மீண்டும் மூக்கு நீட்டி முயன்றுகொண்டிருந்தது. மொத்ததில் அனல்.
டீக்கு பணம் கொடுத்தபின் ஒரு கூடைக்கார ஆயா தாடிவைத்த சிபிஎம்மனோரிடம் கேட்டார் “அம்மா இந்தவாட்டி ஐயாயிரம் குடுக்கும்ன்றாங்களே? ஊட்டுக்கு ஐயாயிரமா தலைக்கா?” அவர் பம்ம அதுவரை பேசாமலிருந்த கடைக்காரர் உற்சாகமாகி “தலைக்குத்தான். ஊட்டுக்கு ஐயாயிரம் எந்தமூலைக்கு?” என்றார்.
“எங்க ஊட்ல எட்டுபேரு… அப்ப நாப்பதாயிரம் நிக்குமா?” என்றாள் கிழவி. “அதுக்குன்னு ஆடு கோளி தலையெல்லாம் சேத்துக்கிடப்பிடாது. ஓட்டு இருக்கணும்…” என்றார் கடைக்காரர். சிரிப்பு. அதுவரை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த பலரும் கலந்துகொண்டார்கள்.
“அம்மா குடுத்தா கலைஞரும் குடுக்கணும்ல? அது எப்டியும் ரெண்டாயிரம் வரும். கம்மீசன் போக அம்பது தேறும்னு வையி” என்றார் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர். “பொன்னாரு காசு குடுக்கமாட்டாரே” என்று ஒருவர் கவலைப்பட்டார். “அந்தாளு கையில உள்ளத கள்ளன் கொண்டுபோனாலும் அறியமாட்டாரு. மத்தவ ஆளு கில்லியாக்கும்… அவதான் காசு பணம் கைகாரியம் செய்யுதவ.குடுப்பாவ…”
“வெள்ளநிவாரணம் இங்கிண வருமா வே?” என்றார் ஒருவர். “அது வேற பணமாக்கும். இதுவேற” என்றார் இன்னொருவர். “அது வெள்ளத்துக்கு, இது தொடுகறிக்கு.” சிரிப்பு பொங்கியது. சீப்பியெம்மார் சிரித்துக்கொண்டு “நம்ம வீட்டுக்கும் போன தடவ குடுத்தானுக. வேண்டாம்னு சொன்னா கேக்காளா? நான் வேங்கி சீலை எடுக்கேன், உமக்கென்னவேங்குதா. செரி நடக்கட்டு” என்றார்.
இந்திய சுதந்திரப்போருக்குப் பின்னர் இத்தகைய அரசியல் எழுச்சி தமிழகத்தில் நடந்திருக்காது.
ஜெ