ஊட்டி புதியவர்களின் சந்திப்பு

ஊட்டி நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் நண்பர் விஜய்சூரியன், நிர்மால்யா, பரமேஷ்

சென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு. ஊட்டியில் இரண்டாவது புதியவர்களின் சந்திப்பு.

ஊட்டிகுருகுலத்திற்கு வருடம் ஒருமுறைமட்டும் இச்சந்திப்புக்காக வருவது என்று ஆகிவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் வருடம் நான்குமுறையாவது வந்துகொண்டிருந்தேன். குரு நித்யா இருந்தபோது மாதம் இருமுறை வந்து மூன்றுநாட்கள் வீதம் ஆறுநாட்கள் அங்கிருந்தேன். இந்த விலக்கம் இயல்பானதுதான், என்றாலும் வருத்தம் அளிப்பது

நித்யா அமைப்புகளை உருவாக்குவதற்கு எதிரான மனநிலை கொண்டவர். ஆகவே ஊட்டிகுருகுலத்திற்கென நிதியோ நிர்வாக அமைப்போ உருவாக்கவில்லை. சிறந்த நூலகம், தங்குமிடம் இருந்தது. அது தேவை என்றால் தேவையானவர்களால் பேணப்படட்டும் என்று அவர் அறிவித்திருந்தார்.

விளைவாக இன்று குருகுலம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. அங்கே சுவாமி வியாசப்பிரசாத் அவர்களைத்தவிர எவரும் இல்லை. அறைகள் உடைந்துகொண்டிருக்கின்றன. பெரியவளாகம் காடுசூழ்கிறது. ஒவ்வொருசந்திப்புக்கும் முன்னால் நாங்கள் செலவுசெய்து தூய்மைசெய்து செப்பனிடவேண்டியிருக்கிறது.

வழக்கம்போல மணி [நிர்மால்யா] அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்தார். இச்சந்திப்புநிகழ்ச்சியை நண்பர் விஜய்சூரியன் ஒருங்கிணைத்தார். நிதிவிவகாரங்களை மீனாம்பிகை பார்த்துக்கொண்டார். மாலை ஐந்துமணிக்குச் சென்றபோது ஏழுபேர் முன்னரே வந்திருந்தனர். அனைவரும் சேர்ந்து ஒரு மாலைநடை சென்றபின் அருகே இருந்த டீக்கடையில் டீகுடிக்கச் சென்றோம். அது மூடியிருந்தது.

நடராஜகுருவின் லண்டன் மாணவி சிவகாமி [நடராஜகுரு போட்ட பெயர்] வந்திருந்தார். எண்பது வயதுக்கும் மேல். ஆனால் உற்சாகமான பெண்மணி. இருபத்தைந்தாண்டுகளுக்குபின் ஊட்டிவருவதாகச் சொன்னார். சார்போனில் நடராஜகுருவின் மாணவி. தத்துவத்தில் ஆய்வுசெய்கிறார். குருகுலத்தில் பராமரிப்புவேலைகளைத்தான் செய்துகொண்டே இருந்தார். இந்திய உணவை விரும்புவதாகச் சொன்னார். எத்தனைநாள் விரும்புவார் எனத்தெரியவில்லை. ஏற்கனவே டீ குடிக்கவந்து நின்றிருந்தார் சிவகாமி.

டீக்கடைக்காரர் எங்களை அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று டீ , வாழைப்பழம் தந்தார். அவை தனிப்பட்ட உபசரிப்பாகையால் பணம் தேவையில்லை என்றார். இருபதாண்டுக்காலமாகத் தெரிந்தவர். சின்னக்கடை வைத்திருந்தார். படிப்படியாக முன்னேறியவர். ஏராளமான நினைவுகள் அவருக்கும் இருந்தன. நித்யா பற்றி,என்னைப்பற்றி.

இரவில் நல்லகுளிர். ஆனால் இருநாட்களுக்குமுன் கடுங்குளிர் இருந்ததாகவும் குளிர் குறைந்துவருவதாகவும் நிர்மால்யா சொன்னார். ஹீட்டர் வைத்த்துக்கொண்டுதான் தூங்கவேண்டியிருந்தது. எனக்குகொஞ்சம் மூக்கடைப்பும் இருந்தது, குளிரால்.

காலை எழுந்தபோது பாதிக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டார்கள். நான் நண்பர்களுடன் ஒரு நீண்ட நடை சென்றேன். நித்யாவுடன் 1992ல் சென்ற அதே பாதை. அதன்பின் அவ்வழியாக நண்பர்களுடன் நடைசென்றுகொண்டே இருக்கிறேன். அது ஒவ்வொருமுறையும் மாறிக்கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று மாறாமலும் இருக்கிறது. நித்யா வந்து நின்று காயத்ரி மந்திரம் சொல்லும் மலைவிளிம்பை பெரிய வேலி இன்று மறைத்திருக்கிறது.

திரும்பிவந்தபோது அனைவரும் வந்துவிட்டிருந்தனர். அமைப்பாளர்களை தவிர மொத்தம் 38 பேர். ஒருவரை நான் அழைத்துவிட்டு அமைப்பாளர்களுக்குச் சொல்ல மறந்துவிட்டேன். அவரையும் சேர்த்துக்கொள்ள அரைமணிநேரம் ஆகியது.  குளித்துவிட்டு வந்து காலையுணவு சாப்பிட்டேன். பத்துமணிக்கு முதல் அமர்வு. வழக்கம்போல திட்டங்கள் ஏதுமில்லை. நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதும் பொதுவான விவாதங்களும்தான்.

நண்பர்கள் அனைவருமே இணையம்வழியாக இலக்கியத்திற்குள் வந்தவர்கள். சிலர் இளமையில் பாலகுமாரன் சுஜாதா வாசித்திருந்தார்கள். பிறர் அதுவுமில்லை. இந்தச்சந்திப்புகளில் நான் இணையவாசகர்களை சென்றகாலத்து சிற்றிதழ்த்தரப்பிலிருந்துகொண்டு சந்தித்ததாக நினைத்தேன். நான் பேசியவை அனைத்துமே சிற்றிதழ்காலகட்டத்தில் திரண்டுவந்த சில மதிப்பீடுகளை, மனநிலைகளைப்பற்றித்தான்

இணையத்தின் விரிவு காரணமாக இருவகை சாத்தியங்களை அது கொண்டுள்ளது. ஒன்று, அது எப்படியோ அனைவரையும் சென்று தொட்டுவிடுகிறது. முன்பெல்லாம் இலக்கிய அறிமுகம் என்பது தற்செயலாக முன்னோடி இலக்கியவாசகர் ஒருவரைச் சந்திப்பதன் வழியாகவே சாத்தியம். இன்று எவரோ அனுப்பிய ஓர் இணைப்பை வாசிப்பது, வேறேதோ செய்திவழியாக ஒன்றிலிருந்து ஒன்றாக இலக்கியபடைப்புக்கு வந்துசேர்வது என இலக்கியம் வந்துவிடுகிறது.

எதிர்மறை அம்சம் என்பது, இதன் விரிவில் இருந்து தேவையானவற்றை தேடி அடையமுடியாதென்பது. பல ஆண்டுகள் வாசித்தாலும்கூட இலக்கியத்தின் அடிப்படை மனநிலைகளை, இலக்கியவடிவங்களின் அமைப்பை அறிமுகம்செய்துகொள்ள வாய்ப்பதில்லை. முன்பெல்லாம் ஒருசில மாதங்களிலேயே முன்னோடிகளிடமிருந்து அவை வந்துசேர்ந்துவிடும். இலக்கியவிவாதம் கூர்மையாக நிகழ இணையத்தில் இடமில்லை. அதன் அபத்தமான ஜனநாயகம் சம்பந்தமே இல்லாத ஒருவர் அதை எப்படிவேண்டுமென்றாலும் கொண்டுசெல்ல வழிவகுக்கிறது—எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்ட விவாதமாக இருந்தாலும்.

இவ்வரங்குகளில் சிறுகதை, கவிதை ஆகியவற்றின் வடிவம் குறித்தும் புனைவெழுத்து உருவாகும் முறைமைகளைப்பற்றியும் வாசித்தல் மற்றும் பொருள்கொள்ளுதல் குறித்தும் பல அடிப்படைகள் விவாதங்களாக எழுந்துவந்தன.

மணி [நிர்மால்யா]வுடன் முப்பதாண்டுக்கால நட்பு

தத்துவத்தை, விவாதமுறைமையைப் பொறுத்தவரை நான் நித்யாவின் குருகுலத்தில் கற்றவற்றையே முன்வைத்தேன். விவாதப்பொருளை வரையறைசெய்துகொள்ளுதல், விவாதமுறைமையை சீராக முன்வைத்தல், எதிர்வாதங்களை அவ்வட்டத்திற்குள் நின்றபடி தொடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்தினேன்.

மேலைநாட்டுக் கல்வியமைப்பைப்போல நம் கல்விமுறை நமக்கு இவற்றைக் கற்றுத்தருவதில்லை. நாம் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தாவிச்செல்லுதல், சம்பந்தமில்லாத முறைகளைப் பயன்படுத்தி வாதிடுதல், விளிம்புகளிலிருந்து பேசுதல் என பலவகையில் ஒருவகை அரட்டைக்கே பழகியிருக்கிறோம். இணையத்தில் எந்த ஒருகட்டுரைக்கும் கீழே உள்ள விவாதங்களைப்பார்த்தால் தெரியும், அவற்றிலுள்ள பிரமிப்பூட்டும் அராஜகம். சம்பந்தமே இருக்காது. நண்பர் சொல்வதுண்டு, இணையத்தில் இசையைப்பற்றி எவர் எதை எழுதினாலும் ஐந்தாவது எதிர்வினையில் அது ராஜாX ரஹ்மான் விவாதமாக ஆகிவிடும் என, அது உண்மை.

இத்தகைய பயிற்சிகள் நேரடியாக ஒருவரைச் சந்தித்து கருத்துக்களைச் சொல்லி மாறுபட்டு விவாதிக்கையிலேயே உருவாகிவரும் என நான் நினைக்கிறேன். அதற்கான வாய்ப்பு அமைந்ததே இச்சந்திப்புகளின் வெற்றி.

மாலையில் அருகே உள்ள மலையுச்சி வரை ஒரு நடை சென்றோம். வழியிலேயே காட்டெருது மந்தை ஒன்று நின்றமையால் இரவில் கொஞ்சம் சுற்றிவரநேரிட்டது. இரவு அமர்வில் நண்பர் ஜெயக்குமார் பரத்வாஜ் பாடினார். கலாஷேத்ராவில் இசைபயின்று முறையான இசைநிகழ்ச்சிகள் செய்பவர் அவர். மிகச்சிறப்பான பாடல்.

இரவில் வழக்கம்போல சிரிப்பு உரையாடல்கள். அனைவரும் சற்றுக்களைத்திருந்தமையால் பதினொருமணிக்கே தூங்கிவிட்டோம். இரவில் ஹீட்டர் வேண்டியிருந்தது. நான் தூக்கத்தில் உதிரிக்கனவுகள் வழியாகச் சென்றேன். பல கனவுகளில் நித்யா வந்தார்

 மறுநாள் காலையில் முதலில் எழுந்த விஜய் சூரியன் அலறியடித்து ஓடிவந்து ‘சார் காட்டெருது!’ என்றார். குருகுலவளைப்புக்குள் காட்டெருதுக்கூட்டம் ஒன்று குட்டிகளுடன் வந்து மேய்ந்துகொண்டிருந்தது. நண்பர்கள் பாய்ந்துசென்று அதைப்பார்த்தார்கள். குருகுல வளைப்புக்குள் செடிகளுக்குப் பூச்சிமருந்து அடிப்பதில்லை. ஆகவே நல்ல புல் தின்பதற்காக அதைப்போல மூன்று வெவ்வேறு மந்தைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதுண்டு.

காலையில் மீண்டும் ஒரு நீண்ட நடை. பத்துமணிக்கு அமர்வில் கமலக்கண்ணன். சுஷீல் ஆகியோரின் சிறுகதை, கவிதை ஆகியவற்றைப்பற்றி விவாதித்தோம். புனைகதைகளின், கவிதைகளின் வடிவம் மற்றும் அவற்றின் வாசிப்புச்சாத்தியங்களைப்பற்றி.

பதினொருமணிக்கு அரங்கசாமி, வெ.சுரேஷ், குயிஸ் செந்தில், கிருஷ்ணன் வந்தனர். ஒருமணியுடன் நிகழ்ச்சி முடிந்தது. ஒவ்வொருவராக விடைபெற்றுக் கிளம்பினர். நான்குமணிவரை நான் அங்கிருந்தேன். பின்னர் அரங்காவின் காரில் கிளம்பி கோவை வந்து எட்டரைமணிக்கு ரயிலேறினேன்.

மீண்டும் ஓர் உற்சாகமான சந்திப்பு. அங்கே பேசியவிஷயங்களை பதிவிடவேண்டியதில்லை என தோன்றியது. ஏனென்றால் பதிவு என்பது வேறு உரையாடல்நிகழ்வு என்பது வேறு. பதிவில் உள்ளவை கருத்துக்கள். உரையாடலில் கருத்துக்கள் நிகழ்கின்றன. முன்னது பந்தி. பின்னது சமையல்

இச்சந்திப்புகள் வழியாக நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். அவர்களுடனான தொடர் உரையாடல் சாத்தியமாகும் என்று நினைக்கிறேன்.இச்சந்திப்புகளின் சுவாரசியமான அம்சமே கூட்டுவாழ்க்கையின் ஒரு கீற்று நிகழ்வதுதான். கூடி உண்பது, பேசிக்கொண்டே நடைசெல்வது. மெத்தைகளை வண்டியிலிருந்து நூலகக்கூடம் வரை வரிசையாக நின்று கொண்டுசென்றோம். அது ஒரு குறியீட்டுச்செயல்பாடு போலத் தோன்றியது.

மேலும் பல நண்பர்கள் இன்னொரு சந்திப்பு வைக்கும்படி கோரினர். நாமக்கல் அருகே கொல்லிமலையில் நண்பர் ஒருவருக்கு ஒரு ஓய்வுவிடுதி உள்ளது. அங்கே ஒரு சந்திப்பை நிகழ்த்தலாமென சொன்னார் அவர். இவ்விரு சந்திப்புகளிலும் பங்குபெறாத புதியவாசகர்களுக்காக அங்கே ஒரு சந்திப்பை மார்ச் மாதம் 20,21 தேதிகளில் நடத்தினாலென்ன என்று ஓர் எண்ணம் உள்ளது. பார்ப்போம்

முந்தைய கட்டுரைசென்னை கவிதை வெளியீட்டுவிழா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61