சென்னையில் குமரகுருபரனின் கவிதைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக பத்தாம்தேதி மாலை கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் கிளம்பினேன். காலை எழும்பூர் ரயில்நிலையத்தில் குமரகுருபரனே நண்பருடன் வந்திருந்தார். வழக்கமான பிரதாப் பிளாசா ஓட்டலில் அறை.
கவிஞர் நரன் , ஆத்மார்த்தி ஆகியோரைச் சந்தித்தேன். நரன் வசந்தபாலனுக்கு அணுக்கமானவர். ஒரே ஊர்க்காரர் என அறிந்தேன். ஆத்மார்த்தியை முன்னரே ஒரு நூல்வெளியீட்டுவிழாவில் சந்தித்திருந்தேன். நண்பர் சுகா அறைக்கு வந்திருந்தார். நானும் அவரும் ஒரு படம்செய்வதாக இருக்கிறோம்.
மாலையில் கவிதைவெளியீட்டுநிகழ்ச்சி. பொதுவாக என் ‘எதிரிகள்’ என இணையத்தில் தென்படுபவர்கள் நிறைந்த நிகழ்ச்சி. உயிர்மையின் நண்பர்களில் பலர் என் பகைவர்களாக ‘சார்ஜ்’ எடுத்து அன்றாடம் லத்தி சுழற்றுவதாகச் சொல்லிக்கேட்டிருக்கிறேன். நல்ல விஷயம்தான், ஏதாவது நடந்தால்சரி என நினைத்துக்கொள்வேன். இல்லையேல் நாம் அர்னாப் கோஸ்வாமிக்கும் பாண்டேக்கும் அல்லவா நாட்டை அளித்துவிடவேண்டியிருக்கும்
என் உளவியலில் ’எதிரிகளைச்’ சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியானதுதான், எவரிடமும் எனக்குக் கசப்புகள் ஏதுமில்லை என்பதை நானே உணர்வதனால் ஒருவகையான உவகை என்னை ஆட்கொள்ளும். அன்று முழுக்க அந்த மகிழ்ச்சியிலேயே இருந்தேன்.
நெடுநாட்களுக்குப்பின் நண்பர் சுதீர்செந்தில், [உயிர்எழுத்து] அவர்களை சந்தித்த்தேன். தழுவிக்கொண்டபோது நடுவே இருந்த ஆண்டுகள் இல்லாமலாயின. புதுவீடு கட்டியிருப்பதாகச் சொன்னார், மாடியில் புல்வெளி.! விழாவில் அவரது பேச்சும் வழக்கம்போல உற்சாகமான உரையாடல்போல இருந்தது
விழாவில் அ.முத்துக்கிருஷ்ணனை சந்தித்ததும் ஒரு நிறைவூட்டும் அனுபவம். கருத்துமாறுபாடுகள் வந்திருக்கின்றன என்றாலும் தனிப்பட்ட முறையில் அவர் வடகேரளத்துக் கம்யூனிஸ்டுகளைப்போல பிறர்நலம்நாடும் உள்ளம்கொண்ட நிறைந்தமனிதர் என்பதே என் எண்ணம். அவரது உக்கிரமான அரசியல்நிலைபாடுகளும் வடகேரளக் கம்யூனிஸ்டுகளுக்குரியவைதான்.
இணையத்தில் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் பலத்த சிரிப்புடன் வந்து அறிமுகம்செய்துகொண்டார். உற்சாகமான இளைஞர். நக்கல் இயல்பாக வரும் என்று சிரிப்பேசொன்னது. அவரது அப்பாவுக்கே நகைச்சுவை உணர்வு நிறைய இருந்திருக்கவேண்டும், இல்லையேல் அந்தப்பெயரைப் போட்டிருக்கமாட்டார்.
கொஞ்சம் கடந்தபின்னர் ஞாபகம் வந்தது. சாருநிவேதிதாவால் தென்னாட்டு ஷா, இந்நாட்டு இங்கர்சால் வரிசையில் லோக்கல் லோஸாவாக முடிசூட்டப்பட்டவர் நீங்கள்தானா என்றேன். வெடித்துச்சிரித்தார்.
அவர் என்னைப்பற்றி நிறைய விமர்சனம் எழுதுவதாக அருகேநின்ற இளைஞர் சொன்னார். நல்ல விஷயம், நிறைய எழுதுங்கள் என்று கைகுலுக்கினேன். நல்ல பகடி என்றால் எப்படியும் என்னிடம் வந்துசேர்ந்துவிடும். ஒருகட்டுரையைவிட அடுத்த கட்டுரை மொழி மற்றும் வெளிப்பாட்டில் சற்றேனும் மேலே செல்லவேண்டும் என்ற சுயகட்டுப்பாட்டை மட்டும் மேற்கொண்டிருந்தால்போதும்.
எழுத்து ஒரு புயல், அது நம்மை அதுவிரும்பிய இடத்துக்குக் கொண்டுசெல்லும். கார்ல் மார்க்ஸ் நாளை ஒரு நாவலுடன் வெளிப்பட்டால் ஆச்சரியப்படமாட்டேன்.
பெண்ணியப்புயல் என்று நண்பர் செல்வேந்திரன் போன்ற சான்றோரால் புகழப்படும் கவிதா சொர்ணவல்லி புடவையில் மேலும் அழகாக வந்து என்னைப்போன்ற ஆணாதிக்கவாதிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். நாட்டில் எவ்வளவோ நல்ல காரியங்கள் நடக்கத்தான் செய்கின்றன.
நான் மிகஉற்சாகமாக இருந்ததாகவும் உரையிலும் அதுவெளிப்பட்டதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். காரணம் அந்த சூழலில் இருந்த உற்சாகம்தான். இலக்கியம் என்னும் பொதுஅம்சம் இல்லாமல் வெறும் அரசியலைமட்டுமே அறிந்தவர்களால் அந்தச்சூழலில் நட்புணர்வைப்புரிந்துகொள்ளமுடியாது. அங்கே வஞ்சங்கள் நிலைக்கமுடியாது
முப்பதாண்டுக்காலமாகிறது எழுத ஆரம்பித்து. சர்ச்சைகள், விமர்சனங்கள், வசைகள். இன்னும் கூடிப்போனால் , மிகவும் பேராசைப்பட்டால் , இருபதாண்டுகள். இதில் எந்த உணர்ச்சிகளுக்கும் பெரிய முக்கியத்துவமில்லை. படைப்புகள் அன்றி எவையும் பத்தாண்டுக்காலத்தைக் கடப்பதில்லை என்பதை நேரடி அனுபவமாக அறிந்தபின்னரே இந்த வேடிக்கைமனநிலையை நான் அடையமுடிந்தது.
என்ன பிரச்சினை என எண்ணிக்கொண்டே இருந்தேன். இப்படியே போனால் எல்லாரும் ’வச்சுசெஞ்சு’ சலித்துப்போய் நான் மூத்த எழுத்தாளர் ஆகி ’அந்தக்காலத்திலே எல்லாம் நாங்கள்ள்லாம்’ என ஆரம்பித்துவிடக்கூடும். அதற்கு இடம்தரக்கூடாது . நாலுபேருக்கு வம்புன்னா எதுவுமே தப்பில்லை.
ஹமீதைச் சந்தித்தேன். அரசியல்களைப்புடன் இருந்தார். இப்போது அகம் மலர்ந்திருப்பார் என நினைக்கிறேன். தொலைக்காட்சியிலே மநகூ மநகூ என்று ஏதோ கெட்டவார்த்தையெல்லாம் சொல்கிறார் என்றார்கள். சமீபகாலமகா அவர் போடும் சட்டைகளை எல்லாம் எண்ணி நான் பெருமூச்சுவிடுவதுண்டு. மேலும் சிலுப்புவதற்கேற்ற தலைமுடி க.நா.சுவுக்குப்பின் அவருக்குத்தான் வாய்த்திருக்கிறது.
மனுஷ்யபுத்திரன் என்கவிஞர் என நான் உணரும் படைப்பாளிகளில் ஒருவர்.அவருடைய அடிப்படைமனநிலை என்பது சோர்வும் ,தனிமையும், விரக்தியும்தான். நான் ஒருபோதும் அந்நிலையில் இருப்பவன் அல்ல. எப்படி கவிதையில் மட்டும் அதை நான் பகிர்ந்துகொள்கிறேன் என நானே கேட்டுக்கொண்டதுண்டு. ஏன், அதிபுரட்சிகரமனநிலையைக்கூடத்தான் நான் பகிர்ந்துகொள்வதுண்டு என நினைத்துக்கொண்டேன்.
கவிதை வாழ்க்கையுடன் சம்பந்தப்படுகிறதா என்பது ஐயத்துக்குரியதுதான். நாம் அதற்கு ஒரு வாழ்க்கைச்சூழலை, சமகாலக்குறிப்பை அளிக்கலாம். அது ஒட்டுவதில்லை என உடனே நமக்குத்தெரியும்.
கவிதைக்கு context என்பதே இல்லை என ஓர் எண்ணம் இப்போது தோன்றுகிறது. அது மனம் நடிக்கும் பல படிநிலைகளில் ஏதோ ஒன்றுடன் உரையாடுகிறது அவ்வளவுதான். ஹமீதின் மிகச்சோர்வான ஒரு கவிதையை வாசித்துவிட்டு நான் இனம்புரியாத பரவசத்தை அடைவதை அவ்வாறுதான் புரிந்துகொள்ளமுடிகிறது.
விழா சிறப்பாக நிகழ்ந்தது. தமிழச்சி தங்கபாண்டியன், சுதீர் செந்தில், மனுஷி, அந்திமழை இளங்கோவன், ஹமீது ஆகியோர் பேசினர் நான் இறுதியாகப்பேசினேன்.சமீபத்தில் இத்தனை உற்சாகமனநிலையில் பேசியதில்லை.
கே.பி.வினோதின் காரில் அறைக்குச் செல்லும்போது அவர் ‘நீங்கள் மிகச் சுதந்திரமான மனநிலையில் இருப்பதாகப்படுகிறது” என்றார். சிந்தித்துப்பார்த்துவிட்டு “ஆம்” என்றேன். “அதற்கான காரணங்களில் ஒன்று, இன்றைய சந்திப்புகள். இன்னொன்று, சென்றவாரம் ஈரோட்டில் நடந்த புதியவர்களின் சந்திப்பு.”