ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 3

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

ஈரோடு சந்திப்பு எங்களுக்கு புதிய திறப்பை அளித்திருக்கிறது. பொதுவாக இம்மாதிரி எழுத்தாளருடனான சந்திப்புகளில் அவரின் படைப்புகளை முன்னிறுத்தி கொண்டு போவது நடக்கும். ஆனால் உண்மையில் இங்கு நடந்தது முற்றிலும் வேறு. உங்கள் படைப்புகளை பற்றி பேசியதை விட நாங்கள் படித்திருந்த மற்ற படைப்புகளை கேட்டு அறிந்து அதிலிருந்து குறிப்பிட்டே எங்களுக்கு சொன்னீர்கள். சனிக்கிழமை காலை இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து நீங்கள் சாதாரணமாக இறங்கி வந்தததை இப்போதும் மறக்க இயலவில்லை. நானும் நண்பர் சச்சினும் நிகழ்வு முடித்து கிளம்புகையில் மற்ற நண்பர்களிடம் பேசி பகிர்ந்து கொண்டோம். நீங்கள் கடைபிடிக்கும் எளிமை வியக்கச் செய்கிறது சார். இலக்கியத்தை தாண்டி உங்களிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. பத்ம விருது மறுத்திருந்த தருணம் இது. ஆகையால் அதைப்பற்றிய கேள்விகளை தவிர்ப்பீர்களென நினைத்திருந்தேன். அப்பட்டமாக மறைக்காமல் உங்களின் நிலைப்பாட்டை டிரையினிலிருந்து இறங்கியதுமே டீக்கடை வாசலில்; வைத்தே சொல்லிவிட்டீர்கள். உள்ளங்கைக்குள் விரல்களை இறுக்கிக்கொள்கிற ஆள் இல்லை நீங்கள்.

சிலரது பொதுவான அர்த்தமற்ற கேள்விகளுக்கு பொறுமையாக காத்து பதிலளத்திருந்தீர்கள். பொதுவாக விவாதம் ஒரு முக்கிய விசயத்தை பற்றி முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகளை தவிர்க்க இனி முயற்சிப்போம். தீவிர விவாதங்கள் இல்லாதிருந்தாலும் சில முக்கியமான அரசியல் விவாதங்கள் கச்சிதமாக எங்களுக்கு கிடைத்திருந்தது. பிரதம மந்திரி முதல் ஊர் கவுசிலர் வரை என்னன்ன நடந்து கொண்டிருக்கின்றதென அத்தனையும் தெரிந்து வியந்தோம்.

சனி கிழமை இரவு எல்லோரும் ஒரு நீண்ட நடை முடித்து சோர்ந்திருந்த போது இலக்கிய சூழலில் கிடக்கின்ற போலி இலக்கியச்சாமியார்களை பற்றிய பகடி இரவு ஓரு மணி வரை விடிய விடிய சிரித்து தீர்த்தோம். வந்திருந்த அனைவரும் ஏதோவொரு வகையில் பரந்து பட்ட வாசிப்பு கொண்டவர்கள் எல்லோரது நட்பும் இயல்பாக அமைந்தது. என்னுடைய சிறுகதை வாசித்து அதனுள் இருந்த சிக்கல்களை விமர்சித்தது அத்தனை பேருக்குள்ளிருந்த படைப்பூக்கத்திற்கு முக்கியமாகப்பட்டது. ரியாஸின் கட்டுரை விவாதமும், சச்சினின் கவிதை குறிப்புகளும் அடுத்த நாள் (7.2.16) முக்கியமான ஒன்றாக இருந்தது.

உங்கள் ஆளுமை எனக்குள் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. என்னை முழுவதுமாக கலைத்து போட்டு அடுக்கிக்கொண்டிருக்கிறேன். நன்றி சார். சந்திப்பு ஏற்பாட்டை குறைவில்லாது வடிவமைத்திருந்த ஈரோடு கிருஷ்ணன் அவர்களுக்கும் செந்தில் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன்

மு. தூயன்

புதுக்கோட்டை

 

அன்புள்ள தூயன்,

நன்றி

இந்தச்சந்திப்பினால் பல தளங்களில் நம் பார்வைகளை விரித்தெடுக்க முடிந்தது. மகிழ்ச்சியான விஷயம் அது.

பொதுவாக நான் கவனித்தது, அடுத்த தலைமுறைப்படைப்பாளிகளிடம் புனைகதைக்கான வடிவம் சார்ந்த ஆரம்பகட்ட இடர்கள் நிறைய இருக்கின்றன என்பதுதான். அதற்கான காரணம் என்ன என்று யோசித்தேன். நான் அவற்றை வாசிப்பிலிருந்து மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. சுந்தர ராமசாமி, ஆற்றூர், பி.கெ.பாலகிருஷ்ணன் என முன்னோடி எழுத்தாளர்களின் நேரடித்தொடர்பும் வழிகாட்டலும் உதவியிருக்கின்றன.

ஒருகட்டத்தில் சுரா, தேவதச்சன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், ஞானி என பல இலக்கிய மையங்கள் எழுத்தாளர்கள் உருவாகிவரும் இடங்களாக இருந்தன. அத்தகைய ஒரு உரையாடல் – பயிற்சிக்களங்கள் இன்றில்லையோ என்னும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

அரங்கில் நாம் வடிவங்கள் குறித்துப்பேசியது முக்கியமானது என நினைக்கிறேன். [உங்கள் புனைகதை நல்ல கரு. அதை வடிவ மீள்நோக்கு செய்து மீண்டும் எழுதலாமென நினைக்கிறேன்]

ஜெ

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

ஈரோடு வாசகர் சந்திப்புக்கு என்னையும் அனுமதித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்களை சந்தித்த பிறகாவது உங்களுடனான எனது மானசீக உரையாடலை நிறுத்த முடியும் என எண்ணியிருந்தேன். ஆனால் நமது சந்திப்புக்குப்பின் அது அதிகமாகி விட்டது. இப்போது எந்த நேரமும் உங்களோடு உரையாடிக் கொண்டே இருப்பதைப் போன்ற பிரமை. இது எதில் போய் முடியுமோ தெரியவில்லை.

தங்களைச் சந்திக்கும் வரை மிகுந்த பதட்டத்திலேயே இருந்தேன். சந்திப்பு முடியும் வரை அது அகலவேயில்லை. நீங்கள் என்னைப் பார்த்த உடனேயே என்னுடன் கைகுலுக்கியதோடு என் கடிதத்தையும் நினைவு கூர்ந்தது நான் எதிர்பாராதது.. மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் உங்களைச் சந்திக்கும் முன் என்னிடம் கேள்விகள் ஏதும் இல்லை. உரையாடலின் போது தானாகத் தோன்றியவற்றை மட்டுமே கேட்க முடிந்நது. உங்களிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகள் அனைத்துக்குமே நீங்கள் ஏதாவது ஒர் சூழலில் பதில் அளித்திருக்கிறீர்கள். நான் செய்ய வேண்டியது உங்கள் தளத்திலோ அல்லது புத்தகங்களிலோ அதைத் தேட வேண்டியது மட்டுமே.

என்னுடைய அசட்டுத்தனங்களை நீங்கள் சகித்துக்கொண்டதால் மட்டுமே என்னால் சில கேள்விகளையாவது கேட்க முடிந்தது. நன்றி. நான் கேட்க விரும்பிய அனைத்தும் எனது ஆழ்மனதின் ஊசலாட்டங்கள் தொடர்பானவை மட்டுமே.. ஏனோ அவற்றை என்னால் சரியாக வார்த்தைப்படுத்த இயலவில்லை. சரியான முறையில் அவற்றை இனங்காண முடிந்தால் அவற்றைப் பற்றிக்கேட்பேன் என நினைக்கிறேன்.

இரண்டு நாட்கள் ஒற்றைக்கணம் போல கடந்து விட்டது.உங்களுடைய நகைச்சுவை உணர்வும் எளிமையும் அபாரமானவை.. உங்களோடு நெருங்கியிருப்பதைப் போன்ற உணர்வை அது கொடுத்தது. உங்கள் நெருங்கிய நண்பர்கள்மீது கூட நீங்கள் கொண்டுள்ள கறாரான விமர்சனப் பார்வை பிரமிப்பைத் தந்தது. உங்கள் நண்பர்கள் மீது எனக்குத் தனிப்பட்ட முறையில் தீவிர பொறாமை ஏற்பட்டு விட்டது. உங்களோடு சேர்ந்து விவாதிக்கவும் உலகைச் சுற்றவும் வாய்ப்புபெற்றவர்கள் அவர்கள்.

ஒன்றரை நாட்கள் நேரம் போதவில்லை. உங்களோடு மேற்கொண்ட அந்த நடைப்பயணம் அற்புதமான அனுபவம்.  ஞாயிறு மதியம் கிளம்பும் போது மனதே இல்லாமல் கிளம்பி ரயில் கிளம்ப சரியாக ஐந்து நிமிடங்களுக்கு முன் ரயிலைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன்.

இலக்கியம் தொடர்பான எந்த அனுபவமும் வாசிப்பும் இல்லாமல் இருப்பது மிகுந்த சங்கடத்தை அளித்தது. உங்களுடைய பெரும்பாலான நூல்களை வாங்கி விட்டேன். எனது இலக்கிய வாசிப்பு உங்களிடமிருந்தே தொடங்குகிறது. அந்தவகையில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. அடுத்த முறை உங்களைச் சந்திக்கும் முன் நிறைய வாசித்திருப்பேன் என நம்புகிறேன். எதிர்காலத்தில் இத்தகைய சந்திப்புகளுக்கு உங்களால் நேரம் ஒதுக்க முடிந்து உங்களை மீண்டும் சந்திக்க இயன்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.

உங்களை மீண்டும் சந்திக்க காத்திருக்கும்,

இ.மாரிராஜ்..

அன்புள்ள மாரிராஜ்

உங்களை சந்தித்தமைக்கு நன்றி. முன்னரே உங்களைப்பற்றி சென்னை வெண்முரசு வாசகர்கள் சொல்லியிருந்தனர்.

பொதுவாக இச்சந்திப்புகளுக்குப் பின்னர் பலகோணங்களில் புதிய வாசகர்கள், எழுத்தாளர்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட சிற்றிதழ்ச்சூழல் என்னும் களமே இல்லாமலாகிவிட்டிருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டது. அனைவரும் நேரடியாக இணையம் வழியாக நேரடியாகவே வாசிக்க வந்தவர்கள். அவர்களுக்குரிய தனித்தன்மைகளை எண்ணங்களாக தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவற்றில் முக்கியமானது சில சிற்றிதழ் மதிப்பீடுகள் இல்லாமலானதுதான் என நினைக்கிறேன். குறிப்பாக இலக்கிய எழுத்து என்பது ஒருவகை நீடித்த உழைப்பையும் கவனத்தையும் கோருவது என்பது. இவ்விவாதங்களில் நான் சிற்றிதழ்ச் சூழலின் தரப்பில் நின்றுகொண்டு இணையத்தின் வழியாக வந்தவர்களிடம் பேசுவதுபோல் உணர்ந்தேன்.

ஜெ
 

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழாவிற்கு பிறகு உங்களுடன் இது இரண்டாவது சந்திப்பு. கேள்விகளுடன் இந்த சந்திப்பிற்கு வந்தேன். என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் இந்த சந்திப்பில் விடை கிடைத்தது. இதுதான் உப்நிக்ஷத் என்பதா? நீங்கள் கூறியது போல அனேக புத்தங்கள் படித்தாலும் தெளிவாகாத வினாக்கள் உங்களுடன் இரண்டு நாள் உரையாடலில் தெளிவடைந்தது. சனி இரவு வாழ்வில் மறக்க முடியாத ஒரு இரவு.ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விடாமல் சிரிப்பு.

ஞாயிறு மாலை முடிந்து போகும் போது மெல்லிய சோகம் கவ்விக்கொண்டது. இரயில் பயணம் முழுவதும் விவாதத்தின் நினைவுகளுடன். உங்களை மனதிற்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். எல்லாவற்றிக்கும் மிக நன்றி ஜெ. அடுத்த முறை எப்போது சந்திப்போம் மற்றும் சந்தித்த இனிமையான நினைவுகளுடன்..

அன்புடன்

ராஜ்மோகன்.

 

அன்புள்ள ராஜ்மோகன்,

நன்றி

ஈரோடு சந்திப்பு ஒரு நல்ல தொடக்கம். அங்கிருந்து ஊட்டிமுகாமுக்கான மனநிலைகளை உருவாக்கமுடிந்தது. புதியவாசகர்களுக்கான சந்திப்பு ஒரு பெரிய திறப்பு எனக்கு.

ஜெ

புதியவர்களின் சந்திப்பு ஈரோடு

புதியவர்கள் சந்திப்பு கடிதங்கள் 1

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள்-2

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62
அடுத்த கட்டுரைமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து