அன்பு ஜெ,
அச்சு இதழ்களில் எழுதுவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைப் படித்தேன். சற்றே வருத்தமாக இருந்தது.
விகடன் உங்களைப் பற்றி அவதூறு எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தொடர்ந்து விகடன் படித்து வருபவன் என்பதால் கேட்கிறேன் ‘அப்படி என்ன எழுதிவிட்டார்கள்’ என்று. ஒருவேளை நான் சிலவாரங்கள் படிக்காமல் இருந்திருக்கலாம். மாறாக ‘தொப்பி-திலகம்’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய பதிவை ஒரு குற்றமாக எழுதியிருந்ததைத்தான் சொல்கிறீர்களா? உண்மையில், அதுவும் கூட ஒரு திறப்பாகவே அமைந்தது. அதைப் படித்துவிட்டுதான் நீங்களும் பிளாக் வைத்திருக்கிறீர்கள் என அறிந்து அதைத்தொடர்ந்ததாக ஞாபகம். அதைப்படித்தவர்கள் பலரும் கூட அக்கட்டுரையை படித்து அதன் நகைச்சுவையை ரசித்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். அக்கட்டுரை ஒன்றுதான் காரணமெனில் நீங்களும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவராகிவிட்டீர்களா என்ற கேள்வி எழுகிறது.
நான் முன்பே ஒரு அறிமுகக் கடித்ததில் குறிப்பிட்டது போல ‘சங்கச் சித்திரங்கள்’ வாசித்துதான் நான் உங்கள் வாசகரானேன். நீங்கள் விகடனில் எழுதினால் உங்களுக்கு சில ஆயிரம் புதிய வாசகர்கள் கிடைப்பதுடன் சில லட்சம் பேர்களுக்கு இலக்கிய அறிமுகம் கிடைக்கும். அவர்களில் சிலர் தீவிர இலக்கிய வாசகர்களாகலாம் அல்லவா? மேலும் புத்தகம் கொடுக்கும் வாசிப்பு அனுபவத்தை அலாதியை கணினித்திறை ஒருபோதும் கொடுக்கமுடியாது என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். எனவே உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு; உங்களை பாதித்த சம்பவம் இன்னதென்று எதுவும் தெரியாத நிலையிலேயே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
அன்புடன்,
சாணக்கியன்
http://vurathasindanai.blogspot.com
அன்புள்ள சாணக்கியன்,
உண்மைதான். விகடனில் எழுதப்பட்ட அந்த தொடர் வாசகர்களை பெற்றுத்தந்தது. அதைவிட அந்த சர்ச்சை. அந்த சர்ச்சையில் விகடன் செய்தது அல்ல, செய்ய உத்தேசித்ததையே நான் சொல்கிறேன். அங்கே பணியாற்றிய இரு இதழாளர்கள் அவர்களின் தனிப்பட்ட சாதிப்பற்றில் இருந்து உருவான வெறுப்பு காரணமாக ஒரு வம்பை உருவாக்கி எனக்கு அடிவாங்கி வைக்க முடியுமா என்று பார்த்தார்கள். ஓர் எழுத்தாளனாக என் மேல் நல்லெண்ணம் கொண்ட இத்தனைபேர் இருப்பார்கள் என அவர்கள் எண்ணவில்லை. சாதாரண நிலையில் ஒரு சிற்றிதழ் சார் எழுத்தாளன் இந்தவகை தாக்குதல்களை தாங்கிக் கொள்ள முடியாது.
விகடன் போன்ற ஓர் பெரும் அமைப்பு, எழுத்தாளர்களை சார்ந்தே உருவான ஓர் இதழ், அதன் வரலாற்றுப் பின்னணியுடன் எழுத்தாளன் மீது அப்படி ஒரு போரை தொடுப்பதும், அழிக்க நினைப்பதும் எவ்வகையிலும் அறமல்ல. அவர்கள் நவீனஇலக்கியத்துக்கு ஏதும் செய்தவர்கள் அல்ல. அது அவர்களின் வணிகம். ஆனால் எழுத்தாளன் மீது தாக்குதலை உருவாக்கி அழிக்க நினைத்தார்கள் என்பது வரலாறு. அதை எப்போதும் அவர்களுக்கு நினைவூட்டியபடியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆகவே ஒருபோதும் விகடனில் எழுத மாட்டேன். அவர்கள் பலமுறை கேட்டும் நான் மறுப்பதற்கான காரணம் இதுவே.
இப்போது அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் அவ்வளவு புரியாது. ஆனால் வரலாற்றில் ஒட்டு மொத்த விகடனின் இடத்தை விட முக்கியமானது என் இடம். நான் அதில் எழுத மறுத்தேன் என்பதும் அதற்கான காரணமும் என்றும் நினைவில் இருக்கும்.
ஜெ
அன்புள்ள ஜெ..
தற்போது மணி நள்ளிரவு 12.50.. தங்களின் மத்தகம் என்ற குறு நாவல்தந்த பாதிப்பில் இந்த நேரத்தில் எழுதுகிறேன்.. நான் படித்த்திலேயே சிறந்த புனைவு என்றால் அது இதுதான்.. அதிகாரம் , காம்ம் என இதற்கு மேல் எழுத எதுவும் இல்லை..
கடைசி கட்ட கிளைமேக்ஸ், அதிகார உச்சியில் இருந்த கேசவன் யானை ,தன் தண்டனைக்கு அஞ்சி நடுங்கும் ஒருவனின் ஆளுமையின் கீழ் வரும்காட்சி உலுக்கி விட்ட்து..இந்த முடிவு , நாவலின் முந்தைய சம்பவங்கலுக்கு புதிய அர்த்தம் தருவதுபோல இருந்த்து..
நாவலில் தேவையில்லமல் ஒரு எழுது கூட இல்லை.. அருமை..அச்சு இதழ்களில் எழுதுவதை விட , இணையத்தில் எழுதுவதை
விரும்புவதாக சொல்லி இருந்தீர்கள்.. அது தவறான முடிவு என்பது என்கருத்து..
உதாரணமாக, மத்தகம் என்ற குறு நாவல் இணையத்தலதில் கிடைத்தாலும்அதை என்னால் படிக்க முடியவில்லை… ஊமை செந்நாய் என்ற உயிர்மைவெளியீட்டில்தான் படித்தேன்..
புத்தகத்தில் படிக்கும் நிறைவு இணையத்தில் இல்லை.. இணையத்தின் பயன்பாடு வேறு என்பது என் கருத்து..இது என் கருத்து மட்டுமே..ஆலோசனை அல்ல..
அதே போல உயிர்மை பதிப்பகத்தில் எழுதுவதில்லை என்ற முடிவும் தவறுஎன நினைக்கிறேன். உங்கள் பல புத்தகங்களை உயிர்மையில்தான்படித்தேன்.. தே ஆர் டூயிங் குட் ஜாப்..
எது எப்படியோ, நல்ல குறு நாவல் கொடுத்த்தற்கு நன்றி..இந்த குறு நாவல் குறித்து என் பார்வை
http://pichaikaaran.blogspot.com/2010/09/blog-post_7405.html
அன்புள்ள பிச்சைக்காரன்
உங்களுடைய கருத்துக்கு நன்றி. மனுஷ்யபுத்திரன் என் நூல்களை கொண்டு சேர்ப்பதில் சிறப்பாகவே செயல் பட்டார் என்றே நினைக்கிறேன். அச்சு வடிவில் வரும்போதே அதிகமான வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்பதும் புனைவுகளை அச்சு வடிவில் வாசிப்பதுதான் சிறந்தது என்பதிலும் ஐயமில்லை.
ஆனால் பலசமயம் வேறு வழி இல்லை. எழுதும் மனநிலையை தக்கவைத்துக்கொள்வது போல முக்கியமான வேறு ஒன்று இல்லை. நல்ல ஆக்கங்களை தொடர்ந்து எழுதும் மன எழுச்சியுடன் வாழ்நாள் முழுக்க இருப்பதே ஒரு எழுத்தாளனின் கனவாக இருக்கவேண்டும். எழுதப்பட்டது வாசிக்கப்படாவிட்டால் அது அவனுடைய இழப்பு அல்ல. என் இலக்கிய ஆசான்களை விட எனக்கு வாசகர்கள் அதிகம் அதுவே போதுமானது.
ஜெ
அன்புள்ள ஜெ!
அச்சு ஊடகங்களில் எழுதாததற்கு முக்கியமான காரணத்தை விட்டு விட்டீர்களே ! சிற்றிலக்கிய அறிவு ஜீவிகள் உங்கள் படைப்புகளைக் கிழித்துத் துப்பி இலக்கியப் பணி ஆற்ற முடியாது
நன்றி
ராமானுஜம்
திரு ஜெ.
‘ஏன் அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை’ என்ற கேள்விக்கான உங்கள் பதிலை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துகளை வாசிப்பவர்களூக்கு இந்த பதில் மிக ஏற்புடையதாக இருக்கும்.
-தருமி.