வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66

பகுதி ஒன்பது : மயனீர் மாளிகை – 3

கவிஞன் செல்வதை நோக்கி நின்றபின் அரங்குசொல்லி அவையை நோக்கி திரும்பி “இப்போது என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருக்கும். நாடகம்… நன்றாகவே இருக்குமென நினைக்கிறேன். இல்லை என்றாலும் தாழ்வில்லை. மதுவுண்டு துயிலும் அரசர்கள் முன் நடிக்கப்படுவதனாலேயே பாரதவர்ஷத்தில் நாடகக்கலை வாழ்கிறது” என்றபின் திரும்பி நான்குபக்கம் பார்க்க அரங்கடியான் ஒருவன் ஓடிவந்து ஒரு இறகை அவனிடம் கொடுத்தான். அதை உதறி தன் தலைப்பாகையில் குத்திவிட்டு நிமிர்ந்து தோரணையாக “ஆகவே அவையோரே… இங்கே நாடகம் நிகழவிருக்கிறது. அதன் முகப்புக்கதையை சொல்லிவிடுகிறேன்” என்று தொடங்கினான்.

“அதாவது, ஸ்வேதகி என்றொரு அரசர் அந்நாளில் இருந்தார். வழக்கமாக ஷத்ரிய மன்னர்களைப்பற்றி சொல்லும்போது சேர்த்துக்கொள்ளவேண்டிய எல்லா வரிகளையும் நீங்களே சேர்த்துக்கொள்ளுங்கள். நேரமில்லை”  என்றான் அரங்குசொல்லி. “அவர் காவியங்களில் மன்னர்கள் வாழ்வதைப்போலவே வாழ்ந்தவர் என்று காவியங்கள் சொல்கின்றன. அப்படி சொல்லப்படாதவர்களை நாம் காவியங்களில் காணமுடியாதென்பதை நீங்கள் அறிவீர்கள்.”

பாரதத்தை முன்னோர் கைத்தவறுதலாக ஐம்பத்தாறுநாடுகளாக உடைப்பதற்கு முன்னால் கங்கையும் சிந்துவும் ஒழுகிய தொல்நிலத்தை முற்றாக ஆண்டுவந்தார் ஸ்வேதகி. அன்றெல்லாம் இங்கே பெரும்பாலான நிலங்களில் மானுடர் இல்லை. இருந்தவர்களுக்கு அரசர் என்றால் என்னவென்றும் தெரிந்திருக்கவில்லை. ஆகவே அவரால் மிகச்சிறப்பாக நாடாள முடிந்தது. அவர் அரசு விரிந்துகொண்டே இருந்தது. அவர் எந்நிலத்தை நோக்கி அது தன் நாடு என கைசுட்டிச் சொல்கிறாரோ அது அவர் நாடாகியது. அச்செய்தியை அங்கே வாழ்ந்த மக்களுக்கு அறிவிப்பது பேரிடராக முடியும் என ஸ்வேதகி முன்னர் நிகழ்ந்தவற்றிலிருந்து அறிந்திருந்தார்.

அக்காலமே கிருதயுகம் என்றும் தர்மயுகம் என்றும் சத்யயுகம் என்றும் இன்னும் பலவாறாகவும் கவிஞர்களால் எழுதப்பட்டு சூதர்களால் பாடப்பட்டு மக்களால் நம்பப்பட்டு அந்நம்பிக்கை அரசர்களால் ஊக்குவிக்கப்படுகிறது. அன்றெல்லாம் அரசரால் மக்களுக்கும், மக்களால் அரசர்களுக்கும், தெய்வங்களால் இருசாராருக்கும் எந்தத்தீங்கும் நிகழவில்லை. ஏனென்றால் ஒருசாராரின் இருப்பை மறுசாரார் அறிந்திருக்கவில்லை. நீத்தாருக்கு அன்னமும் நீரும் அளிக்கப்படவில்லை, அவர்கள் உயிருடனிருந்தபோதே அவையெல்லாம் வழங்கப்பட்டன.

மண்ணையும் ஆழுலகத்தையும் ஆண்ட நாகர்குலத்தை சேர்ந்த அரசர் ஸ்வேதகி வடபுலத்துத் தலைமைகொண்ட வாசுகி குடியை சேர்ந்தவர். சரஸ்வதி முன்பு பெருக்கென சுழித்த நாகோத்ஃபேதம் என்னும் இடத்தில் அவரது அரசு இருந்தது. அங்கு ஆயிரத்தெட்டு மாடமாளிகைகள் இருந்தன. அதன் நடுவே வட்டவடிவில் ஒரு வேள்விக் கூடத்தை அவர் அமைத்தார். ஏனென்றால் அன்றெல்லாம் வட்டமே மக்கள் அறிந்த ஒரே வடிவம். அவர்கள் எப்படி என்ன செய்தாலும் அவ்வடிவம் மண்ணில் உருவாகிவந்தது. மேலும் கட்டுத்தறியில் சுற்றிவரும் கன்றுக்குட்டிகள், காற்றிலாடும் மரக்கிளைகள்கூட அந்த வடிவத்தை வரைவதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆகவே வட்டம் தெய்வங்களுக்குரிய வடிவம் என எண்ணப்பட்டது.

அந்த எரிகளத்தில் பெருவேள்வி ஒன்றை ஸ்வேதகி மாமன்னர் தொடங்கினார். சிக்கிக் கல்லில் எழுந்த சிறுதுளியாகிய அனலவனை எரிகுளத்தில் நாட்டி அவியிட்டு தொல்வேதச் சொல் அளித்து எழுப்பினார். அது நால்வேதமல்ல நாகவேதம் என்று அறிந்திருப்பீர். விண்ணிலிருந்து மூதாதையர் அள்ளிய வேதமல்ல அது. மண்ணிலிருந்து நாகங்கள் நா தொட்டு எடுத்த வேதம். செவியறியா வேதமென்றும் விழியறியும் சொல்லென்றும் அதை உரைக்கின்றனர் கவிஞர்.

ஸ்வேதகி ஆற்றிய அப்பெருவேள்வியில் இம்மண்ணுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் அனலவனுக்கு அவியாக்கினார். அனைத்து உயிர்களையும் அவியளிக்க எண்ணி தொடங்கியது வினையாயிற்று என அவர் பின்னர் அறிந்தார். ஏனென்றால் உயிர்கள் கூடிக்கொண்டே வந்தன. அவர்கள் பிடித்தபோது அச்சத்தில் வாலறுத்துக்கொண்ட பல்லியும், துடித்த அதன் வாலும், அருகிருந்த வால்அறுபடாத இன்னொரு பல்லியும் தனித்தனி உயிர்களாக கொள்ளப்பட்டன.

அவிப்புகையால் வேள்விச்செயலகர்களின் கண்கள் குருடாயின. அவர்கள் நெய்யை எங்கு விடுவதென்று தெரியாமல் விட அவர்களின் ஆடைவழியாக எங்கும் எரிபரந்தது. செயலகர்கள் இல்லாமல் வேள்வி நின்றுபோகும் நிலை வரவே ஸ்வேதகி தன் மஞ்சத்திலேயே மதுவும் ஊனும் உண்டு மல்லாந்து படுத்தநிலையில் கடுந்தவம் செய்தார். முக்கண்மூத்தோன் எழுந்து “என்ன அருட்கொடை வேண்டும் அரசே?” என்றார். “முதலில் ஒரு கோப்பை மது” என்றபின்பே வந்தவன் இறைவன் என கண்ட அரசன் “என் வேள்விக்கொரு வேள்வித்தலைவன். புகையறியா விழிகொண்டவன்” என்றார். “ஆகுக!” என்றார் பனிமுடியர்.

அவ்வண்ணம் வந்தவர் துர்வாசர். தொன்மையான பாஞ்சாலக்குடியான துர்வாசர்களில் இருந்து எழுந்த மூள்சின முனிவர். அவர் வந்தபின் வேள்வி அறுபடவில்லை. ஏனென்றால் அவர் மேலும் மேலும் அவியளித்து நெய்ப்புகையை ஆலமரமளவுக்கு எழுப்பி  நேராகவே விண்ணுக்கு அனுப்பினார். காற்றுவீசாமலிருக்க எரிகுளத்தைச் சுற்றி உயர்ந்த அசோகமரங்களை நட்டு வேலியிட்டார். நூறாண்டுகாலம் வேள்வி நடந்தது. துர்வாசர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். மூன்றாம் ஸ்வேதகியும் வந்துவிட்டார்.

அவ்வளவுகாலம் நிகழும் ஒன்றை அனைவரும் மறந்துவிடுதல் இயல்பே. நாகோத்ஃபேத நெடுங்காட்டுக்குள் அப்படி ஒரு வேள்வி நிகழ்வதை புதியதாகப் பிறந்து வந்த மக்களும் அரசரும் அறியவில்லை. வேள்விச்செயலகர்களும் கூட அறியவில்லை. ஏனென்றால் மேலே மேலே ஏற்றப்பட்ட புகை வானிலெங்கோ இருந்தது. ஒருகட்டத்தில் அனலோனும் அரைத்துயிலில் அவிகொள்ளத் தொடங்கினான். மேலே தேவர்களோ அவியளிப்பவர் எவரென அறியவில்லை. அவி ஊறிவரும் ஓரு துளை அங்கே வானிலுள்ளது என்று மட்டும் அவர்கள் அறிந்திருந்தனர். அங்கே வந்து உண்டு மீண்டனர்.

நெய்யும் அவியும் உண்டு, பெருத்து முழுத்த பன்றியை விழுங்கிய மலைப்பாம்பு போல் அசைவற்றவனானான் எரியன். இல்லங்களில் அடுப்பு மூட்ட கல்லுரசிய பெண்டிர் நூறு முறை உரசியபின் தயங்கி வந்த எரியைக் கண்டு சினந்தனர். சினந்தபோது சுடர் அணைந்தது. மன்ற உசாவல்களில் கற்பரசியர் கண்ணீருடன்  கனலோனை சான்றுகாட்டியபோது சோர்வுடன் கொட்டாவிவிட்டு தான் எதையும் காணவில்லை என்று அவன் சொன்னான். விளைவாக குல ஒழுங்கு குலைவுபட்டது. பத்தினியரின் எண்ணிக்கை அஞ்சத்தக்கவகையில் குறைவாகியது. விடியலில் எழுந்து குளிரில் குறு அரணி உரசிய வேதியரும் ஏழுநாள் நனைந்த கட்டைபோல் அவை இருக்கக்கண்டு முனிந்தனர். தெய்வங்களிடம் அவர்கள் முறையிட, மூன்று முழுமுதலோரும் அனலவனை தேடிச் சென்றனர்.

நாகோத்ஃபேதத்தின் அடர்காட்டின் இருளுக்குள் கன்னியொருத்தி முள்சிக்க களைந்திட்டுச் சென்ற செந்நிற மேலாடை போல் கிடந்த அனலவனை கண்டனர். தட்டி எழுப்பியபோது துயிலெழுந்து கொட்டாவி விட்டு “யார்?” என்று கேட்டான். மும்மூர்த்திகளும் சினந்தனர். “எங்களைத் தெரியாதா உனக்கு?” என்றனர். ஒளியன் நடுவில் நின்ற விண்ணளந்தவனைப் பார்த்து “உங்களை எங்கோ பார்த்திருக்கிறேன். கையில் அதென்ன தட்டு? உணவு என்றால் என்னால் இயலாது. மறுகையில் இருக்கும் அந்த வெண்குவளையையும் அப்பால் கொண்டு செல்லுங்கள். எனக்கு பசியில்லை” என்றான்.

பீரிட்ட சினம் அடக்கி “அறிவிலியே, ஆழியும் பணிலமும் உன் விழிகளுக்கு இதற்குமுன் தென்பட்டதில்லையா?” என்றார் விஷ்ணு. சோம்பல் முறித்து “ஆம், நினைவில் எழுகிறது” என்றபின் நுதல்விழியனை நோக்கி “யாரிவர்? கையில் மானும் மழுவும் கொண்டு வீணே நிற்கிறார். வெட்டி அவியிடவேண்டியதுதானே?” என்றான். துயருடன் “ஏழுலகும் நச்சும் எழுசுடர் அல்லவா நீ? என்னாயிற்று உனக்கு?” என்றார் சிவன். பிரம்மனின் நான்குதலைகளை அவன் மாறிமாறி நோக்கி “இவர்கள் ஏன் கூட்டமாக நிற்கிறார்கள்?” என்றபின் மேலே கேட்பதற்குள் அவர் பாய்ந்து அவன் செஞ்சடைச் சுருள் பிடித்து உலுக்கி “மூடா, உன் தலையை இதோ கொய்கிறேன்” என்றார்.

அவன் திகைத்து “தெய்வங்களே!” என அலறி விழித்துக்கொண்டு “நான் என்ன சொன்னேன்?” என்றான். “நீ சொன்னவற்றை திருப்பிச் சொன்னால் எங்கள் மதிப்புதான் அழியும். மூடா, என்ன ஆயிற்று உனக்கு?” என்றார் பிரம்மன். “அறியேன். ஒருவனுக்கு இரவும் பகலும் நூறாண்டுகாலம் இடைவெளியின்றி உணவு அமைத்தால் அவன் என்ன ஆவான்?” என்றான் கனலன்.

“சூதர்களைப்போல ஆவான்” என்றது பின்னால் ஒரு குரல். திகைத்துநோக்கி “அது அடிக்குறிப்பு” என்று சொல்லிவிட்டு அரங்குசொல்லி தொடர்ந்தான். “அப்படி ஆகியுள்ளேன்” என்றான் செம்பன். அவன் சொன்னதைக் கேட்டு முதலோர் மூவரும் திகைத்து நின்றனர்.

தீத்தெய்வம் “நேற்று என்மேல் ஒரு ஈசல் பறந்து வந்து அமர்ந்தது. அதை தட்டிவிடும் பொருட்டு என் கையை தேடினால் நூறுகாதத்திற்கு அப்பால் என்று அது கிடந்தது. இப்போதுகூட எனது கால்களை என்னால் உணரமுடியவில்லை” என்றான். “கால்கள் இதோ இருக்கின்றன” என்று பிரம்மன் அதை எடுத்து அவன் கண்முன் வைத்தார். “ஆம், கால்கள்! பார்த்து எவ்வளவு நாளாகின்றன!” என்றபின் கையூன்றி எழுந்தமர்ந்த அனலோன் “நான் இங்கு வந்து நெடுநாட்களாகிறது. என் பொறுப்பில் இருந்த தென்கிழக்குத் திசையை இப்போது யார் ஆள்கிறார்கள்?” என்றான்.

“அங்கு நீ இல்லை. வழக்கமாக நீ இருந்த இடம் இருப்பதுபோல அது கரிபடிந்து கிடக்கிறது” என்றார் பிரம்மன். “என்ன செய்வேன்? இப்படியா இரவு பகலாக வேள்வி நடத்துவார்கள்? புகை மேலெழுந்து விண்தெய்வங்கள் போகும் வழியெல்லாம் நிரம்பியிருக்கிறது போலும். வழிதவறி இருமுறை இந்திரனே கீழிறங்கி வந்தார். ஐராவதம் மீது கரி படிந்திருந்ததனால் இங்குள்ள பிடியானை ஒன்று அதைக் கண்டு காதல் கொண்டது. நான்தான் அதற்கு நான்கு கொம்புகள் இருக்கக்கண்டு அது ஐராவதம் என்று கண்டுகொண்டேன். இந்திரனையே சிலர் எமன் என்று சொல்லிவிட்டனர்.”

“நீ மீண்டெழ வேண்டும். இப்புவி அனலால் ஊடுசரடென பிணைத்துக் கட்டப்பட்டது என்று அறிந்திருப்பாய். இங்கு இவ்வண்ணம் குளிர்ந்து படுத்திருந்தாயென்றால் புவியின் ஒருமை அழியும். கிளம்பு!” என்றார் பிரம்மன். “நான் ஆக்குபவன். இனி எனக்கு ஆக்கிநிறைக்க இடமில்லை. அழித்துக்கொடுக்க கைலாயன் ஆணையிட்டுவிட்டார். அழிக்கும் நாக்குதான் இல்லை.” தழலோன் “அய்யனே, தீராப்பசியால் ஆனவன் நான். இன்று பசியணைந்து உடல்நொய்ந்து இதோ கிடக்கிறேன். சென்றவாரம் இவ்வழி சென்ற நாய் ஒன்று என்னை நக்கி நோக்கியது…” என விசும்ப பிரம்மன் விரைந்து அவனைத்தடுத்து “ஆவனசெய்கிறோம்” என்றார். “அந்த நாய்…” என ஒளியன் சொல்லத் தொடங்க “ஆவன செய்வோம்” என மும்மூர்த்திகளும் கூவினர்.

“மீண்டும் நான் பசித்தெழ என்ன செய்யவேண்டும்?” என்றான் அழலோன். “செல்! இந்திரனால் காக்கப்படும் தட்சநாகர்களின் மண்ணாகிய தட்சசிலையை தாக்கி அங்குள்ள கருநாகக்குவைகளை உண்! அவற்றின் நச்சுக்கலந்த ஊன்நெய்யால் உன் வயிற்றுநோய் அழியும். மீண்டும் ஒளிகொண்டவனாக ஆவாய்” என்றார் பிரம்மன்.

அரங்குசொல்லி கைகளை விரித்து உரக்க நகைத்தபடி “ஏன் தட்சநாகர்களின் நகரை அழிக்கும்படி பிரம்மன் அனலோனிடம் சொன்னார் என்ற ஐயம் இங்குள்ள அரசர்களுக்கு எழுவது எனக்கு கேட்கிறது. பிராமணர்கள், அவர்கள் படைப்புத்தெய்வமாக இருந்தாலும்கூட அரசர்களின் விருப்பத்தையே தங்கள் ஆணைகளாக சொல்லும் திறன் கொண்டவர்கள். ஸ்வேதக வாசுகி தட்சகுலத்தின் மேல் தீராப்பெரும்பகை கொண்டவர் என்பதை அந்தப்பகுதியில் மண்ணள்ளித் துளைவிழுந்த கொட்டாங்கச்சியில் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் தெரிந்திருந்தது. அவர்களிடமிருந்து பிரம்மனும் அதை அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு” என்றான்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திரனை வழிபட்டார்கள் என்று பெரும்பழி சுமத்தப்பட்டு தட்சகுலத்து இளவரசர் அருணர் ஐங்குலத்து மூத்தோரால் குலநீக்கம் செய்யப்பட்டார். அவர் தன் நூறுதோழர்களுடன் சென்று உரகர் குலத்துப் பெண்டிரை மணந்து இமயத்தின் உச்சியிலே நாகபுரம் என்னும் நகரொன்றை அமைத்து அங்கு வாழ்ந்து வந்தார். அவர்கள் பறக்கும் நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். விண்ணில் பறந்து காடுகளின் மேல் இறங்கி திறை கொண்டு சென்றனர். அவர்களை எவ்வகையிலும் வெல்ல மண்ணுலாவிய நாகர்களாலும் மானுடராலும் இயலவில்லை. அவர்களை வெல்ல வஞ்சினம் கொண்டிருந்தார் நாகவாசுகியான ஸ்வேதகி.

பிரம்மனின் ஆணைப்படி அவர்களை தின்று பசியடக்குவதாக வஞ்சினமுரைத்து அனலோன் கைகொட்டி தோள்தட்டி நடமிட்டு காட்டுக்குச் சென்றான். இதெல்லாம் அந்தக்காலத்தில் நடந்தது. அந்தக்காலம் என்பது கதைகளின் காலம். ஆகவே அங்கே எவரும் கேள்விகள் கேட்பதில்லை. உணவுண்டு மெலிந்தவனுக்கு மேலும் உணவே எப்படி மருந்தாகும் என்று கேட்பவர்களை அந்தக்காலத்திலே அரசப்பிழையும் ஆசிரியப்பிழையும் இழைத்தவர் என்றுசொல்லி கழுவில் அமரச்செய்து புதைத்து மேலே ஆலயம் எழுப்பி பலிகொடுத்து தெய்வமாக்கினார்கள். அந்தத் தெய்வங்கள் விடைபெறா வினவுடன் இங்கும் அமர்ந்திருக்கக்கூடும். அவர்களுக்கு வணக்கம்.

அரங்குசொல்லி தலைவணங்கி தன் கொண்டையில் சூடிய இறகை எடுத்து காதுகுடைந்தபடி விலகி ஓரமாகச் சென்று நின்றான். அரங்கின் இருபுறங்களிலிருந்தும் தலையில் நாகபட அணிமுடிகள் சூடிய பெண்டிர் இளநீலப் பட்டாடை அணிந்து நாகம்போல கைகள் நெளிய இடை வளைத்து நடனமிட்டபடி வந்தனர். அவர்கள் நடனமிட்டு ஓய்வதுவரை காத்திருந்து சுற்றிவந்து நோக்கியபின் ஒருத்தியைத் தொட்டு பணிவுடன் “கன்னியரே, நீங்களெல்லாம் யாரென்று தெரிந்துகொள்ளலாமா?” என்றான் அரங்குசொல்லி. “இரு, ஆடி முடிக்கிறோம்” என்றாள் ஒரு நடனப்பெண். “சரி சரி” என அவன் விலகி நின்றான்.

அவர்கள் ஆடி முடித்து முந்தானையால் முகம் துடைத்தனர். “என்ன கேட்டாய்?” என்றாள் நடனப்பெண். “நீங்களெல்லாம் யார்? இந்த வேளைகெட்ட வேளையில் காட்டில் இப்படி நடனமிடுவது ஏன்?” என்றான் அரங்குசொல்லி. “நாங்கள் நாகர்குலப் பெண்டிர். எங்கள் அரசர் பிரபவ மகாதட்சர் இந்த மேடைக்கு இப்போது வரவிருக்கிறார்” என்றாள். “ஏன்? அவருக்கு அரசு அலுவல்கள் ஏதுமில்லையா?” என்றான் அரங்குசொல்லி. இன்னொருத்தி “அவர் ஆற்றும் அரசு அலுவலே இதுதானே?” என்றாள். “பாரதவர்ஷத்தில் அரசு அலுவல் என்பது இளவரசர்களை உருவாக்குவதுதான். அப்பால் வேறொன்று உள்ளதா?” என்றாள் இன்னொரு நடனப்பெண்.

“நன்று. அரசர்கள் அனைவரையும் பிரஜாபதிகள் என்று பராசரமுனிவர் சொல்லியிருக்கிறார்.” ஒருத்தி “யார் பராசரரா?” என்றாள். “இல்லையென்றால் வேறு யாராவது அதை சொல்லியிருப்பார்கள், அதற்கென்ன? பாரதவர்ஷத்தில் நீங்கள் எதைச்சொன்னாலும் அதை முன்னரே எவரோ முனிவர்  ஒருவர் சொல்லியிருப்பார்” என்றான் அரங்குசொல்லி. பணிந்து “தங்கள் அரசர் இங்கு வந்து நீராடும்போது நான் இங்கு நிற்கலாமல்லவா?” என்றான். “நிற்காமலிருந்தால் இந்த நாடகத்தை இவர்களிடம் யார் விளக்குவார்கள்?” என்றாள் இன்னொரு பெண். “அதுசரி. ஆனால் நீங்கள் ஏன் இன்னும் நன்றாக ஆடக்கூடாது? காமச்சுவை இன்னும் சற்று இருக்கலாமே?” என்றான் அரங்குசொல்லி. “நாங்கள் நாடகத்தில்தான் தட்சகன்னிகளாக வேடமிட்டு வந்திருக்கிறோம். ஊரில் எங்களுக்கு குலமும் குடியும் உள்ளது” என்று அவள் சீறினாள்.

“நன்று. அந்தத் தெளிவு இருப்பின் மிக நன்று. ஏனென்றால் எந்த நாடகத்துக்கும் அதை முடித்துவிட்டு எங்கு செல்வது என்ற தெளிவு இன்றியமையாதது” என்றான் அரங்குசொல்லி. உள்ளே இருந்து நான்கு சூதர்கள் முரசுகளும் கொம்புகளும் முழக்கியபடி வந்தனர். அதைக் கண்டதும் அரங்குசொல்லி சற்று அஞ்சி விலகி நின்று கொண்டான். அவர்கள் இசை முழக்கி வந்து அவை நடுவே நின்று முத்தாய்ப்பு கொட்டி கொம்புகளைத் தூக்கி பிளிறலோசை எழுப்பி அமைந்தனர். ஒருவன் இரு கைகளையும் தூக்கி “அவையோர் அறிக! அனைவருக்கும் உரிய செய்தி இது. தட்சகுலத்து நூற்றுப்பதினெட்டாவது அரசர் மகாதட்சர் பிரபவர் இங்கு எழுந்தருள்கிறார். இப்போது இந்த செய்காட்டில் அணிச்சுனைகளில் அவருடைய நீர்விளையாட்டு நிகழும்” என்றான்.

அரங்குசொல்லி உரக்க நகைத்தபடி அவையோரிடம் “நீர்விளையாட்டைக்கூட முறைப்படி அறிவித்துவிட்டு நிகழ்த்தும் இவரல்லவோ சிறந்த மன்னர்!” என்றான். “இப்படி அனைத்தையும் முறைப்படி அறிவித்துவிட்டுச் செய்தால் மக்கள் மன்னர் எதிர்காலத்துக்காக எவ்வளவு உழைக்கிறார் என்று அறிந்துகொள்வார்கள் அல்லவா? இதை இங்குள்ள அனைத்து மன்னர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்” என்றான். வாயில் கைவைத்து மந்தணமாக “பிரபவருக்கு ஏழு மைந்தர்கள்!” என்றான்.

உள்ளிருந்து இரு அரசியர் தோள்களில் கைகளைப் போட்டபடி நாகபட முடி சூடி நீலநிற ஆடையணிந்து பிரபவ தட்சர் நடந்து அவைக்கு வந்தார். தொடர்ந்து ஐந்து அரசியர் தலைகளில் நாகபட முடியணிந்து கைகளில் மலர்களுடன் வந்தனர். அரங்குசொல்லி அவையை விட்டு விலக இருபுறங்களிலிருந்தும் இசைச்சூதர்கள் எழுப்பிய இன்னிசை ஒலிக்கத்தொடங்கியது. அவ்விசைக்கு ஏற்ப தட்சனாக அணிபுனைந்து வந்த சூதன் நடனமிட அவனைச்சூழ்ந்து அவன் தேவியராக வந்த விறலியர் நடமிட்டனர். பிறர் இணைந்துகொண்டனர்.

மேடையின்மேல் குங்கிலியப்புகை முகில்போல பரவ அதற்குள்ளிருந்து மெல்லிய பட்டுச்சரடுகளில் விண்ணிலிருந்து இறங்குவதுபோல கந்தர்வர்களாகவும் கிம்புருடர்களாகவும் அணித்தோற்றம் கொண்ட ஆட்டர்கள் இறங்கினர். இருதோள்களிலும் பொருத்தப்பட்டிருந்த மென்பட்டு வெண்சிறகுகள் அசைந்தன. தங்கள் கைகளிலிருந்த இசைக்கருவிகளை இசைத்தபடி அவர்கள் நடனமிட்டனர். மலர்சூடிய யக்‌ஷிகள் இறங்கிவந்தனர். பட்டுச்சரடுகளில் கட்டப்பட்ட துணியாலான பெரியநாகங்கள் நெளிந்திறங்கி இணைந்துகொண்டன. பட்டாம்பூச்சிகள், கருடன்கள் வந்து கலந்தன.

பாவைக்கூத்தும் நடனமும் இணைந்த ஒரு ஆடலாக அது இருந்தது. சரடுகளால் இயக்கப்பட்ட பெருநாகப்பாவைகளுடன் அவற்றின் அசைவுக்கு ஒத்திசைய நடனப்பெண்களும் இணைந்து நெளிந்தாடினர். பெண்கள் நடனத்தின் ஊடாகவே தங்களை கண்ணுக்குத்தெரியாத பட்டுச்சரடுகளில் கோத்துக்கொண்டு மேடையிலிருந்து பறந்தெழுந்து கூரைக்கு அப்பால் மறைந்தனர். புகைமுகில்பரப்பில் துணியாலான பீதர்நாட்டுச் சிம்மநாகங்கள் மேடையில் எழுந்து பிளிறி பின்வாங்கின. சில கணங்களுக்குள் விண்ணுலகத்தின் காட்சியென அது உளம் நிறைக்கத் தொடங்கியது. முதலில் ஈர்த்து பின்னர் நம்பவைத்து பின்னர் உள்நுழைத்து பின்னர் பிறிதொன்றிலாதாக்கும் கலையை கர்ணன் அங்கு அறிந்தான்.

தட்சநாகர் மெல்ல பாம்பென உருமாறினார். அவர் தேவியரும் பொன்னிற நாகங்களாயினர். நாகங்கள் உடல்நெளிந்தன. பின்னிப்பிணைந்தன. வழுக்கி விலகின. முத்தமிட்டன. வால் பிணைத்தன. சீறி விலகி சினந்து வளைந்து கனிந்து குழைந்து தழுவி மீண்டும் எழுந்தன. பலகாறும் தேடி காமமெனும் அருவுரு ஓர் அரவு என தன் உடலை கண்டுகொண்டது என்று கர்ணன் நினைத்தான். நீரெனும் எரியெனும் நெளிவு. கொடியெனும் குழைவு. வேரெனும் கரவு. நாகமென்பது நாவென எழுந்து சொல்லென நெளிந்து மறையும் விழைவு.

ஆடலின் உச்சியில் இசை கூர்மை கொண்டு ஒற்றைப் புள்ளியில் நின்றதிர்ந்த கணத்தில் இறகு தீப்பற்றி எரிய ஒரு பறவை வந்து அவை நடுவே விழுந்து துள்ளி தீப்பொசுங்கி எரிந்தது. சூழ நின்று ஆடிய நாககன்னியர் அஞ்சி முகம் பொத்தி அலறி விலகினர். நாகங்கள் வெருண்டு சீறிச்சுருண்டு படம் எடுத்தன. மானுட உருமீண்டு “யாரங்கே? என்ன நிகழ்கிறது?” என்று பிரபவதட்சர் கூவினார். பிறிதொரு பறவை எரிந்தபடி வந்து அவர்கள் நடுவே விழுந்தது. தேவர்கள் விலகினர். நாகங்கள் மானுடவடிவு கொண்டன.

“என்ன நிகழ்கிறது? யாரங்கே? என்ன நிகழ்கிறது?” என்றார் தட்சர். மேலிருந்து உடல் முழுக்க தீப்பற்றி சிறகுகள் தழலுடன் சேர்ந்து வீச தட்சநாகன் ஒருவன் வந்து விழுந்து மேடையில் புரண்டான். குனிந்து அவனைப்பற்றி தூக்கி “சொல்! என்ன ஆயிற்று உனக்கு?” என்றார். தட்சன் எரிந்தபடி “அரசே, அங்கே மலையின் அடிவாரத்தில் அனலவன் தலைமையில் நந்தவாசுகி வழி நடத்த ஐங்குலப் பெரும்படை நம்மை சூழ்ந்துள்ளது. நம் புரமெரித்து கொடி நிறுத்திச் செல்ல வந்திருக்கிறார்கள்” என்று அலறியபடி துடித்து இறந்தான்.

சூழ்ந்தெழுந்த பந்தச்சுடரில் செம்பட்டு மென்கீற்றுக்கள் காற்றில் பறந்து உருவான தழல்களுடன் மேலும் மேலும் நாகர்கள் வந்து அரங்கில் விழுந்தனர். தட்சப் பிரபவர் ஓடிச்சென்று மலையுச்சியில் இருந்த தன் மாளிகையிலிருந்து அனைத்து வாயில்களினூடாகவும் வெளியே பார்த்தார். “நமது வாயில்களை மூடுங்கள்! தட்சர்கள் எவரும் இனிமேல் வெளிச்செல்ல வேண்டியதில்லை! எவரும் அஞ்சவேண்டாம். நமது கோட்டைக்குள் எவரும் வரமுடியாது. அனலோன் ஆயிரம் படியேறினாலும் நம் நகரின் அடித்தளத்தை தொடமுடியாது” என்று கூவினார்.

அனைத்து வாயில்களுக்கு அப்பாலும் செங்கதிர் வெம்மை துடிப்பதை காணமுடிந்தது. நாககுலப் பெண்டிர் அழுதபடி பிரபவதட்சரின் காலடியில் அமர்ந்தனர். இளமைந்தர் ஓடிவந்து அவர்களின் கைகளை பற்றிக்கொண்டனர். அன்னையர் அவரைச் சூழ்ந்து நின்று கண்ணீர் வடித்தனர். “எவரும் துயருறவேண்டியதில்லை. ஐங்குலமல்ல, மும்மூர்த்திகள் வரினும் நம்மை வெல்ல முடியாது. நம்மை ஆளும் இந்திரன் அருள் நம்மை காக்கும்” என்றபின் “யாரங்கே? இந்திரனுக்குரிய பூசைகளை இங்கு செய்வோம்” என்றார் தட்சப் பிரபவர்.

நாற்புறமிருந்தும் நாகபட முடியணிந்த தட்சநாகர்கள் இறங்கி வந்தனர். மலர்களும் கனிகளும் கொண்டு இந்திரனை வழிபட்டனர். மேடையில் நிறுத்தப்பட்ட அத்தி மரக்கிளையொன்றை இந்திரனின் உருவென உருவகித்து அதற்கு பலியளித்தனர். இளநாகன் ஒருவன் கையில் ஒளிவிடும் வாளுடன் விரைந்த காலடிகள் வைத்து, தாளம் தசையனைத்திலும் துடிக்க நடனமிட்டான். சுற்றிச் சுழன்று வெறியுச்சியில் வானில் எழுந்து தன் கழுத்தில் அக்கத்தியை செருகி இழுத்து குருதி பீரிட மண்ணில் விழுந்து இந்திரன் முன் துடித்து உயிர்துறந்தான்.

தெறித்த குருதி அத்திமரத்தின் அனைத்து இலைகளிலும் சொட்டியது. விண்ணில் இடி முழங்கி மின்னல் எழுந்து அனைவரையும் வெள்ளிச் சிலையென ஆக்கி மறைந்தது. அத்திமரம் தீப்பற்றி எரியத்தொடங்கியது. புகை எழுந்து அவையை மூட விண்ணிலிருந்து இடியின் பேரோசை ‘தத்த தய தத்த’ என்று முழங்கியது. பெருமுரசுகள் என இடித்தொடர்கள் எழ பல்லாயிரம் முடிக்கால்கள் என மழைச்சரடுகள் இறங்கின. கீழே செறிந்து எழுந்து வந்த அனல் அவிந்து மறைந்தது.

மேடை முழுக்க மழை நின்று நெளிந்தது. கர்ணன் மீசையை நீவியபடி துரியோதனனை பார்த்தான். அவன் “அரிய கற்பனை. வெண்பட்டுச் சரடுகளை மழைக்கோல்களென இறக்கியிருக்கிறார்கள். அவற்றின் மேல் ஆடியொளியை அசைத்து மழையை அமைத்திருக்கிறார்கள்” என்றான். கர்ணன் நீள்மூச்சுடன் ஆம் என்று தலையசைத்தான். மழை நின்று பெய்ய ஒரு வாழைஇலையால் தலைக்கு குடைபிடித்தபடி மேடைக்கு வந்தான் அரங்குசொல்லி.

“இவ்வாறாக நூற்றுஎட்டுமுறை தட்சனின் நகரை வெல்ல அனலோன் முயன்றான். நூற்றெட்டு முறையும் இந்திரனின் அருளால் அவன் தோற்கடிக்கப்பட்டான். விண்ணளந்த விண்ணவர்கோன் அனலோனுடன் கொண்ட பகைமை தொன்மையானது. அக்கணக்கை இச்சிறுபோரில் முடித்துவிட முடியுமா என்ன? உடல் சுருட்டி துயர் கொண்ட அனலோன் சென்று பிரம்மனை வணங்கினான்” என்றான்.

மேடையிலிருந்து சூதர்களும் பிறரும் இருபக்கமும் விலக உடலெங்கும் செந்நிறம் பூசி நீண்ட கரிய தலைமயிர் எழுந்து பறக்க அனலென உருவணிந்து வந்த ஆட்டனொருவன் மேடையில் நின்று கைவிரித்து நெளிந்தாடினான். ஆட்டம் முதிர்ந்து பெருந்தாளமாகி முத்தாய்ப்பாக நின்ற கணத்தில் தழலென ஆடிய செம்பட்டுத்திரை எழுந்து மறைய அப்பாலிருந்து அவன்முன் நான்கு திருமுகமும், கைகளில் அமுதகலசமும் மின்கதிருமாக பிரம்மன் தோன்றினார். அனலோன் “எந்தையே அருள்க! ஆயிரம் ஆண்டுகளாக இப்போர் நடக்கிறது. நான் எப்படி வெல்வேன்? ஒரு முறையேனும் நான் வென்றாகவேண்டும். இல்லையேல் ஆணென்று சொல்லி எங்கும் நான் அவையமரமுடியாது” என்றான்.

அரங்குசொல்லி உரக்க நகைத்து. “இதுதான் இடரே. வெல்வதோ வீழ்வதோ அல்ல, வென்றோன் என அவையமர்வதே இவர்களுக்கு முதன்மையானது” என்றான். “யார் ஓசையிடுவது?” என்றான் அனலோன். “இல்லை… நான் நாடகத்தின் ஓரமாக நின்று கொண்டிருக்கிறேன்” என்றான் அரங்குசொல்லி. பிரம்மன் குழப்பமாகி “இந்தத் தொல்லை எனக்கு எப்போதும் உள்ளது மைந்தா. நான் உண்மையில் ஏதோ கவிஞர்கள் எழுதும் நாடகத்தின் உள்ளே இருந்துதான் இவற்றையெல்லாம் இயற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற ஐயம் எழுவதுண்டு” என்றார்.

சுற்றுமுற்றும் நோக்கி “பெரும்பாலான தருணங்களில் நான் படைக்கும்போதும், பிற தெய்வங்களுடன் பூசலிடும்போதும், ஏன் சொல்லுக்கரசியுடன் மந்தணம் கொள்ளும்போதும் யாரோ என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உணர்கிறேன்” என்றார் பிரம்மன். “நிமித்திகர்களைக்கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் நான் செய்யும் ஒவ்வொன்றையும் பிறிதொன்றாக விளக்கும் உரையாசிரியர்கள்… அந்த வீணர்களை நான் என்ன செய்வது? தேவியுடன் மந்தணம் கொண்டால் அதை விண்ணளந்தோனுக்கெதிரான பூசலென விளக்குகிறார்கள். மூவிழியனிடம் ஒரு சொல் பேசி வந்தால், பாய்கலைப்பாவையுடன் போருக்கு முரசறைந்துவிட்டதாக புராணம் கட்டுகிறார்கள்.”

அனலோன் “தந்தையே, நான் என் குறையை உங்களிடம் சொல்ல வந்தேன். தங்கள் குறையை என்னிடம் சொன்னால் நான் என்ன செய்யமுடியும்? தங்களை இயற்றும் கவிஞர்களிடம் அதையெல்லாம் சொல்லிக்கொள்ளுங்கள். அக்கவிஞர்கள் வணங்குவதே தங்கள் துணைவியைத்தானே?” என்றான். பிரம்மன் “அவள் எங்கே அவர்களை கட்டுப்படுத்தப்போகிறாள்? அவர்கள் எழுதுகோலில் அமர்ந்தாக வேண்டிய கடன் அவளுக்கு உள்ளது. இல்லையேல் இந்த நாடகத்தை எழுதிய இழிமகனுக்குகூட அவள் அருளியாகவேண்டிய நிலை வந்திருக்குமா? நான் இங்கு வந்து இவ்வவையில் உன்முன் நின்றிருப்பேனா?” என்றார்.

“இப்போது என்ன சொல்கிறீர்கள்? எனக்கு அருளமுடியுமா முடியாதா?” என்றான் எரி. பிரம்மன் “அருளுவதாகத்தான் நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. என்னவென்று சொல், அருளிவிட்டுச் செல்கிறேன்” என்றார். “நான் எப்போது வெல்வது? அதை சொல்லுங்கள்” என்றான் அவன். “நீ வெல்வாய். அங்கு மலைமேல் இருப்பவர்கள் அங்கிருந்து கிளம்பி காண்டவக்காடு என்னும் வளர்பசுமை சோலையில் குடிபுகுவார்கள். அங்கு அவர்கள் மகிழ்ந்து வாழ்வார்கள்.”

“மகிழ்ந்து வாழ்ந்தால் அழிவுண்டு என்று சொல்லவருகிறீர்களா?” என்றான் அரங்குசொல்லி. “யாரது?” என்றார் பிரம்மா. “நான் அரங்குசொல்லி” என்றான் அரங்குசொல்லி. “நிமித்திகச் சூதர்களே உரையையும் எழுத வேண்டியதில்லை. அதை செய்வதற்கு பிராமணர்கள் வருவார்கள்” என்றார் பிரம்மா. “அது செழிப்புற்ற வனம். எங்கு தேடாது உணவு கிடைக்கிறதோ, விழிநீர் உகுக்காது காதல் கிடைக்கிறதோ, வீரத்தாலன்றி இறப்பு நிகழ்கிறதோ, அங்கு சலிப்பு குடியேறுகிறது. சலிப்பென்பது சிறு இறப்பு. சிறு இறப்புகள் கூடுகையில் பேரிறப்புக்கான விழைவு எழுகிறது. அறிக! சலித்திருப்பவன் தன் இறப்பை தவம் இருக்கிறான்.”

“நல்ல உரை… என்ன இருந்தாலும் தெய்வம் தெய்வம்தான். அரிய கவிதையை தெய்வங்களுக்காக அளிக்கிறார்கள் கவிஞர்கள்” என்றான் எரியன். “அனலோனே, அங்கு காண்டவக்காட்டில் தட்சனும் அவன் குடிகளும் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு இறப்பு வருக என்று கோருவார்கள். அதன் விளைவு என நீ அங்கு செல்லலாம்.” அனலோன் “நான் எப்படி செல்வேன்? அதற்கான குறிகள் என்ன?” என்றான்.

“எங்கு வெல்லற்கரிய நாராயணனும் அவன் சொல்லைநம்பி வில்லெடுத்து பாதியில் நடுங்கும் நரனும் இணைந்து வருகிறார்களோ அங்கு சென்று அவர்களின் படைக்கலன்களில் குடிபுகுக! உன் நோய் தீர்க்கும் ஊன் நெய் அங்கு கிடைக்கும். உண்டு உயிர் கொண்டெழுக!” என்றார் பிரம்மன். “அவ்வாறே ஆகுக!” என்றான் அனலோன்.

அரங்குசொல்லி தலைவணங்கி திரும்பி தன் அவிழ்ந்த ஆடையை சீரமைக்க அவையமர்ந்த அரசர்கள் கூவிச்சிரித்து கைகளை வீசி “ஆம்! நன்று” என்று தலையசைத்தனர்.

முந்தைய கட்டுரைஓர் அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4