«

»


Print this Post

ஐராவதம்- அழகியசிங்கர்


எழுத்தாளர் ஐராவதம் சுவாமிநாதன் பற்றி அழகியசிங்கர் எழுதிய குறிப்பு. பெருமளவில் அறியப்படாமலேயே மறைந்த எழுத்தாளர். அவரைப்பற்றி நான் வாசித்தவரை ஏதும் எழுதப்படவில்லை. ஆகவே இக்குறிப்பு முக்கியமெனத் தோன்றியது. அழகியசிங்கர் இதை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆகவே முழுமையாக பதிவுசெய்கிறேன்[ அனுப்பிய நண்பர் லட்சுமணனுக்கு நன்றி]

1

 

பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?

அழகியசிங்கர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரி நாலாம் தேதி, ஒரு மதிய வேளையில் டிபன் பாக்ஸிலிருந்து மதிய உணவை எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். கண்புரை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்த மாதத்துடன் நான் பதிவு மூப்பு அடைகிறேன். ஆனால் அந்த மாதம் என்னவோ அலுவலகம் வருவதே பெரிய அவஸ்தையாக இருந்தது. கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துக்கள் தெரியவில்லை. பஸ் எண் தெரியவில்லை. ஒன்றும் புரிபடாமல் இருந்தேன். சும்மா ஆபிஸ் வந்திருந்து, மதியம் வரை சும்மாவே ஆபிஸில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். மதியம் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதுதான் போன் வந்தது.

அந்தப் போன் நாயக்கன்மார் தெருவிலிருந்து மிஸஸ் ஐராவதம் போன் செய்தார். “என்ன?” என்று கேட்டேன். “என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.. திடீரென்று கீழே சாய்ந்து விட்டார்…ஆஸ்பத்ரிக்குப் போக வேண்டும்….வர முடியுமா?”

அதைக் கேட்டவுடன் பதட்டமாகி விட்டேன். என் வீட்டிலிருந்து ஐராவதம் வசித்த நாயக்கன்மார் வீடு பக்கம். வண்டியை இப்படித் திருப்பினால் நாயக்கன்மார் தெரு வந்து விடும். பொழுது போகவில்லை என்றால் பலமுறை அவர் வீட்டுக்குப் போய் வம்பளப்பேன். அவருக்குப் பல உதவிகளையும் செய்திருக்கிறேன். ஏடிஎம்மில் போய் பணம் எடுக்கக் கூட அவரால் முடியாது. நான் துணைக்குப் போவேன். அவரை அழைத்துக் கொண்டு போய் பணம் எடுத்துக் கொடுப்பேன். கட்டாயம் வாரம் ஒரு முறையாவது பார்த்து விடுவேன்.

ஐராவதம் சாதாரண குடும்பத்திலிருந்து முன்னுக்கு வந்தவர். அவருடைய தந்தையார் ராணுவத்தில் தன் கால்களை இழந்தவர். ஜாப் டைப்பிங் மூலம் குடும்பத்தை நடத்தியவர். ஐராவதம் தன் திறமையால் ரிசர்வ் வங்கியில் பணியில் இருந்தவர். அவருடைய சகோதரர் வைத்தியநாதன் அவரை விட திறமையானவர். ஐராவதத்திற்கு கொஞ்சம் காது கேட்காது..அவர் சிரிக்கும்போது சத்தம் போடாமல் சிரிப்பார். சில சமயம் அவருக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டிவிடுவார். அவருக்கென்று வாரிசு கிடையாது.

ஒரு முறை அவரைப் பார்த்துக் கேட்டேன் : “யாரையாவது சுவிகாரம் எடுத்துக்கொண்டு வளர்க்கக் கூடாதா?” என்று. ஏனென்றால் அவருக்குக் குழந்தைகள் என்றால் பிடிக்கும். ஆனால் அவர் சொன்ன பதிலைக் கேட்டு எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.

“என்ன நாயா பூனையா வளர்க்க?” என்றார்.

இந்தக் குத்தல் நகைச்சுவை அவருக்கு இயல்பாக இருப்பது. நகைச்சுவையுடன் எழுதக் கூடியவர். பேசக்கூடியவர். அவர் உலக அளவில் பல புத்தகங்களைப் படித்திருக்கிறார். சரளமாக மொழிபெயர்ப்பார். பல உலக சினிமாக்களைப் பற்றிய அறிவு அவருக்கு உண்டு. காது சரியாகக் கேட்காவிட்டாலும் இசைக் கச்சேரிகளுக்குப் போவார். பல பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு காலத்தில் வெளி வந்த பல சிறுபத்திரிகைகளுக்கு அவர்தான் விஷயதானம் செய்தவர். “கணையாழி நடத்திய கஸ்தூரி ரங்கனை விட தீபம் நா பார்த்தசாரதி நல்லவர். எழுத்தாளர்களை மதித்து படைப்புகளைப் பிரசுரம் செய்வார். எதாவது எழுதிக் கொண்டு போனால் ஏன் என்று கேட்காமல் பிரசுரம் செய்து விடுவார்,” என்பார்.

நான் விருட்சம் கொண்டு வரும்போது அவரிடம் அடிக்கடி போய் நிற்பேன். எதாவது எழுதித் தரச் சொல்வேன். தர்ம கீர்த்தி, ஆர் சுவாமிநாதன், வாமனன் என்று பல பெயர்களில் விருட்சத்திற்கு எதாவது எழுதித்தருவார். விருட்சத்திற்கு புத்தக மதிப்புரைக்காக அதிகமாக புத்தகங்கள் வரும். உடனே ஐராவதத்திடம் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் பார்த்துக் கொடுப்பேன். ஒரு வாரத்தில் எல்லாவற்றையும் படித்துவிட்டு கடகடவென்று எழுதித் தந்துவிடுவார்.

இப்படித்தான் ஒரு முறை அவர் எழுதித் தந்த காலச்சுவடு ஆண்டுமலர் விமர்சனத்தையும் பிரசுரம் செய்து விட்டேன். அது பெரிய வம்பாகப் போய்விட்டது. ‘தன்னை நவீன தமிழ் இலக்கிய உலகின் ஞானத் தந்தையாக அறிவிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சி’என்று சுந்தர ராமசாமியைப் பற்றி எழுதி விட்டார். அந்த விமர்சனத்தைத் தாக்கி அந்த மலரில் எழுதிய எல்லா எழுத்தாளர்களும் சுந்தர ராமசாமி உள்பட எனக்குப் பதில் எழுதினார்கள். சிலர் கடுமையாக எழுதினார்கள்.

எம் வேதசகாயகுமார், ‘வாலிகளும் எழுத்துலகக் கூலிகளும்’ என்ற தலைப்பில், ஆனந்தவிகடனில் மூன்றாம்தர தமிழ்த் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதிக் கொண்டிருந்த நபர்களை, அதே பேனாவுடன் விருட்சம் இதழில் மதிப்புரை எழுத அழைத்து வந்தது யார்? என்று ஐராவதத்தைக் கேள்வி கேட்டு எழுதி இருக்கிறார். பின் முகமற்ற அசடு என்கிறார் ஐராவதத்தை. ராஜ மார்த்தாண்டன் விமர்சன வக்கிரங்கள் என்ற தலைப்பில் ஐராவதத்தைச் சாடி உள்ளார். இப்படி ஒரு ஒன்றரை பக்க விமர்சனத்தால் ஐராவதம் என்னை வம்பில் மாட்டி விட்டார் என்று நினைத்தேன்.

அந்த விமர்சனம் வந்த சமயத்தில் நான் பத்திரிகையை நிறுத்தி விடலாம் என்று கூட நினைத்தேன். இந்த நிகழ்ச்சிக்குப் பின் நான் ஐராவதத்திடம் புத்தகவிமர்சனத்திற்காக புத்தகம் கொடுப்பதை கொஞ்சம் குறைத்து விட்டேன்.

ஒரு முறை ஐராவதம் அவர்களை இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவிற்கு அழைத்துப் போனேன். அங்கு அவரைப் பார்த்த ந. முத்துசாமி அவர்கள் ஐராவதத்தைப் பார்த்து,”என்னைய்யா இந்தப் பக்கமெல்லாம் வந்திருக்கே?” என்று கேட்க, ஐராவதம் உடனே,”இதோ இவர்தான் என்னை (என்னைக் காட்டி) தூசித் தட்டி கொண்டு வந்திருக்கிறார்,”என்றார். அவரின் நகைச்சுவை உணர்வு என்னைச் சிரிக்க வைத்தது. எதுவாக இருந்தாலும் மனதில் படுவதை டக்கென்று சொல்லிவிடுவார்.

இன்னொரு முறை லைப்ரரி போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடம்பு சரியில்லாமல் பிரமிள் படுத்துக் கிடந்தார். ஐராவதத்தைப் பார்த்து, “நீங்கள் பிரமிளைப் பார்க்க வருகிறீர்களா?” என்று கேட்டேன்.

உடனே ஐராவதம், “நான் இங்கயே இருக்கிறேன்.. நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்…நான் அவருக்கு காட்சிப் பொருளாக இருக்க விரும்பவில்லை,” என்றார்.

இதுதான் ஐராவதம். எப்போதும் அவர் தனக்கென்று சிறப்பான உடை கூட வாங்கிப் போட்டுக்கொள்ள மாட்டார். ஒரு சுமாரான சட்டை அல்லது வேஷ்டியைத்தான் கட்டிக்கொண்டு இருப்பார். அவர் இருந்த  தெருவில் ஆர்வி என்ற எழுத்தாளர் இருந்தார். ஐராவதத்தை ரொம்பவும் மதிப்பார். ஐராவாதமும் ஆர்வி நாவல் ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அவர் எழுதியதில் அது சிறந்த நாவல் என்று கூறியிருக்கிறார். ‘எப்போதும் மடிப்புக் கலையாத அயன் பண்ணியத் துணியைத்தான் ஆர்வி அணிந்து கொள்வார். தெருமுனை தூரம் நடப்பதற்குக் கூட இதுமாதிரி அணிவார்,’என்று ஐராவதம் கிண்டல் செய்து கேட்டிருக்கிறேன்.

ஐராவதத்திற்கு செலவு செய்ய மனதே வராது. ஒரு நல்ல ஓட்டலில் நிறைய செலவு செய்து டிபன் கூட வாங்கிச் சாப்பிட மாட்டார். சிக்கனமாக இருப்பார். அப்படிப் பார்த்த எனக்கு ஒரு ஆச்சரியம். ஐராவதத்திற்கு ஸ்கூட்டர், மிதிவண்டி, கார் எல்லாம் ஓட்ட வராது. ஆனால் அவர் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டார். கார் உள்ளே போய் கார் சாவியை எப்படி திருப்புவது என்பது கூட அவருக்குத் தெரியாது. டிரைவர்களை வைத்துக்கொண்டு பல கோயில்களுக்கு அவரும் அவர் மனைவியும் சென்றிருக்கிறார்கள். பல நண்பர்களை காரில் அழைத்துப் போயிருக்கிறார்கள். அந்தக் காரையும் வைத்துக்கொண்டு, டிரைவர்களுடன் அவர் நடத்தும் பேரம் கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கும். நானே சில டிரைவர்களை அவருக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறேன். “நீர் வண்டி ஓட்டக் கத்துக்கொள்ளய்யா..வண்டியை நீயே வைத்துக்கொள்..எப்பவாவது என்னை அழைத்துக்கொண்டு போகும்போது மட்டும் நீ வந்தால் போதும்,”என்று கூட கூறியிருக்கிறார்.

ஐராவதம் ரொம்ப நாட்களுக்கு முன்பே கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டார். புத்தகங்களைப் படித்து அதைப் பற்றி எழுதுவதுதான் அவர் வாடிக்கையாக இருந்தது. திறமை இருந்தாலும், அவரால் கதை எழுத முடியவில்லை. அவருடைய மாறுதல், கெட்டவன் கேட்டது என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்தேன்.

பல புத்தகங்களைப் படித்து தொடர்ந்து விமர்சனம் செய்தவரின் புத்தகங்களின் மதிப்புரையை எந்தப் பத்திரிகையும் பிரசுரம் செய்யவில்லை. அவர் எழுத்தை கண்டுகொள்ளவும் இல்லை. இதுதான் ஐரனி. இன்னும் கூட அவர் கதைகள் பல பத்திரிகைகளில் புதைந்து உள்ளன. அவற்றையெல்லாம் கண்டுபிடித்துத் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன். மேலும் கவிதைகள். மொழிபெயர்ப்பு கட்டுரைகள், கதைகள் என்று ஏராளமாக அவர் எழுதியிருக்கிறார். மெல்லிய நகைச்சுவை உணர்வோடு ஐராவதம் மாதிரி யாராலும் எழுத முடியாது.

கடைசிக் காலத்தில் தெரு முனை கூட தனியாக அவர் நடக்கப் பயப்பட்டார். ஒரு முறை அப்படி நடந்து போகும்போது மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். அதிலிருந்து அவர் மனைவி அவரை தனியாகவே அனுப்பப் பயப்படுவார்.”ஏன் வீட்டில் இருக்கிறீர்கள்? வெளியே வாருங்கள்,” என்பேன்.

“எங்கும் வெளியே வரத் தயாராய் இல்லை,”என்பார். வீட்டிலேயே நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று சொன்னவர் அதன்படி மனைவியின் மடியிலேயே இறந்து விட்டார். அப்படித்தான் அவர் முடிவும் நடந்தது. அவரைப் பார்க்க நான் ஆட்டோவில் வந்தபோது, பிணமாகத்தான் அவரைப் பார்க்க நேர்ந்தது. அன்று நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு பளிச்சென்று இருந்தார் ஐராவதம்.

https://www.facebook.com/chandramouli.azhagiyasingar?fref=nf

ஐராவதம்

 

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/84551/