அன்புள்ள ஜே.எம்
இது சந்தேகங்கள்தான். நீங்கள் அச்சு இதழ்களில் எழுதுவதை வேண்டாம் என்று சொல்கிறீர்கள்.நான் சில கதைகளை இப்போதுஎழுதி வருகிறேன். சில கதைகள் பிரசுரமாகி வருகின்றன. பிரபலமான அச்சு இதழ்களிலே கதைகள் வந்தால்தானே அது வாசகர்களுக்கு சென்றுசேரமுடியும்? அப்படித்தானே எழுத்தாளன் உருவாகிறான்? எனக்கு பிரசுரம்தான் பெரிய பிரச்சினை என்று படுகிறது. நீங்கள் சொல்வதைக்கேட்டு இளம் எழுத்தாளர்களும் அச்சு இதழ்களில் எழுதமாட்டேன் என்று சொன்னால் அது எஸ்கேப்பிசமாகவே ஆகும் இல்லையா? நீங்கள் எழுதமாட்டேன் என்று சொல்லலாம். இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள். வளரும்காலகட்டத்தில் நீங்களும் அச்சு இதழ்களை நம்பித்தானே இருந்தீர்கள். அப்போது அவர்கள்தானே உங்களை வளர்த்துவிட்டார்கள்? பிரசுர வாய்ப்பு தேடுவது எழுத்தாளர்களின் இயல்பாகத்தானே இருந்து வருகிறது?
அர்விந்த்
அன்புள்ள அர்விந்த்,
உங்கள் கடிதத்துக்கு விரிவாகவே பதில் சொல்கிறேன். நீங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதனால். பலமுறை சொல்லிய விஷயங்கள்தான்.
நீங்கள் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதனால் அச்சு ஊடகங்களில் எழுத முனைவது நல்லதே. ஏனென்றால் அங்கே ஒரு போட்டி உள்ளது. அதன் விளைவான நிராகரிப்பும் உள்ளது. அந்த நிராகரிப்பு ஓர் எதிர்சக்தியாக விளங்கி உங்கள் தரத்தை கூட்ட உங்களுக்கு உதவும்.
ஆனால் இதற்கும்கூட பிரபல இதழ்கள் உதவாது. பிரபல இதழ்களில் எழுத தேவையானது மொழி, வடிவம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி மட்டுமே. என் கல்லூரி நாட்களிலேயே நான் இந்த பயிற்சிக்குள் வந்துவிட்டேன். ஆரம்பத்தில் ஒரு சவாலாக பல பேர்களில் கதைகள் எழுதினேன். கிட்டத்தட்ட நூறு கதைகள் அச்சில்வந்துள்ளன. எந்தக்கதையும் பிரசுரமாகும் என்ற நிலை வந்ததும் ஆர்வம் போய்விட்டது. அதன்பின் அதன்மூலம் கிடைக்கும் சிறு தொகைக்காக மட்டுமே எழுதிதள்ளியிருக்கிறேன். பிரபல இதழ்களில் உங்கள் மொழியை பயில்வதற்காக மட்டுமே எழுதலாம்.
1990ல் நான் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது அப்போது அறிவிக்கப்பட்ட எல்லா இலக்கிய போட்டிகளுக்கும் என் வருங்கால மனைவி பெயர் உட்பட பல பெயர்களில் கதைகள் அனுப்பினேன். அத்தனை போட்டிகளிலும் பரிசுபெற்றேன். அன்று அது பெரிய தொகை. அதைவைத்தே வீட்டுச்சாமான்கள் வாங்கி வாழ்க்கையை தொடங்கினேன். ‘செக்குக்கு பதிலா கதை குடுப்பீங்க போல’ என்று ராமசாமி கிண்டல்செய்தார். ஆனால் தனிப்பட்ட முறையில் பின்பு அதை நான்செய்யக்கூடாது என்றார். கதையின் தொழில்நுட்பம் கைவந்தவன் பின்னர் போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்றார்.
ஆகவே சிற்றிதழ்களிலேயே நீங்கள் எழுத முயலவேண்டும். அவர்களின் தர அளவுகோலை எட்ட முயலலாம். ஆனால் அதுவும் சில நாட்களிலேயே கைவந்துவிடும். அதன் பின்பு நீங்கள் மானசீகமாக போட்டிகளை உருவாக்க ஆரம்பித்துவிடவேண்டும்.
சிலவருடங்கள் கழித்து சிற்றிதழ்களில் எழுத ஆரம்பிக்கும்போதே நான் முழுக்க தொழில்நுட்பத்தேர்ச்சி அடைந்த எழுத்தாளனாகவே இருந்தேன். அங்கும் என் கதைகள் ஏதும் நிராகரிக்கப்பட்டதில்லை. கணையாழியில் என் முதல்கதையை அசோகமித்திரன் ஒரு சிறப்புக் குறிப்புடன்தான் வெளியிட்டார். அதன் பின் நானே என் எதிர்சக்திகளாக அதுவரை இருந்த எழுத்துக்களை முழுக்க எடுத்துக் கொண்டேன். சுந்தர ராமசாமியையும் அசோக மித்திரனையும் என் போட்டியாளர்களாக எடுத்துக்கொண்டேன். இந்நிலையில் உங்களுக்கு அச்சு ஊடகமோ அதன் ஆசிரியர்களின் தேர்வோ எதிர்சக்தி அல்ல. உங்கள் வாசகர்கள் தான்.
அதன்பின் ஒருகட்டம் வரும். நீங்கள் முன்னால் எழுதிய எழுத்துக்களே உங்களுக்கான எதிர்சக்திகளாக ஆகும். எனக்கு இன்று நான் இதுவரை எழுதியவற்றை விட தாண்டிச்சென்று எழுதும் சவாலே உள்ளது. அது நானே விதித்துக்கொள்வது. இந்நிலையில் உங்கள் எதிர்சக்தி நீங்கள், உங்களின் சுய அளவுகோல்மட்டுமே.
உண்மையிலேயே பிரசுரம் ஒரு சிக்கலே அல்ல என்பதை எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன். பிரசுரமாகுமா என்ற பதற்றம் இளமையில் இருக்கலாம். நாமே பெருமைகொள்ளும் ஒரு நல்ல ஆக்கம் நம்மால் எழுதப்பட்டதாக நாம் உணரும் கணமே பிரசுரம் சம்பந்தமான அச்சம் சுத்தமாக இல்லாமலாகிவிடும்.
உண்மையில் எல்லா ஊடகங்களும் நல்ல ஆக்கங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக இன்று நல்ல எழுத்து சிக்காமல் ஊடகங்கள் தேடும் அளவுக்கு ஊடகப்பெருக்கம் உள்ளது. ஒருசில நல்ல ஆக்கங்கள் மூலம் கவனம் பெற்றாலே தெரியும் தேடி வந்து படைப்புகள் கேட்பார்கள்.
என்னைப்பொறுத்தவரை நிகழில் ’படுகை’ வெளிவந்த காலம் [1986] முதல் என்னிடம் ஊடகங்கள் தொடர்ந்து படைப்புகளை கோரும் நிலையே இருந்துள்ளது. பாதிக்கதைகளை ஊடகங்கள் கோரியதனால் உருவான கட்டாயம் மூலம் எழுதியிருக்கிறேன். எழுத வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுதச்செய்யும் என்பதை எழுத்தாளர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.
பல கதைகளை பிரசுரிக்க எனக்கு அன்று சிற்றிதழ்கள் கிடைக்கவில்லை. காரணம் எண்பதுகளில் சிற்றிதழ்கள் குறைவு. அவை நூல்களிலேயே வெளிவந்தன. ‘மடம்’ போன்ற பலகதைகள். அவை நூலிலேயே வாசிக்கப்பட்டன.
பிரசுரமாகும் இதழின் பிரபலம் ஒரு அளவுகோலே இல்லை. நான் எழுதிய கதைகளில் அதிகமாக பிரபலமானது மாடன் மோட்சம். அது 200 பிரதிகள் அச்சிடப்பட்ட புதியநம்பிக்கை [பொன் விஜயன் நடத்திய சிற்றிதழ்] வெளியிட்ட கதை. கதை நன்றாக இருந்தமையால் அது பலமுறை மறுபிரசுரமாகியது. படுகை, போதி முதலிய புகழ்மிக்க கதைகல் அச்சிடப்பட்டது 500 பிரதி அச்சிடப்பட்ட நிகழ் சிற்றிதழில் [ஞானி நடத்தியது]
என்னுடைய மிகச்சிறந்த பல கதைகள் ஓம் சக்தி என்ற இதழால் கேட்டு வெளியிடப்பட்டன. அந்த இதழ் நவீன இலக்கிய இதழாக வரவில்லை. ஆனால் என் கதைகளை அங்கும் தேடிவந்து வாசித்தார்கள். அக்கதைகள் பிறகதைகளை போலவே புகழ்பெற்றன. ஆகவே நல்ல கதை எழுதுவதே சவால். அச்சாவது அல்ல
எழுத்தாளனாக என் வளர்ச்சியில் பங்களிப்பாற்றியவர்கள் என சுந்தர ராமசாமி, ஞானி, கோமல் சுவாமிநாதன் ஆகியோரைச் சொல்வதுண்டு. அது எனக்கு கற்பித்து என்னுடன் விவாதித்து என்னை விமர்சித்து வளரச் செய்தமைக்காக. நான் அறிமுகமான வருடம் முதல், 1986ல் நிகழில் படுகை அச்சான மறுவாரம் முதல், கிட்டத்தட்ட இன்றுள்ள இலக்கிய அங்கீகாரத்துடன் மட்டுமே இருந்து வருகிறேன். அந்த ஒரு கதையைப்பற்றி இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, சுந்தர ராமசாமி அனைவருமே எழுதினார்கள்.
இதுவே கோணங்கிக்கும். மதினிமார்கள் கதை என்ற ஒரேகதைதான் மீட்சியில் வெளிவந்தது . ‘புதிய புதுமைப்பித்தன்’ என்று அவரை ஞானி கொண்டாடினார். எஸ்.ராமகிருஷ்ணன் சுபமங்களாவில் வேலையில்லாதவனின் ஒருநாள் குறித்து எழுதிய ஒரு கதையுடன் எழுத்தாளராக ஆனார். அந்த கதைக்கு நான் வாசகர்கடிதம் எழுதி பின் ஒரு கட்டுரையும் எழுதினேன். சுந்தர ராமசாமி தந்தி அடித்தார். அசோகமித்திரன் கடிதம் போட்டார். அ.முத்துலிங்கம் மீண்டும் எழுதவந்தபோது ஆப்கானிஸ்தான் பற்றி அவர் எழுதி இந்தியா டுடேயில் வந்த முதல் கதை மூலமே தமிழகத்தில் அத்தனை நல்லவாசகர்களிடமும் கவனம் பெற்றார். நான் அதற்கொரு வாசகர் கடிதம் எழுதினேன்.
கோணங்கியும் நானும் சிற்றிதழில் எழுதினோம். ராமகிருஷ்ணன் நடு இதழில். அ.முத்துலிங்கம் பேரிதழில். விளைவு ஒன்றுதான். ஆகவே நல்ல கதை எழுதுவதே முக்கியம். இதுவரை எழுதப்பட்ட எந்தக்கதையுடனும் இணையாத, ஒரு அடியேனும் முன்வைக்கிற, ஒருகதை போதும். நீங்கள் எழுத்தாளர் ஆகிவிடுவீர்கள். பிரசுரங்கள் உங்களை தேடிவரும். நீங்கள் எவரையும் தேடிச்செல்லவேண்டியதில்லை.
மாறாக பிரசுரம் பற்றிய பதற்றம் இருந்துகொண்டிருந்தது என்றால் பிரசுரத்துக்காக எழுதும் பிழையைச் செய்வீர்கள். அது உங்கள் தனித்தன்மையை மெல்ல மெல்ல அழிக்கும். தனித்தன்மை இழக்கப்பட்ட பின் எத்தனை கதை பிரசுரமானாலும் பயனே இல்லை. அன்னம் என்ற எழுத்தாளரை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாகர்கோயில்காரர். குமுதம் விகடன்களில் ஆயிரம் கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். அவரது இலக்கிய இடம் என்ன? எத்தனை பேர் அப்படி இருக்கிறார்கள் தெரியுமா?
இதழ்களுக்கு உண்மையில் இடம் என்ன? ஜோ.டி.குரூஸையும் சு.வெங்கடேசனையும் விலக்கி தமிழிலக்கியத்தை எழுதிவிட முடியுமா? அவர்கள் இன்றுவரை எந்த இதழ்களிலும் எதையும் எழுதியதில்லை. வெண்ணிலை என்ற தொகுதியில் சு.வேணுகோபால் எழுதிய எந்தக்கதையுமே எந்த இதழிலும் வெளியாகவில்லை. தமிழின் மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று அது என இன்று வாசகர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். உண்மையில் இலக்கிய முக்கியத்துவம் கொண்ட ஒரு நூறுபக்கத்தை உங்களால் எழுத முடிந்தால் தமிழினி வசந்தகுமாரை சென்று பாருங்கள். மீதி அனைத்தையும் அவரே சொல்லிக்கொடுப்பார்.
ஆக, ஓர் எழுத்தாளனாக உள்ளூர உணர்ந்தீர்கள் என்றால் பிரசுரம் என்பதை ஒரு பிரச்சினையாகவே உணர மாட்டீர்கள். நீங்கள் எழுதி மேஜை டிராயரில் போட்டு வைத்திருந்தால் போதும். அதை தேடி எடுத்து அச்சிட ஆட்கள் வருவார்கள். நம்புங்கள், யுவன் சந்திரசேகர் அப்படி உண்மையிலேயே மேஜை டிராயரில்தான் போட்டு வைத்திருந்தான். நான் அதை அவன் கதறக் கதறப் பிடுங்கி சுப்ரபாரதி மணியனின் கனவு இதழில் பிரசுரத்துக்கு கொண்டுவந்து அவனை எழுத்தாளனாக ஆக்கினேன்.
எழுத்தின் சவால்களை எழுத்திலேயே சந்தியுங்கள்.அப்போது எழுத்து என்பது மிக உல்லாசமான ஒரு நிகழ்வாக ஆகும். அந்த இன்பம் உங்களை மேலும் மேலும் எழுதச்செய்யும். பிரபலம் அல்லது பிரசுரம் என்பதை அளவுகோலாகக் கொண்டீர்கள் என்றால் மெல்ல மெல்ல மனம் கசப்புகளால் நிறையக்கூடும்
வாழ்த்துக்கள்
ஜெ