கலையின்மை

mystery_sculpture_from_madurai
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலமா?
என் கேள்வி நம் மரபு சார்ந்த கலை / கல்வி பற்றியது.  என் தந்தையார் (75 வயது ) பள்ளிக்காலத்தில் நமது பாரம்பரியத் தொழில்கள் பள்ளியில் விருப்பப் பாடமாக வைக்கப்பட்டிருந்தன என்று சொல்கிறார். தச்சு வேலை, நெசவு, சில பள்ளைகளில் சிற்பம் முதலியனவற்றை விருப்பப் பாடமாக எடுத்துப் பயிலலாம் என்று இருந்திருக்கிறது. தற்போது கூட சில அரசுப் பள்ளிகளில் தச்சு, மின் வேலை முதலியன தொழில் கல்வி என்கிற முறையில் தென்படுகின்றன.
ஆனால் பெருவாரியான, பெரும் பணம் வாங்கும் பள்ளிகளில் இவை இல்லையே. இவற்றிற்கு இக்காலத்தில் தேவை/ மதிப்பு இல்லை என்பதாலா அல்லது வணிக மயமான கல்வியின் கோரமா ? இன்றும் வீடுகளில் சாதாரண மின் வேலைகள் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை என்பது நிதர்ஸனம் என்று இருக்கையில் இவ்வகையான தொழில் கல்வியை நாம் புறந்தள்ளுவது நல்லதில்லையே.
ஒரு வேளை சிற்பம் முதலியன பற்றிய செய்முறைக் கல்வி நம் பள்ளிகளில் விருப்பப்பாடமாக இருந்தால் நமது பண்பாட்டுச் சின்னங்களான கோவில் சிற்பங்களைப் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டு ‘Suresh loves Priya’  என்று கோவில்களில் எழுதி வைக்காமலும், கல் சிற்பங்களுக்கு வெள்ளை / ஏஷியன் பெயிண்ட் அடிக்காமலும் இருந்திருப்போமோ?
நன்றி
ஆமருவி தேவநாதன்
அன்புள்ள தேவநாதன்

அமெரிக்காவில் ராலே என்னும் ஊருக்குச்சென்றிருந்தேன். நாகர்கோயில் திருநெல்வேலி அளவுக்கு இருக்கும். ஆனால் அங்குள்ள அருங்கலைக் காட்சியகம் சென்னையில் உள்ளதைவிட ஐந்துமடங்கு பெரியது. உலகின் மிகச்சிறந்த ஓவியங்கள் அணிவகுத்த கலைக்கூடம்.

அங்கே தொடர்ச்சியாக பள்ளிச்சிறுவர்களை அழைத்துவந்து ஓவியங்களைக் காட்டுவதைக் கண்டேன். சும்மா காட்டவில்லை. ஒவ்வொரு ஓவியத்தின் கலைப்பாணி, தேசியமரபு, ஓவியநுட்பங்கள் ஆகியவற்றை விரிவாகவும் சுவாரசியமாகவும் விளக்கினார்கள். நின்றுகேட்க எனக்கே ஆச்சரியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

இந்தியக்கல்விமுறை ஆரம்பம் முதலே ‘பயனுறு’ கல்வியாக இருக்கவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டது. மதச்சார்பின்மை என்னும் இரும்புச்சட்டகத்தால் பண்பாட்டுக்கல்வி முழுமையாக நிராகரிக்கபப்ட்டது. ஓர் அமெரிக்க மாணவனுக்கு எட்டாம் வகுப்பிலேயே இம்பிரஷனிசமும்,சர்ரியலிசமும் அறிமுகமாகிறது. நம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குக்கூட நாகர, திராவிட, வேசர சிற்ப பாணிகளைப்பற்றித்தெரியாது. இதுவே சிந்தனையிலும். அங்கே உயர்நிலைப்பள்ளியிலேயே ஹெகலை தெரியும். இங்கே சங்கரரைத்தெரியாது.

பாடமாக வைப்பது அல்ல பிரச்சினை. ஆர்வத்தை ஊட்டுவது. கற்றுக்கொண்டுப்பது. அதற்கான ஆசிரியர்களும் இங்கில்லை. தத்துவமும் கலையும் கற்பிக்கப்படாத கல்வி வெறும் மக்கள்திரளையே உருவாக்கும். நம் கல்விகற்ற தலைமுறை பண்பாட்டு அறியாமை, சிந்தனை வறட்சிகொண்ட ஒன்றாக ஆகியிருக்கிறது. அதுதான் நீங்கள் சொல்லும் காட்சிகளை உருவாக்குகிறது

இதை மாற்றலாம். ஆனால் இப்போது தொடங்கினால்கூட ஒருதலைமுறை கடக்காமல் இங்கே எதையும் நிகழ்த்தமுடியாது, இதுதான் நிலைமை.

இதை மதக்கல்வியாகக் கற்றுக்கொடுப்பது என்பது எதிர்மறைவிளைவையே உருவாக்கும். இதை இருபதாண்டுகளாகவே எழுதிவருகிறேன். மதம்மீதான நிராகரிப்பு கலைமேலும் தத்துவம்மேலும் நிகழும். மதமாகப் பார்க்கவிரும்புபவர்கள் பார்க்கலாம், ஆனால் கலையென தத்துவமென மட்டும் நோக்குவதே மையநோக்காக இருக்கவேண்டும். ராஃபேலோ, ரெம்பிராண்டோ கிறிஸ்தவக்கலைஞர்களாக அறிமுகப்படுத்தப்படுவதில்லை. கலைஞர்களாகவே அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். மதுரை ஊர்த்துவவீரபத்ரன் சாமியாக அல்லாமல் ஒரு பெரும்கலைப்படைப்பாக அறிமுகப்படுத்தப்படவேண்டும். அதுவே நவீன வழிமுறை

ஆனால் இருபக்கமும் நிகழ்வது இணையற்ற மூடத்தனம். ஒருபக்கம் ஊர்த்துவவீரபத்ரன் மதம்சார்ந்த மூடநம்பிக்கையின் அடையாளம் என எண்ணி முழுநிராகரிப்புடன் கடந்துசெல்கிறார்கள். அதை எதிர்த்து போராடி உருவாகிவரும் தரப்பு மறுபக்கம் ஊர்த்துவவீரபத்ரனின் தூக்கியகால் அந்தக்காலத்திலேயே ராக்கெட் விட்டதைக் குறிப்பிடுகிறது என்றெல்லாம் உளறும் ஆசாமிகளைக்கொண்டுவந்து கல்வி, ஆய்வுப்புலங்களில் நிறுவுகிறது.

இருதரப்புக்கும் நடுவே மண்டைக்குள் காற்றோட்டத்துடன் சிந்திப்பதே கடினமானதாக இருக்கிறது. என்றாவது நமக்கு மீட்பு நிகழலாம், அது ஓர் எதிர்பார்ப்பு.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57
அடுத்த கட்டுரைஅம்மை