ஆசிரியருக்கு
நேற்று ரப்பர் படித்தேன். சற்றே விலை குறைவு என்பதால் சரியாக வந்து சேருமா என்ற தயக்கத்துடன் நியூ ஹாரிசான் மீடியாவில் ஆர்டர் செய்திருந்தேன். சனிக்கிழமை காலை வந்து சேர்ந்து விட்டது. உடனே நவீன தமிழ் இலக்கியம் அறிமுகம் ஆர்டர் செய்தேன். உங்களை பார்க்க வரும் முன் வந்து சேராது என்றே நினைக்கிறேன்.
பி.கே. பாலகிருஷ்ணன் குறித்த உங்கள் பதிவுக்கு பின்னர் படித்ததால் ரப்பரின் பின்புலம் நன்றாகவே புரிந்தது. கிட்டத்தட்ட அசோகமித்திரனின் இன்று போல தனித்தனி நிகழ்வுகளாகவும் ரப்பர் தோற்றமளித்தது.
பாச்சியின் அத்தியாயத்தை படிக்கும்போதெழும் வலியும் திரேஸ் கண்களை துடைத்துக் கொண்டு கார் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் போது ஏற்படும் வாழ்வின் மீதான சலிப்பும் கண்டன்காணி கொடுக்கும் அக எழுச்சியும் குளம்கோரி பாலன் நாயரிடம் அம்மாவை விட்டுச் செல்லும் போது தோன்றிய புரிந்து கொள்ள முடியாத நிம்மதியும் பெருவட்டரின் மீதான குஞ்சியின் பேரன்பும் தனித்தனி வாழ்வுகளாக ஒருபுறமும் ரப்பர் அந்த நிலப்பகுதியில் அம்மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய ஏற்படுத்துகிற மாற்றங்களும் ஒரு தொடர் சரடாக மறுபுறமும் என ரப்பர் இரண்டு விதமாக காட்சியளிக்கிறது.
மௌனங்களே ரப்பரை மேலும் ஆழம் கொள்ளச் செய்கிறது. முழு வாழ்வையும் ஒரு நாளில் வாழ்ந்துவிட்ட நிம்மதி.
நன்றி
அன்புடன்
சுரேஷ்