மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
ஈரோடு புதியவர் சந்திப்புக்கு அனுமதித்தமைக்கு நன்றி. கலைத்துப் போடப்படுதலை அனுபவித்தேன். தயாரிப்புகளும் இலக்கிய வாசிப்பனுபவமும் இல்லாததால், ஒருவித சுய வெறுப்பு வளர்ந்தது.
உங்களுக்கு வாசகவிரிவின் புதிய ஊற்றுகளை நேரடியாகக் கண்டுகொள்ள சந்திப்பு உதவியிருக்கலாம்.
சிந்திக்க, வாசிக்க, கவனிக்க வேண்டிய முறைகளே தெரியாமல் ஒரு கல்விமுறையைக் கடந்து வந்திருக்கிறோம் என உணரும் போது, மூளை கசக்கிறது. இருப்பினும் எதுவும் வீணாவதில்லை; காலம் உட்பட என ஆழ்மனது சொல்கிறது
உண்மையில் உங்களின் தத்துவ, ஆன்மிக ஊற்றுகளில் இருந்து நீர் பருகவே விரும்பினேன். கேள்வியே கேட்கத் தெரியாத போது என்னத்தைக் கேட்பது? ஆனால் ஒரு வியப்பு. நீங்கள் இவ்வளவு முயற்சி எடுத்து வந்ததன் நோக்கம் நிறைவேறியதா? இல்லையென்றால், எப்படி எதிர்கொண்டிருப்பீர்கள்? உச்சங்களிடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் இலட்சியவாத படைப்பாளிகள் தவிர்க்க முடியாத ஏமாற்றங்கள் தானோ இவை.
காலம் வீணாகிவிட்டதைப் பற்றிக் கவலையில்லை. நல்ல வாசகனாக உருவாக தொடர்ந்து முயல்வேன்
ராகவேந்திரன்
அன்புள்ள ராகவேந்திரன்,
எனக்கு அப்படி ஏதும் தோன்றவில்லை. இளையவாசகர்களின் உற்சாகமும் கவனமும்தான் தெரிந்தது. அது நிறைவளித்தது. விவாதங்கள் திட்டமிடப்படாத காரணத்தால் அலைபாய்ந்துசென்றாலும் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன. மேலும் இது உரையாடலைவிட அறிமுகத்தை நோக்கமாகக்கொண்ட சந்திப்பு
ஜெ
வணக்கம்.
ஈரோடு சந்திப்பு மிக நெகிழ்ச்சியாக இருந்தது. நான் உங்களை சந்தித்தது இது இரண்டாவது முறை. நாள் முழுக்க விவாதித்து, பேசி ஒரு கட்டத்தில் பேசுபொருள் இல்லாமல் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க நேர்ந்துவிடுமோ என்று நினைத்தேன். ரயில் இறங்கியது முதல் உங்களின் ஆர்வமும் சுருதியும் குறையவே இல்லை. பேசிய முக்கால்வாசி தலைப்புகள் உங்கள் தளத்தில் படித்தது தான் என்றாலும் உங்கள் நகைச்சுவை உணர்வை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. சிரித்து சிரித்து ஒரு கட்டத்தில் வயிறே வலித்தது. பல விஷயங்களில் புதுப் பார்வைகள் உருவாயின. இரண்டு நாள் போனதே தெரியவில்லை. சந்தித்ததில் பெருமகிழ்ச்சி சார்.
மேலும் நாம் ஹருக்கி முரகாமி பற்றி பேசிய போது Norwegian woodல் அவரை ஆரம்பித்ததாகச் சொன்னீர்கள். அது அவரின் சாதாரணமான படைப்பு என்று சொல்வேன்.அவரின் Wind Up Bird Chronicle கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள். அது அவர் ஆக்கத்தின் உச்சம். மேலும் இச்சிறுகதையும் 2014 இறுதியில் வெளியாகி உலகம் முழுதும் கவனம் பெற்றது. இன்னும் இதை ஸ்லாகித்துக் கொண்டே இருக்கின்றனர். அவரின் படைப்புகள் தனிமையை நோக்கி எழுதப்பட்டாலும் அந்தத் தனிமை மேற்கத்தியவர்கள் மட்டுமே உணரக்கூடிய தனிமையாகத் தோன்றவில்லை. தனிமையும் பொதுமொழி தானே.அதில் ஒரு புனைவு உச்சம் இருக்கத்தான் செய்கிறது.
http://www.newyorker.com/magazine/2014/10/13/scheherazade-3
நன்றி
கிஷோர் ஸ்ரீராம்
அன்புள்ள கிஷோர்,
விவாதங்களில் பலர் வாசித்திருந்த புதியநூல்களை நான் வாசித்திருக்கவில்லை என்பதைக் கண்டேன். அது இயல்புதான். சமகாலப்புனைவுகளை தொடர்ச்சியாக வாசிக்கும் நிலையில் நான் இல்லை. ஆய்வு சார்ந்து மனம் சென்றுவிட்டால் அதிலிருந்து விலக முடியாது
இந்தக்கதையை நான் முன்னரே வாசித்துவிட்டேன். பொதுவாகவே நியூயார்க்கர் கதைகள் மேல் ஓர் மெல்லிய நம்பிக்கையின்மை எனக்குண்டு. ஓர் இதழ் தனக்கென ஒரு வரையறையை, இலக்கணத்தை உருவாக்கி அதை எழுத்தாளர்களிடம் செலுத்துவதே எனக்கு ஒவ்வாதது. நியூயார்க் கதைகள் கச்சிதம், உணர்வெழுச்சியில்லாமை,உலகியல்தன்மை, கட்டமைப்பில் மட்டுமே நுணுக்கம் போன்ற சில அம்சங்கள் கொண்டவை. – விதிவிலக்கான படைப்புகளும் அதி வந்துள்ளன- அவை பெரிய படைப்பாளிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள்.
ஆரம்பகாலத்தில் எனக்கு நியூயார்க்கர் கதைகள் பெரிய ஈடுபாட்டை அளித்தன. ஒருகட்டத்தில் ஜான் ஓ ஹாரா, ரேமண்ட் கார்வர், எடித் வார்ட்டன் போன்றவர்களை விரும்பி வாசித்திருக்கிறேன். பின்னர் அவை எனக்கு ஆர்வத்தை மட்டுமே உருவாக்குகின்றன, என் அகத்தை அசைக்கவில்லை என்று கண்டுகொண்டேன்
முரகாமியின் இக்கதை அமெரிக்க சராசரி இலக்கியவாசகனுக்கானது. அவர்கள் கொண்டாடுவார்கள். அவர்கள் நியூயார்க்கர் போன்றவர்களால் அப்படி பலகாலமாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்
ஜெ
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதேபோல் ஒரு எழுத்தாளுமையை சந்திக்க சென்றேன். ஒரு நான்கு மணிநேரம் தொடர்ந்த பேச்சில்(அவரது மட்டும்), எனக்கு மனதில் நுரை தள்ளியது. இரண்டாண்டுகளாயிற்று அவரைப் பார்த்து, படித்து. அதனைப்போலெல்லாம் இல்லாமல் தங்களை விட்டு பிரிந்து வருகையில் ஒரு சிறிய சோகமும், வருத்தமும் முகிழ்த்தது. நேரம் செல்ல செல்ல அது பெருத்தது. நான் வேறு வழியின்றி நேற்றைய நம் நினைவுகளுக்குள் மூழ்கிக்கொண்டேன். அந்த நினைவுகளோ நிலைமை புரியாமல் நிறைய குட்டிகளைப்போட்டுக்கொண்டே செல்கிறது. வேறு வழியில்லை. நம் அடுத்த சந்திப்பை நோக்கி நான் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.
அன்புடன்,
சச்சின்,
புதுக்கோட்டை.
அன்புள்ள சச்சின்
இது ஒரு தொடக்கம் மட்டுமே. நான் நேரடியான தீவிரவிவாதங்களை உத்தேசிக்கவில்லை. இளையதலைமுறையின் ரசனைப்போக்குகளை அறிந்துகொள்ள விரும்பினேன். அவ்வகையில் மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது
ஜெ