இன்று காலை இணையத்தில் [வழக்கம்போல மிகவும்பிந்தி] வாசித்த இந்தச்செய்தி ஒரு மெல்லிய சிலிர்ப்பை உருவாக்கியது.. அற்புதங்கள் எப்போதாவதுதான் நடக்கின்றன. இது அவற்றில் ஒன்று. அந்த மனைவியின் சிரிப்பைப்பார்க்கச் சந்தோஷமாக இருந்தது.
சியாச்சின் பனிப்பாளத்தைப் பார்க்கவேண்டும் என்ற அவா இருந்தது. அதற்குஇணையானதும் இரண்டாவதுமான த்ராங் த்ரங் பனிப்பாளத்தை லடாக் பயணத்தின்போது பார்த்தோம்.21,490 அடி உயரத்தில் உள்ள பென்ஸீ -லா கணவாயின் வழியாக டோடோ என்னும் மலைச்சிகரத்தின் பனி பிதுக்கித்தள்ளப்பட்டு உருவாவது இந்தப்பனிப்பாளம்
நாங்கள் போனது கோடைகாலத்தின் உச்சத்தில். கஷ்மீரிலேயே வெயில் எரிக்கும் பருவம். ஆனால் – பனிப்பாளம் நோக்கிச் செல்லச்செல்ல குளிர் கூடிக்கூடி வந்தது. சுமார் இரண்டு கி மீ தள்ளி நின்று தொலைவில் வெள்ளி உருகி வழிவதுபோல தெரிந்த பனிப்பாளத்தைப்பார்த்தோம்.
முதல்பார்வையிலேயே அது ஒரு பெரும் வழிவு என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. ஓர் ஆறு ஓடிக்கொண்டிருப்பதுபோல. பின்னர் ஆறு உறைந்துவிட்டது எனத் தோன்றியது. அதை ஒரு நிலையான அமைப்பு என கற்பனைசெய்வதே கடினம். ஏனென்றால் அது உண்மையில் நிலையான அமைப்பு அல்ல. மெல்லமெல்ல சரிந்துகொண்டே இருப்பது. அதன் பிரம்மாண்டமான அமைப்பு காரணமாக மிகச்சிறியவர்களான நமக்கு அது நிலையானது எனத் தோன்றுகிறது
மலைகளின் நடுவே உச்சியிலிருந்து மாபெரும் சலவைக்கல் படிக்கட்டுபோல சரிந்து சரிந்து இறங்கி வந்தது. அதன்மேல் ராணுவப்பயிற்சியாளர்கள் ஏறிச்செல்வதுண்டு என்று எண்ணியபோது முதுகு கூசியது. சரிந்துகிடக்கும் சீனிக்குவியல்மேல் எறும்பு ஏறுவதுபோலத்தான். எறும்பின் எடைக்கு அது நிலையானது, அவ்வளவுதான்.
அங்கே நிற்கவே முடியவில்லை. அவ்வளவு கெட்டியான குளிராடைகளுக்கும் ஊடாக உடலை அறுத்த குளிர். காற்றழுத்தமில்லாமையால் காதடைப்பு, தலைச்சுற்றல், மூச்சுத்திணறல். கண்கள் கூசி கண்ணீர் வழிந்தது. சற்றுநேரத்தில் திரும்பிவிட்டோம்.
சியாச்சின் பனிப்பாளத்தில் 1984 முதல் இதுவரை பனிச்சரிவு, கடும்குளிரால் உடல்செயலிழப்பது, இதய அடைப்பு ஆகியவற்றால் 8000 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். சென்றவாரம் சென்ற பெப்ருவரி இரண்டாம் தேதி 5900 மீட்டர் உயரத்தில் பயிற்சிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பத்துவீரர்கள் பனிச்சரிவில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தேடும் முயற்சி நடந்தது.
அவர்கள் உயிருடனிருக்க வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டு பிரதமர் உள்ளிட்டவர்களின் அஞ்சலிக்குறிப்புகள்வெளியானபின்னரும் தேடல் தொடர்ந்தது. லான்ஸ்நாயக் ஹனுமந்தப்பா உயிருடனிருப்பதாக தெரியவந்தது. மீட்கப்பட்ட ஹனுமந்தப்பா சிகிழ்ச்சையிலிருக்கிறார்.
-40 டிகிரி குளிர்,25 அடி ஆழத்தில்,நான்கு நாட்கள்
கலவையான எண்ணங்களை உருவாக்கியது இச்செய்தி. ஒரு மனிதாபிமானியாக இத்தனை பலிகளைக்கொடுத்து அந்தப்பனிப்பாளத்தைக் காக்கவேண்டுமா என்னும் எண்ணம் எழுகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும் சீனாவும் இலக்குநோக்கியிருக்கும் மிகமுக்கியமான மலைமையம் அது. ஆகவே வேறுவழியில்லை என்பது அதற்கான விடை
ஆனால் எந்தவகையான எல்லைப்பிரச்சினை இல்லையென்றாலும் அந்தப் பனிப்பாளம் மீது ராணுவப்பயிற்சி நிகழவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. நிலம் மனிதனுக்குவிடுக்கும் அறைகூவல் அது. மலைகளை, கடல்களை, பாலைகளை வென்றுகடப்பதுபோலவே எப்போதுவேண்டுமென்றாலும் அப்பனிப்பாளத்தையும் கடக்க இந்தியர்களால் முடியவேண்டும். ராணுவம் மட்டும் அல்ல, இந்தியக்குடிமக்களாலும். நானே கூட அங்கே சென்று அந்தப்பனி அளிக்கும் அறைகூவலை எதிர்கொள்ளவே விரும்புவேன்
சரி, உயிரிழப்பு? அவர்கள் ராணுவத்தினர். சாகசம் அவர்களின் தொழில். ஆனால் சாதாரணர்களாகிய நாங்களும் பலமுறை உயிரிழப்பின் விளிம்பு வழியாகத்தான் பயணம்செய்திருக்கிறோம். தீவிரவாதமும் எல்லைதாண்டிய தாக்குதல்களும் நிகழும் கஷ்மீரின் எல்லைப்பகுதிகளில், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில். மாவோயியர்களின் தொடர்தாக்குதல் நிகழும் சட்டிஸ்கரில்,பல ஆபத்தான பாதைகளில்…
நாங்கள் சென்றுவந்த இடங்களில் சிலநாட்களுக்குள்ளாகவே தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. நாங்கள் கடந்துவந்ததெல்லாம் வெறும் தற்செயல்களால்தான். ஏன், சட்டிஸ்கரின் கைவிடப்பட்ட குகைகளுக்குள் வழிகாட்டியோ பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் சேற்றில் ஊர்ந்து நுழைந்து வந்ததெல்லாம்கூட ஒருவகையில் முட்டாள்தனமான , இறப்பை மல்லுக்கு அழைக்கும், முயற்சிகளே. ஒரு குகையில் கொஞ்சம் கரியமிலவாயு இருந்திருந்தால்கூட தப்பியிருக்கமுடியாது
ஏனென்றால் அது ஒரு அகஅனுபவம். நாம் சோதிப்பது இயற்கையின் எல்லையை அல்ல. நம்முடைய அகவல்லமையின் எல்லையைத்தான். ஆகவேதான் உயிராபத்து உள்ள இடங்களில் மட்டும் அத்தனைகுதூகலம் பிறக்கிறது. நம்மைநாமே கண்டுகொள்ளும் ஓரு புள்ளி அது. முழுக்கமுழுக்க சாகஸத்திற்கு இடமில்லாத ஒரு சமூகம் இருக்குமென்றால் அங்கே மனிதன் தன்னைக் கண்டடைவதே இல்லாமலாகும்.
பெருமுயற்சிசெய்து ஹனுமந்தப்பாவை மீட்ட ராணுவமீட்புக்குழுவுக்கு வணக்கம். அவர்களும் தங்கள் உச்சங்களைக் கண்டிருப்பார்கள். வாழ்க்கையை ஒரு விளையாட்டாகக் கொண்டால் அதன் மறுதரப்பில் ஆடுபவனை நாம் மிகச்சிறப்பாக எதிர்கொண்ட ஆடல் தருணங்கள் அவை