வெண்முரசு – காலமும் வாசிப்பும்

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

என்றுமுள்ள இன்று படித்த பின்பு இதை எழுதத் தோன்றியது. நீங்கள் குறிப்பிடும் “சூழலும் புனைவும் மற்றும் புனைவின் பொது வெளி” இரண்டும் வெண்முரசில் அமைந்த விதம் பற்றிய என் எண்ணங்கள் இவை. இரண்டிற்கும் ஒவ்வொரு மாதிரியை மட்டுமே குறிப்பிடுகின்றேன். இன்னமும் எழுதிக் கொண்டே போகலாம்.

வெய்யோன் அத்தியாயம் 48 இல் கர்ணனின் அகப் பயணம் முழுவதையும் ஒரு திடுக்கிடலோடுதான் படித்தேன் (செஞ்செப்பு மூடிதூக்கி செங்குருதி விழுதள்ளிப்பூசி நீவிவிட்ட வஞ்சக்கருங்குழல், அதன் திசைவிரைவில் ஒருதுளி நான்.உருகி முடியிறங்கி பெருகி முடிவின்மை நோக்கி செல்லும் வெறும் விரைவு. பொருளின்மை எனும் நீலம். பணிலமுறங்கும் பாழி, அனல்சுழிகளின் வெளி. அங்கு பள்ளி கொண்டிருக்கும் ஒருவன், இடக்கையில் அப்பெருங்கதாயுதத்தை அவன் கண்டான். நீட்டிய வலக்கையின் விரல்கள் சிம்ம முத்திரை கொண்டு சிலிர்த்து நகம்கூர்த்து நின்றிருந்தன. அவன் நெஞ்சிலிருந்தது கரிய பெருந்திருவின் முகம் ) தன்னை, தன் விழைவை, தனக்கும் குந்திக்கும், திரௌபதிக்கும் ஆன உறவை, மொத்த பாரதத்தையும், அது நிகழும் காலத்தையும், காலத்தில் உறையும் பள்ளி கொண்டவனையும் சென்று அறிந்து மீள்கிறான்.

இந்த பகுதியோடு ஓரளவுக்கேனும் ஒப்பிடக் கூடிய நவீன இலக்கிய இடம் ‘புயலிலே ஒரு தோணியில்’ பாண்டியன் குடித்து விட்டு வரும் இடம். அதில் அதிகபட்சம் அவன் போகக் கூடிய இடம் சித்தர் பாடல் வரை. இரண்டாயிரம் வருட தமிழ் பாரம்பரியத்தில் ஆணின் காமம் என்பது வரை மட்டுமே. யதார்த்தவாதம் அதிகபட்சமாக சென்று சேரக் கூடிய இடம். வெண்முரசு மொத்த இந்திய பாரம்பரியத்தையும், அடையாளங்களைத் தாண்டி, ஆண் பெண் உறவையும், விதியையும், காலத்தையும் சென்று சேர்கிறது அந்த ஒரு அத்தியாயத்தில். ஒரே காரணம் அது நம் மரபின் பொது வெளியை களமாக கொள்வதுதான்.

ப்ரூஸ்ட், “முதல் நாவலாசிரியனின் மகத்தான கண்டுபிடிப்பு என்பது ரத்தமும் சதையுமான ஒரு மனிதனை ஒரு படிமமாக மாற்றுவதன் வழியாக, எழுத்தை புனைவாக மாற்றி அதில் அவனை வாசகனுக்குள் நிகழ்த்த முடியுமென்று கண்டடைந்ததே” என்கிறார். அதன் பின் அந்த கதாபாத்திரமும் வாசகனுக்குள் நிகழும் வாசகனே. பீமனும் கர்ணனும் அப்படி நம்முடன் இரண்டாயிரம் வருடமாக இருந்து வருபவர்கள். இத்தனை படிமங்கள் கொண்ட ஒரு கலாசார வெளியிலிருந்து உருவான நவீன இலக்கியத்தில் எத்தனை கதாபத்திரங்கள் நம்மை இதற்கு இணையாக பாதித்தது என்று பார்த்தால் தெரியும். தேர்ந்த வாசகனுக்கு கூட தமிழின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிலிருக்காது. அவற்றை படிப்பது ஒரு சாமானியனின் வாழ்வை “பார்ப்பது” மட்டுமே, நாமே அவற்றை வாழ்வதற்கு அவை ஆழ்படிமமாக மாறியவையாக இருக்க வேண்டும். மேலும் காலம் செல்ல செல்ல மட்டுமே கதாபாத்திரங்கள்  ஆழ்படிமமாக மாற முடியும். அப்படி மாறியவைகளின் பெருந்தொகுதி கொண்ட பண்பாட்டில் இருந்து வரும் பொழுது அவற்றை உபயோகப்படுத்திக் கொள்வது முக்கியமானது. பிரச்னை அது முன் வைக்கும் சவால்தான். இன்றும் காண்டீபம் இருக்கின்றதென்றால் அதை எடுத்து தொடுப்பதற்கு ஒரு தண்டேடம் வேண்டும். இத்தனை வருடம் நின்ற ஒன்றில் என்னுடையதென்று ஒன்றை கொண்டு சென்று வைப்பது பேளூரின் கோவிலை தொடர்ந்து புதுப்பிப்பது போல. வெண்முரசு அதை செய்கிறது. அதனால்தான் வெண்முரசின் கண்ணாடி பரப்பில் மனிதர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இத்தனை கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையேயான உறவு, த்ரௌபதியின் சித்திரம் மற்றும் அவளுக்கு ஐவருடனான உறவு எல்லாமே இன்றைய சூழலில் வைத்து இவ்வளவு ஆழமாக எழுத முடியாத ஓன்று. அப்படி ஆயிரக் கணக்கில் இருக்கிறது வெண்முரசில்.

வெய்யோனின் முதல் அத்தியாயங்களில், “நான் முலையருந்தாத மகவு” என்று ஒரு சொல் வரும். யோசிக்க யோசிக்க விரியும் இடம். அன்னையரின் மீதான காமத்தை பிள்ளைகள் கடப்பது முலையருந்தி, அதனால்தான் பிற அனைத்து பெண்களின் மீதும் காமம் கொள்கிறார்கள் என்று. ப்ராய்ட் இதை சொல்லும் பொழுது இந்த ஆளுக்கு உலகில் இருக்கும் ஒரே பிரச்னை அது மட்டும்தானா எனத் தோன்றும் இடம் கவிதையில் சொல்லப்படும் பொழுது சரிதானே என்று தோன்றியது. அப்பொழுதே இதை எழுத வேண்டுமென்று நினைத்தேன்.

வெண்முரசு “இன்றுள்ள என்றும்”

ஏ.வி.மணிகண்டன்

 

அன்புள்ள மணிகண்டன்,

சமகாலம் என்பது நேரடியான அபிப்பிராயமாக ;கருத்தாக புனைவில் வெளிப்படுவதை இத்தகைய சமகாலத்தன்மை அல்லாத புனைவுப்புலம் தடுத்துவிடுகிறது. சமகாலப்பிரக்ஞை நுண்ணுணர்வாக மட்டுமே வெளிப்படநேர்கிறது. உண்மையில் அது சமகாலம் மேலும் நுட்பமாகவும் கூர்மையாகவும் வெளிப்பட வாய்ப்பளிக்கிறது என்றே படுகிறது

ஜெ

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நான் தங்களின் இளம் வாசகர்களில் ஒருவன். உங்கள் படைப்புகளில் ஏழாம் உலகம், விஷ்ணுபுரம், கொற்றவை ஆகியவற்றை வெண்முரசுக்கு முன் படித்திருக்கிறேன். நான் படித்த புத்தகங்களிலேயே எனக்கு மொழி சவால் விட்டது கொற்றவைதான். கொற்றவை என்ற புதுக்காபியத்தை படித்து முடிக்க பல மாதங்களாகியது. கொற்றவையை முடிக்காமல் வெண்முரசை தொடங்கக்கூடாது என முடிவெடுத்திருந்ததால் மூன்று மாதத்திற்கு முன்புதான் வெண்முரசு படிக்கத் தொடங்கினேன். கொற்றவையின் மொழிநடை தந்த பயிற்சியால் வெண்முரசை வேகமாகவே படித்து இப்பொழுது இரு நாட்களுக்கு முன் உங்கள் எழுத்துக்களுடன் வந்து சேர்ந்துவிட்டேன். இன்னும் வேகமாக முடித்திருப்பேன் ஆனால் நீலம் நாவலை மட்டும் படித்து முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். அதன் மொழி நடை கொற்றவையை காட்டிலும் சவாலாய் இருந்தது. இனி ஒரு புத்தகம் நீலம் அளவுக்கு சவாலான மொழி நடையுடன் வருமென்றால் அது நீங்களே புது புதினம் எழுதினால்தான் உண்டு.

இதுவரை நான் படிதத்திலேயே சிறந்த வாசிப்பனுபவம் கொடுத்தது வெண்முரசுதான். இப்பொழு வெய்யோனில் கதை ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்கின்றது. சிறுவயதில் இருந்தே கிருஷ்ணனின் கதாபாத்திரத்தின் பெரிய ரசிகன் என்பதால்  இந்திரபிரஸ்தத்தில் நடக்கப் போகும் ராஜசூய வேள்வியில் சிசுபாலன் கிருஷ்ணனை அவமதிப்பதும் அதனால் கோபத்தில் கிருஷ்ணன் தான் படையழியால் (சக்கரத்திற்கு ஆழி என்றொரு பொருள் இருப்பதை தெரியப்படுத்தியதற்கு நன்றி) அவன் தலையை துண்டிப்பதையும் உங்கள் எழுத்துகளில் படிப்பதில் ஆர்வமாய் காத்திருக்கிறேன். அங்கே துரியோதனன் அடையப்போகும் சிறுமையையும் அச்சிறுமையை சகுனியும் கணிகரும் எப்படி பெருவஞ்சமாய் மாற்றபோகிறார்கள் என்பதையும் அறிய ஆவலாய் உள்ளேன்.

என் ஒரு சந்தேகத்தை தெளிவாக்க வேண்டுகிறேன். நான் படித்த வேறொரு மகாபாரதத்தில் உப பாண்டவர்களில் அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் பிறந்த சுருதகீர்த்திதான் ஐவருக்கும் இளையவன் என படித்ததாக நினைவு. ஆனால் காண்டீபத்தில் நீங்கள் சகதேவனின் மகனை திரௌபதி கர்ப்பத்தில் இருப்பதாக எழுதியுள்ளீர்கள். இதை தெளிவாக்க வேண்டுகிறேன்.

உங்களின் மறுமொழிக்காக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு,

லோ. கவின் ராஜ்குமார்,

கோவை.

 

அன்புள்ள கவின் ராஜ்குமார்

அர்ஜுனனின் மகன் சுருதகீர்த்திதான் இளையவன் என்பது மகாபாரதத்தில் இல்லை என நினைக்கிறேன். வட்டாரவடிவங்களில் இருக்கலாம்.

நாவலின் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. முதற்கனல் கதைகளால் ஆனதாக இருக்கும். மழைப்பாடலில் இருந்து தல்ஸ்தோய்த்தனம் எனப்படும் விரிவான நிதானமான சித்தரிப்பு வரத்தொடங்கும்

நடுவே நீலம்.. நீலம்போன்ற பகுதிகள் எல்லா நாவல்களிலும் உண்டு. உண்மையில் பிறநாவல்கள் உருவாக்கும் பகைப்புலத்தில்தான் நீலம் நிற்க முடியும். அவை உருவாக்கும் கதைகள் குறியீடுகளை நீலம் மறுஆக்கம் செய்கிறது

ஜெ

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள ஜெயமோகன்,

வென்முரசை ஆரம்பிக்கும் முன்பு நீங்கள் எழுதிய கட்டுரையில், இந்த மறு ஆக்கத்தின் நோக்கங்களில் இந்த மாபெரும் இதிகாசத்தை நவீன காலத்திற்கு ஏற்றவாறு புரிந்துகொள்வதை மிக முக்கியமானதாக சொல்லியிருந்தீர்கள். அது பல இடங்களில் பலமுறை முன்பும் சொல்ல கேட்டதே என்பதால் வெறும் சொற்றோடராகவே கிடந்தது மனதில். என் தந்தையின் விழுமியங்களை நெறிகளை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள தயங்கும் எனக்கு,  எப்படி ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்பு வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறிகளும் விழுமியங்களும் இன்றைக்கு எப்படிபொருள்கொள்ளும் என்று புரிந்ததில்லை. அதை ஆசிரியர் வலிந்து வலிந்து நுழைக்க வேண்டிய ஒன்றாகவே தோன்றியது.

வெய்யோனின் முதல் பாகங்களில் மாபெரும் உருவமாக எழுந்து நின்ற சொல்லெனும் சொல்லும், நாள் பூராவும் சொல் சொல் என்றே சொல்லிகொண்ட மனமும் மெல்ல ஓய்ந்ததும் பிறகு வரும் பகுதிகளில் நீங்கள் மேற் சொன்னதின் முழு அர்த்ததையும் என்னால் உணரமுடிகிறது.

ஒவ்வொரு பாகத்திலும் நான்கைந்து முறை கண் மூடி, ஆஹா! இதோ இதோ என என் வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒன்றுடன் என்னால் அந்த வரிகளை தொடர்புபடுத்தி கொள்ள முடிகிறது. எனக்கு நடந்த ஒன்றையோ…..நான் நினைத்த ஒன்றையோ…நான் வியந்த ஒன்றையோ நிகழ்வுகளாக அல்லாமல் அதன் சாரமாக பிழியப்பட்டு  அந்த வரி கிடக்கிறது. வாழ்க்கையின் ஒரு தருணத்தை கொண்டுவந்து நினைவுபடுத்தி, புன்னகை தந்து செல்லும் ஒரு பாடல் வரி அல்ல அது.

படித்துக்கொண்டிருக்கும் விரைவழிந்து, துணுக்குற்று, என்ன என்ன என சற்று பதறி, அதையா சொல்கிறது இது என சந்தேகித்து. ஆம் ஆம் அதுதான் என்று உறுதிசெய்து அதில் முழுகிவிடுவேன். சிவதர் சொல்லும் ஒரு வரி அங்கத்திலிருந்து என் வாழ்க்கைக்குள் வந்து விழுகிறது. சற்றும் யோசிக்காமல் வருடங்களுக்கு முன்பு கடந்து சென்றிருந்த ஒரு நிகழ்வை சட்டனெ புரியவைத்து விடுகிறது. மனித மனங்களின் இயக்கத்தை அதன் முரணை, அதற்க்கு அடியில் கிடக்கும் நிகழ்வை ஒரு பொதுவாக, ஒரு கோட்பாடாக வைக்கிறது அந்த வரி. சின்ன வயதில் நண்பனுடன் வந்த ஒரு விடை தெரியாத பிணக்கை, காரணம் இன்றி வந்த ஒரு காழ்ப்பை புரிந்துகொள்ள வைக்கிறது இன்னொரு வரி.

எப்படி என்னை பின் நோக்கி பார்க்க வைத்து வாழ்க்கையை உணர்த்துகிறதோ , அதே போல இனி நிகழ்வுகள் நடக்கும் பொழுதே இந்த வரிகள், அதன் தரிசனங்கள் நினைவுக்கு வருமென்றால், பிந்தி யோசிக்காமல் அக்கணமே அதை அனுபவிக்க முடியுமென்றானால் உங்களின் இந்த மகா முயற்சிக்குகொஞ்சமாவது மரியாதை செய்ததாக உணர்வேன்.

கீதை படிப்பதற்கான தருணத்தை கீதையே வகுத்துகொடுக்கும் என்று ஒரு பழைய கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள். வெண்முரசுக்கும் அப்படியே!

அன்புடன்,

கௌதமன்

பின்குறிப்பு:

நேற்று மிக அழுத்தமான ஒரு மன நிலையில் இதை எழுதினேன். எழுதி முடித்த பொழுது எதையோ மறந்தது மாதிரியே இருந்தது….கொஞ்ச நேரம் யோசித்து பின் கண்டு பிடித்தேன் என் மன அழுத்தம்தான் காணமல் போயிருந்தது என. ஒரு சிறு கடிதம் எழுதும் எனக்கே இப்படி என்றால், ஒரு மகா காவியம் எழுதும் உங்கள் மனம் பாக்கியம் செய்த ஒன்று என எண்ணிக்கொண்டேன்.

பின்குறிப்பு இரண்டு:

இந்தக் கடிதத்தில் இன்னும் எழுதத்தான் உடனே அனுப்பாமல் வைத்திருந்தேன். இன்று உங்கள் பதிவை முதல் இரண்டு வரி படித்ததும் அவசரமாய் வந்து இதை அனுப்புகிறேன். அதை படித்தால் எங்கு இதை அனுப்பாமல் போய் விடுவேனோ என்ற அச்சம் வந்து விட்டது…..

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55
அடுத்த கட்டுரைதேர்தல் பற்றி…