ஏராளமான மின்னஞ்சல்கள் நான் சமஸ் கட்டுரைக்கான முன்குறிப்பாக எழுதியதைப்பற்றி. பெரும்பாலானவை வசைகள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சாதகமாகவும் பாதகமாகவும் வந்த கடிதங்களை வெளியிட்டு அதை மையவிவாதமாக ஆக்கவேண்டாமென நினைக்கிறேன். நான் எழுதியவை ஒவ்வொருவரும் அறிந்தவைதான். எவ்வகையிலும் அதில் விவாதத்திற்கு ஏதுமில்லை. அதை ஏற்றுக்கொள்வதில் ஒவ்வொருவருக்கும் அரசியல் நிலைப்பாடும், தனிப்பட்ட முகம் ஒன்றை முன்வைக்கவேண்டிய ஆவலும்தான் தடைகளாக ஆகின்றன.
இரண்டு கேள்விகளுக்கு மட்டும் என் விளக்கங்களைச் சொல்கிறேன்.
ஒன்று, இக்கட்டுரை இஸ்லாமியரை குற்றம்சாட்டுகிறதா?
இக்கட்டுரையை அப்படி ஆக்கிக்கொள்வதென்பது அதை எதிர்ப்பதற்கான மிகவெளிப்படையான ஒரு தந்திரம். அதை வஹாபியர் செய்வது இயல்பு. கூலிப்பட்டாளமும் அதை அவர்களுக்காகச் செய்துகொடுக்கிறது
நான் சொல்லியிருப்பது வஹாபியர்களைப்பற்றி. இஸ்லாமியசமூகத்திற்கும் வஹாபியத்திற்கும் இருக்கும் மோதல்பற்றி. அது ஏற்கனவே தோப்பில் முகம்மது மீரான் [அஞ்சுவண்ணம் தெரு] உட்பட பலரால் புனைவுலகிலேயே நேரடியாக பதிவுசெய்யப்பட்டது. எச்.பீர்முகம்மது போன்றபலரால் தொடர்ந்து விவாதிக்கப்படுவது.
அக்கட்டுரையிலேயே சாதாரணஇஸ்லாமியருக்கும், இந்திய இஸ்லாமியர்களின் பெருமைமிகுந்த பண்பாட்டுக்கும் எப்படி வஹாபியம் எதிராக இருக்கிறது என்பதையே மிகமிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். ஷிர்க் ஒழிப்பு என்பது இன்று தொடங்கியது அல்ல. உமறுப்புலவருக்கும், குணங்குடி மஸ்தான் சாகிபுக்கும் எதிரான இவர்களின் பிரச்சாரமும் அந்நூல்களை எரிப்பதும் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. பர்தா அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது கண்கூடு. இல்லை, நாங்கள் அப்படிச்செய்யவில்லை என அவர்கள் எவரும் சொல்லவும் இல்லை. இல்லை, அவர்களெல்லாம் அப்படிச்செய்யமாட்டார்கள் என்று இந்தப்பக்கமிருந்து சிலர் கூச்சலிடுகிறார்கள்.
அக்கட்டுரையில் நான் சொல்வதே இஸ்லாமிய சமூகம் இப்படி ஒரு அன்னியக் கருத்தியலால் சூழப்பட்டு, மிரட்டப்பட்டு இங்குள்ள பிறசமூகங்களுடன் தன் வாயில்களை மூடிக்கொள்வது அதை எப்படித் தனிமைப்படுத்துகிறது என்பதைப்பற்றியே. என் குரல் ஒற்றுமைக்கான,நட்புக்கான அழைப்பு மட்டுமே. அது மறைவது குறித்து அச்சம் மட்டுமே. அப்படி இல்லை என்றால் அதைவிட நிறைவானது ஒன்றும் இல்லை.
இஸ்லாம் மீதான என் மதிப்பை, பற்றை மீண்டும் மீண்டும் நான் பதிவுசெய்திருக்கிறேன். ஓச்சிற உப்பாவின் மீது வழிபாட்டுணர்வு கொண்டவன் நான். அவரைச் சந்தித்தவன். இன்றைக்கும் தர்ஹாக்களுக்குச் சென்றுவருபவன் நான். சமீபத்தில்கூட ஏர்வாடி தர்ஹாவுக்குச் சென்றுவந்து பதிவுசெய்திருந்தேன். ஒரு மசூதியில் தொழுகை செய்வதில் எந்த மனத்தடையும் எனக்கிருந்ததில்லை. என் உறவினர்களிலேயே ஒருகிளை இஸ்லாமியர்கள். சென்ற பத்தாண்டுகளுக்கு முன்புகூட குடும்ப இறப்புநிகழ்வுகளில் அவர்களின் பங்களிப்பு இருந்தது. என் பதிவிலுள்ளது வருத்தம் அல்லது ஏமாற்றம்.
நேரடியாகவே நீங்கள் பார்க்கலாம், அக்கட்டுரைக்கு அவ்வளவு எதிர்ப்பு. எப்படி அப்படி ’இஸ்லாமியரை’ச் சொல்லலாம் என பலர்கொதிக்கிறார்கள். நண்பர்களே, இந்த விவாதத்திலேயே இஸ்லாமியர்களின் குரலாக வஹாபியத்திற்கு எதிராக, தனிப்படுத்தும் கொள்கைகளுக்கு எதிராக, பதிவானவை எத்தனை? சொல்லுங்கள்
வஹாபியமே இஸ்லாம், அது முற்போக்கானது, அகிம்சையானது என வாதிடும் குரல்கள்தானே மிகப்பெரும்பாலானவை? சொந்தப்பெயரில் வஹாபியத்துக்கு எதிராக பதிவான இஸ்லாமியக் குரல்கள் எத்தனை? வஹாபியத்தை குறைசொன்னால் அது இஸ்லாமியரை குறைசொல்வது, இரண்டும் ஒன்று என்றுதானே அத்தனைபேரும் வாதிடுகிறார்கள்? இதைவிட நான் சொல்வது உண்மை என்பதற்கான ஆதாரம் தேவையா என்ன?
இது இஸ்லாமியர் தங்கள் மதத்திற்குள் மூடநம்பிக்கை ஒழிப்புக்காக நடத்தும் மாநாடு, அதில் பிறருக்கு என்ன அக்கறை ?
இது இன்னொரு கேள்வி. இது மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு அல்ல. மூடநம்பிக்கை ஒழிப்பைப்பேசும் நாத்திகர்களைப்பொறுத்தவரை கடவுள்தான் மிகப்பெரிய மூடநம்பிக்கை. கடவுளை வைத்துக்கொண்டு, அதையொட்டிய அத்தனை மதநம்பிக்கைகளையும் பேணிக்கொண்டு, மூடநம்பிக்கை ஒழிப்புபற்றிப் பேசுவதென்பது மதத்தூய்மைவாதம் மட்டுமே. அதில் உண்மையான பகுத்தறிவாளர்களுக்கு இடமில்லை. அதைச்சொல்லிப் பிழைக்கும் கூலிப்படைக்குத்தான் இடம்.
ஷிர்க் என்பது மூடநம்பிக்கை அல்ல. குர்ஆனில் சொல்லப்பட்ட அல்லாஹ் என்னும் இறைவனுக்கு இணையாக அல்லது மாற்றாக பிறதெய்வங்களை, பிறமானுடரை, பிறிது எதையும் முன்வைத்தல். அதற்கு இஸ்லாமில் என்ன தண்டனை என்று கேட்டுப்பாருங்கள், அப்போது தெரியும், இந்த ஷிர்க் என்னும் சொல்லின் உண்மைப் பொருள். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செய்யும் அத்தனை கொலைகளும் அவர்களின் நோக்கில் ஷிர்க்குக்கு அளிக்கப்படும் தண்டனைகள். .
நாளை நெல்லையில் சைவர்கள் ஒரு மாநாடு கூட்டி சிவனே முழுமுதல்தெய்வம் என்றும், சிவனுக்கு இணையாக வேறு தெய்வத்தைச் சொல்லும் சைவர்கள் பாவிகள், தண்டனைக்குரியவர்கள் என்றும் அறிவித்தால் நாம் அதை எப்படி எடுத்துக்கொள்வோம்? பிறமதத்தவரை சிவனுக்கு இணைவைக்கும் குற்றம்செய்தவர்கள் என்று அறிவித்தால் அதன் மீதான நம் எதிர்வினை என்னவாக இருக்கும்?