பகுதி ஒன்பது: மயனீர் மாளிகை – 2
பதினெட்டு நுழைவாயில்களுடன் நீள்வட்ட வடிவில் அமைந்திருந்த கூத்தம்பலத்தின் மேற்கெல்லையில் கிழக்குமுகமாக பிறை வடிவில் ஆடல்மேடை அமைந்திருந்தது. அதை நோக்கி விற்களை அடுக்கியது போல செம்பட்டு உறையிட்ட பீடநிரைகளில் அரச பீடங்கள் அமைந்திருந்தன. பதினெட்டு நிரைகளுக்கு அப்பால் அமைச்சர்களுக்கும் படைத்தலைவர்களுக்குமான பதினெட்டு பீடநிரைகள் இருந்தன. முன்பக்கம் இருந்த எட்டு வாயில்கள் வழியாகவும் இந்திரப்பிரஸ்தத்திற்கு விருந்தினராக வந்த அரசர்கள் நிமித்திகர் முறையறிவிக்க, ஏவலர் வழிகாட்ட, அமைச்சர்கள் முகமன் சொல்லி இட்டுவர உள்ளே நுழைந்து தங்கள் கொடி பறந்த பீடங்களில் அமர்ந்தனர்.
படியேறி இடைநாழியில் நுழைந்ததுமே துரியோதனன் கர்ணனின் கைகளை தழுவியபடி “தாங்கள் என்னுடன் இருங்கள் அங்கரே” என்றான். கர்ணன் தயக்கத்துடன் ஏதோ சொல்ல வர “என்னுடன் வருவதை தவிர்ப்பதற்காகவே தாங்கள் நகருலா சென்றீர்கள் என்று நானறிவேன். இன்று கூத்தம்பலத்தில் என் அருகே தாங்கள் அமர்ந்திருக்கவேண்டும்” என்றான். கர்ணன் “நான் அரசஉடை அணியவில்லை” என்றான். “அரசஉடை என் போன்று மானுடஉடல் கொண்டவர்களுக்கு. உங்கள் முடி இங்குள்ள அத்தனை மணிமுடிகளுக்கும் மேல் எழுந்து நின்றிருக்கும்.”
கர்ணன் புன்னகைத்து “நான் சொல்லெடுக்க விழையவில்லை. அவ்வாறே ஆகட்டும்” என்றான். அவர்களுக்குப் பின்னால் ஜயத்ரதனும் சிசுபாலனும் ருக்மியும் வந்தனர். கூத்தம்பலமுகப்பில் அவர்களை எதிர்கொண்ட சௌனகர் “வருக அஸ்தினபுரியின் அரசே! கலைநிகழ்வு தங்களை மகிழ்விக்கும் என்று எண்ணுகிறேன்” என்றார். துரியோதனன் தலைவணங்கி “நன்று. இந்திரப்பிரஸ்தத்தின் அவைக்கூத்தரின் திறனை இன்று பார்த்துவிடுவோம்” என்றபடி கர்ணனை நோக்கி மீசையை நீவியபடி நகைத்தான். சௌனகர் தலைவணங்கி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
அவை நிமித்திகன் உரத்தகுரலில் “அஸ்தினபுரியின் அரசர் குருவழித்தோன்றல் துரியோதனர்!” என்று அறிவித்தான். துரியோதனன் விழிகளால் கர்ணனை சுட்டிக்காட்ட நிமித்திகன் ஒருகணம் திடுக்கிட்டு மீண்டும் கோலைச்சுழற்றி “அங்க நாட்டரசர் வசுஷேணர்” என்று அறிவித்தான். “வருக!” என்று கர்ணனின் கைகளைப்பற்றியபடி சென்று தனது பீடத்தில் அமர்ந்த துரியோதனன் அருகே துச்சாதனனுக்காக போடப்பட்டிருந்த பீடத்தில் கர்ணனை அமரச்செய்தபின் ஏவலனிடம் “அங்க நாட்டின் கொடி ஒன்று கொண்டுவந்து இங்கு வைக்கச் சொல்!” என்றான். ஏவலன் “அவ்வாறே” என்று தலைவணங்கி விரைந்து சென்றான்.
ஜயத்ரதனும், சிசுபாலனும், ருக்மியும் வரவறிவிக்கப்பட கைகூப்பியபடி வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். ஜராசந்தனின் பெயர் அறிவிக்கப்பட்டபோது அவையில் ஓர் உவப்பொலி எழுந்ததை கர்ணன் கண்டான். ஓர் இரவுக்குள் பலஅரசர்களின் விருப்புக்குகந்த ஒருவனாக ஜராசந்தன் மாறிவிட்டிருந்தான். நகுலனுக்குப் பின்னால் கைகளைக் கூப்பியபடி உள்ளே வந்த ஜராசந்தன் ருக்மியைப் பார்த்து நகைத்து “துயில்வதற்காக இத்தனை தொலைவு வரவேண்டுமா விதர்ப்பரே?” என்று உரக்க கேட்டான்.
அங்கிருந்த அனைத்து அரசர்களும் உரக்க நகைத்தனர். ருக்மியின் அருகே இருந்த அவந்திநாட்டரசன் விந்தன் “அத்தனை அரசர்களும் உண்டாட்டில் களைத்திருக்கிறார்கள். கூத்து முடியும்போது உரக்க முரசு அறைந்து எழுப்ப வேண்டியிருக்கும்” என்றான். அவன் இளையோன் அனுவிந்தன் நகைத்தான். விந்தன் ஜராசந்தனிடம் “அதற்கு போர்முரசு கொட்டவேண்டும். மற்றமுரசுகள் அனைத்தும் இன்னும் நல்ல துயிலையே அழைத்துவருகின்றன” என்றபின் துரியோதனனைப் பார்த்து “அஸ்தினபுரிக்கரசே, இங்கு தாங்கள் விரும்பும் ஒரே ஆடல் உண்டாடல் அல்லவா?” என்றான். துரியோதனன் நகைத்து “களியாடலும் உண்டு. அதை அவையிலாடுவதில்லை” என்றான்.
ஜராசந்தன் கர்ணனின் தோளை கையால் அறைந்தபின் “கலை விழைவு தங்கள் விழிகளில் தெரிகிறது அங்கரே. ஏனெனில் நீங்கள் மட்டுமே யவனமதுவை குறைவாக அருந்தியிருக்கிறீர்கள்” என்றபின் தன் இருக்கையில் அமர்ந்தான். சிசுபாலன் பின்னிருக்கையில் இருந்து அவன் தோளைத்தொட்டு “மகதரே, துயிலத் தொடங்கிவிட்டீர்களா?” என்றான். “யாராவது யாதவ கிருஷ்ணனின் காதல்களைப்பற்றி வரிப்பாடல் பாடட்டும், துயில்கிறேன்” என்றான் ஜராசந்தன். சிசுபாலன் ஜராசந்தன் காதில் ஏதோ சொல்ல அவன் இருகைகளையும் இருக்கையின் பிடிகளில் அறைந்து உரக்க நகைத்தான்.
ஜயத்ரதன் எழுந்து “என்ன? என்ன சொன்னார்?” என்றான். ஜராசந்தன் “இதெல்லாம் தங்களைப்போன்ற சீரிய பிறப்புடையவர்களுக்குரியதல்ல” என்றான். “இதற்கென மறுபிறப்பா எடுக்க முடியும்?” என்றான் ஜயத்ரதன். சிசுபாலன் “சைந்தவரே, நானும் ஜராசந்தரும் பிறக்கையில் பேரழிவின் குறிகள் தென்பட்டன என்று நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்களுக்கு பாதாளதேவதைகளின் வாழ்த்துக்கள் உண்டு. இதோ எங்களைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்” என்றான். ஜயத்ரதன் “ஆம், நான் பார்த்தேன். அங்கே பூசனையில் உங்களருகே முடிசூடி நின்றிருந்தாள்” என்றான். ஜராசந்தன் வெடித்து நகைக்க பலர் திரும்பி நோக்கினார்கள். துச்சாதனன் “சைந்தவரே, அவள் சிசுபாலரின் பட்டத்தரசி. ஹேஹயகுலத்தவள்” என்றான்.
“வாயைமூடு! மூடா!” என்றான் துரியோதனன். “அவர் பிழையாகச் சொல்கிறார். அவையிலே…” என துச்சாதனன் மேலும் சொல்ல துரியோதனன் சிரித்தபடி பற்களைக் கடித்து கர்ணனிடம் “மூடன்… இத்தகைய பிறிதொருவன் உலகிலிருந்தால் அவனும் ஒரு கௌரவனாகவே இருப்பான்” என்றான். ஜராசந்தன் ஜயத்ரதனிடம் “நாங்கள் பாதாளத்தின் மொழியில் பேசிக்கொள்வோம் சைந்தவரே. அதை தாங்கள் கேட்டீர்களென்றால்…” என்றான். ஜயத்ரதன் “என்ன?” என்றான் முகம்சிவக்க. ஜராசந்தன் “ஒன்றுமில்லை, அதை தாங்கள் கேட்டீர்களென்றால் தங்கள் தாயின் கற்பு குறைவுபடும்” என்றான்.
ஜயத்ரதன் மேலும் முகம் சிவந்து “அதை நானும் கேட்கிறேனே” என்றான். “என்ன? தாயின் கற்பு பற்றி ஒரு பொருட்டாக கருதவில்லையா?” என்றான் ஜராசந்தன். சிசுபாலன் “நாங்கள் தயங்காது சொல்லிவிடுவோம். நீங்கள்தான் அப்படியே எழுந்தோடிச் சென்று பன்னிருமுறை பிழைபொறுத்தலுக்கான பூசைகளை செய்யவேண்டியிருக்கும்” என்றான். “சொல்லுங்கள்” என்று ஜயத்ரதன் சிரித்தபடி எழுந்து ஜராசந்தன் அருகே வந்தான்.
துரியோதனன் சிரித்தபடி ஜயத்ரதனின் தோளில் தட்டி “சென்று அமருங்கள் சைந்தவரே! இவர்களெல்லாம் பச்சை ஊன் உண்ணும் கானாடிகள். முறையறிந்தவர் இவர்களுடன் சொல்லாட முடியாது” என்றான். சிரிப்பை அடக்கி “அதை அறியாமல் இனி அவரால் துயில முடியாது” என்றான் கர்ணன். ஜராசந்தன் “நாங்கள் சொல்லப்போவதில்லை. அஸ்தினபுரிக்கு அரசே, தங்கள் மைத்துனர் நெறிபிறழாது விண்ணேக வேண்டியது அவரது தந்தையின் தவம் என்று அறிவோம்” என்றான். “மேலும் அவரை கொல்பவரின் தலை வெடிக்குமென்று மொழி உள்ளது. சொல் கொல்லும் என்றும் சொல்கிறார்கள்” என்றான்.
ஜயத்ரதன் எழுந்து ஜராசந்தனின் தோளைப்பற்றியபடி “மகதரே, தாங்கள் சொல்லியாக வேண்டும். என்ன அது?” என்றான். சிரித்து “சொல்லுங்கள் சிசுபாலரே!” என்றான் ஜராசந்தன். “நான் சொல்வதென்ன! நீங்கள் சொல்லலாமே?” என்றான் சிசுபாலன். ஜயத்ரதன் மாறி மாறி இருவரையும் பார்த்தபின் “நீங்கள் விளையாடுகிறீர்கள்… என்னிடம் விளையாடுகிறீர்கள்” என்றான். அவன் கண்கள் சற்று கலங்கின. குரல் இடற “என்னை பகடிப்பொருளாக்குகிறீர்கள்” என்றான். “சரி, வாருங்கள்” என்றான் ஜராசந்தன். ஜயத்ரதன் குனிய அவன் தோளில் கைவைத்து காதில் ஏதோ சொன்னான். “ஆ…” என்று ஓசையிட்டபடி ஜயத்ரதன் பின்னால் நகர்ந்து வாய் திறந்தான். சிசுபாலன் உரக்க நகைத்து “தீ சுட்டுவிட்டது!” என்றான்.
“என்ன இது? இப்படியா…” என்றான் ஜயத்ரதன். “இது மிக எளிய ஓர் உண்மை. உண்மையில் இதிலிருந்து நாம் எப்படி தொடங்க வேண்டுமென்றால்…” என்றான் ஜராசந்தன். ஜயத்ரதன் “வேண்டாம். இதை நான் கேட்க விரும்பவில்லை” என்றான். “அது எப்படி? சொல்லும்படி கேட்டது நீங்கள். முழுக்க நாங்கள் சொல்லியே தீருவோம்” என்றான் ஜராசந்தன். திரும்பி “சேதி நாட்டரசே, எஞ்சியதை தாங்கள் சொல்லுங்கள்” என்றான். “வேண்டியதில்லை” என்றபடி ஜயத்ரதன் தன் இருக்கையில் சென்று அமர சிசுபாலன் எழுந்து வந்து ஜயத்ரதனின் பீடத்தின் மேல் இருகைகளையும் வைத்து குனிந்து காதில் மீண்டும் ஏதோ சொன்னான்.
“வேண்டியதில்லை! வேண்டியதில்லை! நான் கேட்க விரும்பவில்லை” என்று சொல்லி ஜயத்ரதன் காதுகளை பொத்திக்கொண்டு குனிந்தான். “அவ்வாறு விட்டுவிட முடியாது” என்றபின் ஜராசந்தன் “நான் அங்கு வந்து விளக்கமாக சொல்கிறேன்” என்று எழுந்தான். பதறிப்போய் “வேண்டியதில்லை! நான் எழுந்து சென்றுவிடுவேன்” என்றான் ஜயத்ரதன். துரியோதனன் நகைத்தபடி “மகதரே, அவரை விட்டுவிடுங்கள். அவர் அந்தணர்களால் பேணி வளர்க்கப்பட்ட பிள்ளை” என்றான். “அத்தகையோரைத்தான் அரசவாழ்வுக்கு நாம் பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது” என்றான் ஜராசந்தன்.
நிமித்திகர் அறிவிக்க தருமன் பீமனும் அர்ஜுனனும் இருபக்கங்களிலும் வர முடிசூடி அணிக்கோலத்தில் வந்து அரியணையமர்ந்தான். அருகே உடன்பிறந்தார் அமர்ந்தனர். திருஷ்டத்யும்னனும் சாத்யகியும் இருபக்கமும் வர இளைய யாதவர் வந்து அவையமர்ந்தார். மறுஎல்லையில் கிருதவர்மனுடன் அஸ்வத்தாமா வந்து பீடம்கொண்டான். பலராமர் தன் தந்தையுடன் வந்து அமர்ந்தார். துருபதரும் தமகோஷரும் பேசியபடியே வந்து அமர்ந்தனர். கணிகர் தொடர சகுனி இரு காவலர்களால் அழைத்துவரப்பட்டு அமர்த்தப்பட்டார். அவருடன் வந்த சுபலர் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு காந்தாரக்கொடி பறந்த தன் இருக்கை நோக்கி சென்றார்.
மன்னர்கள் அனைவரும் அவை அமர்ந்தனர். பின்நிரைகள் அமைச்சர்களாலும் தளபதிகளாலும் நிரம்பத்தொடங்கின. “இந்த ஆடல் முடியட்டும். எஞ்சியதை நான் சொல்கிறேன்” என்றான் ஜராசந்தன். “போதும்” என்றான் ஜயத்ரதன். “பாதியில் மெய்யறிவை நிறுத்த இயலாது. எஞ்சிய மெய்மை முழுக்க சொல்லப்பட்டாக வேண்டும். அந்த மெய்மைக்குரிய தெய்வம் இதோ நமக்கிடையில் வந்து தவித்துக் கொண்டிருக்கிறது” என்றான் ஜராசந்தன். “வேண்டாம். எனக்கு கேட்கப்பிடிக்கவில்லை” என்றான் ஜயத்ரதன்.
“சரி, ஐந்தே ஐந்து சொற்கள் மட்டும் சொல்கிறேன்” என்றான் சிசுபாலன். “எஞ்சியதை பிறகு பார்ப்போம்” என்றான் ஜராசந்தன். “இல்லை” என்று ஜயத்ரதன் எழப்போக “ஐந்து சொற்கள்தான் சைந்தவரே” என்று சிசுபாலன் குனிந்து அவன் காதில் ஏதோ சொல்ல அவன் தலையை கையால் மாறிமாறி அறைந்தபடி “செல்லுங்கள்! விலகிச் செல்லுங்கள்!” என்று கத்தத்தொடங்கினான். கர்ணன் இருவரையும் நோக்கி “அப்படி என்னதான் சொன்னார்கள்?” என்றான். “நீங்கள் ஆரம்பித்துவிடாதீர்கள் அங்கரே! ஓர் இரவுக்குள் பாரதவர்ஷத்தின் நாற்பது அரசர்களின் அன்னையர் விண்ணிலிருந்து எண்ணியெண்ணிக் கதறும்படி செய்துவிட்டார் மகதர்” என்றான் துரியோதனன்.
“அது என்னவென்றால்…” என்று ஜராசந்தன் கர்ணனை நோக்கி திரும்ப “போதும்! இவர் வெய்யோன்மைந்தர். பொசுக்கிவிடுவார், விலகிச்செல்லுங்கள்!” என்று சிரித்தபடி ஆணையிட்டான் துரியோதனன். கூத்தரங்கில் பெருமுரசம் ஒன்று உருட்டி வரப்பட்டது. ஏழு இசைச்சூதர் அங்கே வந்து சூழ்ந்து நின்று அவைநோக்கி தலைவணங்கி கேளிகொட்டு முழக்கத்தொடங்கினர். தொடர் இடியோசை போல் முரசொலி எழுந்து கூத்தம்பலத்தை நிறைத்தது. ஜராசந்தன் “சீரான தாளம். துயிலவேண்டியதுதான்” என்றபடி தன் கால்களை நீட்டி கைகளை விரித்தான். துரியோதனன் “உண்மையாகவே துயில்கிறார்” என்றான். “அவர் நீண்ட பயணங்களில் புரவிமேலும் யானைமேலும் அமர்ந்து துயிலக்கூடியவர்.”
ஜராசந்தன் கர்ணனைப்பார்த்து உதடு சுழித்து ஏதோ சொல்லிவிட்டு கொட்டாவி விட்டான். துரியோதனன் “நானும் மிதமிஞ்சி மதுஅருந்துபவன்தான். பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவருமே மதுவில் திளைப்பவர்கள். ஆனால் இவர் அருந்தும் மது எண்ணிப்பார்க்கவே முடியவில்லை” என்றான். கர்ணன் ஜராசந்தனைப் பார்த்துவிட்டு “ஏன்?” என்றான். “அது மானுடர் மதுவை அருந்துவது அல்ல. அவர் வழியாக மது பாதாளத்தில் வேறு தெய்வங்களுக்கு சென்று சேர்கிறது. இவர் வெறும் ஒரு குழாய் மட்டும்தான்.” கர்ணன் “அனலோனுக்கு நிகர் என்று சொல்லுங்கள்” என்றான். “ஒரே நாளில் ஷத்ரியர்களின் உளம் கவர்ந்துவிட்டார் அசுரக்குருதிகொண்டவர்…” என்றான் துரியோதனன்.
முரசுக்கு இருபக்கமும் பன்னிரு கொம்பேந்திகள் வந்து நிரைவகுத்து குட்டியானை துதிக்கையைத் தூக்கியது போல் வளைகொம்புகளை மேலே தூக்கி பிளிறலிசை எழுப்பினர். ஒவ்வொரு இசைக்கலத்தின் ஒலியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கூரிய பட்டைவாள் என சுழன்றுசுழன்று ஒற்றைக்கீற்றென ஒளிவிட்டு மேலெழுந்தது. மணியோசை முழக்கியபடி பதினெட்டு இசைச்சூதர் வந்தனர். கேளியறிவிப்பு உச்சத்திற்குச் சென்று அறைகூவல் போல முழங்கி எரியம்பு விண்ணிலிருந்து பொழிந்து மறைவது போல அடங்கியது. அப்பேரோசை கூத்தம்பலத்தின் சுவர்களிலும் கூரைக்குவைகளிலும் எஞ்சிநின்று அதிர்ந்து கொண்டிருந்தது.
சூதர் தலைவணங்கி முரசுகளையும் கொம்புகளையும் தாழ்த்தி இருபக்கங்களிலாக விலகிச்சென்றனர். மேடையின் வலப்பக்க மூலையிலிருந்து வெண்ணிறத் தலைப்பாகையும் சுடர்குண்டலங்களும் அணிந்த சூத்ரதாரன் மகிழ்ந்து நகைத்தபடி கையிலிருந்த பிரம்பைச் சுழற்றி இன்னொரு கையில் அடித்துக்கொண்டு இயல்பாக நடந்து விளக்கொளியின் மையத்தில் வந்து நின்றான். மேலாடையை முறுக்கி உடலுக்குக் குறுக்காக அணிந்து முடிச்சிட்டிருந்தான். செந்நிறப் பட்டுக்கச்சையை அந்தரீயத்திற்கு மேல் கட்டி அதில் ஒரு சிறு கொம்பை செருகி வைத்திருந்தான். பிரம்பால் தன் முதுகைச் சொறிந்தபடி அரங்கை இருபுறமும் திரும்பித்திரும்பி பார்த்தான். அதிர்ச்சியடைந்தவனைப்போல மேடை முகப்பில் அமர்ந்திருந்த திரௌபதியைப் பார்த்து விரைவாக தலைவணங்கினான்.
தலையைச் சொறிந்தபடி கண்களால் தேடி மறுஎல்லையில் அமர்ந்திருந்த தருமனைப் பார்த்து தலைவணங்கி பீமனையும் அர்ஜுனனையும் பார்த்து நட்பாக சிரித்தான். கைசுட்டி நகுலசகதேவர்களை தனக்கே காட்டிக்கொண்டு புன்னகைத்தான். எதையோ நினைவு கூர்ந்தவனைப்போல நெற்றியைத் தட்டியபடி திரும்பிப்போக சில எட்டுகளை எடுத்துவைத்தான். சரி, வேண்டாமென்று அதை ஒத்திவைத்து திரும்பி அவையை பார்த்தான். அங்கிருந்த ஒவ்வொரு மன்னரையாக கைசுட்டி தனக்குத்தானே அடையாளம் சொல்லிக் கொண்டான். பிறகு பிரம்பை இன்னொரு கையால் தட்டியபடி குழப்பத்துடன் மேடையை சுற்றிவந்தான்.
மேடைக்கு அப்பாலிருந்து ஓர் உரத்த குரல் “என்ன செய்கிறாய் நீ? அறிவிலியே, நீ நாடகத்தில் நடிப்பதற்காக மேடைக்கு அனுப்பப்பட்டிருக்கிறாய். நீ அரங்குசொல்லி!” என்றது. அவன் திடுக்கிட்டு அக்குரலை நோக்கி “யாரது?” என்றான். “நான்தான் இந்த நாடகத்தை எழுதியவன். உனக்குத் தெரியும்.” “ஆ… புலவரே தாங்களா..? தாங்கள் ஏன் இம்மேடைக்கு வரக்கூடாது…? இதோ பாரதவர்ஷத்தின் மாமன்னர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள். தங்கள் திருமுகத்தை பார்க்க அவர்கள் விரும்பலாம் அல்லவா?” என்றான் அரங்குசொல்லி.
“அவ்வாறு கவிஞர்கள் மேடைக்கு வரும் வழக்கமில்லையே” என்றது குரல். “ஏன்?” என்றான் அரங்குசொல்லி. “ஏனென்றால் அவர்கள் எப்போதும் நூல்களுக்குப் பின்னணியில் இருக்கிறார்கள். சொல்லப்போனால் நூல்களுக்குப் பின்னணியில் இருக்கும் ஊரலருக்கும் பின்னணியில் இருக்கிறார்கள்.” “அப்படியென்றால் பரிசில்களைப் பெறுபவர் யார்?” கவிஞன் நகைத்து “தெய்வம் மானுடரில் எழுவதில்லையா என்ன?” என்றான். “இப்போது அங்கிருந்து பேசுவது யார்? கவிஞனா அல்லது இங்கிருப்பவர்களால் உருவாக்கப்பட்ட அலரா?” குரல் “அந்தக் குழப்பத்தில்தான் இங்கே அமர்ந்திருக்கிறேன்” என்றது. “சரி, அஞ்ச வேண்டாம்! மேடைக்கு வாருங்கள். நான் இவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்” என்றான் அரங்குசொல்லி.
உள்ளிருந்து வெண்ணிற அந்தரீயத்துக்குமேல் பட்டுக்கச்சையும் பொற்பின்னலிட்ட வெண்பட்டு மேலாடையும் வெண்தலைப்பாகையும் அணிந்த ஒருவன் தயங்கித் தயங்கி மேடைக்கு வந்தான். மஞ்சள்பட்டு முகமூடியை அணிந்திருந்தான். “தங்கள் முகம் எங்கே?” என்றான் அரங்குசொல்லி. “இன்னமும் நாடகம் தொடங்கவில்லையே. நாடகம் வளரவளரத்தான் என் முகம் தெளிந்து வரும்” என்றான். “அதுவரை நீங்கள் முகம் இல்லாமல் என்ன செய்வீர்கள்?” என்றான் அரங்குசொல்லி.
“தெய்வமாக இருப்பேன்” என்றான் கவிஞன். “புரியவில்லை” என்றான் அரங்குசொல்லி. “இல்லாமலிருப்பேன் என்று பொருள்.” அரங்குசொல்லி திரும்பி “அரிய சொல்லாட்சி! இந்நாடகம் நுணுக்கமான வேதாந்தக்கருத்துக்களை சொல்லப்போகிறது. அதாவது இதில் எதைவேண்டுமென்றாலும் சொல்லலாம்…” என்றான். “நீ நான் எழுதிய சொற்களை சொன்னால்போதும். உனக்கு ஏதேனும் சொல்வதற்கிருந்தால் அதை நீயே நாடகம் எழுதி அதில் சொல்” என்றான் கவிஞன். “ஏன்?” என்றான் அரங்குசொல்லி. “எனக்கும் சொற்கள் இருக்கின்றன. அவை வரும் வழியாக நான் உணவை உள்ளே செலுத்துவதும் உண்டு.” கவிஞன் “நீ என் நாடகத்தின் கதைமானுடன். அரங்குசொல்லியாக நடிக்கிறாய்…” என்றான். அரங்குசொல்லி “கதைமானுடர் தன் எண்ணங்களை பேசலாகாதா?” என்றான். “மூடா, மானுடரே தன் எண்ணங்களை பேசுவதில்லை. எங்கோ எவரோ எழுதுவதைத்தானே பேசுகிறார்கள்?”
சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் அரங்குசொல்லி தலையசைத்து “சரி, எப்படியானாலும் எனது பொறுப்பை நான் நிறைவேற்றுகிறேன்” என்றபின் திரும்பி “ஆகவே அவையில் அமர்ந்திருக்கும் பாரதவர்ஷத்தின் பேரரசி என்று காம்பில்யநகரினரால் அழைக்கப்படும் அரசி திரௌபதி அவர்களுக்கும் அவரது சொல்லுக்கிணங்க இங்கே ஆட்சி அமைப்பதாக அவதூறு செய்பவர்களால் சொல்லப்படும் உண்மையை மறுத்து இங்கு அமர்ந்திருக்கும் மாமன்னர் யுதிஷ்டிரர் அவர்களுக்கும் அவரைப்பற்றிய உயர்வான எண்ணத்துடன் இங்கு வந்திருக்கும் பாரதவர்ஷத்தின் அரசர்களுக்கும், அவ்வெண்ணம் அவர்கள் திரும்பிச் செல்வதுவரை நீடிக்கவேண்டும் என்று அச்சம் கொண்டிருக்கும் அவரது தம்பியர்களுக்கும், தம்பியரின் உள்ளக்கிடக்கையை நன்குணர்ந்த பேரரசி குந்திதேவிக்கும் எங்கள் வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான். அவை கைதட்டிச் சிரித்தது.
அரங்குசொல்லி திரும்பி கவிஞனிடம் “சரியாக சொல்லிவிட்டேனா?” என்று கேட்டான். ஏட்டுச்சுவடியை வாசித்து குழப்பமாகி “ஆனால் நான் இதை எழுதவில்லையே?” என்றான் கவிஞன். “அதைத்தான் நான் கேட்டேன். எழுதியதைச் சொல்வதற்கு எதற்கு அரங்குசொல்லி?” என்றபின் திரும்பி “அதாவது இங்கே இப்போது காண்டவ விலாசம் என்னும் அரிய நாடகம் நடக்கவிருக்கிறது. பிரஹசன வடிவை சார்ந்த நாடகம் இது. அதாவது இதில் அங்கதச் சுவை மிகுந்திருக்கும். ஏனென்றால் இதில் உண்மை மட்டுமே சொல்லப்படுகிறது. இதை இயற்றியவர் இவர். இம்முகமூடியை இவர் அணிந்திருப்பதற்கான அச்சம் அவருக்கு இருப்பது முறையே என நாடகம் முடிவதற்குள் உணர்வீர்கள்” என்றான்.
பின்பக்கமிருந்து ஒரு குரல் “எப்போது நாடகத்தை தொடங்கவிருக்கிறீர்கள்?” என்றது. “அவர்கள் இசைச்சூதர்கள். நாடகத்தின் நடுவே நாங்கள் சொல்லவேண்டியவற்றை மறந்துவிடும் இடைவெளிகளில் இவர்கள் இசை வாசிப்பார்கள். அவர்கள் இசை உங்களால் தாங்கமுடியாததாக ஆகும்போது நாங்கள் எங்கள் சொற்களை சொல்வோம். பொதுவாக உயர்ந்த நாடகங்கள் மானுடரை அறியாத தெய்வங்கள், அச்சத்தை மறைக்கத்தெரிந்த மாவீரர்கள், வேறுவழியில்லாத கற்புக்கரசிகள், உண்டு மூத்தோர், உண்ணாது நீத்தோர், கிடைக்காது துறந்தோர், இறுதியில் துணிந்தோர் ஆகியோரின் கதைகளை சொல்லவேண்டும். நாங்கள் இங்கு சொல்லவிருப்பது அவர்களின் கதையைத்தான். ஆனால் அவர்களின் கதையை அவர்களை அறிந்தவர்கள் எப்படி சொல்வார்களோ அப்படி சொல்லப்போகிறோம்” என்றவன் திரும்பி கவிஞனிடம் “அல்லவா?” என்றான்.
“நான் அதை சொல்லவில்லை. நான் எழுதியது பிரஹசன நாடகமே அல்ல. நான் எழுதியது காவியநாடகம். என்னுடைய உள்ளக் குருதியை இதில் பூசியிருக்கிறேன்” என்றான் கவிஞன். “பார்த்தீர்களா? குருதிபூசிய நாடகம். குருதி பூசி எழுதப்பட்ட எல்லா நாடகங்களிலும் பகடிதான் ஓங்கி இருக்கும். சீரிய நாடகங்களை எழுதியவர்கள் சந்தனம்தான் பூசியிருப்பார்கள். நமது கவிஞர் இந்த நாடகம் முடிந்ததும் பெரும்பாலும் கழுவேற்றப்படுவார் என்று ஐயப்படுகிறார்.” கவிஞன் பதறி “அய்யோ… இல்லை, நான் பரிசில்களை எதிர்பார்க்கிறேன்” என்றான். “அதைத்தான் இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் பரிசில்களை எதிர்பார்க்கிறார். ஆனால் கழுவிலேற்றப்படுவார். சரி, அது போகட்டும். இப்போது இங்கொரு நாடகம் நடக்கிறது.”
“இது பிரஹசன நாடகம் என்று முன்னரே சொன்னேன். இதன் தலைவர்கள் இருவர். ஒருவர் துவாரகையை ஆளும் மாமன்னர் இளைய யாதவர். மிக இளமையிலேயே கன்றுகளை மேய்த்தவர். ஒரு கன்று பிற கன்றிலிருந்து தன்னை வேறுபடுத்தி அறிய விரும்புவதில்லை என்ற உண்மையிலிருந்து அரசியல் மெய்மையை கற்றவர். ஒவ்வொரு கன்றையும் பிரித்தறியத் தெரிந்தவன் அரசனாவான் என்ற மெய்மையிலிருந்து அவர் தலைவரானார். அவ்வாறு பிரித்தறிந்தபின் ஒட்டுமொத்த மந்தையையும் ஒற்றைக்கன்றாக நடத்த வேண்டுமென்ற அறிதலிலிருந்து அவர் தெய்வமானார்.” அவையின் சிரிப்பொலி எழுந்து சுவர்களை மோதியது.
கவிஞன் அவன் தோளைத்தொட்டு ஏதோ சொல்ல வர அவன் கையை தட்டிவிட்டு “மயிற்பீலி அணிந்தவர். வேய்ங்குழல் ஏந்தியவர். படையாழி கொண்டவர். காலம் மூன்றும், வேதம் நான்கும், பூதங்கள் ஐந்தும், அறிநெறிகள் ஆறும், விண்ணகங்கள் ஏழும் அறிந்தவர்” என்று சொல்லி மூச்சுவிட்டு “இப்படியே நூற்றெட்டு வரை செல்கிறது. நேரமில்லை” என்றான். கவிஞன் மீண்டும் தோளை தட்ட “என்ன?” என்றான் அரங்குசொல்லி. “எனது கதைத் தலைவன் அவனல்ல. நான் இளைய பாண்டவர் அர்ஜுனரைப்பற்றி எழுதி இருக்கிறேன். அவர்தான் கதைத் தலைவர்” என்றான் கவிஞன்.
“அதைத்தானே நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றான் அரங்குசொல்லி. “அதாவது…” என்று சபையை நோக்கி “இந்நாடகத்தின் தலைவர் இளைய பாண்டவர். வில்லேந்தியவர். வில்தொடுக்கும் இலக்காகவே இவ்வுலகை அறிந்தவர். பிழைக்காத குறிகள் கொண்டவர். பிழைக்காத குறிகொண்டவர்களுக்கு மட்டுமே உரித்தான முடிவிலா அம்புகளின் உலகில் வாழ்பவர். அங்கு அத்தனை தெய்வங்களுக்கும் பிழைக்காத குறியாக அவர் அமர்ந்திருக்கிறார். தன்னை முழுதுணர்ந்தவர் என்பதனால் தான் முழுமையற்றவர் என்று அறிந்தவர். ஆகவே இளைய யாதவரின் இடக்கையென அமைந்தவர். வலக்கையை அவர் தனக்கென வைத்துக் கொண்டிருப்பதால் இருவரையும் நரநாராயணர் என்று ஒரு கவிஞர் பாடினார்.”
“நான்தான்” என்றான் கவிஞன் நெஞ்சைத்தொட்டு மகிழ்வுடன். “இவர்தான்” என்றான் அரங்குசொல்லி. “நரநாராயணர்களாக எழுந்த இருவரும் ஆற்றிய காண்டவ எரிப்பு எனும் காவியத்தை இவர் இங்கு நாடகமாக எழுதியிருக்கிறார். இதில் உள்ள அனைத்து பிழைகளும்…” இடைமறித்து “பிழையெல்லாம் ஏதுமில்லை” என்றான் கவிஞன். “ஆம், என்று அவர் சொல்கிறார் அவ்வண்ணமென்றால் நாம் சொல்லும் பிழைகள் அனைத்துக்கும் இவரே பொறுப்பு என்று பொருள். இதன் நிறை அனைத்திற்கும்…” என்றபின் “நிறைகள் உண்டா..?” என்று கவிஞனிடம் கேட்டான். “உண்டு” என்றான் கவிஞன்.
“அவ்வண்ணமெனில் அனைத்து நிறைகளுக்கும் இதன் கதைத் தலைவர்களே பொறுப்பு. அவியுண்டு செரிக்காத அனைத்து தேவர்களும் இங்கு அவையமர்க! விண்ணுலகில் சலிப்புற்ற மூதாதையர் நுண்வடிவில் இங்கு எழுந்தருள்க! வாக்தேவி இம்மேடையில் வெண்கலை உடுத்து வீணைமேல் விரலோட வந்தமர்க! தன் கொழுநன் ஆற்றிய பிழைகளைக் கண்டு வயிறதிர நகைக்க அவளுக்கொரு வாய்ப்பு. உண்டாட்டில் ஓரம் நின்றவர் மட்டும் கண்டுமகிழப்போகும் இந்நாடகம் இங்கு சிறப்புறுக!” என்றபின் திரும்பி கவிஞனிடம் “ஏதாவது விட்டுவிட்டேனா…?” என்றான்.
“என் பெயர்” என்றான் கவிஞன். “இவர் பெயர்…” என்றபின் திரும்பி “தங்கள் பெயர்…?” என்றான் அரங்குசொல்லி. கவிஞன் “என் பெயர்… இருங்கள் வரிசையாகவே சொல்கிறேன். தனியாகச்சொல்லி எனக்கு பழக்கமில்லை” என்றபின் தலைப்பாகையை சீரமைத்து “இந்திரபுரியின் அவைக்கலைஞன், இவ்வுலகின் முதற்பெருங்கவிஞன், சௌனக குருகுலத்தான் சூக்தன்” என்றபின் அரங்குசொல்லியிடம் “மேலே நீயே சொல்!” என்றான்.
அரங்குசொல்லி “ஆகவே இவர்…” என்றபின் “நீங்களே சொல்லுங்கள்” என்றான். “நான் நால்வேதம் நவின்ற அந்தணன். பராசர முனிவரின் பௌராணிக மாலிகையை பன்னிரண்டு ஆண்டுகள் முற்றிலும் பயின்று தேர்ந்தேன். அதன்பின் மேலும் பன்னிரண்டு ஆண்டுகளில் அவற்றை மறந்தேன். இது எனது நூற்றுப் பதினேழாவது நாடகம்.”
அரங்குசொல்லி உரத்த குரலில் “பிறநாடகங்கள் இன்னும் மேடை ஏறவில்லை என்பதனால் இவருக்கு இந்த நாடகம் மேடையேறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது” என்றான். “இந்த நாடகத்தை சூதர்கள் நடிப்பார்கள். நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் மூதாதையர் அருள் நிறைவதாக!” என்றபின் அரங்குசொல்லி தலைவணங்க கவிஞனும் தலைவணங்கி வெளியே சென்றான்.