பகுதி ஒன்பது: மயனீர் மாளிகை – 1
கர்ணன் இந்திரப்பிரஸ்தத்தின் பெருமாளிகை வளைப்பின் கோட்டைவாயிலை அடைந்ததுமே காத்து நின்றிருந்த கனகர் அவரை நோக்கி ஓடிவந்து “அரசே” என்றார். “எனக்காகவா காத்து நிற்கிறீர்கள்?” என்றான் கர்ணன். “ஆம், அரசே. அரசர் தன் தோழர்களுடன் இந்திர ஆலயத்திற்கு கிளம்பினார். தங்களை பலமுறை தேடினார். தாங்கள் எங்கிருந்தாலும் அழைத்துவரும்படி என்னிடம் ஆணையிட்டுவிட்டு சென்றார்” என்றார்.
கர்ணன் அவர் விழிகளைத் தவிர்த்து மாளிகை முகடுகளை ஏறிட்டபடி “நான் நகரில் சற்று உலவினேன்” என்றான். கனகரின் விழிகள் சற்று மாறுபட்டன. “நன்று” என்றபின் “தாங்கள் இப்போது இந்திர ஆலயத்திற்கு செல்ல விழைகிறீர்களா?” என்றார். “ஆம், செல்வதற்கென்ன? செல்வோம்” என்றான் கர்ணன். “தாங்கள் அரச உடை அணியவில்லை” என்றார் கனகர். “நான் இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசனாக வரவில்லை” என்றான் கர்ணன். கனகர் தயங்கி “தங்கள் உடைகள் அழுக்கடைந்துள்ளன… அத்துடன்…” என்றார்.
“இதுவே போதும்” என்றான் கர்ணன். “நன்று” என்றபின் கனகர் முன்னால் நடந்தார். அரண்மனைப் பெருமுற்றம் தலைப்பாகைகளாலும் சுடர்மின்னும் படைக்கலங்களாலும் பல்லக்குகளின் துணிமுகடுகளாலும் தேர்களின் குவைமாடங்களாலும் யானைமத்தகங்களின் நெற்றிப்பட்டங்களாலும் புரவியேறிய வீரர்களின் மார்புக் கவசங்களாலும் அவற்றினூடே பறந்த கொடிகளாலும் மெல்லச்சுழன்ற சித்திரத்தூண்களாலும் நெளிந்தமைந்த பாவட்டாக்களாலும் வண்ணவெளியாகப் பெருகி அலைநிறைந்திருந்தது. பந்தங்களின் செவ்வெளிச்சம் அத்தனை வண்ணங்களை எப்படி உருவாக்குகிறது என்று வியந்தான். செவ்வொளியின் மாறுபாடுகளை சித்தம் வண்ணங்களாக்கிக் கொள்கின்றதா?
கனகர் “இவ்வழி அரசே, இவ்வழி” என்று சொல்லி முற்றம் முழுக்க நெரிபட்ட உடல்களின் நடுவே அந்தந்தக் கணங்களில் உருவாகி இணைந்த இடைவெளிகளை கண்டுபிடித்து ஆற்றுப்படுத்தி அவனை அழைத்துச் சென்றார். கொந்தளித்த வண்ணத் தலைப்பாகைகளுக்கு மேல் எழுந்த அவன் முகம் நெடுந்தொலைவிலேயே தெரிய அனைவரும் திரும்பி நோக்கினர். எவரோ “கதிர் மைந்தர்! கர்ணன்!” என்றார். “அங்கநாட்டரசரா?” என்று யாரோ கேட்டார்கள். “அங்கர்! வெய்யோன் மகன்!”
சற்று நேரத்திலேயே அவன் சென்ற வழியெங்கும் அவனைப்பற்றிய வியப்பொலிகளும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. முட்டி உந்தி உடல்களில் அலை எழ அவனை நோக்கி வந்தது முற்றத்துப் பெருங்கூட்டம். “அரசே, விரைந்து நடவுங்கள்! தங்களை சூழ்ந்து கொள்ளப்போகிறார்கள்” என்று சொன்னபடி கனகர் ஓடினார். கர்ணன் தன் மாறாநடையில் தன்னைச் சூழ்ந்து மின்னிய விழிகள் எதையும் பார்க்காமல் நிமிர்ந்த தலையுடன் நடந்து அரண்மனையின் படிகளில் ஏறினான். அவன் நிமிர்வே அவனை எவரும் அணுகமுடியாது செய்தது.
அரண்மனையின் விரிந்த இடைநாழியில் தூண்கள்தோறும் நெய்ப்பந்தங்கள் எரிந்தன. பட்டுத்திரைகளும் பாவட்டாக்களும் காற்றில் உலைந்தன. அகன்றசுடர்கள் யானைக்காதுபோல கிழிபட்டு பறந்தபடி மெல்ல அசைந்தன. கனகர் “இவ்வழியே கரவுப்பாதை ஒன்று மலைக்குமேல் ஏறுகிறது. நேராக இந்திரனின் ஆலயத்திற்குள்ளேயே கொண்டு விட்டுவிடும், வருக!” என்றார். கர்ணன் “சுரங்கப்பாதையா?” என்றான். “ஏன்?” என்று கனகர் திரும்பி நோக்கினார். கர்ணன் இல்லை என்பதுபோல தலையசைத்தான்.
இடைநாழி வழியாக அவருடன் சென்றபடி “எதற்காக இந்தக் கரவுப்பாதை?” என்றான். “அரசகுடியினர் செல்வதற்காக என்று எண்ணுகிறேன்” என்ற கனகர். “வெளியே சுற்றுப்பாதை ஏழு வளைவுகளாக சென்று ஆலயத்தை அடைகிறது. அங்கே இப்போது மானுட உடல்கள் செறிந்துள்ளன. காற்றுகூட ஊடுருவ இயலாது. இங்கே உள்ளே ஆயிரத்தைநூறு படிகள் மட்டும்தான்.” கர்ணன் மீசையை நீவியபடி நடந்தான். “தாங்கள் வெளியே சென்றது குறித்து அரசர் கவலைகொண்டார்” என்றார் கனகர்.
“ஏன்?” என்றான் கர்ணன். “இங்கே இன்னமும் நாகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் உரகங்களைப்போல மண்ணுக்குள் வாழ்பவர்கள். அருகுவேர் போல அழிக்கமுடியாதவர்கள். உளம்கவர்கலை அறிந்தவர்கள். அவர்கள் நம் விழிகளை நோக்கினால் தங்கள் எண்ணங்களை நம்முள் விதைத்துச் சென்றுவிடுவார்கள். நம் எண்ணங்களாக அவர்களின் சொற்கள் நம்முள் ஓடும். நாகர்களின் இமையாவிழியே அவர்களின் மாபெரும் படைக்கலம்.” கர்ணன் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து தன் கால்களை நோக்கியபடி நடந்தான்.
சுரங்கப்பாதையின் வாயில் பெரிய மரக்கதவுகளால் மூடப்பட்டு பன்னிரு வேலேந்திய காவலரால் காக்கப்பட்டது. கனகரைப் பார்த்ததும் ஒரு வீரன் தலைவணங்கினான். அவர் சொல்வதற்கு முன்னதாகவே அவன் அருகிலிருந்த ஆழியை சுழற்ற ஓசையின்றி இருகதவுகள் திறந்தன. உள்ளிருந்து யானையின் துதிக்கையிலிருந்து என நீராவி வந்து அவர்கள்மேல் பட்டது. உள்ளே ஆடிகள் பதிக்கப்பட்டு சீரான வெளிச்சம் பரவும்படி செய்யப்பட்டிருந்தது. நுழைவாயில் ஒரு மெல்லிய திரைச்சீலை போல தோன்றியது. “வருக!” என்றபடி கனகர் உள்ளே சென்றார். அவர்களுக்குப் பின்னால் கதவுகள் மூடிக்கொண்டன.
எங்கிருந்தோ வந்த ஈரவெங்காற்று சுரங்கப்பாதையை நிறைத்திருந்தது. சிறிய ஒடுங்கலான படிகளில் வெளிச்சம் மிகுதியாக விழும்படி அமைக்கப்பட்டிருந்தன ஆடிகள். வளைந்து வளைந்து மேலேறியது. தவளைமுட்டையின் சரம் என கர்ணன் எண்ணினான். மூச்சிரைக்க மேலேறியபடி கனகர் “அங்கு விழாமுறைமைகள் இந்நேரம் முடிந்திருக்கும்” என்றார். கர்ணன் தலையசைத்தான். “ஜயத்ரதரும் சிசுபாலரும் சற்று மிகையாகவே யவனமது அருந்தினார்கள். அவர்களிடம் நீராடிவிட்டு ஆலயத்திற்குச் செல்வதே நன்று என்று நான் சொன்னேன். என் சொற்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.”
கர்ணன் ஒன்றும் சொல்லாததை திரும்பிப் பார்த்துவிட்டு “அவர்கள் செல்லும்போதே விதுரர் அனைத்தையும் தெரிந்து கொள்வார். என்னைத்தான் அதற்காக கண்டிப்பார்” என்றார். தன்பணியைப்பற்றி கர்ணன் ஏதாவது நற்சொல் சொல்லவேண்டுமென்று கனகர் எண்ணுவதை அவன் புரிந்துகொண்டான். சற்று மடிந்து இளைப்பாற இடமளித்து மீண்டும் மேலேறி மீண்டும் மடிந்த அப்படிக்கட்டில் குனிந்த தலையும் பின்னால் கட்டிய கைகளுமாக நீண்ட கால்களை எடுத்து வைத்து மேலேறினான். விரைவின்றி அவன் மேலேற உடன் செல்ல கனகர் மூச்சிரைக்க வேண்டியிருந்தது.
படிகளின் மறுஎல்லையில் மூடியகதவுகள் தெரிந்தன. கனகர் அதன் சிறிய துளைவழியாக மந்தணச்சொல்லைச் சொல்ல கதவுகள் திறந்தன. அப்பாலிருந்து குளிர் காற்று அருவி போல அவர்கள் மேல் இறங்கியது. அதில் எரியும் நெய்யும், ஈரக்குங்குமமும், புகையும் குங்கிலியமும், கசங்கிய மலர்களும் கலந்த ஆலயமணம் இருந்தது. காட்டுக்குள் விழும் அருவியோசைபோல கலந்து எழுந்த குரல்களும் மணியோசைகளும் முழவுகளும் கைத்தாளங்களும் வெவ்வேறு உலோக ஒலிகளும் பறவைக்கூட்டம் போல அவர்களை சூழ்ந்தன.
இந்திர ஆலயத்தின் இடைநாழி ஒன்றிற்குள் நுழைந்திருப்பதை கர்ணன் கண்டான். “இங்கிருந்து இடைநாழியினூடாக முதல் வலச்சுற்றுக்கு செல்லலாம்” என்றார் கனகர். “வருக!” என்று முன்னால் சென்றார். வலச்சுற்றுக்குள் நுழைந்ததும் தலைக்குமேல் அதுவரை இருந்துகொண்டிருந்த ஒரு மூடுண்ட உணர்வு அகன்றது. மேலே வளைந்த கூரைமுகடு வெண்ணிறச்சுதைப்பரப்பின்மேல் வரையப்பட்ட முகில்சித்திரப்பரப்பாக இருந்தது. முகில்களில் கந்தர்வர்கள் யாழ்களுடன் பறந்தனர். கின்னரர்கள் சிறகுடன் மிதந்தனர். தேவகன்னியர் உடலொசிந்து நீள்விழிமுனையால் நோக்கினர்.
வலப்பக்கம் இந்திரனின் ஆலயத்தின் வளைந்த சுவரை மூடிய சிற்பத்தொகுதி வந்துகொண்டிருந்தது. இடப்பக்கம் பெரிய உருளைத்தூண்கள் தாங்கிய கூரைவளைவுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிததும்பிய தெருக்கள் அலைகளாக இறங்கி கீழே சென்றன. செந்நிற நெய்விளக்குகளும் பந்தங்களும் எரிய, சாலைகள் அனைத்திலும் மக்களின் உடைவண்ணங்கள் நிறைந்து கொப்பளித்தன. நகர் எழுப்பிய ஒலி தேனீக்கூட்டின் ரீங்கரிப்பென மேலே வந்தது. தூண்களைத் தழுவி கிழிபட்டு உள்ளே வந்து சுழன்று அறைந்து கடந்து சென்ற காற்றில் கீழிருந்து வந்த பந்தங்களின் எரிநெய்மணம் இருந்தது.
சுவர்ப்பரப்பு முழுக்க மென்சேற்றுக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நிறைந்திருந்தன. இடைவெளியே இன்றி ஒன்றுக்குள் ஒன்று புகுந்ததென அமைந்த சிற்பப் பரப்பு வியப்பூட்டியது. நீர்நிழல்படலம் என எண்ணினான். கனகர் “இது கலிங்கச் சிற்பமுறை அரசே. கற்பரப்பை முழுவதும் சிற்பங்களாக்கி விடுகிறார்கள்” என்றார். சிற்பங்களில் இந்திரனின் கதைள் பொறிக்கப்பட்டிருந்தன. விருத்திராசுரனின் வயிற்றைக்கிழித்து மின்படையுடன் எழுந்தான். திரிசிரஸின் தலைகளை மின்வாளால் கொய்தான். இரணியாசுரனுடன் பன்னிருகைகளிலும் படைக்கலம் ஏந்தி போர்புரிந்தான். பறக்கும் மலைகளின் சிறகுகளை பதினெட்டு கைகளிலும் வாளேந்தி பறக்கும் முகில்யானைமேல் அமர்ந்து கொய்தான்.
கசியபரின் அருகே அமர்ந்த அதிதியின் மடியில் இளமைந்தனாக கையில் தாமரை மலருடன் அமர்ந்திருந்தான். உச்சைசிரவஸ் மேலேறி முகில்கள் மேல் பாய்ந்தான். ஐராவதம் மேல் அமர்ந்து மலைகளை குனிந்து நோக்கினான். வைஜயந்தமெனும் உப்பரிகையில் பாரிஜாதத் தோள்தாரும் மந்தாரக் குழல்மாலையும் சூடி அமர்ந்திருந்தான். அவன் அருகமர்ந்த இந்திராணி உடலெங்கும் மலர் கொடி தளிர் என பலவடிவில் அணி பூண்டு ஒசிந்திருந்தாள். வியோமயானத்தில் மாதலி பரிபுரக்க அருளும் அஞ்சலும் காட்டி அமர்ந்திருந்தான். வலப்பக்கம் சயந்தனும் இடப்பக்கம் சதியும் அருள்கை காட்டி நின்றனர்.
சுதர்மை என்னும் அவையில் அரியணையில் வீற்றிருந்தான். ரம்பையும் ஊர்வசியும் மேனகையும் நடனமிட்டனர். சூழ்ந்து மருத்துக்கள் சித்தர்கள் முனிவர் தேவர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பராசரர், பர்வதர், சாவர்ணி, காலவர், சங்கர், லிகிதர், சௌரசிரஸ், துர்வாசர், அக்ரோதனர், சேனர், தீர்க்கதமஸ், பவித்ரபாணி, பாலுகி, யாக்ஞவல்கியர், உத்தாலகர், ஸ்வேதகேது முதலிய முனிவர்கள் அவன் அவையில் நிறைந்திருந்தனர்.
கனகர் “இது இந்திரன் பருந்தென வந்து சிபி மன்னரிடம் தசைகோரிய காட்சி. தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார். கர்ணன் “ஆம்” என்றான். மண்ணரசன் வலக்கையில் துலா பற்றி இடக்கை ஏந்திய வாளால் தன் தொடையை வெட்டிக்கொண்டிருந்தான். துலாவின் இடத்தட்டில் ஒரு துண்டு தசை இருந்தது. தாழ்ந்த மறுதட்டில் சிறிய புறா சிபியை அச்சத்துடன் நோக்கியது. அலையென இறகுவிரித்த பருந்து பசியுடன் விரிந்த கூரலகுடன் நின்றிருந்தது. அதன் உகிர்கள் புறாவை அள்ளுவதற்காக எழுந்து நின்றிருந்தன.
அப்பால் இருந்த சிற்பத்தை நோக்கி இடையில் கைவைத்து கர்ணன் நின்றான். “இது நரகாசுரர்” என்றார் கனகர். “கந்தமாதன மலைமேல் நரகாசுரர் இந்திர நிலை பெறுவதற்காக தவம் இயற்றுகிறார். இதோ இந்திரன் நூற்றெட்டு பெருங்கைகள் கொண்டு விண்ணளந்தோனை வழிபடுகிறார்.” கையில் படையாழியும் கண்களில் சினமுமாக பெருமாள் எழுந்து நின்றார். அடுத்த சிலைப்பரப்பில் நரகாசுரனை விண்பெருமான் கொல்ல முகில்களாக நூறு முகங்கள் கொண்டு மின்னல்களென ஆயிரம் கைகள் விரித்து அக்காட்சியை சூழ்ந்திருந்தான் இந்திரன்.
ஆயிரத்து எட்டு கற்புடைப்புச் சிற்பங்களின் அறுபடாப் பெரும்படலமாக வளைந்து சென்ற சுவர்களை மேலாடையும் குழலும் காற்றில் பறக்க கர்ணன் சுற்றி வந்தான். மறுபக்கம் சென்றபோது தொலைவில் யமுனையின் அலைகளில் ஆடும் படகுகளின் விளக்கொளி நடக்கும் பெண்ணின் மார்பணிந்த செம்மணியாரம் போல் ஒசிந்தது. நீராடும் கொக்கின் சிறகென விரிந்த அதன் துறைமேடைகளில் மின்மினிக்கூட்டங்கள் போல பெருங்கலங்கள் செறிந்திருந்தன. அங்கிருந்து மேலெழும் வண்டிகளும் தேர்களும் புரவி நிரைகளும் மக்கள் நிரைகளும் செவ்வொளி வழிவென சுழன்று மறைந்து மீண்டும் எழுந்து நின்றன.
இந்திரப்பிரஸ்தநகரி அனலெழுந்த காடுபோல் தெரிந்தது. விண் உலாவும் கந்தர்வர் நின்று நோக்குகையில் முன்பு அங்கு பற்றி எரிந்த காண்டவக் காட்டுத்தீயை நினைவுறுவார்கள் போலும். எங்கு கேட்டேன் இக்கதையை? கேட்கவில்லை. கனவுகண்டேன். இல்லை ஒரு நூலில் வாசித்தேன். இல்லை நூலில் வாசிப்பதை கனவில் கண்டேன். அல்லது கனவை ஒரு நூலில் வாசித்தேன். அவன் நெற்றியை வருடிக்கொண்டான். கனகர் “பொழுது பிந்துகிறது. இன்னும் பதினான்கு அடுக்குகள் உள்ளன அரசே” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் நடந்தான்.
இரண்டாவது வலச்சுற்றில் இடப்பக்கம் நிரையாக சிற்றாலயங்கள் வரத்தொடங்கின. முழ உயரமேயுள்ள மிகச்சிறிய கருவறைகளுக்குள் தானவர்கள் வலக்கை அருள்காட்ட இடக்கையில் அமுதகலம் ஏந்தி அமர்ந்திருந்தனர். அத்தனை ஆலயங்களிலும் சிற்றகல்கள் சுடர் சூடியிருந்தன. அசையாச்சுடர்களுடன் அச்சுவரே ஒரு செம்பொன்பரப்பு என தோன்றியது. நான்கு அடுக்குகளுக்குப் பின் தைத்யர்களின் ஆலயங்கள் வந்தன. செந்நிறமான மாக்கல்லால் ஆன சிலைகள். அனைத்தும் மலர்சூடி சுடரொளியில் கண்குழிக்குள் கருவிழிகளென நின்றிருந்தன.
ஏழாவது அடுக்கில் ஆதித்யர்கள் வந்தனர். நூற்றெட்டு ஆதித்யர்களில் முதல்வனாகிய சூரியனுக்கு மட்டும் மூன்றடுக்கு முகடு கொண்ட சற்று பெரிய ஆலயமிருந்தது. அங்கே ஏழ்புரவித்தேரை அருணன் தெளிக்க இருகைகளிலும் தாமரைமலர் ஏந்தி சுடர்முடி சூடி கதிரவன் நின்றிருந்தான். அவனுக்கு கமுகப்பூக்குலையால் கதிர்வளையம் செய்து அணிவிக்கப்பட்டிருந்தது. செந்தாமரை மாலைகள் சூட்டப்பட்டு ஏழு ஒளிச்சுடர்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. சூரியனின் ஆலயத்தைச் சுற்றி ஒன்பதுகோள்களும் நிரையமைத்து நின்றிருந்தன. அங்கே கூடியிருந்த மகளிர் அவற்றுக்கு எண்ணைவிளக்கு ஏற்றி கோளறுபாடல் ஓதி வழிபட்டனர். அவர்களின் குழல்சூடிய மலர்களும் சுடர்களென ஒளிவிட்டன. விழிகளுக்குள் சுடர்த்துளி அசைந்தது. குவிந்து விரியும் மலர்களைப்போல இதழ்கள் சொற்களை நடித்தன.
எட்டாவது அடுக்கில் ருத்ரர்கள் வந்தனர். ரைவதன், அஜன், பவன், பீமன், வாமன், உக்ரன், வ்ருஷாகபி, அஜைகபாத், அஹிர்புத்ன்யன், பஹுரூபன், மஹான் என்னும் பதினொரு ருத்ரர்களும் குவைமாடக்கோயில்களின் கருவறைபீடங்களில் நின்றிருந்தனர். ஒவ்வொரு தெய்வமும் கைசுட்டி ஒரு சொல்லை உரைத்து நின்றிருந்தது. அத்தனை இதழ்களும் ஒற்றைச்சொல்லையே சொல்வது போலவும் சொல்நிரை ஒன்றை அமைத்து அழியா நூலொன்றை கேளாச் செவிக்கு அனுப்புவது போலும் தோன்றியது.
ஒன்பதாவது சுற்றுப்பாதையில் எட்டு வசுக்களின் ஆலயங்கள். அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் ஆகியோர் ஏழடுக்கு முடிகள் சூடி மலரணிந்து நின்றிருந்தனர். பத்தாவது சுற்றுமுதல் முனிவர்களுக்குரிய ஆலயங்கள் வந்தன. ஒவ்வொரு முனிவரையும் சுற்றி தேவர்கள் சூழ்ந்திருந்தனர். கந்தர்வர்களின் இசைக்கருவிகள் மீதெல்லாம் ஒரு வெண்மலர் சூட்டப்பட்டிருந்தது.
பன்னிரு வலச்சுற்றுகளைக் கடந்து மையஆலயத்திற்குச் செல்லும்போது அவன் கால்கள் தளர்ந்திருந்தன. அச்சுற்றுப்பாதை சென்றணைந்த பெரிய களம் ஓர் ஆலயத்திற்குள் அமைந்தது என்பதை அங்கு நிற்கையில் உள்ளம் ஏற்கவில்லை. செண்டு வெளிக்கு நிகரான விரிவு கொண்டிருந்த அதன் நடுவே செந்நிறக்கற்களால் கட்டப்பட்ட இந்திரனின் கருவறை ஆலயம் ஏழடுக்கு கோபுரத்துடன் கிழக்கு நோக்கி நின்றிருந்தது. கிழக்குவாயில் விரியத்திறந்து விண்மீன் செறிந்த வானை காட்டியது. மறுபக்கம் மேற்கு வாயிலுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து பொங்கி விரிந்த எரியம்புகள் கணநேரத்து பெருமலர்கள் என விரிந்து ஒளிர்ந்து அணைந்து மீண்டும் மலர்ந்தன.
வடக்கிலும் தெற்கிலும் இருந்த வாயில்கள் பாதியளவே பெரியவை. நான்கு வாயில்களிலிருந்தும் மக்கள் வண்ணத்தலைப்பாகைகளும் மின்னும் அணிகளும் சிரிக்கும் பற்களும் களிக்கும் விழிகளுமென வந்துகொண்டிருந்தனர். “பூசனை தொடங்கிவிட்டது. அரசர்கள் நிரை அமைந்துவிட்டனர்” என்றார் கனகர். “ஆம்” என்றபடி கர்ணன் மாறாநடையுடன் அவரைத் தொடர்ந்து சென்றான். சூழ்ந்திருந்த அனைவரும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். மெல்லிய குரல்கள் தன் பெயரை சொல்லி வியப்பதை அவன் கேட்டான்.
இந்திரனின் மையக்கோயில் பன்னிரு சுற்று இதழ்மலர்வுகளுக்கு நடுவே எழுந்த புல்லிவட்டம் என அமைந்திருந்தது. நிலந்தாங்கி ஆமைகள் மீது எழுந்த கவிழ்ந்த தாமரைவடிவ அடிநிலைக்கு மேல் எழுந்த தாமரைத்தளமும், அதற்கு மேலாக எட்டு வளையங்களுக்குமேலே வட்டச்சுவரும், அது சென்று சேர்ந்த கூரைச்சந்திப்பில் மலர்ந்து கீழே வளைந்த இதழடுக்குகளும் கொண்டிருந்தது. ஒவ்வொரு இதழ்வளைவையும் குறுகிய உடலும் விழித்த கண்களும் கோரைப்பற்களும்கொண்ட மதனிகை ஒருத்தி தாங்கிக் கொண்டிருந்தாள்.
புஷ்பயக்ஷிகள் மலர்க்கிளை வளைத்து உடலொசித்து நின்ற பரப்புக்கு மேல் எழுந்த முதற்கோபுரத்தில் கின்னரர் கிம்புருடர், அதற்குமேல் வித்யாதரர், அதற்குமேல் கந்தர்வர் செறிந்திருந்தனர். தேவர்கள் பறந்தபடி கீழ்நோக்கி புன்னகைத்தனர். அவர்களினூடாக முகில்கள். பரவியிருந்த மலர்கள் கொடி பின்னி படர்ந்திருந்தன. தோகை நீட்டிய மயில்கள். கழுத்து வளைத்தமையும் அன்னங்கள். துதி தூக்கிய யானைகள். உகிர்காட்டி பிடரி விரித்த சிம்மங்கள்.
கிழக்குவாயிலின் கருவறை முகப்பில் இடதுநிரையின் முன்னால் திரௌபதி முழுதணிக் கோலத்தில் கைகூப்பி நிற்பதை முதற்கணத்திலேயே அவன் கண்டான். அவள் அவன் வரவை அறிந்ததே தெரியவில்லை எனினும் அவள் முகத்திற்கு அப்பால் அவள் அவனை உணர்ந்ததை காணமுடிந்தது. அவள் அருகே பானுமதியும் அசலையும் அரசணிக்கோலத்தில் நின்றிருந்தனர். அதற்கப்பால் பாமையும் ருக்மிணியும் கைகூப்பி உள்ளறை நோக்கி வணங்கி நிற்க அரசியரின் நிரை தொடர்ந்தது. அவன் விழிகள் சென்று மங்கலையர் நிரைக்கு அப்பால் நின்றிருந்த முதுமகள்கள் நடுவே குந்தியை தொட்டு மீண்டன.
பொன்மலர்ச்சரம் போல் தெரிந்த வலப்பக்க நிரையின் முன்னால் அரசணித்தோற்றம்கொண்ட தருமனும், பாண்டவரும், இளையயாதவரும், திருஷ்டத்யும்னனும், சாத்யகியும், பூரிசிரவஸும், துரியோதனனும், துச்சாதனனும், முதற்கௌரவர் பன்னிருவரும் நின்றனர். ருக்மியும், ஜயத்ரதனும், சிசுபாலனும், சகுனியும், வசுதேவரும், பலராமரும், ஜராசந்தனும் என தெரிந்தமுகங்கள் பிறமுகங்களுடன் கலந்து அனைத்துமுகங்களும் முன்பே அறிந்தவை போல தோன்றின. அவன் தன் விழிகளைத் தாழ்த்தி தலைகுனிந்து நடந்தான்.
கனகர் “இவ்வரிசையில் அரசே” என்று அவனை தூண்களைக் கடந்து அழைத்துச் சென்றார். “அரசநிரைகள் முன்னரே முழுதமைந்துவிட்டன. மேலும் தாங்கள்…” கர்ணன் “உம்” என்றான். அரசநிரைகளுக்கு அப்பால் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நின்றனர். கர்ணன் “நான் இங்கு நின்று கொள்கிறேன்” என்றான். கனகர் “அரசநிரையில் தாங்கள்…” என்று சொல்ல கையமர்த்திவிட்டு கர்ணன் சென்று படைத்தலைவர்களுடன் நின்றுகொண்டான். அவன் தங்கள்நடுவே வந்து நின்றதும் சூழ்ந்துநின்ற படைத்தலைவர்கள் மெல்ல தலைவணங்கி விழிகளால் முகமனுரைத்தனர். அவன் வருகையை அரசர்கள் அனைவரும் அறிந்திருந்தனர் என தெரிந்தது. அவன் தலை அவர்களுக்குமேலாக எழுந்து நின்றது.
உள்ளுக்குள் என திறந்த ஏழு அணிவாயில்களுக்கு அப்பால் இந்திரனின் கற்சிலை நின்ற கோலத்தில் தெரிந்தது. மேல்வலக்கையில் விரிகதிர் படைக்கலமும் மேல்இடக்கையில் பாரிஜாதமலரும் கீழ் இடக்கையில் அமுதகலமும் கொண்டு கீழ்வலக்கையால் அருள்காட்டி நின்றான். செந்நிற, வெண்ணிற, பொன்னிற மலர்கள் சூட்டப்பட்டிருந்தன. தலைக்கு மேல் அமைந்த பொன்னாலான பன்னிரு இதழடுக்கு கொண்ட பிரபாவலயத்தில் விளக்கொளிகள் ஆடி சுடர்விட முடிவற்ற மலர் ஒன்று அங்கு மலர்ந்தபடியே இருந்ததுபோல் தோன்றியது.
பெருமூச்சுகள், மெல்லிய தும்மல்கள் எழுந்தன. ஆடையொலிகளும் அணியொலிகளும் மந்தணம் கொண்டன. அனைவரும் சிலையை நோக்கி கைகூப்பியபடி காத்துநின்றனர். முதல் வாயிலில் நின்ற பூசகர் வெளிவந்து அங்கு தொங்கிய மணி ஒன்றை அடித்தபின் வாயிலை உள்ளிருந்து மூடினார். எதிர்நிலையில் மேடைமேல் நின்றிருந்த இசைச்சூதன் கையசைக்க மங்கல இசை எழுந்தது. ஆலயம் இசையாலானதுபோல தோன்றத்தொடங்கியது.
மணியோசை ஒலிக்க கதவுகளை பூசகர் திறந்தபோது உள்ளே அனைத்து வாயில்களிலும் சுற்றுச்சுடர்கள் ஏற்றப்பட்டிருந்தன. செஞ்சுடர் வளையங்களுக்குள் இந்திரன் செந்தாமரை நடுவே அமர்ந்த கருவண்டு என எழுந்து நின்றான். நூற்றெட்டு நெய்த்திரியிட்ட கொத்துச்சுடர் விளக்கை வலக்கையில் எடுத்து சிறுமணி குலுக்கி தலைமைவேதியர் சுடராட்டு நடத்தினர். பின்னர் நாற்பத்தெட்டு விளக்குகளால் சுடராட்டு. இருபத்து நான்கு சுடர்களாலும், பன்னிரண்டு சுடர்களாலும், ஏழு சுடர்களாலும், மூன்று சுடர்களாலும் ஒளியாட்டு நிகழ்ந்தது. ஒற்றை நெய்ச்சுடரை மும்முறை சுழற்றி தலைவணங்கி சுடராட்டை முடித்து அதை வெளியே வைத்தார்.
துணைப்பூசகர் அச்சுடரை எடுத்து வந்து ஆலயத்தின் நேர்முகப்பில் இருந்த சிறிய எரிகுளத்தில் நெய்யிட்டு அடுக்கப்பட்டிருந்த சமித்துகளுக்குள் வைத்தார். எரி எழுந்து தழலாடத்தொடங்கியது. அருகே நின்றிருந்த இரு வேதியர் அதில் நெய்யும் குந்திரிக்கமும் குங்கிலியமும் இட்டு தழல் மேலெழுப்பினார். நறும்புகை எழுந்து ஆலயத்தின் மேல் குடையென நின்றது.
தலைமை வைதிகர் இந்திரனை வாழ்த்தும் வேத மந்திரத்தை முழக்கியபடி நூற்றெட்டு நறுமலர்களை எடுத்து அவன் கால்களில் கைமலர்த்தி வணங்கினார். மலராட்டு முடிந்ததும் பதினெட்டு பொற்கிண்ணங்களில் கொண்டு வரப்பட்ட கங்கை நீரை மலர் தொட்டு இந்திரன் மேல் தெளித்து நீரளித்து முடித்தார். பின் அம்மலரை பொற்தாலத்தில் அள்ளிக் குவித்து எடுத்து வந்து முதல் மலரை தருமனுக்கும் இரண்டாவது மலரை திரௌபதிக்கும் அளித்தார். குலமுறைப்படி அரசர்கள் ஒவ்வொருவருக்குமாக மலரளித்து வாழ்த்தியபின் தலைமை வைதிகர் வெளியே வந்தார்.
தலைமை வைதிகர் இறுதி எல்லையை அடைந்து துணைப்பூசகர் கையில் தாலத்தை கொடுத்து அமைச்சர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அளிக்கும்படி கையசைத்துவிட்டு இந்திரனை நோக்கி திரும்பினார். அவரை மிகமெல்லிய ஒரு குரல் அழைப்பதை அனைவரும் கேட்டனர். தலைமை வைதிகர் சற்றே பதறும் உடலுடன் குந்தியின் அருகே சென்றார். குந்தியின் அணுக்கச்சேடி அவரிடம் ஏதோ சொல்ல கர்ணன் உள்ளம் அதிரத்தொடங்கியது. அவன் அங்கிருந்து விலகிவிடவேண்டுமென்று எண்ணி உடல் அசையாது நின்றிருந்தான்.
தலைமை வைதிகர் முன்னால் வந்து துணைப்பூசகர் கையிலிருந்த தாலத்தை வாங்கி கர்ணனின் அருகே வந்து குனிந்து “மலர்கொள்க அங்கரே!” என்றார். கர்ணனின் கைகள் கல்லால் ஆனவைபோல அசைவற்றிருந்தன. “தங்கள் ஒளிமணிக் குண்டலத்தையும் பொற்கவசத்தையும் கண்டேன். பிழை பொறுக்கவேண்டும்” என்றார் தலைமை வைதிகர். இடறியகுரலில் “நான் ஏதுமறியேன்” என்றான் கர்ணன். திகைத்து இருபக்கமும் விழியோட்டியபின் மலரை எடுத்துக்கொண்டான். தலைமை வைதிகர் மீண்டும் தலைவணங்கி கருவறை நோக்கி செல்ல அங்கிருந்த அனைத்து விழிகளும் தன்னை நோக்கி குவிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான்.
முரசுகள் முழக்கமிட உள்ளிருந்து கருவறையின் உள்வாயிலை பூசகர் மூடினர். துணைப்பூசகர் முன்னால் வந்து மண்டபமேடை மேலே ஏறி சங்கை முழக்கினார். மன்னர்களும் எதிர்நிரையின் அரசியரும் நிரைமுறைப்படி திரும்பினர். நீள்அடி எடுத்து வைத்து கர்ணனை அணுகிய துச்சாதனன் “மூத்தவரே, தாங்கள் எங்கு சென்றீர்? இத்தனை நேரம் தங்களைத்தான் அரசர் தேடிக்கொண்டிருந்தார்” என்றான். “நான் சற்று நகர்வலம் சென்றேன்” என்றபோது தன் தொண்டை நீரின்றியிருப்பதை கர்ணன் உணர்ந்தான்.