ஜெ,
தான்சானிய இளம்பெண் பெங்களூரில் சாலையில் இழுத்துப்போடப்பட்டு தாக்கப்பட்டதை ஒட்டி இந்தியா ஒரு இனவாதநாடு என்று சிஎன்என் ஒரு விவாதத்தை நடத்தியிருக்கிறது.
இந்தவிவாதமே இந்தியாமீதான தாக்குதல் என்று ஒருபக்கம் தோன்றுகிறது. இதை ஊடகங்கள் கொண்டாடுகின்றன. இத்தகைய நிகழ்வுகள் எங்கும் உள்ளன. அதைவைத்து ஒருநாட்டை இனவாதநாடு என சொல்லமுடியுமா என்ன?
சிவசங்கர்
அன்புள்ள சிவசங்கர்,
இவ்விவாதம் இந்தியா மீதான தாக்குதல் என நான் நினைக்கவில்லை. ஊடகங்கள் இதை வெளிச்சமிட்டதும் உலக அளவில் இதை விவாதிப்பதும் மிக அவசியமானதென்றே நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப்பட்டபோது நாம் இதைத்தான் செய்தோம். ஆஸ்திரேலியாவையே இனவாதநாடு என அடையாளப்படுத்தி விவாதித்தோம். [அங்குள்ள வடஇந்திய இளைஞர்களின் நடத்தை முக்கியமான காரணம், அது எவ்வகையிலும் நாகரீகமானதல்ல என்று அன்று நான் எழுதினேன்]
என் மகன் பெங்களூரில் படித்த காலத்தில் பெங்களூர்ச் சூழலை அவனிடமிருந்து நன்கு அறிந்திருக்கிறேன். பெங்களூரில் மக்களிடையே , காவலர் இடையே, கறுப்பின மாணவர்களுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பும் கசப்பும் உள்ளது. அதற்கு முதல்காரணம் அவர்கள் கறுப்பு என்பதே. அவர்கள் ஆழ்மனதில் எப்படியோ தலித்துக்களுடன் அடையாளம் கொள்ளப்படுகிறார்கள் என்பதே
அவர்களின் பண்பாட்டை, மனநிலையை புரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் கசப்புகளை மட்டுமே வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எளிய பிழைகள் கூட அவர்கள் மேல் பெரிய குற்றச்சாட்டுகளாக ஆக்கப்படுகின்றன. காவல்துறையில் அரசு அலுவலகங்களில் எங்கும் அவர்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படுவதில்லை. பலநிகழ்ச்சிகளை என்னால் சொல்லமுடியும். இதுவே தமிழகத்திலும் நிலைமை. சென்னையில்கூட.
ஆம், கண்டிப்பாக நாகர்கோயில் விதிவிலக்கு. இங்கே பொறியியல்படிக்கும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில்லை. நண்பர்களுடன் தோள்தழுவி பஸ்ஸில் செல்வதைக் காண்கிறேன். பார்வதிபுரத்திலேயே நிறையபேர் இருக்கிறார்கள்.
செலவுகுறைவான கல்விக்காகவே ஆப்ரிக்கர்கள் இங்கு வருகிறார்கள். ஆகவே அவர்களிடம் பணமிருப்பதில்லை. அதுவும் அவர்கள் அலட்சியமாக நடத்தப்படக் காரணம். பணத்துடன் வரும் ஐரோப்பியரையும் அராபியரையும் பெங்களூர் கொண்டாடி காலில் விழுந்து வணங்குகிறது.
இந்தியக் கல்விநிலையங்களில் ஆப்ரிக்கர்களுடன் இந்திய மாணவர்கள் பழகுவதே இல்லை. அவர்கள் தனிக்குழுவாகவே வாழ்ந்து திரும்பிச்செல்கிறார்கள். இந்தியக் கல்விமுறையும்சரி, இங்குள்ள ஆசிரியர்களின் அணுகுமுறையும்சரி, மிகமிக எதிர்மறையானவை. உண்மையில் அவர்கள் கடுமையாகப்போராடி வெல்கிறார்கள், அல்லது தோற்றுத்திரும்புகிறார்கள்
அதற்கு ஆப்ரிக்கர்களின் உணவுப்பழக்கம் உடைப்பழக்கம் என குற்றம்சாட்டுபவர்கள் இதேமனநிலையை அமெரிக்கவெள்ளையர் நம்மீது காட்டுவார்கள் என்றால் நாம் எப்படி எடுத்துக்கொள்வோம் என எண்ணிப்பார்ப்பதில்லை.
ஆகவே இது இனவாதத் தாக்குதல்தானா? ஆம், இதில் கண்டிப்பாக இனவாதம் உள்ளது. இதில் ஈடுபட்டவர்களை ஒரு சாலைப்பூசலில் ஈடுபட்டவர்களாக அல்ல, இந்ததேசம் தன் கொள்கையாக கொண்டுள்ள ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்பட்டவர்களாக மட்டுமே கருதவேண்டும். மிகமிகக் கடுமையாகவே தண்டிக்கவேண்டும். பிறர் நினைத்தாலே அஞ்சுமளவுக்கு.
ஆனால் பெங்களூர் நகரக் கமிஷனர் மற்றும் அரசியல்வாதிகளின் மழுப்பல் கடும் சினத்தை அளிக்கிறது. அவர்களின் நோக்கம் அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இனவாத மனநிலை கொண்ட கும்பலைச் சார்ந்ததாக, அவர்களை சமாதானம் செய்வதாகவே உள்ளது. சர்வதேச ஊடகத்தில் இது ஒரு சாதாரணவிஷயம் என பேட்டியளித்த கமிஷனர் பதவியில் நீடிப்பதே தேசத்துக்கு அவமதிப்பு. சுஷ்மா சுவராஜின் தலையிடலும் வலுவான குரலும் ஆறுதல் அளிக்கின்றன.
ஆனால் ஒப்புநோக்க வடகிழக்கு மாணவர்களுக்கு பெங்களூர் உகந்த இடம். அவர்கள் டெல்லியில் மிகமிகக் கீழ்த்தரமாக நடத்தப்படுகிறார்கள். [அதற்கான காரணமும் வடகிழக்கு மக்களின் நிறம்தான்] கடந்தகாலத்தில் டெல்லியில் வடகிழக்கு மாணவர்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் காவல்துறையினரால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டன. அக்குற்றங்கள் வடகிழக்கில் அரசின் அனைத்து முயற்சிகளையும் சீரழிக்கின்றன என்பதனால் பா,ஜ,க அரசு உருவான பின்னர் அவை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேபோல இக்குற்றங்களும் ஒடுக்கப்படவேண்டும். எந்தக்கும்பலும் தெருவிலிறங்கி எவரையும் தாக்கலாமென்றால் அதன்பின் அரசு என ஒன்று தேவையில்லை. நான் என்னை அந்த தான்சானிய மாணவியாகவும் நண்பர்களாகவுமே கற்பனைசெய்துகொள்வேன். ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ நானும் என் மனைவியும் இப்படி நடத்தப்பட்ட்டால் அந்நாட்டை பற்றி நான் என்ன நினைப்பேன்?
ஜெ