புறவழிச்சாலைகள்

 

 

 

 

nh31

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் சென்ற மாதம் கேரளாவில் பயணம் செய்தேன். நான் சென்னைக்கு வரவேண்டியவன். என்றாலும் கேரளா எல்லைகளை சாலை வழியாக கடந்து தமிழகம் வரவேண்டும் என எண்ணியதால் திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காட்டுக்கு பேருந்து பிடித்தேன்.

எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் புறவழிச்சாலைகள், நான்கு வழிச்சாலைகளாக கொச்சின் வரை இல்லை. மேலும் நான் வந்த பேருந்து  கொல்லம், ஆலப்புழா, சாலக்குடி என அனைத்து ஊர்களுக்குள்ளும் பயணித்தது. தமிழகம் போல பேருந்துகள் ஊர்களை துண்டித்து கொண்டு செல்லவில்லை. கொச்சினில் இருந்து நான்கு வழிச்சாலை ஆரம்பித்தது. அங்கிருந்து பாலக்காடு வரை இரண்டு சுங்கச்சாவடிகளே இருந்தன.

எனக்கு அது ஆச்சர்யத்துடன் வயிற்றெரிச்சலையும் தந்தது. முதலில் இந்த நான்கு வழிச்சாலைகள் யாருக்கு தேவை? புறவழிச்சாலைகளை அதிகமாய் பயன்படுத்துவது சரக்குகளை கையாளும் பெரு நிறுவனங்களே. புறவழிச்சாலைகளின் முக்கிய பயனான விரைவும் அவைகளுக்கே தேவை. அந்நிறுவனங்களுக்கு துறைமுகம் மிக அவசியமாகிறது. அதனால்தான் துறைமுக நகரமான கொச்சினில் இருந்து நான்கு வழிச்சாலைகள் துவங்குகின்றன.

இந்த நான்குவழிச்சாலைகளை அமைப்பதும் பெரு நிறுவனங்களே. நான்கு வழிச்சாலைகள் பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள் மிகுதியாக இருக்கும் பகுதிகளில் அவைகளுக்காகவே அமைக்கப்பட்டுள்ளன. விவசாய பகுதிகளை நான்கு வழிச்சாலைகள் துண்டித்து கொண்டே செல்கின்றன. உதாரணமாக சென்னையிலிருந்து கோவை வரை மிக சிறப்பான சாலையும், விழுப்புரத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வரை இருக்கும் மோசமான அரசின் நெடுஞ்சாலையையும் சொல்லலாம்.

பெரு நிறுவனங்கள் தங்கள் நன்மைக்காக அமைத்த நான்கு வழிச்சாலைகளை, மக்களின் வரிகளால் இயங்கும் அரசின் ஆதரவோடு அமைத்துக்கொண்டு, மீண்டும் மக்களிடமும், அரசாங்கத்திடமுமே சுங்கங்களை பெரு நிறுவனங்கள் வசூலிப்பது இரட்டை திருட்டு அல்லவா? சாலைகளை பயன்படுத்துவதும், சாலைகளை அமைப்பதும்  வேறு வேறு கார்ப்பரேட்களாக இருக்கலாம். சாமானிய குடிமகனுக்கு எதுவாய் இருந்தால் என்ன? திருவனந்தபுரத்திலிருந்து கொச்சின் வரை இருந்த சாலையும் பெரு நிறுவனங்கள் போட்ட நான்கு வழிச்சாலைகளின் தரத்துடன்தான் இருந்தது.

ஆனால் தமிழகத்தில் நான்கு வழிச்சாலைகளே பல இடங்களில் பொக்கைப் புன்னகை சிந்துவதை நான் பார்க்கிறேன். மேலும் கேரளப் பேருந்துகள் புறவழிச்சாலை வழியாகவே செல்லும் என்று சொல்லி எந்த  சிற்றூர் பயணியையும் ஏற்ற மாட்டேன் என்று எந்த ஓட்டுனரும் நடத்துனரும் சொல்லவில்லை. தமிழகத்தில் அது சர்வ சாதாரணம். நேரடி அந்நிய முதலீடு குறித்து பரவலாக பேச்சு எழுந்த போது இந்திய வேளாண்மை கார்பரேட் மயமாவதை நீங்கள் ஆதரித்து  தங்கள் தளத்தில் எழுதியது எனக்கு நினைவிருக்கிறது. அந்த கட்டுரைதான் கார்ப்பரேட் ஊடகம் குறித்து எனக்கு கிடைத்த முதல் வெளிச்சம். செய்திகளின் கொடூர அரசியலை வெளிச்சமிட்டது அக்கட்டுரை.

ஆனால் என் கேரளப்பயணம் கார்ப்பரேட்களின் மீது என் கோபத்தை கிளறியது. சிற்றூர் மக்களையும், விவசாயத்தையும் புறக்கணிக்கும் இந்த நான்கு வழிச்சாலைகள் தேவைதானா? யாரின் பயனுக்காக விவசாயிகளின் உற்பத்திகளை ஏற்றி செல்லும் சிறு வாகனங்களிடமும் சுங்கம் வசூலிக்கப்படுகின்றன? சாலைகளை கோபத்துடனே பார்த்துகொண்டிருக்கிறேன். தங்கள் பதில் என்னை மேம்படுத்தும் என நம்புகிறேன். நேரமிருந்தால் பதில் எழுதவும்.

 

அன்பன்

அ மலைச்சாமி.

 

அன்புள்ள அழகர் மலைச்சாமி,

இப்படி ஏதேனும் ஒரு விஷயத்தைக்க் குறித்து உடனடியாக ஒரு எண்ணத்தை அடைந்து அதை கருத்தாக விரித்துக்கொண்டு பேசுவது நாம் அன்றாடம் செய்வது. அதை அறிவுத்தளத்தில் செய்யவேண்டுமென்றால் பொதுவான ஒரு கோட்பாடாக அதைச் சொல்ல உங்களால் முடியுமா என்று பார்க்கவேண்டும்

பெருவழிச்சாலைகள் என்பவை நம்முடைய இன்றைய பொருளியல் கட்டமைப்பின் ஒரு பகுதி. மேலும் மேலும் உலகம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது. விரைவுப்பயணம் அதற்கு அவசியமானது. அன்றெல்லாம் நாகர்கோயிலில் இருந்துசென்னைக்கு 16 மணிநேரம் பயணம்செய்யவேண்டும். இன்று 9 மணிநேரம். ஒரேநாளில் சென்று பணிமுடித்து திரும்பமுடிகிறது. அதற்கான தேவையும் இன்றுள்ளது. அதற்காகவே நெடுஞ்சாலைகள். ஏதேனும் அவசர வேலையாகச் சென்று கேரளச்சாலைகளில் மாட்டிக்கொண்டிருந்தால் அந்த சலிப்பு தெரியும்

நான் இப்போது மாதம்தோறும் விமானப்பயணங்களை மேற்கொள்கிறேன் . இருபதாண்டுகளுக்கு முன் நினைத்தே பார்த்திருக்கமுடியாது. இன்றைய என் தொழிலுக்கு அது தேவையாகிறது. தொலைபேசியில் நாகர்கோயிலில் இருந்து திருநெல்வேலிக்குப்பேச ஒருமணிநேரம் காத்திருந்தது முப்பதாண்டுகளுக்கு முன்புதான்.

இணையமும் இதேபோன்ற ஒரு நெடுஞ்சாலைதான். முந்தைய காலகட்டத்தில் கடிதங்கள் எழுதினோம். நீலநிற இன்லன்ட் உறையை பார்த்தே வருடக்கணக்காகிறது. அந்த மாற்றத்தை நினைத்து ஏங்குவதில் பொருளுண்டா என்ன? மறுகணமே மின்னஞ்சல் சென்று சேர்ந்து அதற்கடுத்த நிமிடம் மறுமொழி வரவேண்டுமென நினைக்கிறோம் அல்லவா?
இதில் ஒன்றுபோதும் இன்னொன்றுவேண்டாம் என இருக்கமுடியுமா என்ன? நவீனக் கல்வி, நவீனமருத்துவம், நவீனப்பொருளியல் வாய்ப்புகள், நவீன நுகர்வு ஆகியவற்றுக்குள் இருந்துகொண்டு அதில் ஏதேனும் ஒன்றை மறுப்பதோ முந்தையகாலத்தை நினைத்து ஏங்குவதோ பொருளற்றது

என் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். கார் ஐந்து கிலோமீட்டரைக் கடக்க ஒருமணிநேரமாகியது. அத்தனைபரிதாபகரமான சாலை. காமராஜ் காலத்தில் போடப்பட்ட சாலை. இன்று அதைவிட மோசமான நிலையில் உள்ளது. அந்தமக்கள் அங்கே சிறையிடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தப்பொதுநாகரீகத்திலிருந்து விலகி ஒரு ‘மூடப்பட்ட’ வாழ்க்கைக்கு விரும்பிச்செல்வார்கள் என்றால் அது வேறு.

நீங்கள் சாலைகள் இல்லாத, செல்பேசியும் இணையமும் இல்லாத உலகுக்குச் செல்லலாம். அங்கே பிறிதொரு வாழ்க்கையை உருவாக்கலாம். அல்லது மொத்தமாகவே இந்த முதலிய –நுகர்வுப் பொருளியல் அல்லாத ஓர் அமைப்பைக் கற்பனைசெய்யலாம். அதற்காகப் போராடலாம். ஆனால் இதனுள் இருந்துகொண்டு ஒன்றுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கமுடியாது

ஜெ

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 48
அடுத்த கட்டுரைஎழுத்தாளரைச் சந்திப்பது…