சென்றகாலங்கள்- கடிதம்-2

1

இன்று தளத்தில் வெளியான சுரேஷின் கடிதம் குறித்து என் கருத்துக்களைப் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

 

த‌மிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததில்லை என்பது வட இந்தியாவை ஒப்பிடும்போது என்றே எனக்குத் தோன்றியது. 1952க்குமுன் வரிசெலுத்துவோர் மட்டுமே வாக்களித்ததால் அதை மக்கள் செல்வாக்கு என்று சொல்லமுடியாது. 1952இல் வயதுவந்தோர் அனைவரும் வாக்குரிமை பெற்றபோது காங்கிரஸ் மெட்றாஸ் மாகாணத்தில் 375 தொகுதிகளில் 152இல் மட்டுமே வெற்றிபெற்றது. தமிழகத்தை மட்டும் கணக்கிட்டால் 96/190. அதாவது சரியாக மெஜாரிட்டியின் அளவு! இக்காலத்தில் மற்ற மாகாணங்களில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகள் என்ன? ஒரு சாம்பிள் தருகிறேன்:

பாம்பே: 269/315
பிகார்: 239/330
உபி: 388/430
மேற்குவங்கம்: 150/238
ஹைதராபாத்: 93/175

பல மாநிலங்களில் 80% தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருக்க, தமிழகத்தில் 50 சதத்துக்கே தத்தளித்திருக்கிறது. நிஜாம் ஆட்சி நிகழ்ந்த ஹைதராபாதிலேயே மெஜாரிட்டிக்குமேல் கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் அதுகூட இல்லை. பெரிய மாகாணங்களில் மெட்றாஸில் மட்டுமே காங்கிரஸ் ஆட்டம் கண்டிருக்கிறது. பிற அனைத்திலும் ஸ்வீப்!

இதனாலேயே காமராஜ் 1957இல் “வாய்ப்புள்ளவர்களுக்கு வாய்ப்பு” என்ற அற்புதத் திட்டத்தைக் கொண்டுவரநேர்ந்தது. அதாவது எவருக்கு வெல்ல வாய்ப்பிருக்கிறதோ அவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்கும். காங்கிரஸ் அதன்பிறகே 151/206 வென்றது. அண்ணாதுரை கீழ்க்கண்ட வசனத்தைப் பேசினார்: “காங்கிரஸ் ஒன்றும் காந்தி கட்சி அல்ல, அது பூண்டி வாண்டையார் கட்சி, வலிவலம் மூப்பனார் கட்சி, … , ஆனால் திமுகவோ சாமானியர்களின் கட்சி”.

சுரேஷ் சொல்வதுபோல் காங்கிரஸ் வலிமையான கட்சியாக இருந்திருந்தால் “வாய்ப்புள்ளவர்களுக்கு வாய்ப்பு” எதற்கு? கட்சிக்காரர்களையே போட்டியிடச் செய்திருக்கலாமே? காங்கிரஸில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே தலைவர் காமராஜர் மட்டுமே. பிற அனைவரும் (பக்தவத்சலம், கக்கன் உட்பட) கறாரான நிர்வாகத்திற்குப் பெயர்பெற்றவர்கள் அவ்வளவுதான். அண்ணாதுரை 1967இல் வரநேர்ந்தது காமராஜர் 1963இல் மாநில அரசியலைவிட்டு வெளியேறியதன் காரணமாகவே.

ஆம் காங்கிரஸ் கட்சிக்கு வட இந்தியாவில் இருந்த பலம் தமிழகத்தில் கிஞ்சித்தும் இல்லை. அதற்கு சாட்சி 1952 தேர்தல். ஆதிக்க சாதியனருக்கும் அன்றைய முதலாளிகளுக்கும் டிக்கட் கொடுத்தே காங்கிரஸ் வளர்நேர்ந்தது. இதை நான் எழுதக் காரணம் திராவிடக் கட்சிகளுக்கு ஆதரவு இருந்தது என்ற கோமாளித்தனமான வாதத்தை மெய்ப்பிப்பதற்காக இல்லை. 1952இல் காங்கிரஸுக்குக் கிடைத்த வாக்குகள்கூட திமுகவுக்கு (எந்தக் காலத்திலும்) கிடைத்ததில்லை. ஆனால் காங்கிரஸ் எங்காவது வலுவிழந்திருந்ததென்றால் அது தமிழகத்திலேயே என்பதைச் சுட்டிக்காட்டவே எழுதுகிறேன். என் மனப்பதிவு இதுவே. தவறுகளை நண்பர்கள் சுட்டலாம்.

 

திருமூலநாதன்

 

முந்தைய கட்டுரைநஞ்சின் மேல் அமுது
அடுத்த கட்டுரைஒளியை நிழல் பெயர்த்தல்