‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63

பகுதி எட்டு : நூறிதழ் நகர் – 7

அறிக, முட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத அளவு சிறியது. எண்ணமும் அறியமுடியா நுண்மை கொண்டது. இன்மையின் துளியென்றே எஞ்சும் அணிமை.

தன்னை சுருளென உணர்ந்த கணமே அது விரியத்தொடங்கி முட்டையை அசைத்தது. அதன் நாவென எழுந்த செந்தழல் வெண்முட்டை ஓட்டை உடைக்க அது சொடுக்கித் தலையெடுத்தது. அதன் மூச்சு சீறி எழுந்தது. அதன் மணிவிழிகள் ஒளிகொண்டன. முச்சுருளென அமைந்த அதன் கரிய உடல் எதிரெதிர் ஒழுக்கென ஓட அதன் உடலின் தண்மையில் நீர்த்துளிகளெழுந்தன. வானவானவானென விரிந்த வானில் அது தானெனும்தானாக பேருருக்கொண்டது.

63

அதன் நாவை அனலோன் என்றனர். அதன் மூச்சை காற்று என்றனர். அதன் விழிகளே ஆதித்யர்கள். அதன் உடலின் குளிரலைகளே வருணன். அதன் ஒழுக்கே காலன். அறிக, அதன் விரிந்த பெரும்படத்தில் எழுந்த மின்னலே இந்திரன்!

வெண்முட்டை ஓட்டை உடைத்து முதலில் எழுந்தவன் அனலோன். எங்கும் முதல்வணக்கம் அவனுக்குரியது. ஆக்குபவன், அழிப்பவன், சமைப்பவன், உண்பவன், தூயன், பொன்னன், ஒளியன், கனலன். அவனை வழுத்தின உயிர்க்குலங்கள். தங்கள் உடலால் அவனை நடித்தன நாகங்கள். முதன்மைத் தெய்வமென அனலோன் அவர்கள் இல்லங்களில் சுடராகவும் முற்றங்களில் எரியாகவும் வீற்றிருந்தான். காற்றுடன் அவன் விளையாடினான். காலனுக்கு பணிசெய்தான். வருணனின் மேல் ஏறிவிளையாடினான். ஆதித்யர்களை நோக்கி கைநீட்டினான்.

ஆனால் இந்திரனுடன் ஓயாப்பெரும்போரில் இருந்தான். அவன் சினந்தெழும் கரும்புகை அடிமரம் தடித்து கிளைவிரித்து வானைத்தொட்டதுமே அங்கே இந்திரவில் தோன்றியது. இளநகையுடன் முகில்கணங்கள் தோளொடு தோள்தொட்டு வந்து குழுமின. முகில்யானைகள் நடுவே செங்கோடென இந்திரனின் படைக்கலம் மின்னியது. வான்வளைவுகளில் அவன் பெருநகைப்பு எதிரொலித்தது. அவன் குளிரொளியம்புகள் பளிங்குநாணல் பெருங்காடென அனல் மேல் கவிந்து மூடிக்கொண்டன.

நூறு களங்களில் இந்திரனுடன் பொருதித் தோற்று மீண்டவன் கனலோன். முப்புரம் எரித்த முதல்வியின் மும்முனைப் படைக்கலத்திலும் அவள் தலைவனின் நுதலிலும் அமர்ந்து போர்புரிந்தான் என்றாலும் தெய்வங்கள் ஒருபோதும் அனலோன் முழுவெற்றி பெறுவதை ஒப்பவில்லை. ஒருமுறை ஒற்றையொரு களத்தில் இந்திரனை வென்றெழுந்தால் அதன்பின் காலமெல்லாம் தன்உள்ளம் அமைதிகொள்ளும் என்று எரியன் எண்ணினான். அது நிகழ உளம்காத்திருந்தான்.

யுகங்கள் மடிந்து மகாயுகங்களாயின. மன்வந்தரங்களாகி மேலும் மடிந்தன. அவன் விழைவு கைகூடவில்லை. ‘நீரால் அணைக்கப்படாத நெருப்பு எழும் தருணம் ஒன்றே, ஆலகாலகண்டனின் அங்கை நெருப்பு எழும் ஊழிப்பெருந்தருணம். அதுவரை காத்திரு’ என்றனர் முனிவர். ‘என்று? அது என்று?’ என எழுந்தெழுந்து தவித்தான் அனலோன். ‘என்றோ ஒருநாள். முழுமையின் நாள் அது. பரிமுக எரியெழுந்து புரமழியும் நாள் அது’ என்றது கேளாஒலி.

எவரும் வெல்லாத போர்களை மட்டுமே மானுடம் நினைவில் வைத்திருக்கிறது. அப்போர்கள் முடிந்தபின்னர் தெய்வங்கள் களம் நின்று அமலையாடுகின்றன. பேய்கள் உண்டாடுகின்றன. பெரும்போர்கள் வழியாகவே இந்த நதி தன்னை திசைதிருப்பிக்கொள்கிறது. இந்த ஆமை விழிதிறந்து மெல்ல அசைந்து மீண்டும் துயில்கொள்கிறது. போர்களை வாழ்த்துக! போரில் எழுகின்றன தெய்வங்கள். போரில் மறைகின்றன, மீண்டும் பிறந்தெழுகின்றன.

ஐங்குலநாகங்களால் வெளியேற்றப்பட்ட அருணரும் அவருடன் சென்ற இளையோரும் உரகர் குலத்தில் உயிரூன்றிப் பெருகி பெருங்குடியென எழுந்தனர். விரைவும் வெந்நஞ்சும் இணைந்த அவர்களை வெல்ல எவருமிருக்கவில்லை. அவர்களுக்குத் துணையென இந்திரனின் மின்படை எப்போதுமிருந்தது. அவர்கள் ஆணையிட்ட காட்டில் அனல்தூணென இறங்கி சுட்டெரித்தது அது. அவர்களைத் தடுத்த மலைகளை அறைந்து பிளந்தது. உரகர்கள் பறக்கத்தொடங்கினர்.

இமயமலையுச்சியில் தட்சபுரம் எனும் அவர்களின் நகரம் எழுந்தது. பறக்கும் நாகர்களான தட்சர்களின் அத்தலைநகரத்தைச் சுற்றியிருந்த பன்னிரண்டு மலைமுடிகளையும் ஏழு அடர்காட்டுச்சமவெளிகளையும் அவர்கள் ஆட்சிசெய்தனர். முகில்குவைகளிலிருந்து ஒளிநூலில் இறங்கி அவர்கள் காடுமேல் பரவி ஊனும் அரக்கும் காயும் கனிகளும் கொண்டு மலைபுகுந்தனர். சமவெளிகளில் வாழ்ந்த எட்டு மலைக்குடிகளின் நூற்றெழுபது சிற்றூர்களில் திறைகொண்டனர்.

தேஜோவதியின் கரையில் அமைந்த பீதசிலை என்ற சிறுதுறைமுகத்தில் அவர்களிடம் வணிகம் செய்ய கங்கைவணிகரும் சிந்துவணிகரும் கீழ்நிலங்களில் இருந்து வந்து மலைச்சரிவில் தேவதாருக்களின் அடியில் கட்டப்பட்ட யானைத்தோல் கூடாரங்களில் காத்துக்கிடந்தனர். பொன்னும் பட்டும் படைக்கலங்களும் மதுவும் கொண்டுவந்து நிகராக வைரக்கற்களை வாங்கிச்சென்றனர்.

தட்சநாகர்களின் மலைநகரை மானுடர் எவரும் கண்டதில்லை. யுகங்களுக்கு முன்பே அங்கே பல்லாயிரம் குகைகளில் வான்நாகங்கள் பலகோடிவருடம் வாழ்ந்திருந்தன என்றனர் பழங்குலப்பாடகர். அவர்கள் அங்கே தங்கள் ஒளிரும் விழிகளையும் நச்சுமூத்து இறுகிய நாகமணிகளையும் விட்டுவிட்டு மறைந்தனர். அக்குகைகளுக்குள் கரியமண்ணில் சுடர்ந்து செறிந்திருந்த அவற்றையே தட்சநாகர் கொண்டுவந்தனர் என்றனர்.

சிறிய சந்தனப்பேழைகளுக்குள் செம்பஞ்சுக்கதுப்பில் வைத்து தட்சர் கொண்டு வரும் அட்சமணிகளையும் அமுதமணிகளையும் விழிவிரித்து நெடுநேரம் பார்ப்பவர்கள் நாகவிழியை நேர்கண்ட மயக்குக்கு ஆளானார்கள். அவர்களின் கனவுகளில் சுருள்சுருளென நாகங்கள் எழுந்தன. மையச்சுருளில் ஒற்றைவிழியென அமைந்திருந்தது நஞ்சென தன்னைக்காட்டும் அமுது.

உரகதட்சர் ஆற்றல்கொள்ளும்தோறும் ஐங்குலநாகர்களும் அழுக்காறடைந்தனர். தட்சர்குலத்தின் அரசரான நூற்றிரண்டாவது தட்சர் பிரபவரை தங்கள் ஐங்குலத்து அவைக்கு அழைத்தனர். “இந்திரனுக்குரிய மக்கள் நாங்கள். விண்ணில்பறப்பவர்கள். மண்ணிலிழையும் எவருக்கும் நாங்கள் அடிபணியவேண்டியதில்லை” என்றார் பிரபவர். “நாகர்கள் அனைவரும் பேரரசர் நந்தவாசுகியை பணிந்தாகவேண்டும். குலப்பேரவைக்கு திறைகொடுத்தாகவேண்டும் என்கின்றனர் ஐங்குலமூத்தோர்.”

பிரபவர் அச்சொல்கொண்டுவந்த செய்தியர்களின் முடியை மழித்து காதுமடல்களை வெட்டி திருப்பியனுப்பினார். தங்கள் முன் வந்து நின்ற செய்தியர்களின் துயர்கண்டு நாகமூத்தோர் சினந்தெழுந்தனர். கையிலிருந்த நாகபடக்கோலை தலைக்குமேல் தூக்கி “செல்க! படைகொண்டெழுக!” என்று நந்த வாசுகி அறைகூவினார். “போர்! போர்” என்று கூவியார்த்து எழுந்தது ஐந்நாகர்குலம்.

ஐங்குலநாகர்களும் சினந்து படைகொண்டு எழுந்தபோது விண்ணுலாவிய தேவர்கள் மண்ணிலெழுந்த இடியொலியென போர்முரசொலியை கேட்டனர். அத்தெய்வங்களின் கால்களில் மெல்லிய நடுக்கம் கடந்துசென்றது. போர்நிகழவிருக்கும் நிலத்தில் கூழாங்கற்களின் ஒளியில் விழிதிறந்து அவர்கள் காத்திருந்தனர். மண்ணின் சிறு சுழிகளாக வாய்திறந்து நாதுழாவி குருதிவிடாய் கொண்டனர். சிறுபூச்சிகளின் சிறகுகளில் ஏறி காற்றில் களியாட்டமிட்டனர்.

ஐராவத, கௌரவ்ய, திருதராஷ்டிர குலங்கள் வாசுகி குலத்து அரசர் நந்தவாசுகியை முதனிறுத்தி போர்வேள்வி ஒன்றை மூட்டின. தங்கள் குலமூத்தாரைக் கூட்டி மூதன்னையரை வணங்கி முதற்தெய்வங்களை துணைகூட்டி சொல் நாடினர். நீர்ப்பாவையென எழுந்து வந்த மூதன்னையர் ‘அனலவனை துணைகொள்க’! என்று ஆற்றுப்படுத்தினர். ‘நம் நாக்கு அவன் தழல். நம் விழி அவன் கனல். நம் உடல் அவன் நடனம். அவன் நாமே என்றறிக!’

அசிக்னியின் கரையில் அமைந்த தசபிலக்ஷம் என்னும் அடர்காட்டில் மாபெரும் எரிகுளம் அமைத்து அத்தி, ஆல், அரசு, பலா, முள்முருக்கு என ஐவகை விறகு அடுக்கி மீன், ஊன், எள், எனும் மூவகை நெய்படைத்து மலரும் அரிசியும் அவியாக்கியபோது அங்கே பேராவலுடன் ஆயிரம் நாநீட்டி துடித்து கனலவன் எழுந்தான்.

அவனுக்கு ஊன்நெய்யும் மீன்நெய்யும் ஆநெய்யும் எள்நெய்யும் அவியூட்டி ‘எந்தையே, எங்கள் எதிரியின் கோட்டைகளை அழி. அவன் படைக்கலங்களை உருக்கு. அவன் ஊர்திகளை சிறகற்றுவிழச்செய். அவன் களஞ்சியங்களை கருக்கு. அவன் விழிகளில் அச்சமாக சென்று நிறை’ என்று வேண்டினர். எரிகுளத்தில் எழுந்தாடிய சுடரோன் மும்முறை தலை வணங்கி அவ்வேண்டுகோளை ஏற்று எரியில் சமித் வெடிக்கும் ஒலியில் ‘ஆம் ஆம் ஆம்’ என்று முழங்கினான்.

படையெழுவதை அறிந்த தட்சநாகர்கள் இந்திரனுக்கு செம்மணிச்சரம் போல் குருதியை அவியாக்கி எரிகொடை நிகழ்த்தினர். ‘வீரியனே, வைரனே, வெல்பவனே, எங்கள் குலத்தை காத்தருள். எங்கள் புரத்தை ஆண்டருள். எங்கள் நெற்றிமேல் உன் கொடியை ஏற்று. எங்கள் விழிகளில் உன் வஜ்ரத்தை ஒளிவிடச்செய்’ என்று அவர்கள் பாடியபோது விண்ணிலெழுந்த இடியோசை ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.

உரகதட்சகுலத்தின் மேல் ஐந்து நாகர்குடிகளும் தொடுத்த பெரும்போரை நாகசூதர் சொல்கேட்ட இசைச்சூதர் மட்டுமே அறிவர். மானுட விழிசெல்லா மலையுச்சிகளில் நிகழ்ந்தது அப்போர். ஆயிரமாண்டுகால சினம்கொண்டெழுந்த அனலவன் மலைவெள்ளம் இறங்கிச்சூழ்வது போல தட்சநாகர்கள் உணவுகொள்ளும் காடுகளில் பரவினான். அவர்கள் திறைகொள்ளும் ஊர்களை உண்டான். மீன்கூட்டத்தைச் சூழும் வலையென அவன் செந்தழல்கோட்டை தட்சர்களின் நிலத்தை வளைத்து அணுகி வந்தது.

தங்கள் நிலங்களையும் கோட்டைகளையும் காவலரண்களையும் கைவிட்டு பின்வாங்கிய தட்சநாகர்கள் விண்ணமர்ந்த தங்கள் வெண்முகில்நகரில் நுழைந்து அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்டனர். பறக்கும் கொக்குக்கூட்டத்தின் கால்களென நகருக்குச் செல்லும் வழிகளனைத்தும் மேலே தூக்கப்பட்டு மறைந்தன.

ஐங்குலத்து நாகர்களின் படைத்திரள்கள் நச்சுநுனி வாளிகள் செறிந்த விற்களுடன் சூழ்ந்துகொள்ள தட்சநாகர்கள் புதருக்குள் ஒடுங்கும் முயல்களைப்போல முகில்களுக்குள் புகுந்து தங்கள் குகைக்கோட்ட வாயில்களை மூடிக்கொண்டு மைந்தரைத் தழுவி அமர்ந்து உடல்நடுங்கினர். மேலேற முடியாத நாகங்களும் கீழிறங்க மறுக்கும் நாகங்களும் மூன்றுமாதகாலம் துலாவின் இரு தட்டுகளிலும் நின்றாடி போரிட்டன.

வான்நகர்மேல் வாழ்ந்த தட்சநாகர்களின் களஞ்சியங்கள் ஒழிந்தபோது அவர்கள் முகில்களை நோக்கி கைநீட்டி இறைஞ்சினர். முகில்களை இதழ்களாக்கி இந்திரன் புன்னகைத்தான். அவர்கள் மேல் தவளைகளை மழையென பெய்யச்செய்தான். அள்ளி அள்ளிச் சேர்த்து அனல்சேர்த்து உண்டு களியாடினர் தட்சர்.

நந்தவாசுகி தலைமைநடத்த நாகர்படைகள் காட்டுவிறகையும் தேன்மெழுகையும் அரக்கையும் ஊன்நெய்யையும் கொண்டுவந்து குவித்து அவியூட்டி அனலவனை வளர்த்தனர். நெய்யும் அரியும் மலரும் ஊனும் தேனும் அவியாக்கி காற்றை வாழ்த்தினர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி காற்றிறைவன் கீழ்த்திசையிலிருந்து பல்லாயிரம்கோடி பெருஞ்சிறகுகளை அசைத்து மரங்களைப் பதறச்செய்து நீர்நிலைகளை கொந்தளிக்கவைத்து மலைச்சரிவுகளில் முழங்கியபடி எழுந்து வந்தான்.

அக்காற்றை ஊர்தியாக்கி எழுந்து முன் நெருப்பை படியாக்கி பின்நெருப்பு ஏறிக்கொள்ள, மலைச்சரிவில் ஊர்ந்தேறியது எரி. செந்நிற நாகங்களென மாறி பாறைகளில் தாவிச்சென்று நாகசிலையின் அடிப்பாறைகளை நக்கியது. ‘இதோ இதோ’ என்று நாக்குகள் படபடத்தன.

மேலே தட்சர்கள் உடல்தழுவி விழிநீர் உகுத்து கூவியழுதனர். அக்குரல்கேட்ட இந்திரன் தன் முகிற்படையை ஏவினான். வானம் மூடி இருள்பெருகி குளிர்பரவி காற்று நீர்த்துளிகளாகி பெருமழையென எழுந்தது. அனலோன் சுருங்கி அவிந்து விறகுக்குவைகள் மேல் படிந்தான். சினம் கொண்ட காற்று பாறைகளில் மோதி சிதறிச்சீறி குகைகள் தோறும் புகுந்து விம்மியது. மீண்டும் எரிமூட்டி காற்றிலேற்றினர் நாகர். இந்திரன் அவ்வனல்கீற்றுகளை நீர்க்கைகளை நீட்டி செம்மலர் எனக் கொய்து விண்ணுக்குக் கொண்டு சென்றான்.

பன்னிருமுறை தீயை வென்றது மழை. பன்னிரண்டு முறை நிகர்நிலையில் நின்றபோர் தெய்வங்களுக்குரியது என்பது நெறி. தேவர்களும் விண்வாழும் முனிவர்களும் இறங்கி வந்தனர். நந்தவாசுகி காலையில் குலதெய்வங்களை வணங்கி வெளியே வந்தபோது மெலிந்து உடலொட்டிய ஒரு கிழநாயாக அவர் முன் வந்து நின்றார் குலமூதாதை. அவர் அதன் கண்களை நோக்கினார். நெடுங்காலத்து நீள்பசியால் ஈரமற்று கூழாங்கல் உடைவு என மின்னிக்கொண்டிருந்தன அதன் விழிகள். அவர் அமர்ந்து அதன் கழுத்தை தொட்டார். அதன் உலர்ந்த நா நீண்டு அவர் கைகளை ஈரமில்லாது நக்கித் துவண்டது. உள்ளே சென்று ஊனுணவு எடுத்துக்கொண்டு அவர் வெளிவருகையில் அது விழிமூடி இறந்திருந்தது.

விழிநீருடன் ஒரு கணம் நின்றுவிட்டு தன் கோலுடன் சென்று குலதெய்வப் பதிட்டைப்பெருங்கல் மேல் ஏறி நின்று உரக்க குலத்தோரைக் கூவியழைத்து “உடையோரே, உற்றோரே, இனி போரில்லை. இனி எவ்வுயிரும் இதன்பொருட்டு மடியலாகாது” என நந்தவாசுகி அறிவித்தார். “முதல்போர் என்றும் அறத்திற்காகவே நிகழ்கிறது. இரண்டாம்போர் வஞ்சத்துக்காக. மூன்றாம்போர் அச்சத்துக்காக. நான்காம்போர் விழைவுக்காக. ஐந்தாம் போர் ஆணவத்துக்காக. ஆறாம் போர் வெற்றுறுதி மட்டுமே.”

“நாமோ ஈராறுமுறை போரிட்டு விட்டோம். இப்போரில் இன்று ஈட்டல் இல்லை இழத்தல் மட்டுமே. அறத்துக்காக மடிவது மேன்மை. வஞ்சத்துக்காக மடிவது இயல்பு. அச்சத்துக்கும் விழைவுக்கும் ஆணவத்துக்குமென மடிவது கீழ்மை. வெற்றுறுதிக்காக மடிவது மடமை. போதும் இப்போர்.” அவர் குலம் தங்கள் கைத்தடிகளை தூக்கி “அவ்வாறே ஆகுக” என்றது.

துடிமுழக்கி பலியிட்டு அன்னையரை எழுப்பி அவர்களின் சொல் விழைந்தனர். முதுபூசகர் உடலில் எழுந்த மூதன்னையர் எழுவர் மெய்ப்பும் விதிர்ப்பும் மேவிய உடலின் ஆழத்திலிருந்து சொல்லென எழுந்து வந்தனர். “வஞ்சங்கள் மண்ணுக்கு. விண்ணோ வெறுமை வெளி. அங்குள்ள மலைகளெல்லாம் இங்கு அணுக்களென்றறிக மைந்தரே. அங்குள்ள இன்பங்களோ இங்கிருந்து கனிந்து சொட்டியவை. விண்ணமுதை உண்க! வஞ்சங்களை உதறிவிட்டுச் செல்க!” என்றனர். “ஆணை அன்னையரே” என்று சொல்லி தலைவணங்கினார் நந்தவாசுகி.

அவர் கோல்தாழ்த்திய கணம் இன்னொரு சிறுநெருப்புக்குமிழென வெடித்தெழுந்த அன்னை திரியை “என் வஞ்சம் என்றுமுள்ளது. என் மைந்தரை அணைத்தபடி நான் நின்றிருக்கும் இந்த வெளி வானுமல்ல மண்ணுமல்ல!” என்று கூவினாள். “அன்னையே!” என்று நந்தவாசுகி குரலெழுப்ப “உங்கள் அம்பிலும் வேலிலும் இல்லை நான். என் விற்களையும் தோள்களையும் நானே தெரிவுசெய்கிறேன்” என்று கூவினாள். துள்ளித்திமிர்த்தாடி வெடித்து அணைந்து கரிகனல சீறினாள்.

நந்தவாசுகியும் நாகர்படைகளும் திரும்பிச்சென்றனர். எரியுண்ட பெருங்காடு வெறுமை தாங்கி விரிந்துகிடந்தது. மேலிருந்து அதை நோக்கி தட்சர்கள் விழியலைத்து ஏங்கினர். தட்சர்குலத்து படைத்தலைவர்கள் ரிஷபரும் பிருஹதரும் விஸ்வரும் காலநேமியும் கிருதரும் பூர்ணரும் இறங்கி வந்து அந்த வனத்தில் உலவினர். அவர்கள் கண்டதெல்லாம் கரி மட்டுமே. அக்கரிநடுவே தட்சபுரத்து அரசர் பிரபவரும் ஏழு துணைவியரும் கருகிக்கிடந்தனர்.

“பெரும்புகழ்கொண்ட தட்சகுலம் இன்று அழிந்தது” என்று சொல்லி காலநேமி கண்ணீர் உகுத்தார். “இங்கிருந்து நாம் கொண்டுசெல்ல இனி ஏதுமில்லை” என்றார் விஸ்வர். அப்போது மூதன்னை திரியை குனிந்து விழிகூந்து “பொறுங்கள்…” என்றாள். இறந்துகிடந்த பிரபவரின் ஏழாவது துணைவி சத்யையின் வயிறு அதிர்வதை கண்டாள். அவ்வதிர்வின் மேல் கைவைத்து “உள்ளே மைந்தனிருக்கிறான்” என்றாள்.

அங்கிருந்த கூரியவைரமொன்றால் அவ்வுடலின் வயிற்றைக் கிழித்து உறைந்துகொண்டிருந்த குருதிநிறைந்த கருப்பையின் மென்சுவரை தன் காலால் உதைத்துக்கொண்டிருந்த மைந்தனை இழுத்து வெளியே எடுத்தாள். வாய்நிறைத்த வெண்பற்களுடன் ஒளிமணிக் கண்களுடன் இருந்த மைந்தன் சீறி எழுந்து திரியையின் கைகளை கடிக்கவந்தான். அவள் நகைத்து “நாகன்” என்றாள். “வெல்லற்கரிய தட்சன் இவன்.”

இளையதட்சனை கையில் ஏந்தியபடி அவர்கள் கிளம்பினர். ரிஷபர் தன் தோழர்களிடம் “நாம் இங்கினி வாழ்வதில் பொருளில்லை. எப்பெரும்போரிலும் வென்றவனும் தோற்றவனே. எங்கு செல்வதென்று அறியோம்” என்றார். மூதன்னை திரியை “நாம் அதை இந்திரனிடமே கேட்போம். இதோ இங்குளான் தட்சன். இவனைக் காப்பது விண்ணவன் கடன்.”

நாகர் மலைநகர் மேல் எரி எழுப்பி இந்திரனை வாழ்த்தினர். இளமழை வடிவாக வந்து அவர்களை தழுவினான். அந்த மழைத்தூறல் காட்டிய வழியில் அவர்கள் தங்கள் மைந்தரையும் செல்வங்களையும் தோளிலேற்றிக்கொண்டு நடந்தனர். வெம்மை மாறாத தோல்சுருள் ஒன்றுக்குள் இளையதட்சனை வைத்திருந்தனர். பெரும்பசி கொண்டிருந்த அவனுக்கு பன்னிரு ஈரமுலைச்சியர் மாறிமாறி அமுதூட்டினர். மழைநனைத்த வழியே சென்று யமுனையூற்றை அடைந்து அந்த நதிப்பெருக்கில் ஆயிரம் தெப்பங்களில் ஏறி கீழ்நிலம்நோக்கி சென்றனர்.

அவர்களைச் சூழ்ந்து பெய்த மழையின் வெண்திரைமூடலால் அருகே சென்ற வணிகப்படகுகள் கூட அவர்களை காணமுடியவில்லை. வழிந்து வழிந்தோடி சென்றுகொண்டிருந்தபோது யமுனையின் வடபுலத்தில் விண்வில் வளைந்தெழுந்த காடு ஒன்றைக் கண்டு ரிஷபர் கைசுட்டி “அதோ” என்று கூவினார். அவர்களனைவரும் படகில் எழுந்து நின்று பசுமை குவிந்த அச்சோலையைக் கண்டு கைகூப்பி கண்ணீருடன் வணங்கினர்.

மூதன்னை திரியை அகவிழி திறந்து அனைத்தும் கணித்து அதைப்பற்றி சொன்னாள். யமுனைக்கரையில் இருந்த அக்காடு இந்திரனுக்குரியது. தன் நூறாயிரம்கோடி தேவியருடன் அவன் வந்து கானாடியும் காற்றாடியும் நீராடியும் காமம் கொண்டாடும் மகிழ்சோலை. ஒவ்வொரு இரவும் மழைபெய்யும் அக்காட்டில் மண்ணிலுள்ள அத்தனை உயிர்களையும் அவன் கொண்டு சேர்த்திருந்தான். அணுகமுடியாத சதுப்புகளாலும் நச்சுச்செடிகளாலும் வேலியிடப்பட்ட அந்தச் சிறிய காட்டை அணுவடிவப் பேருலகு என்றாள்.

“இது விழைவின் பெருங்காடு. நாம் வாழவேண்டிய இடம் இதுவே” என்றாள். யமுனைக் கரையொதுங்கி இருள் சூழ்வதுபோல் ஓசையின்றி நிரைவகுத்து அக்காட்டுக்குள் புகுந்து நிறைந்துகொண்டனர். அவர்களுக்குமேல் இந்திரனின் அமுது குளிர்ந்து குளிர்ந்து பொழிந்துகொண்டிருந்தது.

யமுனைக்கும் கங்கைக்கும் நடுவே குளிர்ந்த பசுமையென தேங்கிக் கிடந்த காண்டவம் நூறு நாழிகை நீளமும் ஐம்பது நாழிகை அகலமும் கொண்டது. ஆயிரம்கோடி உயிர்வகைகளால் ஒற்றைப்பேருயிர் என இயங்குவது. குளிரோடைகள் நரம்புகளாக மென்சதுப்புகள் தசைகளாக பாறைகள் எலும்புகளாக காட்டுமரங்கள் மயிர்க்கால்களாக மெய்சிலிர்த்து நின்றிருப்பது.

அதை இந்திரனின் காதலி என்றனர் பாடகர். ஒருகணமும் ஓயாத அவன் முத்தத்தால் காமநிறைவின் கணமே காலமென்றாகி பிறிதொன்றறியா பெருமயல் நிலையில் எப்போதுமிருப்பது. ஒவ்வொருகணமும் பல்லாயிரம் உயிர்கள் பிறப்பதனால் ஜனிதவனம் என்று அழைக்கப்பட்டது. காண்டவத்தை கையில் எடுத்து முகத்தருகே வைத்து நோக்கி பிரம்மன் புன்னகைசெய்தார். அவர் ஆக்கியவற்றில் அழகியது அதுவே.

காண்டவக்காட்டில் குடியேறிய உரகநாகர் அங்கே மழைநிலத்து வேர்ப்படலமென பெருகினர். பிண்டகன் என்று பெயரிடப்பட்ட இளையதட்சன் மூன்றுவயதிலேயே நச்சு அம்புகள் கொண்டு யானைகளை வேட்டையாடி மீள்பவனாக ஆனான். எண்ணிச் சொல்லெடுத்தான். அச்சொல்லுக்கு அப்பால் செல்பவர்களை நோக்கி வில்லெடுத்தான். அரசனென்றே பிறந்தவன் இவன் என்றனர் மூத்தோர்.

பத்துவயதில் பிண்டக தட்சனை ஈச்சையோலையில் நாகபட முடிசெய்து அணிவித்து கல்பீடத்தில் அமர்த்தி அரசனாக்கினர். அன்னை திரியை அளித்த அத்திமரக்கோலை ஏந்தி அமர்ந்து அவன் குடிக்குத் தலைவனானான். அவனை வாழ்த்த விண்ணகம் ஒளிகொண்டு இளமழை பெய்தது. இந்திரவில் காண்டவம் மேல் எழுந்து வளைந்தது.

பிண்டக தட்சனின் குடி நூற்றெட்டு அரசர்நிரையென நீண்டது. காண்டவக்காட்டில் உரகர்களும் நாகர்களும் ஒருகுடியென உடல்தழுவி வாழ்ந்தனர். தட்சகுலத்தின் தண்டுகளென நாகர்களும் வேர்களென உரகர்களும் வளர்ந்தனர். துளியறல் அறியா குளிர்மழை நின்ற அக்காட்டில் எரியென ஒன்று எப்போதும் எழுப்பப்படவில்லை. விண்ணவனின் மின்னலெழுந்த எரியன்றி எதையும் அவர்கள் அறிந்ததில்லை. அவர்களுக்குரிய உணவை மரங்களின் உள்ளுறைந்த வெம்மை சமைத்தளித்தது. விலங்குகளின் குருதியிலோடிய அனல் ஆக்கியளித்தது.

அவர்களின் பசுங்காட்டுக்குள் நீர்வழியும் கல்லுடலில் பசும்பாசிப்படலம் படர்ந்தேற வெறிவிழிகளில் சொல்முளைத்து நிற்க நின்றிருந்தாள் அன்னை மகாகுரோதை. உளத்தாளின் சொல்லெழுந்து மூதன்னையில் முழங்கியது. முதுபூசகியாகிய திரியை அலறி எழுந்து இறையேற்பு கொண்டு சொன்னாள் “அன்னை மறக்கவில்லை மைந்தரே. என் தீராப்பெருவஞ்சம் அழியவில்லை!”

தலைசுழற்றி மண்ணில் அறைந்து கைகள் நாகபடமென எழுந்து நெளிந்தாட அன்னை அறிவுறுத்தினாள் “எரி காத்திருக்கிறது. எங்கோ எரி கனன்றிருக்கிறது. மைந்தரே, அறிக! எரி எங்கோ பசித்திருக்கிறது.”

முந்தைய கட்டுரைமலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
அடுத்த கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 1