சென்ற காலங்கள் -கடிதம்

அன்புள்ள ஜெ ,

21.01.16 அன்று தளத்தில்  வந்திருந்த சென்ற காலங்கள் கட்டுரை,மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது, கூடவே புகைத்திரை ஓவியம் கட்டுரையும். அ,மார்க்ஸின் பதிவையும் முன்னரே படித்திருந்தேன்.அந்தக்  காலத்தை இலட்சியவாதத்தின் யுகம் என்பதோடு. ஒரு Age of Innocence என்று கூட சொல்லலாம். மக்கள் தலைவர்கள் மீதும்  இலட்சியங்கள் மீதும்  . உள்ளார்ந்த மெய்யான  நம்பிக்கையோடு இருந்த காலங்கள்.நானும் உங்களது தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதால் ஒரு தனி ஈர்ப்பு இருந்தது.
         ஆனாலும் இரண்டு கட்டுரைகளிலுமே உள்ள சில விஷயங்கள் குறித்து ஒரு சில மாறுபட்ட கருத்துகளை முன்வைக்க விருப்பம்.. குறிப்பாகக் கீழே உள்ள இந்தக் கருத்தை குறித்து.
             // தமிழகத்தில் காங்கிரஸ் எப்போதும் வலுவான கட்சியாக இருக்கவில்லை. சுதந்திரத்திற்குமுன் அவர்களால் நிலையான ஆட்சியை அளிக்கமுடிந்ததே இல்லை //
  இந்தச் சித்திரம் அவ்வளவு சரியானது என்று நான் நினைக்கவில்லை. எனக்குப் புரியவில்லை. மேலும் அந்த இன்னொரு கட்டுரையில் 1935ல் தேர்தல் அரசியல் காரணமாக காங்கிரஸ் பிளவுபட்டது என்றும்,அதை சரிசெய்ய காந்திக்கு 6 வருடங்கள் தேவைப்பட்டது என்றும் கூறுகிறீர்கள்.நீங்கள் சொல்வது ஸ்வாராஜ்யக் கட்சி பிரிந்தது குறித்து என்றால்,அது நடந்தது 1923ல்.
        ஸ்வராஜ்யக் கட்சி 23லிருந்து 35வரை தனியாக இயங்கி பின் 35ல் காங்கிரசோடு இணைந்தது. தமிழகத்தில் சத்தியமூர்த்தி அதன் தலைவராக அப்போது இருந்தார். காங்கிரஸ் மாகாணத் தேர்தல்களில் முதன் முதலாக போட்டியிட முடிவு செய்தது 1937ல். நீண்ட விவாதத்துக்குப் பிறகு அந்த முடிவை எடுத்தது. அதன் பின் 1937  தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது.
           வாக்குகளின் அடிப்படையில் செயல்படும்  ஒரு ஜனநாயக அமைப்பில், ஒரு கட்சி  தேர்தல்களில் பெரும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அதன் வலிமை தீர்மானிக்கப்படுகிறது.அதன் அடிப்படையில் பார்த்தால்,1937ல் மதராஸ் மாகாணத்தில் நடந்த தேர்தலில் மொத்தம் 215 இடங்களில் 159 இடங்களில் வெல்லுமளவுக்கு வலுவான கட்சியாகவே காங்கிரஸ் இருந்தது. 1920லிருந்து மதராஸ் மாகாணத்தை ஆண்டு வந்த ஜஸ்டிஸ் கட்சி வெறும் 15 இடங்களையே பெற்றது.37லிருந்து 39வரை ராஜாஜியின் தலைமையில், காங்கிரஸ் தமிழகத்தை ஆண்டது.அந்தக் கால கட்டத்தில்தான், மதுவிலக்கு, அரிஜன ஆலயப் பிரவேசம்,போன்ற முற்போக்கான சட்டங்களையும், விற்பனை வரி அறிமுகம் போன்ற நவீனமான சட்டங்களையும் காங்கிரஸ் கொண்டுவந்தது. பின் மிகப் புரட்சிகரமான  ஜமீன்தாரிமுறை ஒழிப்பு மசோதாவை அறிமுகப் படுத்திய சமயத்தில் ,இரண்டாம் உலகயுத்தம் குறித்து காங்கிரசுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் விளைந்த கருத்து வேற்றுமையால் காங்கிரஸ் அமைச்சரவைகள் இந்தியா முழுவதுமே ராஜினாமா செய்தன. இந்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் ஒரு நிலையான அரசாக   மட்டுமல்லாமல், மக்கள் நலம் நாடும் அரசாகவும்  உருவெடுத்திருந்தது.மிகக் குறைந்த அதிகாரங்களையே அது பெற்றிருந்தது என்பதையும் நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
           அதற்குப் பின் உலகப் போர் முடிந்து 1946ம் ஆண்டு நட ந்தத் தேர்தலில் மதராஸ் மாகாணத்தில் காங்கிரஸ்  215க்கு 163 இடங்களை பெற்று முதலில் பிரகாசம் அவர்களின் தலைமையிலும் பின் 49லிருந்து 1952வரை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலும் ஆறு வருடங்கள் நிலையான ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் நீங்கள் சுதந்தரத்துக்கு முன் காங்கிரசால்  ஒரு நிலையான ஆட்சியை அளிக்கவே முடிந்ததில்லை என்று சொல்வது மிகவும் வியப்பளிக்கிறது.
                 1952 தேர்தலில் கட்டுப்படுகளற்ற முதல் தேர்தலிலும் காங்கிரஸ் ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்தில் 375 இடங்களில் 152 இடங்கலைப்  (40% வாக்குகளைப் பெற்று) பெற்றது.அதன் தோல்விகள் முக்கியமாக தெல்ங்கு பேசும் பகுதிகளிலும், மலையாளம் பேசும் பகுதிகளிலும் அமைந்தன.(மலபாரில் 43ல் 4 இடங்கள்.ஆந்திராவில் 143 இடங்களில் 43 இடங்கள்) கம்யுநிஸ்ட் கட்சி 62 இடங்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவானது.பின் ராஜாஜி மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு காமன் வீ ல் கட்சி மற்றும், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிவற்றின் உதவியோடு ஆட்சி அமைத்தார். 54ல் புதிய (குலக்) கல்வி முறை சம்பந்தப்பட்ட சர்ச்சையின் காரணமாக ராஜினாமா செய்தார். 54ல் காமராஜர் பதவி ஏற்றார். ஆகவே தமிழகப் பகுதிகளில் அப்போதும் காங்கிரஸ் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வலுவாகவே திகழ்ந்தது.1957ல் புதிய  எல்லைகள் அமைநத தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.205 இடங்களில் 151 இடங்களில் சுமார் 45.34 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்ந்தது. 62 தேர்தலில் தி.மு.க  சுதந்திரா கட்சியுடனும் கம்யுனிஸ்ட் கட்சியுடனும் தனித்தனியே தேர்தல் கூட்டணி வைத்து 50 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 206 இடங்களில் 139 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. கைப்பற்றிய இடங்கள் குறைந்தாலும் வாக்கு சதவீதம் 46.14% என்று மிக மிக வலுவாகவே இருந்தது.
   பின் 1967ன் வரலாறு நன்றாகவே அறிந்த ஒன்று. ஆனால்  அதிலும் பெரும்பாலானோர் மறப்பது, காங்கிரஸ் 50 இடங்களையே  பிடித்து தோல்வியடைந்தாலும், 41.1 சதவீத வாக்குகளைப் பெற்றது.திமுக தனியாக பெற்ற வாக்குகளின் சதவீதம் 40.69.காங்கிரசின் வாக்கு சதவீதம்,1977ல் எம்ஜிஆர் முதன் முதலாக ஆட்சியைப்  பிடித்தபோது வாங்கியது 33.5 சதவீதம்தான்  என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் எவ்வளவு வலுவாகத் தமிழ்நாட்டில் இருந்தது என்பது புரியும்.மீண்டும் 1971 தேர்தலில் தோல்வியடைந்தபோதும் காங்கிரசின் வாக்கு சதவீதம் 39 ஆக இருந்தது.அப்போது இந்திரா காங்கிரஸ் திமுகவோடு கூட்டணி வைத்து பாராளுமன்றத்துக்கான இடங்களில் 10ல் வென்றது. சட்டமன்றத்துக்கு நிற்கவே செய்யாமல் அத்தனை இடங்களையும் திமுகவுக்கு விட்டுத் தந்து. இதை வைத்துப்பார்த்தால் காங்கிரசின் வாக்கு வங்கி குறையவேயில்லை என்பதை உணரலாம். இந்த தேர்தலில்தான் திமுக ஏறத்தாழ 54 சதவீதம் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றது. எம்ஜியாரின் ,இந்திராவின் புகழின் உச்சத்தில் இது சாத்தியமானது.
            1977 தேர்தல் ஒரு விதத்தில்,தமிழகத்தில் அசாதாரணமானது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் மிகப் பெரும் ஆளுமைகளாக இருந்த பெரியார், ராஜாஜி, காமராஜர் ஆகியோர் இல்லாத முதல் தேர்தல். நான்கு அணிகள் இந்திரா காங்கிரஸ், ஜனதாக் கட்சி, திமுக அதிமுக.காமராஜர் என்ற பெருந்தலைவரின் மறைவுக்குப் பின்னும், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோருக்கு இணையான (பிரபல்யத்தில் சிவாஜி கணேசன் தவிர) அரசியல் ஆளுமைகள் இல்லாத போதும் கூட இந்திரா  காங்கிரஸ் 20.8 சதவீத வாக்குகளைப் பெற்றது. இப்போது ஜனதாக் கட்சியாக மாறியிருந்த காமராஜின் பழைய காங்கிரஸ் 16.8 சதவீதம் பெற்றது. ஆக காங்கிரசின் வாக்கு சதவீதம் மொத்தம் 37க்கும் மேலேயே இருந்தது, இது அதிமுக பெற்ற 35 சதவீதத்தை விட அதிகம் என்பதும், திமுகவின் 25 சதவீதத்தை விட மிக அதிகம் என்பதையும் பார்க்க வேண்டும்.அதற்கு முன்னரே கூட எம்ஜிஆர் திமுகவை விட்டு வெளியே வந்தவுடன் நடந்த இடைத் தேர்தல்களில் காமராஜரின் காங்கிரசே இரண்டாவது இடத்தில் நின்றது. திமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
             1977க்குப் பின் காங்கிரசின் அகில இந்தியத் தலைமை தமிழகத்தை கைகழுவி விட்டு, எம்ஜிஆர், கருணாநிதி,ஆகியோருடன் மாறி மாறிக் கூட்டு வைத்து காங்கிரசை ஒழித்துக் கட்டியது, பின் 89ல் ராஜிவ்காந்தி காங்கிரசை தனியாக நிற்கவைத்து முயற்சித்தபோது காலம் கடந்து விட்டிருந்தது.மீண்டும் கழகங்களை அண்டியே காங்கிரஸ் பிழைத்து வந்தது.  1996ல் வந்த  ஒரு வாய்ப்பை நரசிம்ம ராவ் கெடுத்தார். இதுவே காங்கிரஸ் தமிழ்நாட்டில் தன்  வலிமையையிழந்த வரலாறு.
      இதன் இன்னொரு பக்கமாக, திராவிடக் கட்சிகளின் உண்மையான பலம் என்ன  என்பதையும் நாம் பார்க்கலாம்.இன்று போலி முற்போக்கினரும், திராவிட இயக்கச் சித்தாந்திகளும் கட்டமைப்பது போல திராவிட இயக்கங்களுக்குத் தமிழகத்தில் ஒன்றும் மிகப் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருந்ததில்லை என்பதே வரலாறு . திமுக ஆட்சியைப் பிடித்ததில், நீங்கள் சொல்வது போல, திராவிடக் கட்சிகள் சொல்லிக் கொள்ளும் கொள்கைகளை விட , எம்ஜியாரின் செல்வாக்கும் சினிமா கவர்ச்சியும் ஆற்றிய பங்கே அதிகம்.
     எம்ஜிஆரின் அதிமுகவை ஒரு அசல் திராவிடக் கட்சி என்று சொல்லவே முடியாது. இட ஒதுக்கீடு கொள்கை ஒன்றைத் தவிர வேறு எந்தவிதத்திலும் அது திராவிடக் கொள்கைகளை கைக் கொள்வதில்லை. ஆகையால் அதை விலக்கி விட்டுப் பார்த்தால் திராவிடக் கொள்கைகளுக்கு அசல் வாரிசான திமுகவும் அதற்கு இசைவான கொள்கைகளை உடைய கட்சிகளும் சேர்ந்து ஒரு 30 சதவீத மக்களின் ஆதரவையே பெற இயலும். இதுவே திராவிடக் கொள்கைகளுக்கு தமிழகத்தில் உள்ள உண்மையான ஆதரவு.அன்றிலிருந்து இன்று வரை.நேர்மாறாக இந்திய தேசியம் எனும் கொள்கையை முன்வைத்த காங்கிரசுக்கு இருந்த ஆதரவு, சிறுகச்சிறுக சுயநலமிக்க மனிதர்களின் ஆணவத்தாலும்,கண்மூடித்தனத்தாலுமே இழக்கப் பட்டது என்பதே வரலாறு.
      இதனை ஏன் இத்தனை விரிவாக எழுத வேண்டியுள்ளது என்றால், அதற்கு  உங்கள் வார்த்தைகளுக்கு உள்ள வலிமையையும், நம்பகத்   தன்மையும், உங்கள் வாசகப் பரப்பின் விரிவுமே காரணங்கள்.
. காங்கிரஸ் தமிழகத்தில் என்றுமே வலுவானதாக  இருந்ததில்லை எனும் போது , அது முன் வைத்த  இந்திய தேசீயம் எனும்  கொள்கையும் காந்தி நேரு,சாஸ்திரி,ஜெபி, ராஜாஜி காமராஜர் ஆகியோரின் உதாரண வாழ்க்கைகளும்,,,தமிழகத்தில் வலுவாந தாக்கங்களை உண்டாக்கவில்லை   என்று பொருளாகிறது. இதை அ .மார்க்ஸ் ,எஸ்,வி,ஆர்,போன்ற பலர் சொல்லும் போது  இல்லாத நம்பகத் தன்மை நீங்கள் சொல்லும் போது  ஏற்பட்டு உங்களை வாசித்து உங்கள் மூலமாக தமிழக இந்திய  கலாசாரம்,வரலாறு ஆகியவற்றை  அறியக் கூடிய ஆயிரக்கணக்கான இளம் வயதினர் ஒரு தவறான புரிதலுக்கு ஆளாகி விடக் கூடாது என்பதே என் எண்ணம்.
அன்புடன்
சுரேஷ் கோவை.
முந்தைய கட்டுரைவெண்முரசும் பண்பாடும்
அடுத்த கட்டுரைபி.கே.பாலகிருஷ்ணன்