மரபை அறிதல், இரு பிழையான
முன்மாதிரிகள்//
அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். பொதுவாய் வெகுஜன எழுத்தாளர்கள் இலக்கியத்தில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருப்பது அதிசயமே. உங்கள் விளக்கம் சங்க காலத்துச் சேற்று நிலத்துக்கும், போருக்குத் தயாராய் இருந்த அரசனைக் காணவும் அழைத்துச் சென்றது. சுஜாதாவையும் வெகுஜன எழுத்தாளராகவே பிடிக்கும். அவரின் இலக்கிய உரைகள்/கட்டுரைகள் படித்ததில்லை. நன்றி. ஆனால் சுஜாதா இருக்கும்போதே இந்த விவாதம் நடந்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்ததையும் தவிர்க்க முடியவில்லை.
கீதா சாம்பசிவம்.
அன்புள்ள கீதா
நன்றி. இந்த விஷயங்களை அப்போதைய விவாதத்தின் பகுதியாகச் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் சுஜாதா இருந்தபோதே சிற்றிதழ்களில் எழுதியிருக்கிறேன்
ஜெ
*
///ஆளுக்கொரு கலைச்சொல்லை பய்ன்படுத்துவது முறையல்ல. இப்போதுதான் நமக்கு ஊடகவியல் ஆய்வாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். ராஜன்குறை, அ.ராமசாமி, சுந்தர்காளி …. அவர்கள் பேசி முடிவுசெய்து தரட்டும்.
பி.கு
ஆனால் எனக்கொரு பயம் உண்டு. தமிழில் ஒரு விசித்திரம் நிகழ்வதுண்டு. சொல்லாக்கம், சொல் விவாதம் என்றால் மட்டும் எல்லாரும் புகுந்து உற்சாகமாக விவாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அடிப்படை அறிதல் இல்லாதவர்கள். ‘அறிவுபூர்வ’மாகவும் விவாதிக்கவேண்டும், புத்தகம் படிக்கும் வழக்கமும் இருக்கலாகாது என்பதற்கான சிறந்த வழி அது!////
தொல்காப்பியம் தொல்காப்பியரால் எழுதப்பட்டிருந்தாலும் அது பலரது உழைப்பின் கோர்வையான தொகுப்பே. ” To do research after studying all the previous works is like insisting on seeing every female in this world before marrying one” – என்றார் ஒரு கணித ஆய்வாளர். .(அறிஞரல்லா) தனிநபர் சாதனைகள் பலதைச் சுட்டலாம். தமிழிலும் பல இருக்கும் (கல்வெட்டு ஆராய்ச்சி – ஐராவதம் மகாதேவன்?)
எல்லாரும் ஒரு சொல்லை படைக்கமுடியுமானால் படைக்கட்டும்.இன்றைய “தகவலிய” உலகில் தொல்க்காப்பியர் தேவையில்லாமலே “system”மே தொகுத்துக்கொள்ளும். அனைவருக்கும் சொல் படைக்கும் பழக்கமிருந்தால் வேறு யாராவது நல்ல சொல்லை உண்டாக்கித்தரும்போது அதன் அருமையை உணர முடியும்.
(பெரு!)வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாட்டில் கூலிக்கு மாரடிக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இப்படி ஏதாவது வேலை மட்டுமே தமிழோடு உறவாட வழி. காரணம் நீங்கள் சொன்னது போல இது மிக எளிது.
ஒவ்வொரு அணிலையும் அதன் பங்கு மணலைச் சுமக்கவிடுவோமே!
நன்றி
Venkat C
***
அன்புள்ள ஜெயமோகன்,
என் கேள்வியை மதித்து பதில் எழுதியதற்கு நன்றி! ஆனால் உங்கள் பதில் இன்னும் என்னை குழப்புகிறது. :-) நான் கேட்க வந்தது சரியாக வார்த்தைகளில் வரவில்லை என்று நினைக்கிறேன்.
நீங்கள் பரப்பிலக்கியத்துக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு என்று கருதுபவர் என்று தெரியும். அதைத்தான் பல முறை சொல்லி இருக்கிறீர்களே! ஆனால் அந்த இடத்தை விட செவ்விலக்கியத்துக்கு உயர்ந்த இடம் உண்டு என்று கருதுபவர் என்பதும் தெளிவு. புதுமைப்பித்தன் vs கல்கி என்பது ஸ்ரீனிவாச ராமானுஜன்
vs நல்ல கணக்கு வாத்தியார் என்ற உதாரணம் ஒன்று போதாதா உங்கள் கருத்தை புரிந்து கொள்ள? அதைப் போல செவ்விசைக்கு பரப்பிசையை விட உயர்ந்த இடம் உண்டு என்று கருதுகிறீர்களா? நீங்கள் நினைப்பது போல // செவ்வியலிசையை விட பரப்பிசை மேலானது.. // என்று நீங்கள் சொன்னதாக நானும் எண்ணவில்லை.
உல்டாவாக, பரப்பிசையை விட செவ்விசை மேலானது என்று நினைக்கிறீர்களா என்றுதான் கேட்க நினைத்தேன். வார்த்தைகள் சரியாக வரவில்லை என்று நினைக்கிறேன். எஸ்பிபி இளையராஜா போன்றவர்கள் கல்கி ஸ்தானத்தில் இருக்கிறார்கள், தியாகராஜர், மகாராஜபுரம் சந்தானம் புதுமைப்பித்தன் ஸ்தானத்தில் என்று உணர்கிறீர்களா?
எனக்கென்னவோ இன்னும் யோசித்துப் பார்த்தால் இசைக்கும் இலக்கியத்துக்கும் இந்த விஷயத்தில் ஒப்பிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. இலக்கியத்தில் ஒன்றுக்கு உயர்ந்த இடம் அளிப்பது ஓரளவாவது சுலபமாக இருக்கிறது.
புதுமைப்பித்தன் ஜீனியஸ், ஜெயகாந்தன் ஒரு மாற்று குறைவு, கல்கிக்கும் இலக்கிய சாதனை உண்டு, ரமணி சந்திரன் சுத்த வேஸ்ட் என்றெல்லாம் ஜட்ஜ்மென்ட் அடித்துவிட முடிகிறது. ஆனால் பீட்டில்சையும் பாக்கையும் பீதொவனையும், தியாகராஜரையும், இளையராஜாவையும் எப்படி ஒப்பிடுவது என்றே தெரியவில்லை. :-) எனக்கு இசையில் தேர்ச்சி கிடையாது என்பதும் ஒரு காரணமாக
இருக்கலாம். (இலக்கியத்தில் மட்டும் உண்டா என்று கேட்காதீர்கள், சரியோ தவறோ தரம் பார்த்து சொல்லும் தைரியம் இருக்கிறது. :-) )
அன்புடன்
ஆர்வி
அன்புள்ள ஆர்வி
நான் என் தரப்பை சொல்லிவிட்டேன். மிச்சக்கேள்விகள் உங்களுடையவை. அவற்றை நீங்களே சிந்தித்து குழம்பி தெளிவடைய வேண்டியதுதான்
ஜெ
*
இனிய ஜெ அவர்களுக்கு,
நீங்கள் எழுதிய கட்டுரை தொகுப்பு நூல் நிகழ்தல்- அனுபவ குறிப்புகள்
படித்தேன். ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் சுவையாகவும் இருந்த்து.
1 புனைவு எழுத்துக்க்களை விட , இனிமேல் இது போன்ற
எழுத்துக்களுக்குத்தான் வரவேற்பு இருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக சிறுகதை என்பது அழிந்து விடுமோ என்றும் தோன்றுகிறது. நீங்களே சொல்லி இருக்கிறீர்கள், சிறுகதை குறித்து கடிதங்கள் வருவதில்லை என .. என்ன நினைக்கிறீர்கள்? புனைவை விட இது போன்ற எழுத்தில் கருத்தை நேரடியாகவும் , நேர்த்தியாகவும் சொல்ல முடியுமா?
2 சுந்தர ராமசாமி மேல் நீங்கள் வைத்து இருக்கும் மரியாதை புத்தகம்
முழுதும் தெரிகிறது. அவர் உங்கள் ரோல் மாடல், குரு என புரிகிறது. அதே அளவு மரியாதை என் போன்றோருக்கு எழுத்துச் சித்தர் பாலகுமாரன் மேல் உண்டு . அதை ஏன் நீங்கள் அங்கீகரிப்பதில்லை. ? ஒரு வித இளக்காரத்தோடு பாலகுமாரம் வாசகர்களை அணுகுவது ஏன்? பாலகுமாரன் வழியாக , உங்களை அடைந்தவர்கள் அனேகம் பேர் என்பதை நீங்கள் அறிவீர்களா?
3.உங்கள் தாய்மொழி மலையாளம் என்பது ஆச்சரியாமான ஒன்று. கேரளா செல்லும்போது அங்கு உங்களை தமிழராக பார்க்கிறார்களா . மலையாளியாக பார்க்கிறார்களா? ( நாங்கள் உங்களை தமிழராகத்தான் பார்க்கிறோம் )
புத்தகம் குறித்து என் கருத்து இதில் …
http://pichaikaaran.blogspot.com/2010/09/blog-post_296.html
with warm regards,
Ravi
அன்புள்ள பிச்சைக்காரன்
நன்றி.
சிறுகதை சார்ந்து கருத்துக்கள் அதிகம் வருவதில்லை என்பதற்கான காரணம் அதைச்சொல்ல ஒரு பயிற்சி தேவை என்பதே. மற்ற விஷயங்களுக்கு அப்படி அல்ல
உலகமெங்கும் வாழ்க்கைவரலாறு மற்றும் சிறுகட்டுரைகளுக்கு இருக்கும் வரவேற்பு சிறுகதைகளுக்கு இல்லை. அந்தவடிவமே 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கி கிடக்கிறது. ஒரு ஆறு மேட்டில் முட்டிக்கொண்டால் சிறிய ஓடைகளாக பிரிந்து திசை தவறும். அதே போன்றே இலக்கியவடிவங்களுக்கும் நிகழ்கிறது. சிறுகதையில் சென்ற சில ஆண்டுகளாக நிகழ்ந்த பலவகையான சோதனைகளும் அவற்றில் இருந்து பெரிதாக எதுவும் நிகழாததும் அவ்வடிவம் மெல்ல அதன் வளர்ச்சியை இழக்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்கின. சென்ற சில வருடங்களாக சோதனைகளை கைவிட்டு பழைய செவ்வியல் வடிவமே நாடப்படுகிறது
பாலகுமாரனை நீங்கள் போற்றுவதை நான் தூற்றவில்லை. அதில் பிழையும் இல்லை. ஆனால் முன்னால் செல்ல நிறைய தூரம் இருக்கிறது என்பதைச் சொன்னேன். நீங்கள் அதை பொருட்படுத்தாமலும் இருக்கலாம். உங்கள் வசதி
குமரி மாவட்டத்தினர் கேரளத்தில் தமிழர். தமிழ்நாட்டில் மலையாளிகள். ஆனால் நாங்களே உண்மையான தொல் தமிழ் பண்பாடு கொண்டவர்கள்
ஜெ
***
நன்றி. நான் இவற்றை வாசித்துவிட்டேன். பழந்தமிழ்ப் பாக்களுக்கு சுஜாதாவின் உரை குறித்து ஜெயமோகன் எழுதியதோடு ஒத்துப் போகிறேன் என்றாலும் இவ்வளவு நெருக்க வேண்டுமா என்றும் யோசிக்கிறேன். பாலகுமாரனின் எழுத்துகளைப் பற்றி எழுதியதற்குக் கிளம்பியன போல் எதிர்வினைகளுக்கு வாய்ப்பாகக் கூடும்.
ராஜ சுந்தரராஜன்
அன்புள்ள ராஜசுந்தரராஜன்
நடப்பது நடக்கட்டும். இந்தமாதிரி ஒரு பொதுவெளியில் இலக்கியம் என்ற அறுபடாத இழையைப்பற்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாசிப்பையும் வளர்ச்சியையும் நிறுத்திக் கொண்ட பலர் வசைபாடுவார்கள். மிகச்சிலர் முன்னால் செல்வார்கள். அவர்களுக்காகவே எழுதுகிறேன்
ஜெ