‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59

பகுதி எட்டு :நூறிதழ் நகர் 3

அவைக்குள் நுழைந்த முதற்கணம் திருவிழாப் பெருங்களமென அது பெருகி நிறைந்திருப்பதாக கர்ணன் நினைத்தான். ஆனால் பீடத்தருகே சென்று அமர்வதற்கு முன்பு நோக்கியபோது மேலும் பெரும்பகுதி ஒழிந்து கிடப்பதை கண்டான். குடியவைகளிலும் வணிகர்மன்றிலும் பதினெட்டுப் பெருவாயில்களினூடாக தங்கள் குடிகளையும் நிலைகளையும் அறிவிக்கும் தலைப்பாகைகளும் சால்வைகளும் அணிந்து கைகளில் முத்திரைக்கோல்கள் ஏந்தி அவையினர் வந்து நிரம்பிக்கொண்டே இருந்தனர்.

துச்சலன் அவன் அருகே குனிந்து “நாற்பத்திரண்டு ஆரியவர்த்த அரசர்களும் நூற்று எழுபத்தாறு ஆசுர அரசர்களும் பன்னிரண்டு அரக்கர் குடித்தலைவர்களும் எண்பத்தாறு நிஷாத குடித்தலைவர்களும் வந்திருக்கிறார்கள் மூத்தவரே” என்றான். அவனருகே அமர்ந்திருந்த சுபாகு “எண்பத்தெட்டு” என்றான். துச்சலன். “அதெப்படி?” என்று மீண்டும் எண்ணத்தொடங்கினான். பீமபலன் “கைசுட்டி எண்ணாதீர்கள் மூத்தவரே. அதை இங்கு வேறெவரும் செய்வதில்லை” என்றான்.

“விந்தியனுக்கு மறுபக்கம் இருந்தும் வந்துளார்கள்” என்றான் சமன். “வேசரநாட்டில் விஜயபுரத்திலிருந்து குந்தலர்களின் அரசர் ஆந்திரேசன் நன்னய்ய வீரகுந்தலர் வந்துளார் என்று அரண்மனை ஏவலன் சொன்னான்.” கர்ணன் திரும்பி நோக்கியபோது அவை நிரம்பியபடியே சென்று கொண்டிருந்தது. மேலும் சற்று நேரத்தில் அது மறுபக்கக் கரையை முட்டி எழும் என்று தோன்றியது. ஏவலர் முன்நிரையிலிருந்து அனைவருக்கும் இன்கடுநீரும் சுக்குமிளகும் தாம்பூலமும் அளித்தபடி நன்கு வளைந்த முதுகுடன் ஓசையற்ற காலடிகளுடன் அவையெங்கும் பரவினர். அனைத்து அரசர்களும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தாலும் அவர்களின் ஓசை திரண்டெழுந்து முழக்கமென கூடத்தை நிறைத்திருந்தது.

நேர்முன்னால் அரைவட்ட வடிவமாக அமைந்திருந்த வெண்சுதையாலான அரசமேடையின் நடுவே இரு தூண்களில் கட்டப்பட்டிருந்த திரைச்சீலையால் அப்பாலிருந்த அரியணைகள் மறைக்கப்பட்டிருந்தன. இருபக்கமும் இரண்டு பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் பீமனின் சிம்ம முத்திரையும் அர்ஜுனனின் குரங்கு முத்திரையும் நகுலனின் சரப முத்திரையும் சகதேவனின் அன்ன முத்திரையும் இருந்தன. அதற்குப் பின்னால் வலப்பக்கத்தில் கங்கை நீரேந்திய வைதிகர்குழாமும் மங்கலச்சேடியரும் காத்து நிற்க, இடப்பக்கம் சூதர் தங்கள் இசைக்கலங்களுடன் காத்து நின்றனர்.

ஒவ்வொன்றும் நூறு முறை ஒத்திகை நோக்கி வகுத்தது போல் முற்றிலும் ஒத்தியைந்திருந்தன. எந்த அமைச்சரும் பதற்றத்துடன் கைவீசி ஆணைகளை பிறப்பித்தபடி குறுக்கே ஓடவில்லை. ஒருவர் சொல்வது பிறிதொருவருக்குப் புரியாமல் மாறி மாறி கையசைக்கவில்லை. சகன் “மூத்தவரே, இந்த அவையில் தங்கள் தலை மட்டும் எழுந்து தெரிகிறது. அவையில் இருக்கும் அரசர்கள் அனைவரும் தங்களை பார்த்துவிட்டனர். பின் நிரையில் இருக்கும் வணிகர்களும் ஐங்குலக் குடியினரும்கூட தங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.

துச்சலன் “அதற்காக தலையை தாழ்த்த முடியுமா என்ன? அனைவருக்கும் மேல் எழுந்து நின்று நோக்க வேண்டுமென்று அவரைப் படைத்த தெய்வங்கள் எண்ணியுள்ளன” என்றான். முன்னிரையில் இடப்பட்ட பீடங்கள் மதுராவுக்கும் மதுவனத்திற்கும் உரியவை என்று தெரிந்தது. வரிப்புலி முத்திரை பொறிக்கப்பட்ட இருக்கையில் வங்கமன்னர் பகதத்தர் அமர்ந்திருந்தார். மத்ரத்தின் சல்லியரை அர்ஜுனன் அழைத்துக்கொண்டு வந்து அமரச்செய்தான். பீமன் பௌண்டரிக வாசுதேவரை அழைத்துவந்து அமரச்செய்தான். பூரிசிரவஸ் வந்தபோது நகுலன் அவனை நோக்கி சென்று தழுவிக்கொண்டான். அணியறைக்குள் இருந்து வந்த சாத்யகி ஓடிவந்து பூரிசிரவஸை கட்டிக்கொண்டான்.

வெளியே முரசொலி எழுந்தது. திரும்பி நோக்கக்கூடாது என்று கண்களுக்கு ஆணையிட்டு செவிகூர்ந்து அமர்ந்திருந்தான் கர்ணன். வாழ்த்தொலிகளிலிருந்து அது மார்த்திகாவதியின் குந்திபோஜர் என்று அறிந்தான். அர்ஜுனன் முதியவராகிய குந்திபோஜரை வலக்கை பற்றி மெல்ல அழைத்து வந்தான். தளர்ந்த உடலும், தொய்ந்த தோள்களுமாக அவர் வந்து அவையிலிருந்த அனைவரையும் பொதுவாக வணங்கிவிட்டு தன் இருக்கையை நோக்கி சென்றார். அவருக்குப் பின்னால் காந்தார நாட்டரசர் சுபலர் தன் மைந்தர்களுடன் வர சகுனி எழுந்து புண்பட்ட காலை நீட்டி நடந்துசென்று அவரை எதிர்கொண்டார். அவரை அழைத்துவந்த சௌனகர் முகமன் உரைக்க சுபலர் மறுமுகமன் சொல்லி சிரித்தார்.

அர்ஜுனனின் விழி ஒருகணம் கர்ணனை வந்து தொட்டுச் சென்றது. அதன் பின்னர்தான் அவைக்கூடத்திற்கு வெளியில் இருந்தே தான் இருக்கும் இடத்தை அவன் பார்த்துவிட்டான் என்பதை கர்ணன் உணர்ந்தான். மீண்டும் முரசொலியும் கொம்பும் எழ வாழ்த்தொலிகள் பலராமர் வருவதை சொல்லின. கர்ணன் அவை வாயிலை நோக்கினான். இரு கைகளையும் தூக்கி வணங்கியபடி பெருஞ்சிரிப்புடன் உள்ளே வந்த பலராமருக்குப் பின்னால் பீமன் தரையில் இழைந்த அவரது மேலாடையை தூக்கியபடி வந்தான்.

தன் இருக்கையிலிருந்து எழுந்த துரியோதனன் விரைந்த காலடிகளுடன் பலராமரை அணுகி அவர் கால்களைத் தொட்டு வணங்கினான். அவன் தலையை தன் பெரிய வெண்கையால் அறைந்து ஏதோ சொல்லி நகைத்தபடி பலராமர் மதுவனத்தின் கொடி பறந்த இருக்கையில் சென்று அமர்ந்தார். மீண்டும் ஒருமுறை வணங்கியபின் நிமிர்ந்து பீமனை நோக்கி துரியோதனன் ஏதோ முகமன் சொன்னான். பீமனை தழுவிக்கொள்ளும்பொருட்டு அவன் கைகள் அனிச்சையாக எழுவதையும் கைகளை தொடையோடு சேர்த்து வைத்து உடலை இறுக்கி அவ்வழைப்பை பீமன் புறந்தள்ளுவதையும் அத்தனை தொலைவிலிருந்தே காணமுடிந்தது.

உடல்மொழியை விழி அறியும் விரைவும் நுட்பமும் எத்தனை வியப்புக்குரியது என்று கர்ணன் எண்ணிக்கொண்டான். துரியோதனன் மீண்டும் ஒரு முகமன் சொல்லி தலைவணங்கியபின் சென்று தன் பீடத்தில் அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து வந்து இருபுறமும் நின்றிருந்த துர்மதனும் துச்சாதனனும் பீமனுக்கு முகமன் சொல்லிவிட்டு திரும்பிச்சென்றனர். பீமனின் முகம் வெறுப்பு நிறைந்ததாக இருப்பதை அத்தனை தொலைவிலேயே கர்ணன் கண்டான். அதில் சிலைத்தன்மையே இருந்தது. ஆனால் அது வெறுப்பாலானதெனத் தோன்றியது. அது தன் உளமயக்கா? இல்லை. உண்மையிலேயே அப்படித்தான். அத்தூண்களைப்போல அத்துணை புறவயமானது.

பீமனின் விழிகள் தன்னை நோக்கி திரும்பும் என எதிர்பார்த்து கர்ணன் விழிநட்டிருந்தான். பீமன் அர்ஜுனனை நோக்கி விழிகளால் ஏதோ சொல்லிவிட்டு வெளியே சென்றான். அர்ஜுனன் அரசுமேடையைக் கடந்து அணிச்சேடியருக்கு நடுவே நடந்து உள்ளே சென்றான். கூடத்திற்கு அப்பால் இருந்து பீமன் அவனை நோக்கிக் கொண்டிருப்பதை தன் உடலால் உணரமுடிந்தது. மறுபக்கமிருந்து மீண்டும் வாழ்த்தொலிகளும் முரசொலிகளும் எழுந்தன. வசுதேவர் பீமன் தொடர உள்ளே வர பலராமர் எழுந்து தந்தையை வணங்கி அழைத்து வந்து அவர் அமர்ந்தபின் தான் அமர்ந்தார். கர்ணன் ஒழிந்த பீடங்களுக்காக விழிசுழற்றி ஏதுமில்லை என்பதை கண்டான்.

சேதிநாட்டு தமகோஷருக்கு அருகே விதர்ப்ப அரசர் பீஷ்மகர் அமர்ந்திருந்தார். கோசலமன்னர் நக்னஜித்தை கர்ணன் அடையாளம் கண்டான். அணியறையிலிருந்து தன் மைந்தர்களில் ஒருவனுடன் துருபதன் வந்து அஸ்வத்தாமனை வணங்கி முகமன் சொன்னபின் அருகே அமர்ந்தார். சௌரபுரத்தின் கதிர்க்கொடியுடன் அரசர் சமுத்ரவிஜயர் தன் மைந்தர் ஸினியுடன் அவைபுகுந்தார். மணிபூரகத்தின் அரசர் சித்ரபாணன் அர்ஜுனன் அழைத்துவந்து அவையமரச் செய்தான். சிபிநாட்டரசர் கோவாசனருக்குத் துணையாக நகுலன் பீடம் வரை வந்தான்.

அவை நிரம்பியதை அறிவிக்கும் கொம்பொலி எழுந்தது. தொடர்ந்து கூடத்தில் இருந்த கதவுகளை வீரர்கள் ஒவ்வொன்றாக மூடினர். அப்பெருங்கதவுகள் அனைத்தும் தரையில் இரும்புச் சக்கரங்களில் அமைந்திருந்ததால் ஓசையின்றி வந்து பொருந்திக் கொண்டன. கதவுகள் அனைத்தும் மூடப்பட்டதும் கூடத்தின் எதிரொலிகள் அனைத்தும் அவிந்து கூரை முழக்கம் மறைந்தது. ஒவ்வொரு மூச்சொலியும் அணிகுலுங்கும் ஒலியும் கேட்கும் அமைதி எழுவதை கர்ணன் உணர்ந்தான். எங்கிருந்து எவர் பேசினாலும் அனைவருக்கும் கேட்கும் விதமாக அக்கூடத்தின் வளைமுகடு அமைக்கப்பட்டிருந்தது. பெரும்பூதமொன்றின் உதடு என அது ஒவ்வொரு செவியிலும் வந்துபேசியது.

பீமன் அவையை குறுக்காகக் கடந்து அணிச்சேடியர் நடுவே நுழைந்து அப்பால் மறைந்தான். வைதிகர்நிரையை அணுகி ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்களைப் பேசியபின் சௌனகர் அரசமேடையில் ஏறி நின்றார். அவருக்குக் கீழே பிற சிற்றமைச்சர்கள் நின்றனர். சுரேசரிடம் சௌனகர் ஏதோ ஆணையிட அவர் சென்று நிமித்திகனிடம் அறிவித்தார். அறிவிப்பு மேடையில் ஏறிய நிமித்திகன் இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் பொறிக்கப்பட்ட வெள்ளிக்கோலை தலைக்கு மேல் தூக்கியதும் அவைமுரசுகள் அனைத்தும் பேரொலி எழுப்பி சுழன்றன. கொம்புகள் பிளிறி ஓய்ந்து துதிக்கை தாழ்த்த கூடமுகட்டின் குவை ரீங்கரிக்கத் தொடங்கிற்று. பெரும் கடற்சங்கு ஒன்றுக்குள் அமர்ந்திருக்கும் உணர்வை கர்ணன் அடைந்தான்.

நிமித்திகன் உரத்த குரலில் “வெற்றி விளைக! புகழ் எழுக! செல்வம் பெருகுக! மூதாதையர் கனிக! தேவர்கள் மகிழ்க! தெய்வங்கள் அருள்க!” என்று கூவினான். அவை கைதூக்கி வாழ்த்தொலித்தது. “அவையோரே, இன்று சித்திரைமாதம் முழுநிலவுக்கு முந்தைய நாள். நாளை பாரதவர்ஷத்தின் முதன்மைப்பெருநகரியாகிய இந்திரப்பிரஸ்தத்தின் நிலைக்கோள்விழா காலை முதற்கதிர் எழுகையில் தொடங்குகிறது. அவ்விழவுக்கு அணிசெய்யும்பொருட்டு நகர்புகுந்திருக்கும் அரசரை வரவேற்று முறைமை செய்வதற்காக இவ்வவை கூடியுள்ளது. இந்திரப்பிரஸ்தமாளும் பேரரசர் யுதிஷ்டிரர் அவரது பட்டத்தரசியும் பாஞ்சால குலமகளுமான திரௌபதியுடன் எழுந்தருளவிருக்கிறார். தங்கள் வாழ்த்துக்கள் இவ்வவையில் எழுக! குடிகளின் நற்சொற்கள் எழுக! விண்ணிலிருந்து மூதாதையர் அருள் புரிக! முகிற்கணங்களிலிருந்து தேவர்கள் இன்னிசை பொழிக! வேதநற்சொல் இங்கெலாம் எழுந்து பரவுக! ஆம், அவ்வாறே ஆகுக!”

தொலைவில் வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் ஒலிக்கத்தொடங்கின. இரு அணிச்சேடியர் அவைமேடைமேல் இருந்த திரையை இருபக்கமாக இழுத்து திறந்தனர். நடுவே நீலக்கற்கள் மின்னிய அரசரின் அரியணையும் செங்கனற்குவை என அரசியின் அரியணையும் தெரிந்தன. அங்குள்ள அனைவரும் திரௌபதியின் அரியணையை மட்டுமே நோக்கினர். அவ்வாழ்த்துக்களும் இசைமுழக்கமும் அதற்கெனவே தோன்றியது. அது மென்காற்றில் சீறும் கனல்கட்டிகளை அடுக்கி எழுப்பியதுபோல் இருந்தது. அவையசைவுகளில் அது பல்லாயிரம் இமைப்புகள் கொண்டது.

இசைச்சூதர்களை நோக்கி அவர்களின் கோல்காரன் தண்டெடுத்து தலைமேல் சுழற்ற முழவும் குழலும் சல்லரியும் சங்கும் மணியும் என ஐந்திசைக்கலன்கள் ஒத்திசைந்து எழுந்த மெல்லிசை அப்பெருங்கூடத்தை நிரப்பியது. ஒவ்வொரு கருவியும் ஒரு பறவையின் ஓசை. முழவென செம்போத்து. குழலென குயில். சல்லரியென நாகணவாய். மயிலின் சங்கு. மணியென நீள்வால்சிட்டு. பராசரரின் புராணமாலிகை சொல்லும் ஐம்புள் நின்றது அங்கே. இப்போது இவ்வெண்ணங்களில் ஏன் என் உள்ளம் உழல்கிறது? இந்தத் தருணத்தை உணர்வெழுச்சிகளின்றி கடக்க விழைகிறேன். மெல்லிய தடிப்பாலத்தை கடக்க விழைபவன் இரு கைகளையும் விரிப்பதுபோல என் எண்ணங்களை பரப்பிக் கொள்கிறேன்.

மங்கலச்சேடியர் இருபக்கமும் விலகி வழிவிட அப்பாலிருந்து இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் பொறிக்கப்பட்ட மாபெரும் இளஞ்செம்பட்டுக் கொடியை ஏந்தியபடி பொன்முலாம் பூசிய கவசமணிந்த வீரனொருவன் குறடுகளை சீர்நடையிட்டு எடுத்து வைத்து நடந்துவந்தான். அவனைத் தொடர்ந்து நான்கு நிரைகளிலாக எண்மங்கலங்கள் கொண்ட தாலங்களுடன் அணிச்சேடியர் வந்தனர். கர்ணன் ஓரவிழியால் அந்த அசைவுகளை நோக்கி மீசையை நீவியபடி முகம் திருப்பாது அமர்ந்திருந்தான்.

மங்கலச்சேடியர் குரவை ஒலித்து பொற்தாலங்களில் ஏற்றப்பட்ட அகல்சுடரை தூக்கிச் சுழற்றி மழைநீர்த்துமியென அரிமலர் அள்ளி வீசி வாழ்த்துக் குரலெழுப்பினர். இசைச்சூதர் பதினெண்மர் பரவியார்க்கும் ஐந்திசைக்கலங்களுடன் வந்தனர். அவர்களுக்கு பின்னால் யுதிஷ்டிரரின் நந்த உபநந்தமுத்திரை பொறிக்கப்பட்ட இளநீலக்கொடியுடன் பொற்கவசவீரன் வந்தான். தொடர்ந்து மின்கதிருக்குக் கீழே வில்பொறிக்கப்பட்ட திரௌபதியின் கொடி. துவாரகையின் கருடக்கொடியும் பாஞ்சாலத்தின் விற்கொடியும் வந்தன. இறுதியில் இருநிரைகளாக நகுல, சகதேவர்களின் சரபக்கொடியும் அன்னக்கொடியும் பீமனின் சிம்மக்கொடியும் அர்ஜுனனின் குரங்குக் கொடியும் ஏந்திய வீரர்கள் வந்தனர்.

கொடியேந்தி வந்த வீரர்கள் அரசமேடை மேல் ஏறி அங்கிருந்த அரியணைகளுக்குப் பின்னால் கொடிகளை நாட்டினர். கொடிக்காரர்களுக்குப்பின் இந்திரப்பிரஸ்தத்தின் செங்கோல் ஏந்திய அமைச்சர் ஒருவர் வந்தார். அவருக்குப் பின்னால் அரசரின் உடைவாள் ஏந்தி முழுக்கவச உடையணிந்த படைத்தலைவன் வந்தான். பட்டுத்தலைப்பாகைகளுக்கும் பாவட்டாக்களுக்கும் மேலே காலையொளிபட்ட வேள்விப்புகை போல வெண்குடை எழுந்தசைவதை காண முடிந்தது. கர்ணன் அறியாமல் அதைநோக்கி விழிகூர்ந்தான். நடத்தலின் அசைவில் இணைந்தும் விலகியும் தெரியும் தலைகளுக்கு நடுவே ஒரு கணத்தில் அணிமலர்ச்சுடர்புகை நடுவே எழுந்தமையும் அனல்விழிக்கொற்றவை என அவள் முகம் தெரிந்து மறைந்தது.

அக்கணத்திலேயே அவள் விழிகளும் தன் விழிகளை சந்தித்து மீள்வதை அவன் உணர்ந்தான். அது உள்ளம் கொள்ளும் மயக்கா? அத்தனை தொலைவில் அத்தனை முகங்களுக்கு நடுவே அவனை மட்டும் அவ்விழிகள் வந்து தொட்டுச் செல்லலாகுமா? எளியவர்கள் எப்போதும் கொள்ளும் மாயை. இருகைகளையும் கூப்பியபடி தருமன் பொன்னூல்பின்னலிட்டு பாண்டிய முத்துச்சரம் சுற்றி முகப்பில் நீலநீள்வைரம் பதித்த சுட்டி கொண்ட இளநீலப் பட்டுத்தலைப்பாகையில் செங்கழுகின் இறகு காற்றில் குலுங்க, மார்பில் நீலக்கற்கள் பதிக்கப்பட்ட விண்மீன்மாலையும் நீலக்கற்கள் பதிக்கப்பட்ட தோள்சிறகும் கைமலர்களும் கங்கணங்களும் கச்சையும் அரைப்பட்டையும் அணிந்து சற்றே கூனல் விழுந்த தோள்களுடன் வந்தான்.

தருமனின் வலப்பக்கம் இளைய யாதவர் பொற்பட்டுத்தலைப்பாகை மேல் விழிதிறந்தபீலியும் மஞ்சளாடையும் அணிந்து கையிலொரு வலச்சுழி வெண்சங்குடன் வந்தார். திரௌபதியின் இடப்பக்கம் அனல்நிறத்தலைப்பாகையில் செங்கழுகின் இறகு தழலாகி நின்றாட அனல்துளிக் குண்டலங்களும் செம்மணியாரமும் அணிந்த திருஷ்டத்யும்னன் உருவிய உடைவாளுடன் வந்தான். பாண்டவர் நால்வரும் தொடர்ந்து வந்தனர். அவர்கள் அவைநுழைந்தபோது மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் கொண்டல்முழக்கமென எழுந்தன. மழையென அரிமலர் வீழ்ந்தது.

வேதியர் கங்கைநீர் தெளித்து எழுதாக்கிளவி ஒலித்து வாழ்த்தினர். அவர்கள் நீர்தெளித்து தூய்மைப்படுத்திய அரியணையை நோக்கி சௌனகர் அரசரையும் அரசியையும் அழைத்துச்சென்றார். அவர்களுக்குமேல் வெண்குடை குலுங்கி அமைய இருபக்கமும் பணிலமேந்திய யாதவனும் படைக்கலமேந்திய பாஞ்சாலனும் நிற்க, இருநிரைகளாக பாண்டவர் நால்வரும் சூழ அவர்கள் அரியணையமர்ந்தனர்.

திரௌபதியின் சிலம்பணிந்த மென்பாதம் ஒற்றி ஒற்றி வைத்த ஒவ்வொரு அடியையும் கர்ணன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் ஆடைமடிப்பின் ஒவ்வொரு வளைவும், அணிகலன்கள் கொண்ட ஒவ்வொரு உலைவும், அருமணிகள் காட்டிய ஒவ்வொரு நகைப்பும் அவன் விழியறிவாயின. கனலணையை தொட்ட அக்கணமே பற்றி தழல்கொள்ளப்போகிறாள் என்பது போல. அவளோ தோள்வளையாது, காற்றுபட்ட சுடரென இயல்பாக இடைமடிந்து அதில் அமர்ந்து, வளையடுக்குகள் குலுங்கியமைந்த கருநாகக் கைகளை எரிவிழியும் பசிநாவும் கொண்டுநின்ற பொற்சிம்மங்களின் பிடரிகள்மேல் படகொடித்தளிர்களென பைய வைத்து, செம்பட்டு மெத்தையிட்ட சாய்வில் நிமிர்ந்து இணைமுலையொசிய இளமூச்சுவிட்டு மெத்தைக்காலடியில் சிலம்பொளிர்ந்த வலக்கால் நீட்டிவைத்து, குழைகள் ஆடி கன்னத்தில் ஒளிநிழல் காட்ட அமைந்து அழியா ஓவியமானாள்.

துரியோதனன் கைவீசி விதுரரிடம் ஏதோ சொல்ல அவர் எழுந்து சௌனகரை நோக்கிச் சென்றார். சௌனகரும் அவரும் பேசிக்கொள்வதை அவையினர் அனைவருமே நோக்குவதை உணரமுடிந்தது. சௌனகர் அரசமேடை நோக்கி செல்ல விதுரர் திரும்பி கனகரிடம் கைகாட்டினார். கனகர் உடல்குலுங்க பின்னால் ஓடி கைவீச பிரமோதரும் கைடபரும் பொற்தாலமொன்றில் தேவயானியின் மணிமுடியை கொண்டுவந்தனர்.

திரௌபதி அவைநுழையும்போது எழுந்த அதே ஓசை மீண்டும் எழுந்தது. துயில்விழிக்கும் யானை போன்ற மூச்சொலி. மெல்லிய பொற்கம்பிகளை வளைத்து எட்டு இதழ்களால் ஆன மலரென அமைக்கப்பட்டிருந்தது தேவயானியின் முடி. அதன் நீர்த்துளி வைரங்கள் அவைக்கு வந்தபோது விண்மீன்களென தெரிந்தன. அரசமேடைக்குச் சென்றபோது அரியணையின் கனலேற்று சுடர்த்துளிகளாயின. தருமனின் முகம் மலர்ந்தது. அவன் திரௌபதியை நோக்க அவள் கரியசிலைமுகத்துடன் இருக்கக்கண்டு நோக்கு திருப்பி தம்பியரை பார்த்தான். நகுலனும் சகதேவனும் புன்னகையுடன் இருக்க பீமனும் அர்ஜுனனும் உறைந்த முகத்துடன் நின்றனர்.

விதுரர் கைகூப்பி “அவையோரே, இது மன்வந்தரங்களின் தலைவர் பிரியவிரதரின் மகள் ஊர்ஜஸ்வதியில் மாமுனிவர் சுக்ரரின் மகளாக கருநிகழ்ந்து மண்ணிறங்கிய பேரரசி தேவயானியின் மணிமுடி. அஸ்தினபுரியின் மூதாதை பேரரசர் யயாதி அவரை மணம்கொண்டு அரியணை அமர்த்தினார். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக தேவயானி அமர்ந்தார். முன்பும் பின்பும் எவரும் அவ்வண்ணம் முழுநிலத்தையும் ஆளும் முடியும் கோலும் கொண்டதில்லை. பாரதவர்ஷத்தின் முதற்பேரரசிக்காக யயாதியின் வேள்வித்தீயில் எழுந்த மயன் சமைத்தது இந்த மணிமுடி. இதைச் சூடும் தகுதிகொண்டவர் பாஞ்சாலத்து அரசி மட்டுமே என்று உணர்ந்தமையால் அஸ்தினபுரியின் அரசர் இதை அவருக்கு பரிசிலாக அளிக்கிறார். இது இனி இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்தரசியின் முடியில் ஒளிவிடுக! எட்டுதிருக்களும் எரிமகள்மேல் அமர்ந்து அருள்க!” என்றார்.

திரௌபதி அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை. அவ்வரியணையில் தொல்தெய்வம்போல் அமர்ந்திருந்தாள். அவளுக்குக் கீழே மண்ணென ஏதுமிலாதது போல். மேலே மாளிகையின் கூரை திறந்து விண்ணெழுந்தது போல். அவளன்றி அப்பெருங்கூடத்தில் வேறெவரும் இல்லையென்பது போல். குடியவை அலையலையென எழுந்து தேவயானியின் மணிமுடியை நோக்கியது. “பாரதவர்ஷத்தின் ஆழியமைந்தோள் வாழ்க! அவள் சூடும் தேவயானியின் மணிமுடி வாழ்க!” என்று முழங்கியது.

சௌனகர் வந்து தருமனருகே குனிந்தார். அவன் ஏதோ சொல்ல அவர் சென்று திரௌபதியருகே குனிந்தபின் அவள் சொல்கேட்டு விழிமாறி தலைவணங்கினார். திரும்பி உடலைக்குறுக்கியபடி விரைந்துசென்று சுரேசரிடம் ஆணையிட இரு ஏவலர் அரசமேடைக்கு வந்து தேவயானியின் மணிமுடியை எடுத்துச்சென்றனர். ஓர் அணிச்சேடி வந்து திரௌபதியின் வலக்கையில் ஒரு செந்தாமரை மலரை அளித்தாள். படைத்தலைவர்கள் கொண்டுவந்து அளித்த செங்கோலை வாங்கி வலக்கையில் பற்றினான் தருமன். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ்ந்து அதிர்ந்தன.

அரசவைக் காவலர் சூழ அமைச்சர் நால்வர் பொற்தாலத்தில் நீலக்கற்கள் பதிக்கப்பட்ட மணிமுடியை கொண்டுவந்தனர். “இந்திரப்பிரஸ்தமாளும் இணையற்ற மாமன்னர் வாழ்க! பாண்டுவின் மைந்தர் வாழ்க! அறச்செல்வர் அடிகள் வெல்க!” என்று வாழ்த்தொலிகள் எழுந்தன. அந்தணர் எழுவர் வேதமோத முதுவேதியர் மூவர் அம்முடியை எடுத்து தர்மனின் தலையில் சூட்டினர். துச்சலன் கர்ணனிடம் “அஸ்தினபுரியின் மணிமுடியின் அதே வடிவில் செய்யப்பட்டுள்ளது மூத்தவரே” என்றான். மறுபக்கமிருந்த பீமபலன் “அஸ்தினபுரியின் கருவூலத்திலிருந்து அளவுகளை முன்னரே எடுத்துச் சென்றிருக்கிறார்கள் மூத்தவரே. அம்மணிமுடிக்கு மாற்றாக இதை வைத்தால்கூட எவரும் கண்டடைய முடியாது” என்றான்.

ஏழு அணிச்சேடியர் தாலத்தில் கொண்டுவந்த திரௌபதியின் மணிமுடியைக் கண்டு துச்சலன் “மூத்தவரே, இது வேறு மணிமுடி!” என்றான். அது செந்தழலால் ஆனது போலிருந்தது. துச்சலன் “அரளிச்செண்டு போல” என்றான். சகன் “மூத்தவரே, இதையா சூடப்போகிறார்கள்? தேவயானியின் மணிமுடியை அல்லவா?” என்றான். கர்ணன் திரௌபதியை பார்த்தான். அறியமுடியாத களிமயக்கொன்றில் அவள் இருந்தாள். கைகளில் கழுத்தில் தோள்களில் கன்னங்களில் இதழ்களில் எங்கும் அந்தக் களிப்பு விழிகளால் அறியமுடியாத ஒரு துடிப்பாக ஓடுவதை கண்டான்.

வேதம் ஒலிக்க வைதிகர் அம்மணிமுடியை எடுத்து அவள் தலையில் சூட்டினார். ஊழ்கத்திலமர்ந்த கொற்றவை. காலடியில் நெஞ்சுபிளந்து கிடக்கும் தாருகனும் ஊழ்கத்தில் இருந்தான். இவ்வோசைப்பெருக்கு ஊழ்கநிலையை திரட்டி வைப்பதன் விந்தைதான் என்ன? கோல்காரன் அறிவிப்புமேடையில் ஏறி அவை தொடங்கவிருப்பதை அறிவித்தான். இரு சூதர்கள் எழுந்து தருமனின் புகழ்பாடும் பாடல் ஒன்றை பாடினர். ஒவ்வொன்றும் பிறிதொரு உலகில் நிகழ்ந்து கொண்டிருக்க பாலையில் கைவிடப்பட்ட ஆலயத்தின் கருவறைக்குள் அமர்ந்த கொற்றவையை நோக்கும் விடாய்கொண்டு உயிர்வறண்ட பயணியென அவன் இருந்தான்.

சடங்குகள் அனைத்தும் முடிந்தன. தருமன் எழுந்து கைகூப்பி அங்கு வருகை தந்துள்ள அரசர்கள் அனைவரையும் வாழ்த்தினான். முதலில் குந்திபோஜரையும், அதன் பின்பு துரியோதனனையும் தொடர்ந்து வசுதேவரையும் பலராமனையும் ஜராசந்தனையும் முறைவரிசைப்படி பெயர் சொல்லி முகமன்கூறி இந்திரப்பிரஸ்தத்தின் நிலைகோள் விழாவுக்கு வரவேற்றான். முறைமை சொற்களை சொல்கையில் அவன் தன்னிடம் எப்போதுமிருக்கும் குன்றலையும் விலகலையும் கடந்து முழுமை கொள்வதாக கர்ணன் எண்ணினான். ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக ஓங்கிய ஒலியில் அவன் சொன்னான். பிறர் சொல்கையில் வெறும் சொற்களேயென ஒலிக்கும் அணியாட்சிகளும் மரபுரைகளும் அவன் மொழியில் நெஞ்சு திறந்து குருதி ஈரத்துடன் வந்து நிற்பவையாக தோன்றின.

அவன் அவற்றை முழுதுணர்ந்து சொல்வதனாலேயே அவ்வுயிர் அவற்றில் கூடுகிறது. முறைமைச் சொற்களை பயின்று தேர்கையில் அவை மேலும் பொய்மை கொள்கின்றன. முறைமைச் சொற்களை நம்பி சொல்பவன் எங்கும் எதிலும் முறைமை மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவனாக இருக்க வேண்டும். சிறு ஐயமிருந்தாலும் அச்சொற்கள் உதிர்ந்த மலர்கள் போல் ஆகிவிடுகின்றன. கர்ணன் பிற பாண்டவர்களை பார்த்தான் அவர்கள் எவர் முகத்திலும் அம்முகமன்களின் உணர்வுகள் வெளிப்படவில்லை. பீமனின் முகத்திலும் பார்த்தன் முகத்திலும் அவற்றுக்கு எதிரான மீறல்கூட தெரிந்தது.

மீண்டும் ஒரு முறை கொம்பு ஊதியதும் சௌனகர் சென்று குந்திபோஜரிடம் குனிந்து ஏதோ சொல்ல அவர் கைகளை ஊன்றி எழுந்துகொண்டார். இரு ஏவலர் பற்றிக்கொள்ள மெல்ல நடந்து மேடையேறிச்சென்று தருமனையும் பாஞ்சாலியையும் வாழ்த்தினார். அவரது குலமுறையையும் பெருமையையும் கோல்காரன் கூவியறிவித்தான். தருமன் அரியணைவிட்டு எழுந்து அவர் கால்களைத் தொட்டு தன் மணிமுடியில் வைத்துக் கொண்டான். திரௌபதி கைகூப்பியபடி நின்றாள். அவர் அவள் தலையை ஒரு செம்மலரால் தொட்டு வாழ்த்தியபின் அவையை நோக்கி கைகூப்பிவிட்டு இறங்கினார். அவருடன் வந்த அமைச்சர் குந்திபோஜர் இந்திரப்பிரஸ்தத்திற்கு அளிக்கும் பரிசில்களை அறிவித்தார்.

அதன்பின் சௌனகர் அவைக்கு திரும்பியபோதே கர்ணன் கனவுநிலை கலைந்தான். சௌனகர் குனிந்து வசுதேவரை அரசமேடைக்கு அழைத்தார். துச்சலன் உரக்க “என்ன இது? மூத்தவரே, குருதிமுறைப்படி நம் தமையனை அல்லவா அழைத்திருக்க வேண்டும்?” என்றான். “அவரைத்தான் அரசரும் அறிவித்தார்” என்றான் துச்சகன். சுபாகு “பொறுங்கள்… ஓசையிடவேண்டாம்…” என்றான். கர்ணனின் உள்ளம் சொல்லிழந்து கல்லென கிடந்தது. அடுத்து பலராமர் மேடையேறியபோது சுபாகு நிலையழிந்து “என்ன இது மூத்தவரே?” என்றான். கர்ணன் தளர்ந்து “நானறியேன்” என்றான்.

“தெரிந்து செய்கிறார்கள். இப்படி செய்ய வேண்டும் என்று ஆணை உள்ளது போலும்” என்றான் துச்சலன். “சௌனகர் இம்முடிவை எப்போதும் எடுக்கமாட்டார். இது அரசியின் ஆணை. ஐயமே இல்லை” என்றான் துச்சகன். கர்ணன் சுபாகுவிடம் “எவரும் எவ்வுணர்வையும் காட்டவேண்டாம் என்று நான் ஆணையிட்டதாக சொல்” என்றான். சுபாகு குனிந்து துச்சலனிடம் சொல்ல அவன் அருகே இருந்த பீமபலனிடம் சொல்ல அச்சொற்கள் கௌரவர்களிடம் பரவின. கர்ணன் துச்சாதனனை பார்த்துக் கொண்டிருந்தான். துச்சாதனனும் துர்மதனும் சினம் கொண்டு நிலையழிந்து உடல் விறைக்க தங்கள் பீடங்களின் கைப்பிடிகளை இறுகப்பற்றி கழுத்துத்தசைகள் இழுபட்டு நின்றிருக்க அமர்ந்திருப்பதை பார்த்தான். ஆனால் துரியோதனன் மலர்முகம் கொண்டிருந்தான்.

பலராமருக்குப்பின் துருபதன் மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரை பீமனும் அர்ஜுனனும் வந்து அழைத்துச் சென்றார்கள். அதன் பின்னரே துரியோதனனை சௌனகர் சென்று அழைத்தார். துரியோதனன் புன்னகையுடன் திரும்பி அவையை நோக்கி கைகூப்பியபின் துச்சாதனனும் துர்மதனும் இருபக்கமும் வர மேடையேறி சென்றான். அவன் குலமுறையைச் சொல்லி நிமித்திகன் அறிவிக்க வாழ்த்தொலிகள் எழுந்தன. தருமன் துரியோதனின் கைகளை பற்றிக்கொள்ள துரியோதனன் தன் வாழ்த்துக்களை தெரிவித்தான். தம்பியர் இருவரும் குனிந்து தருமனின் கால்களைத் தொட்டு சென்னி சூடினர்.

திரௌபதி பாவையென உறைந்த புன்னகையுடன் நின்றாள். துச்சாதனன் தலைகுனிந்து அவளை வணங்கியபோது அவள் தலை அசைந்து அவ்வணக்கத்தை திரும்ப அளித்தது போலும் தெரிந்தது, அசையவில்லை என்றும் தோன்றியது. துரியோதனன் அவையை வணங்கி இறங்கியபோது விதுரர் கைகூப்பி அஸ்தினபுரி அளிக்கவிருக்கும் பெரும்செல்வத்தை அறிவித்தார். அவை ஒரு கணம் அதை நம்பாததுபோல் உறைந்து ஓசையற்றிருந்தது. பின்பு வாழ்த்தோசை எழுந்து கூடத்தின் சுவர்களை அறைந்தது. தருமன் முகம் நெகிழ கைகூப்பினான். திரௌபதி எங்கோ என இருந்தாள். புன்னகையுடன் துரியோதனன் தன் பீடத்தில் அமர சௌனகர் சென்று ஜராசந்தனை மேடைக்கு அழைத்தார்.

முந்தைய கட்டுரைஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு
அடுத்த கட்டுரைபின்நவீனத்துவம் பற்றி வாசிக்க