ஆதியும் அனந்தமும்

Padmanabha_Temple

 

பத்மநாபசாமிக்கும் எங்களுக்கும் நெடுந்தொலைவு இருந்தது, அவர் இருந்தது திருவனந்தபுரத்தில். அக்காலத்தில் எங்களுக்கு அது ஒரு முழுநாள் பயணத்தொலைவு. பல ஆறுகள். பல ஊர்கள். ஆனால் அவர்தான் எங்கள் முழுமுதற்பெருந்தெய்வம். அவர் திருவனந்தபுரம் ஆண்ட மகாராஜாவின் குடும்பதெய்வம். நாங்கள் மகாராஜாவின் பிரஜைகள். நாங்கள் வாங்கி கண்ணிலொற்றி இடுப்பில் கோத்து செத்துவிழுந்தாலும் செலவழிக்காமல் புதைத்து வைத்தது அனந்தபத்மநாப சாமியின் சக்கரம். எங்கள் நிலங்களில் இருந்தது அனந்தபத்மநாபசாமியின் சங்கு முத்திரை பொறிக்கப்பட்ட அளவுக்கற்கள்.

ஆனால் எங்கள்குடும்பம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளுக்கு வழிவழியாக பணியாற்றுவது. வளநீர் வாட்டாற்றான். சங்ககாலத்திலேயே பாடப்பட்ட கோயில்.கோயிலை ஒட்டியே எங்கள் குடும்பவீடு. கோயில்நிலங்களில் விவசாயம். ஆதிகேசவப்பெருமாளையே சற்றே அளவு குறைத்து அதேவடிவில் அமைத்த தெய்வம்தான் அனந்தபத்மநாபன். ஆனாலும் அவர் எங்களுக்கு வேறு தெய்வம். ஆதிகேசவனை மீறி பிறிதொருதெய்வத்தை தொழக்கூடாது.

ஆகவே அக்காலத்தில் என் அப்பா வருடத்திற்கொருமுறை பத்மநாபசாமியின் ஆறாட்டுவிழாவுக்குத் திருவனந்தபுரம் செல்லும்போது கோயிலுக்குச் செல்லமாட்டார். ஆறாட்டுவிழாவன்று சாலையோரம் சரிகைவேட்டியுடன் நின்று வணங்கும்போது அவ்வணக்கம் மகாராஜாவுக்கு மட்டுமாகவும் பத்மநாபனுக்கு அல்லாமலும் அமையும்படி கவனம் கொள்வார். பத்மநாபன் கடுப்புடன் இவரை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டுதான் மலர்வாகனத்தில் நீராடச்செல்வார்.

உடனே நாங்கள் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாளை வணங்குபவர்கள் என எண்ணிவிடவேண்டியதில்லை. நாள்தோறும் கோயிலுக்குள் சென்றாலும் பெண்வழிமரபு கொண்ட நாங்கள் வணங்குவதெல்லாம் பகவதியை மட்டும்தான். பகவதிகோயில்கள் பலசரக்குக் கடைகள் போல, முச்சந்திகள் தோறும் உண்டு. குறிப்பிட்ட பணிக்கு குறிப்பிட்ட பகவதி. முள்ளுகுத்து பகவதி களியலருகே இருக்கிறாள். காலில் விஷமுள் குத்தினால் அவள்தான் பொறுப்பு. கூடவே சாஸ்தாவையும் கும்பிட்டுவைப்போம். ஊன்பலி கொள்ளாத பாவம் சாஸ்தாமேல் அய்யர்கள் மேல் நாயர்களுக்குள்ள ஓர் அனுதாபம் எங்கள் அனைவருக்கும் உண்டு.

பகவதியையே கூட தினமும் வணங்குவதில்லை. உண்மையில் தினமும் வணங்குவது குலதெய்வமான மேலாங்கோட்டம்மனை. அவள் மார்த்தாண்டவர்மாவுக்கு எதிராக போரிட்டு இறந்த உம்மிணித்தங்கை. சரித்திரம் மட்டுமே அளிக்கும் தீராப்பெருவஞ்சத்தால் பகவதியானாள். சரி, பகவதி மாதிரி ஆனாள்.  பரம்பொருள் அல்லதான், ஆனால் குலக்காரர்கள் கேட்டதைக் கொடுக்க அவளால் முடியும் என ஒரு நம்பிக்கை. அதற்காகவே வருடம்தோறும் பொங்காலையும் கொடையும்.

ஆனால் இன்னமும் அணுக்கம் குடும்பதெய்வமான செண்பக யட்சியும் தெக்குவீட்டு மூப்பிலான்மாரும், மூத்தம்மச்சிகளும்தான். ஆனால் அவர்களை வணங்குவதில்லை, நினைத்துக்கொள்வதோடு சரி. தேவை என்றால் கூப்பாடு போடுவோம். உதவி வரவில்லை என்றால் மொட்டைவசை. ”எரணம்கெட்ட மூதேவி. நீயெல்லாம் ஒரு சாமி. உனக்கு நான் குடுத்த கோளிய இப்பம் திருப்பித்தந்தாகணும் , தூக்கி எடுத்து ஆத்திலபோட்டிருவேன் நாறப் பீப்”

இந்த ’இந்துமத’க் கட்டமைப்பைப் புரிந்துகொள்ள குளோட் லெவிஸ்டிராஸின் பிள்ளைகள் ஃபூக்கோவின் பெண்களைத் திருமணம் செய்து, அவர்களின் குடும்பத்தில் டில்யூஸின் குடும்பத்தினர் கொள்வினை கொடுப்பினை செய்து, அவர்களுடன் கோஸாம்பியின் குடும்பமும் ரத்தசொந்தம் கொண்டு, ஒரு தனி ஆய்வாளர்குலம் உருவாகி நிலைபெறவேண்டும். அவர்களுக்கு ஆர்.எஸ்.சர்மா, ரொமீலாத்தாப்பரின் வாரிசுகள் வீட்டுவேலைசெய்யவேண்டும். ஆ.இரா. வெங்கடாசலபதியின் வாரிசுகள் வெற்றிலைமடித்துக்கொடுக்கவேண்டும்.

ஆழ்மனக் கட்டமைப்புகள்,நனவிலி,கூட்டுநனவிலி ஆகியவை பேசப்பட்டு நவீன உளவியலின் அடிப்படைகள் அமைந்த அந்தத் தொடக்க காலகட்டத்தில் திருவனந்தபுரத்தில் வாழ்ந்த வேதாந்த அறிஞரான ஆத்மானந்தர் என்னும் கிருஷ்ணமேனன் மேலைநாட்டு அறிஞர்கள் நடுவே பெரும்புகழ்பெற்றிருந்தார். அவரது மாணவரும் தொன்மவியலின் தொடக்க அறிஞருமான ஜோசஃப் கேம்பல் வழியாக அனந்த பத்மநாபசாமியின் உருவம் புகழ்பெற்றது.

சி.ஜி.யுங்குக்கு விஷ்ணுவைப்பற்றி ஆத்மானந்தர் எழுதியிருக்கிறார். ஃபிராய்டின் மேஜைமேல் அனந்தன் மேல் அமர்ந்த  விஷ்ணுவின் சிலை இருந்தது.  இருண்டமுடிவிலியின் மூன்று சுருள்களின்மேல் பள்ளிகொள்ளும் முடிவிலியாகிய பிரக்ஞை. அமுதமெழும் கடலுக்கு மேல் அவ்விருள்சுருள்கள். அதன் உந்தி. உந்தியிலெழும் தாமரை. தாமரையின் இதழ்களில் எழுந்து இவ்வுலகை படைக்கும் சிருஷ்டிகரம். உளவியல் எளிதில் சென்று தொடமுடியாத உளமறியும் நிலை ஒன்றின் கலைவடிவம்.

அனந்தனை நேரில் பார்க்க சி.ஜி.யுங் கிளம்பிவந்தார் என்கிறார்கள். ஆத்மானந்தர் சமாதியாகிவிட்டிருந்தார். இலங்கையிலிருந்து திருவனந்தபுரம் வந்த யுங் ஆழ்ந்த உளக்கொந்தளிப்புக்காளாகி நோயுற்று கல்கத்தா வழியாக ஊர்திரும்பினார். அவர் உளக்கொந்தளிப்பைப் பதிவுசெய்திருக்கிறார். நஞ்சுச்சுருள் மேல் படுத்த அமுதவடிவினனை ஆலயத்தில் நுழைந்து கண்டாரா எனத் தெரியாது. பின்னாளைய யுங்கியன்கள் மிகமிகக்கவனமாகத் தவிர்த்துச்செல்லும் இடம் இது என்கிறார்கள். ஒரு வசீகரமான கதை – உண்மை எத்தனை என்பதை சொல்லமுடியாது.

நான் சி.ஜி.யுங் திருவனந்தபுரம் வந்ததைப்பற்றி கேள்விப்பட்டபின் ஒருமுறை சென்று அனந்தபத்மநாபனைப் பார்த்தேன். இருளுக்குள் மெல்லிய நிழலுரு. அனந்தரூபன். முதல்முறை பார்த்தபோதெழுந்த அதே துணுக்குறுதல். திருவட்டாற்றில் இருப்பது ஆதிரூபன். எனக்கு மிக அணுக்கமானவன். ஆதிகேசவன் இருட்டுக்குள் கன்னங்கரிய பேருருவாக பள்ளிகொண்டிருப்பதைப் பார்க்கையில் அகம்பிரம்மாஸ்மி என உணர எனக்கு நெடும்பயணம் ஒன்று தேவைப்பட்டிருக்கிறது.

பின்னர் ஒருமுறை உணர்ந்தேன். என்ன ஒரு விடுதலை! நனவிலியடுக்குகள் அனைத்தையும் கழற்றி இப்படி ஓர் ஆலயக்கருவறைக்குள் கொண்டுசென்று படுக்கப்போட்ட பின்னர்தான் என் முன்னோர் ‘ஜாலியாக’ இருந்திருக்கிறார்கள். கஷ்டகாலத்துக்கு எனக்கு அது திரும்பவந்து சேர்ந்திருக்கிறது. அத்வைதமும் குறியியலும் உளவியலும் எல்லாம் சேர்ந்து என்னை இப்படி ஆக்கிவிட்டன

அனந்தபத்மநாபன் நூறுடன் எடை. ஆதிகேசவன் நூற்றெட்டு டன். அந்த எடையைத் தூக்கிக்கொண்டு அன்றாடவாழ்க்கை என்பது எளிதல்ல. எங்காவது ஒரு கோயிலைக்கட்டி கருவறையில் இறக்கித்தொலையவேண்டியதுதான்.

நான் கட்டினால் அது சொற்களில்தான். அதுதான் கட்டுப்படியாகும் எனக்கு.

 

 

ஆத்மானந்தர்

நீலச்சேவடி

முந்தைய கட்டுரைஇறுதி இரவு
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 46