புதியவர்களின் கடிதங்கள் -15

மதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். “அறம்”,  “புறப்பாடு”  வாசித்தேன்.  பின்னது நாவல் இல்லை. இருப்பினும் bildungsroman வகை நாவலின் சாயலில் இருப்பது போல் தோன்றியது.  நம் சூழ்நிலையில்   பெண் எழுத்தாளர்களுக்கு இப்படி பயணங்களோ, அனுபவங்களோ சாத்தியமில்லை. பாவம்!

தங்களது “உலோகம்” படித்தேன். துப்பாக்கியை வருணித்திருந்த விதம் அருமையாக இருந்தது. அது போன்ற sleek ஆன, கைக்கு அடக்கமாக, வாகாக  இருக்கும் பொருள்களைப் பார்க்கும் போது உண்டாகும் உணர்வை அருமையாக வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள். மொழி உங்கள் கையில் நெகிழ்ந்து சொல்ல வருவதையெல்லாம்  அப்படியே வாசகருக்குகே கடத்துவது அதிசயமாக இருக்கிறது.

துப்பாக்கிக்கு  விருப்பு வெறுப்பு  இல்லை, நண்பர் பகைவர் இல்லை. அதுபோல் சில அமைப்புகளில்  வேலை செய்வோர்  இருப்பார்களோ? அந்த அமைப்புகளின்  ideals களில் நம்பிக்கையில்லாமல் அதை ஒரு வேலையாக, கடமையாக  மட்டும் செய்து கொண்டு இருப்பார்களோ? எனக்கு W . B . Yeats இன்  இந்தக்கவிதை  நினைவுக்கு வந்தது.

 

An Irish Airman Foresees His Death

I know that I shall meet my fate

Somewhere among the clouds above;

Those that I fight I do not hate

Those that I guard I do not love;

My country is Kiltartan Cross,

My countrymen Kiltartan’s poor,

No likely end could bring them loss

Or leave them happier than before.

Nor law, nor duty bade me fight,

Nor public man, nor cheering crowds,

A lonely impulse of delight

Drove to this tumult in the clouds;

I balanced all, brought all to mind,

The years to come seemed waste of breath,

A waste of breath the years behind

In balance with this life, this death.

தங்கள் இணைய தளத்திலும் வாசிக்கிறேன். நேற்று படித்த பதிவில் ஒரு பாடலை  youtube இல் பார்த்தபோது ஏற்பட்ட சிந்தனைகளைப்பற்றி எழுதியிருந்தீர்கள். கீட்ஸின் Ode on a  Grecian Urn நினைவுக்கு வந்தது. கலையில் பொருள்களும் மனிதர்களும், செயல்களும்   நிரந்தரத்துவம் பெற்றுவிடுவதைப்பற்றியது.

உங்கள் எழுத்துக்கு  நோபல் பரிசு பெறும்  தகுதி இருக்கிறது என்று  என் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். நோபல் பரிசு பெற்றோரின்   ஆங்கில நாவல்கள் படித்திருப்பதால் சொல்கிறேன். நீங்கள் இன்னொரு பதிவில் சொல்லியிருப்பது போல் உங்கள் நாவல்களோ, தமிழில் இன்னும் சிலரின் நாவல்களோ அவற்றுக்கு சற்றும் சளைத்தவை அல்ல. நீங்கள் சொல்வது போல் இவை உலக அரங்கை அடைய சரியான மொழிபெயர்ப்புகள் வேண்டும். அவ்வளவுதான். இது கைகூடும் வாய்ப்பும் இருக்கலாம். கீதாஞ்சலி கூட வங்காள மொழியில் தானே முதலில் எழுதப்பட்டது. இதை புகழ்ச்சிக்காக சொல்லவில்லை என்பது உங்களுக்கும் உங்கள் வாசகர்களுக்கும் தெரியும்.

அன்புடன்,

ரெ. இந்திராணி

 

அன்புள்ள இந்திராணி அவர்களுக்கு,

நற்சொற்களுக்கு நன்றி. எழுத்துக்கள் பிறிதொரு உள்ளத்தைக் கண்டடைவதே எழுத்தாளனை மகிழ்விப்பது. இந்நாளில் என் எழுத்துக்கள் மேலும் பலமடங்கு வாசகர்களைச் சென்றடைவதைக் காண்கிறேன். நிறைவும் மேலும் எதிர்பார்ப்பும் கொள்கிறேன். எனக்கு அதை ஓர்அறைகூவலாகமும் எச்சரிக்கையாகவும் சொல்லிக்கொள்கிறேன்

ஜெ

 

ஜெ

புதியவாசகர்களின் கடிதங்களை நீங்கள் பிரசுரிப்பது கண்டு இக்கடிதம். நானும் ஒரு புதியவாசகன். கல்லூரிப்படிப்பை சென்ற ஆண்டு முடித்தேன். தேர்வுகளுக்காகச் சென்னையிலே தங்கி படித்துக்கொண்டிருக்கிறேன். தேர்வுகளுக்கான படிப்புக்கு நடுவே வெண்முரசையும் படித்துக்கொண்டிருக்கிறேன். என் நண்பர்களிலேயே ஏழுபேர் தொடர்ந்து உங்களைப் படிப்பவர்கள்.

நான் இதுவரை உங்கள் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை. இரவு பிடிஎஃப் படித்தேன். அனல்காற்றும் படித்தேன். அதன்பின் தளத்திலுள்ள பெரும்பாலான கடிதங்களைப் படித்துவிட்டேன். தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கிறேன். தளத்தில் கட்டுரைகளை தொடுத்துக்கொடுப்பது மிக உதவியாக இருக்கிறது. அவற்றை நான் தொடர்ச்சியாக சப்ஜெக்ட் சார்ந்து படிக்க முடிகிறது. அது ஒரு நல்ல வசதி.

சரித்திரம் தத்துவம் சார்ந்து ஒரு நல்ல தெளிவை அடைய இந்தக்கட்டுரைகள் மிக உதவிகரமாக இருந்தன. பலகட்டுரைகளை இன்னும் சரியாக வாசித்தேன் என்று சொல்லமுடியாது. வாசித்துக்கொண்டிருக்கிறேன். என்றாவது உங்களை நேரில் சந்திக்கமுடியும் என நினைக்கிறேன்

சம்பத்குமார்

 

அன்புள்ள சம்பத்

நன்றி. தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள். தகவல்களாக வாசிப்பதை விட தர்க்கங்களாக வாசிப்பதே நினைவில் நிறுத்த உதவுவது

 

ஜெ

 

ஜெமோ சார்

வெண்முரசு நாவலை தொடர்ச்சியாக வாசிக்கும் வாசகன்நான். எழுத்தாளனாக ஆகவேண்டுமென ஆசைப்பட்டு கொஞ்சம் எழுதிப்பார்த்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வேலை கிடைத்தது. மெடிக்கல் ரெப்பாக இருக்கிறேன். அதன்பின்னர்தான் உங்கள் தளம் அறிமுகமாகியது. ராஜராஜசோழன் காலம் பொற்காலமா என்ற கேள்வியை விவாதித்த கட்டுரைதான் எனக்குத் தொடக்கம். மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது அது.

அனுபவம் என ஏன் சொல்கிறேன் என்றால் அதன் வழியாகத்தான் நான் சரித்திரத்தை கருத்துக்களாகப்பார்ப்பதற்குக் கற்றுக்கொண்டேன். வெட்டியும் ஒட்டியும் சிந்திக்கமுடியும் என்று அறிந்தேன். நிறையவாசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் வாசிப்பு எனக்கு எழுத்தாளனாகமுடியும் என்ற தன்னம்பிக்கையை இல்லாமலாக்கியது. தமிழிலே இன்றைக்கு எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களை என்னால் எளிதாகக் கடந்துசெல்லமுடியும். அனைவருமே மிகச்சாதாரணமான அன்றாடவாழ்க்கையைச் சுருக்கமாக எழுதுபவர்கள். கொஞ்சம் காமம். கொஞ்சம் வன்முறை. அதன்பின் கொஞ்சம் நக்கலும் சேர்க்கமுடிந்தால் நல்லது. அதுகூட பலபேர்களிடம் இல்லை.

ஆனால் வெண்முரசு போல ஒட்டுமொத்தப்பண்பாட்டையும் அறிந்துகொண்டு எழுதுவதும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனதுக்குள் சென்று நோக்கி எழுதுவதும் குறியீடுகளைப்பயன்படுத்தி ஒரு பெரிய கனவுமாதிரி அர்த்தத்தை வலைநெய்வதும் என்னால் செய்யமுடியாது. அந்தத்திறமையை அடைந்தபின்புதான் எழுதவேண்டும். எழுதுவேன் என்று நானே நினைத்துக்கொண்டேன். அதுவரை காத்திருக்கவேண்டியதுதான். அறிமுகவாசகனாக இந்தக்கடிதத்தை எழுதுவதுகூட இதைச் சொல்வதற்காகத்தான்

மனோகர்

 

அன்புள்ள மனோகர்

எழுந்துவருக.

ஜெ

Jaya mohan,writer

 

 

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 44
அடுத்த கட்டுரைபத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்