புதியவர்களின் கடிதங்கள் 14

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

கடந்த நான்கு ஆண்டுகளாக உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய எழுத்தும் இளையராஜாவின் இசையும் எனக்கு காட்டிய உணர்ச்சிகரமான தரிசனம் வேறு எந்த கலையும் எனக்கு காட்டியது இல்லை. சென்னையில் நடக்கும் வெண்முரசு விவாதக் கூட்டங்களில் பங்கெடுத்து இருக்கிறேன்.

உங்களுக்கு நிறைய கடிதம் எழுத வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் ஏதோவொரு தயக்கம் என்னுள் இன்று வரை இருந்து வருகிறது. ஓரிரு முறை எழுதியும் உள்ளேன். நான் வருடம் தோறும் என்னுடைய பிறந்தநாள் அன்று ஏதாவது ஒரு புத்தகம் வாங்குவேன். 2012இல் என்னுடைய பிறந்தநாள் அன்று உங்களுடைய அறம் தொகுதியை வாங்கினேன். அதிலிருந்து இன்று வரை உங்களுடைய எழுத்துக்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. உங்களுடைய பெரும்பாலான நாவல்களை வாசித்துள்ளேன். வெண்முரசில் நீலம் வரை வந்துள்ளேன். இந்த பிறந்தநாள் நாள் அன்று உங்களுடன் ஈரோட்டில் இருப்பேன் என்று நினைக்கும்பொழுது மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

என்னுடைய இயல்பான குணமே நான் யாருடனும் மனம் விட்டு பழகாதவன், கூச்ச சுபாவம் உள்ளவன். பெரும்பாலான நண்பர்கள் கூடும் இடத்திலும் நான் மௌனமாகவே இருப்பேன். கடலூர் சீனு எனக்கு ஒரு பெயர் வைத்தார் மௌன வாசகன் என்று அதுவே எனக்கு மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும். ஆனால் உங்களை சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. உங்களை சந்திக்கும் நாள் நெருங்க நெருங்க மிகவும் பதட்டமாக உணர்கிறேன். சந்தித்து என்ன கேள்விகள் கேட்பது எப்படி உரையாடுவது என்ற பதட்டம் தான் அது.

என்னுடைய மனதில் இருப்பதை சரியான சொற்களில் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. என்னை நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன். ஆனால் உங்களை சந்தித்தவுடன் எனக்கு பேசுவதில் இருக்கும் மனத்தடை விலகும் என்று நினைக்கிறேன். நேரில் சந்திப்போம். ஏதாவது அபத்தமாக இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி
ப சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர்,

புதியவர்கள் அனைவருக்கும் இருக்கும் வழக்கமான சந்தேகம்தான் இது. நாம் சரியாகப்பேசுகிறோமா, சரியாக நம்மைமுன்வைக்கிறோமா என்பது. உண்மையாக நம்மை முன்வைத்தாலே போதும் சரியாக முன்வைக்கிறோம் என்று பொருள். செயற்கையான பாவனைகளைத் தவிர்ப்பதே எல்லா அரங்கிலும் நம்மை தவிர்க்கமுடியாதவர்களாக ஆக்கும்

சரி, நான் எதற்காக எரிச்சல் அல்லது உதாசீனம் கொள்வேன்? சிலர் இக்கேள்விகளைக் கேட்டிருந்தனர்.

அ.தீவிரமே இல்லாத, கவனம் அற்ற மனநிலையைக்கண்டு.
முடிந்தால் செய்யலாம் என்பதுபோன்ற இயல்பு இது. மனமிருந்தால் ஈடுபடலாம் என்பதுபோல இலக்கியத்தையோ அறிவுச்செயல்பாடுகளையோ எடுத்துக்கொள்வது. இது இன்றைய இளைஞர்கள் கணிசமானவர்களிடம் உள்ளது.

ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுவாக சொகுசான நடுத்தர வர்க்கத்திலிருந்து வருகிறார்கள். தொண்ணூறுகளுக்குப்பின் குடும்பச்சூழலில் போதிய பணம் புழங்கத்தொடங்கியபின் பிறந்து வளர்ந்தவர்கள் இவர்கள். வேண்டிய அனைத்தும் எளிதாகக்கிடைக்கும் இளமைப்பருவம். பிறர் ஊக்குவித்து உருவான ஆர்வங்கள், படிப்பு. அப்படியே வேலை.

அதோடு தொண்ணூறுகளில் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின் எப்படியோ ஒரு பெரிய மாற்றம் சிந்தனைத்தளத்தில் வந்தது. சிந்தனையால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தமுடியுமென்ற நம்பிக்கையின் வீழ்ச்சி என அதைச் சொல்லலாம். அதன்பின் வாசிக்க ஆரம்பித்த கணிசமானவர்களுக்கு இலக்கியமும் கருத்தியல் செயல்பாடுகளும் கிரிக்கெட் போல பக்கம் எடுத்து வாதாடும் கேளிக்கையாக மாறிவிட்டிருக்கிறது.

இவர்களை இவர்களை நான் பொதுவாகக் கண்டிப்பதோ மறுப்பதோ இல்லை, விலகிவிடுவேன். ஏனென்றால் தீவிரத்தை நாம் உருவாக்கமுடியாது. உருவானபின் வருபவர்களே என் வாசகர்கள்.

ஆ. பரந்து சென்றமையால் நிலைக்காத கவனம் கொண்டவர்களைக் கண்டு

பேசிக்கொண்டிருக்கையிலேயே ,ஃபேஸ்புக் பார்ப்பது டிவிட்டர் எழுதுவது, எந்த உரையாடலையும் தொடர்ச்சியாகக் கவனிக்காமல் ஐந்தாறு நிமிடங்களுக்கே விஷயத்திலிருந்து தாவிச்செல்வது போன்றவை. இவையும் இன்றையதலைமுறையில் பொதுவாக மிக அதிகம். இன்றைய ஊடகப்பெருக்கத்தின் விளைவு இது. இது பொதுவாக ஒற்றைவரிகளை மட்டுமே அறிந்தவர்களாக, எதையும் தர்க்கபூர்வமாக விரிவாகத் தெரிந்துகொள்ளமுடியாதவர்களாக ஆக்கிவிடுகிறது

அ. சூழலின் பொது அரட்டையின் பகுதியாக இருப்பவர்களைக் கண்டு

நம் சமூக ஊடங்கள் பொதுவான ஒரு அரட்டைவலையை உருவாக்கி வைத்திருக்கின்றன. நாட்டிலுள்ள அத்தனைபேரும் ஒன்றையே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாலைந்துநாட்களுக்கு ஒருமுறை அது மாறிவிடுகிறது. அதைப்பேச ஒரு மொழி, ஒருமனநிலை உருவாகியிருக்கிறது .ஃபேஸ்புக் கமெண்டுகளின் மனநிலையும் மொழியும்தான் அது.
ஒற்றைவரி நக்கல்கள், கிண்டல்கள், சீண்டல்கள் . வடிவேலு வரிகள். சினிமாப்பாட்டு கமெண்டுகள் போன்றவை. இவை பயனற்றவை. இவற்றிலிருந்து விலகிநிற்க முடியாதென்றால் இவற்றை தீவிரவிவாதத்தளங்களுக்கு கொண்டுவராமலாவது இருக்கலாம்.

இம்மூன்றையும் தவிர்க்கும் எவருக்கும் எந்த ஒரு சீரிய கூட்டத்திலும் பேசும் தகுதி வந்துவிடுகிறது. நம் சூழலில் அவர் லட்சத்தில் ஒருவரும் கூட

ஜெ

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43
அடுத்த கட்டுரைஅழியாச்சித்திரங்கள்