பின்தொடரும் நிழலின்குரல்- வாசிப்பு

1

 

வணக்கம் ஜெ,

 நல்லா இருக்கீங்களா? பின் தொடரும் நிழலின் குரலின் 200-ஆவது பக்கத்திலிருந்து எழுதுகிறேன். கெ.கெ.எம்மின் மனதிற்குள்ளாக விழுவதும் வெளியேருவதுமாக இருக்கிறேன். அவர் மகன் அவர் காலைத்தொட்டு வணங்குவதும் அவர் கண் கலங்குவதும் அப்படியே கண் முன் ஒரு காட்சியாக உறையச் செய்திருக்கிறீர்கள். எல்சியின் குணநலன் நாம் கடந்து செல்கின்ற பல பெண்களுக்குள் இருந்தும் நாம் தவற விடுகிற ஒன்று. எழுத்தாளன் இவ்வகை கதாபாத்திரங்களைப் படைக்கும்போது போது உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி ‘இந்தாப்பா, பாரு..இதான் வாழ்க்கை’ன்னு சொல்றது மாதிரி, மிக உச்சகட்ட அரசியலையும் வாசகனுக்கு சொல்லித்தரும் விவாத முறையும், அங்கங்கே எதிர்பார்ப்பை வரவழைக்கும் நாகம்மையின் ஆறுதலும் இன்னும் பல காட்சிகள் நான் ரசித்தன.
ஏதுமற்ற எவருமற்ற நிலையிலும் ஒருவனைத் தாங்கி நிற்கும் உறவும் அவனே தனக்குத் தான் பேசித் தன்னைத் தக்கவைத்துக் கொள்கின்ற மனநிலையும் அருணா மற்றும் கெ.கெ.எம் மூலமாக அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறீர்கள்.
தனது வாழ்வு சார்ந்து, தான் கண்டன கேட்டன சார்ந்து, இன்னும் சிறிது ஆராய்ந்து,சொல்லவந்ததை சிறிதும் மழுப்பாமல் சொல்லிப் போகும் எழுத்துமுறை தங்களின் மிகப்பெரிய பலமாகத் தோன்றுகிறது.
அலுவலக நேரத்திலும் இடையிடையே வந்து என்னுடன் பேசிப்போகும் பாத்திரங்களின் தொந்தரவு நல்லாருக்கு..
கதையில் ஜெயமோகனின் வரவு செம. கலீல் கிப்ரானின் ஏதோ ஒரு புத்தகத்தில் அவர் தன்னைத் தானே பகடி செய்திருந்தது ஞாபகத்திற்கு வருகிறது.
ஊட்டி சந்திப்பிற்கு முன் நிழலின் குரலை முழுமையாக ருசிக்க வேண்டுமெனத் திட்டம்..
கூடவே இருந்து தாங்கள் தரும் அனுபவங்களுக்கு நன்றி…மிக மகிழ்ச்சி ஜெ
சுஷீல் குமார்..
*
அன்புள்ள ஜெ

பின் தொடரும் நிழலின் குரலை இப்போதுதான் முடித்தேன். கவனமாகச் சிதறடிக்கப்பட்ட நாவல். ஒருமுனைநோக்கிக் குவியக்கூடாது என்ற முனைப்பு இருக்கிறது. ஒரு மார்க்ஸியவிமர்சனமாக அமைந்துவிடக்கூடாது என்று எண்ணியிருக்கிறீர்கள். மார்க்ஸியம் மீதான விமர்சனம் வந்ததுமே அதை மறுக்கும் அதைவிட வலுவான குரல் வந்துவிடுகிறது கதாபாத்திரங்களின் மனசாட்சியே வலுவாகப்பேசுகிறது.

மொத்த நாவலும் உணர்ச்சிகரமாக உச்சம்கொண்டதுமே நினைத்தேன்.உடைக்க தடி எடுக்கப்போகிறார் என்று. அங்கதநாடகம் வந்துவிட்டது. மொத்தமாக வாசித்தபின் ஒரு காலகட்டமும் ஒரு தத்துவக்கேள்வியின் அத்தனை premises ம் வெளிவந்து கண்முன் நிற்கிறது. மேலே சிந்திக்கவேண்டியது நாம். அதிலிருந்து கிடைக்கும் எல்லா நுட்பமான உணர்ச்சிகளையும் கையில்கொண்டு மேலே செல்லவேண்டும்.

இரு இடங்களை முக்கியமானவை என்று பட்டன. ஒன்று ‘நீங்கள் அவதூறுக்குத்தானே அஞ்சுகிறீர்கள்?” என வீரபத்ரபிள்ளை ராமசுந்தரத்திடம் கேட்கும் இடம். சில ஆண்டுகளுக்குப்பின் அதே சந்தர்ப்பம் டபிள்யூ ஆர் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்தது. கட்சியே உருவாக்கிய அவதூறுக்குப் பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டார்

இன்னொரு இடம் வீரபத்ரபிள்ளை விசாரணைசெய்யப்படும் இடம். வரலாற்றை அழிக்கும் இடம். சமீபத்தில் மாயாண்டிபாரதியை அ.மார்க்ஸ் எடுத்த பேட்டியை கம்யூனிஸ்டுத்தலைவர்கள் அமர்ந்து கேசட்டை ரீவைண்ட் செய்து அழிக்கும் காட்சியை அவர் எழுதியிருந்தார். பின் தொடரும் நிழலின் குரலில் ஓர் அத்தியாயம் மாதிரியே இருந்தது.

எத்தனை நுட்பமாக உள்ளே சென்று எழுதப்பட்டிருக்கிறது என வியந்தேன்

ஆதி. லட்சுமணன்

 

முந்தைய கட்டுரைவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு
அடுத்த கட்டுரைஇலக்கியமெனும் கனவு