காலமின்மையின் கரை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நீங்கள் திருவரம்பு அருமனை என்று சொல்லும்போதெல்லாம் ஏதோ என்னுடையதேயான ஊரைப்பற்றியும் நான் நெருங்கிப்பழகியவர்களைப்பற்றியும் பேசுவதாகவே உணருகிறேன். கூடவே என்னவென்றே சொல்லமுடியாத ஒரு பதற்றமும். என்னைப்போல் நிறைய பேர் உணர்வார்கள் என்றும் எனக்கு ‘ஒரப்’புண்டு.

நீங்கள் அசோகவனத்தை முடித்து தரும்போதுதான் இந்த அவஸ்தை தீரும் போல! உங்களுக்கே அது ஒரு பெரும் விடுதலையுணர்வை தரும் என்றுகூட தோன்றுகிறது.

ஆகவே அருள் புரிக! :)

அன்புடன்,

ஸ்ரீனிவாசன்

*

ஜெமோ,

காலமின்மையின் கரையில்… கட்டுரை வாசிக்க ஆரம்பித்த சில வரிகளிலேயே மனம் ஏனோ நின்றுவிட்டது, பின் கவிதை படிப்பதை போல ஒவ்வொரு வார்த்தையின் மீதும் நின்று நின்று முழுவதும் படித்து முடித்தேன்…. திருவரம்பின் அமைதி பின்னாக தொடர உங்கள் ஒற்றை குரல் மட்டும் ஒவ்வொன்றாக ஒலித்துக் கொண்டே வருகிறது. நீங்கள் சொன்ன ஊர் காட்சி கண்டு பொங்கி கொண்டே இருந்த மனம், அங்கேயே அலைகிறது….

சரண்

 

ஜெ

காலமின்மையின் கரையில்…

கடந்து போனவற்றை பற்றிச் சொல்ல வேண்டுமானால் இப்படிதான் சொல்லமுடியும் போல.

மங்கை

 

காலமின்மையின் கரையில்…இரண்டு மூன்று நாள்களாய் உங்களை பற்றியே பேசிசிக் கொண்டீருந்தோம் நல்லதும் அல்லாததும்– இக்கட்டுரை யை இப்ப வாசிச்சேன்-  என் அம்மாவை நினைத்தேன் என் ஊரை நினைத்தேன்   ஏனோ கவலை சூழ்கின்றது இன்னொரு கிளாஸ் வையின் –பிரியமுடன்

செல்வம்

டொரொண்டோ

 

ஜெ

காலமின்மையின் கரையில் ஒரு அழகிய சிறுகதை. காலமும் காலமின்மையும் அதில் முயங்கிவரும் அழகு கலையின் நுட்பம் அறிந்தவர்களுக்குரிய திறன். யானையும் கோயிலும் பாறைகளும் காலமறியாதவை. பிற அனைத்தும் காலக்கொப்புளங்கள்

அப்பாவின் கலங்கிய ஒற்றைக்கண் காட்டுமிராண்டி சிவனின் நெற்றிக்கண்ணாவதும் பத்மாவதி யக்‌ஷியாகிய அம்மா பகவதியாகக் காத்திருப்பதும் கவிதை.

துக்கத்தைக் கவிதையாக்கத்தெரிந்தால் துக்கமும் நல்லதே

சண்முகம்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42
அடுத்த கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 13