என்றுமுள்ள இன்று

g ஒரு நிரந்தரக்கேள்வி

வெண்முரசின் வாசகர்களாக வரும் இளையதலைமுறையினரில் ஒருசாராரிடம் எப்போதுமுள்ள கேள்வி ஒன்றுண்டு.  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இக்கேள்வி என்னைநோக்கி வந்துகொண்டே இருக்கும்.

இவர்களில் பலர் தொடக்கநிலை இலக்கிய அறிமுகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.சமகால அரசியல் மற்றும் சமூகப்பிரச்சினைகளை மையமாகக் கொண்ட புனைகதைகளை வாசித்திருப்பார்கள். அவற்றின் சமகாலத்தன்மையே அவற்றுடன் இவர்கள் கொள்ளும் தொடர்புக்கான உடனடிக்காரணமாக இருந்திருக்கும்.அவ்வாறு புனைவெழுத்தின் உடனடிக்கடமைகளில் ஒன்று சமகாலத்தை விமர்சனம் செய்தல் என்று புரிந்துகொண்டிருப்பார்கள்.

அத்துடன் உள்ளூர ஒரு பெரிய பிரிவினை இருக்கும். சமகாலம் என்பது ‘உண்மையானது’. அதாவது ‘யதார்த்தமானது’. அதை ‘உள்ளது உள்ளபடி’ சொல்லும் எழுத்துக்களே இப்போதைய வாசகனுக்குப் பயனுள்ளவை. வரலாற்றுப்புனைவுகள், புராணப்புனைவுகள், மிகுபுனைவுகள் ‘கற்பனையானவை’ ஆகவே ‘பொய்யானவை’. அவற்றால் வாசிப்பின்பத்துக்கு அப்பால் ’உண்மைகளை’ அளிக்க முடியாது. இப்பிரிவினையிலிருந்தே அவர்களின் இலக்கியப்புரிதல் தொடங்குகிறது

பொதுவாக ஒரு வாசகன் தமிழ்ச்சூழலில் நடந்துகொண்டிருக்கும் ஒட்டுமொத்தமான கூட்டுப்பெருவிவாதத்தின் ஒரு பகுதியாகவே அறிவுலகில் நுழைகிறான் அந்த விவாதத்தின் இருதரப்புகளின் மோதலையே அவன் உண்மையான பிரச்சினையாகக் காண்கிறான்  இன்றைய தமிழ் அறிவுலகில் நுழையும் வாசகனுக்கு  உயர்சாதிXஒடுக்கப்பட்டோர், முற்போக்குXபிற்போக்கு, மதச்சார்பின்மைXஇந்துத்துவம் என சில குறிப்பிட்டவகை கருத்துமோதல்கள் உடனே கிடைக்கின்றன. அவற்றை ஒட்டியே அவன் சிந்திக்கிறான்

இலக்கியப்படைப்புகளையும் இந்த ஒட்டுமொத்த விவாதக்களத்தின் ஒரு பகுதியாக நின்றே அவன் வாசிக்கிறான். அந்த விவாதத்திற்கே வாசிக்கும் அனைத்தையும் கொண்டு செல்கிறான். அந்தப் பெருவிவாதத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்பது எளிதல்ல. ஒருவகையில் அவ்விவாதமே ஜனநாயகம் செயல்படும் களம் என்பதனால் அதை விலக்கவும் கூடாது. ஆனால் முழுக்க முழுக்க அதனுள் மட்டும் வாழும் வாசகன் இலக்கியப்படைப்புகளை இழந்துவிடுகிறான். எங்கும் எதிலும் சமகால விவாதங்களை மட்டும் பார்ப்பவன் அதைமட்டுமே காண்பான்

புனைவிலக்கியங்கள் வாசகனின் கற்பனையைத் தூண்டி அதனூடாகப் பேசுபவை. சமகால அரசியலை மட்டுமே அறிந்த அரசியலாத்மாக்கள் ஓயாது போடும் கூச்சலால் வாசகனின் நுண்செவிகள் மழுங்கிவிடுகின்றன. இலக்கியப்படைப்பு அவனிடம் மொழிக்குறிகள் பண்பாட்டுக் குறியீடுகள் வழியாகப்பேசும் நுண்மொழி அவனுக்குக் கேட்பதில்லை. ஆசிரியனுக்கும் அவனுக்குமான அந்தரங்க உரையாடலும் நிகழ்வதில்லை

சமூக வலைத்தளங்கள் மேலோங்கியிருக்கும் இன்றைய சூழலில்  அந்த ஒட்டுமொத்தப் பெருவிவாதம் மிகமிகப் பேருருவம் எடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல முனைகளிலிருந்து வாசகனை வந்து அறைந்து சூழ்ந்து பிற எதையுமே சிந்திக்கவிடாமலாக்குகிறது. எண்ணிப் பாருங்கள், சென்ற சிலநாட்களில் நீங்கள் என்ன சிந்தித்தீர்கள் என்று. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும் சமகாலச் செய்தியைச் சார்ந்து மட்டும்தானே?

இச்சூழலில் இருந்து இலக்கியத்திற்குள் வரும் வாசகனால் இலக்கியம் பேசிக் கொண்டிருக்கும் காலம்கடந்த உளநிகழ்வுகளை, தத்துவச் சிக்கல்களை எதிகொள்ள முடிவதில்லை. இயல்பாகவே சமகாலச் சிக்கல்களை நோக்கி அவற்றை இழுக்கமுயன்று தோற்றுச் சலிக்கிறான்.

இவ்வாறுதான் அந்த நிரந்தரக் கேள்வி பிறக்கிறது. ‘பழைய விஷயங்களை எழுதுவதனால் என்ன லாபம்?” அதையே ‘புராணங்களை எல்லாம் இப்ப ஏன் எழுதவேண்டும்?” என மாற்றிக்கொள்வார்கள். அதற்கு அரசியல் உள்நோக்கம் புனைவார்கள். நான் இதற்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்லியிருக்கிறேன்.

1

இருபின்னணிகள்

இருவகை புனைகதைகள் உள்ளன என்று கொள்வோம். ஒன்று சமகாலவாழ்க்கையை மட்டுமே சார்ந்து யதார்த்தமாக எழுதப்படும் படைப்புலகம். இது இருவகை.ஒன்று, பூமணியின் அஞ்ஞாடி போல சமகால வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் கற்று எழுதுவது. இரண்டு,  சொந்தவாழ்க்கையை மட்டுமே ஆதாரமாகக்கொண்டு எழுதுவது. நீலபத்மநாபனின் தேரோடும்வீதி போல

இன்னொருவகை புனைவு உண்டு. முழுக்கமுழுக்க கற்பனைவெளியில் நிகழ்வது. அது தொன்மங்களில் இருந்து எழுவதாக இருக்கலாம். மகாபாரதம் போல. அல்லது கடந்தகாலமென உருவாக்கப்படும் வரலாற்றுச்சித்தரிப்பாக இருக்கலாம், போரும் அமைதியும் போல.  அல்லது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகமாக இருக்கலாம்.நம் அறிவியல்புனைகதைகளைப்போல

அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட இருவகை புனைவுகள் நடுவே என்ன வேறுபாடு? இரண்டுமே ஆசிரியனின் உருவாக்கங்கள். இரண்டுவகையான பின்புலங்களுமே புனைவு என்ற வகையில் இலக்கியப்படைப்புக்கு ஒரேவகை பங்களிப்பு கொண்டவை. அதாவது, ஆசிரியன் தன் வாழ்க்கைநோக்கை வெளிப்படுத்தும் புனைவுத்தருணங்களை இந்தப்பின்புலத்திலிருந்து கண்டுகொள்கிறான். தன் ஆழ்மனதை வெளிப்படுத்தும் படிமங்களை இவ்வெளியிலிருந்து எடுத்துக்கொள்கிறான், அவ்வளவுதான்.

அவ்வகையில் புராணகாலமோ, சமகாலமோ புனைவுக்கு அவை சமானமானவையே. எந்த வேறுபாடும் இல்லை. புனைகதையாளனுக்கு திருதராஷ்டிரரோ மு.கருணாநிதியோ ஒரே தொலைவில்தான் இருக்கிறார்கள். இரு கதாபாத்திரங்கள் அவர்கள். கடல்கொண்ட தனுஷ்கோடியும் துவாரகையும் புனைவில் சமம்தான். இருநிலத்தையும் அவன் தன் சொற்களில் கற்பனையால்தான் உருவாக்கப்போகிறான்

ஒன்று பழையகதை இன்னொன்று இப்போதைய கதை, ஆகவே சமகாலக் கதைக்குத் தேவையும் பொருத்தப்பாடும் அதிகம் என்றெல்லாம் ஓர் இலக்கியவாசகன் சொல்லமாட்டான்.

பாற்கடல் கடைதல்சூழலும் புனைவும்

ஒரு புனைவு எந்தச்சூழலைச் சித்தரிக்கிறது என்பது எவ்வகையிலும் அதன் சாராம்சத்தைத் தீர்மானிப்பதில்லை.  அதன் பேசுபொருளைக்கூட அது பாதிப்பதில்லை. அந்தவாழ்க்கைத்தருணங்கள் மேல், அந்தப் படிமங்கள் மேல் ஆசிரியனின் மனம் எவ்வாறு படிகிறது, ஆழ்கிறது, வெளிப்படுகிறது என்பது மட்டுமே புனைவின் தன்மையைத் தீர்மானிக்கிறது.

அவ்வகையில் ஒரு புனைவு எப்போதுமே  நிகழ்காலத்தில்தான் உள்ளது. கடந்தகாலமாக ஆவது அதன் மேலோட்டமான தகவல்கள் மட்டுமே, அவை எவ்வகையிலும் முக்கியமல்ல. இப்போது உட்கார்ந்து மொத்த வெண்முரசையும் மகாபாரதப் பெயர்களை மாற்றி சமகாலப்பெயர்கள், இன்றைய சூழலைச்சேர்த்து ‘யதார்த்தவாத’ புனைவாக மாற்றமுடியும். அதாவது அதன் ஆடையை மாற்றமுடியும். அது அல்ல அப்புனைவு. அதன் வாழ்க்கைவெளிப்பாடு என்பது ஆசிரியனின் அகவெளிப்பாடுதான். அதற்குக் காலமில்லை

அவ்வாறல்ல என்றால் , பழையகதைக்கு தேவையே இல்லை என்றால், எந்தப்புனைவும் முக்கியமில்லாமலாகிவிடும். வியாசர் பழையவர் என்றால் தல்ஸ்தோய் பழையவர்தான். புதுமைப்பித்தனும் பழையவர்தான். சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் கூட பழையவர்கள்தான். நாளிதழ் மாதிரி புனைவுகள் அன்றாடம் வந்துகொண்டிருக்கவேண்டும். கடைசியில் ஃபேஸ்புக் குறிப்புகளே இலக்கியம் என நினைக்கவேண்டியிருக்கும்.

வெண்முரசை எழுத எழுத இதைத்தெளிவாகவே உணர்கிறேன். இதை அதன் நல்ல வாசகர்களும் உணர்வார்கள். அது பழைமையை மீட்டுருவாக்கம்செய்வது அல்ல. அது இன்றை, இவ்வாழ்க்கைமேல் படியும் உள்ளத்தைக்கொண்டு எழுதுவதுதான். அதிலுள்ளது அழியாத நிகழ்காலம். அங்குதான் நம் கனவுகள் சமைக்கப்படுகின்றன. நம் அச்சங்களும் ஐயங்களும் வஞ்சங்களும் ரகசிய விழைவுகளும் உறைகின்றன

2புனைவின் பொதுவெளி

இன்னொன்று, இவ்வாறு மறுஆக்கம் செய்வது  பழைய ஒருகதையைத் ‘திரும்ப’ எழுதுவது அல்ல. அப்படிப் பார்த்தால் அத்தனை புனைவுகளும்ம் திரும்பத் திரும்ப எழுதப்படுவனதான். முழுக்க முழுக்க சுயசரிதைத்தன்மை கொண்ட கதைகள் மற்றும் சமகாலக்கதைகள் கூட.

உண்மையில் ஒருபண்பாடு தனக்கென ஒரு புனைவுக் களத்தை பொதுவாகத் திரட்டிக்கொள்கிறது. ஒரு சதுரங்கக்களம் போல. காய்களும் கட்டங்களும் விதிகளும் வகுக்கப்படுகின்றன. அதற்குள் நின்றுகொண்டுதான் அனைத்து ஆட்டங்களும் ஆடப்படுகின்றன.

பாரதி, புதுமைப்பித்தன் முதல் இன்றுவரை ஒட்டுமொத்தத் தமிழிலக்கியத்தை வாசித்தால் அந்தப் பொதுக்களத்தை உணரலாம். அதற்குப் பின்னால் தல்ஸ்தோய் முதல் பிலிப் ராத் வரையிலான ஒரு பகைப்புலம். அவை உருவாக்கும் பெருங்கதையாடலுக்குள்தான் அத்தனை தனிப்படைப்புகளும் உள்ளன. அனைத்து புனைவுத் தருணங்களும், படிமங்களும் அக்களஞ்சியத்தில் உள்ளன. அள்ளுவதும் விளக்குவதுமே எழுத்தாளன் செய்யக்கூடியது

ஆகவேதான் அந்த சதுரங்கக்களத்தின் விதிகளை அறிந்தவர்களால் மட்டுமே ரசிக்கத்தக்கதாக இருக்கிறது நவீன இலக்கியம். நவீன இலக்கியம் புரியவில்லை என்று சொல்பவர்களிடம் நாம் நவீன இலக்கியம் என்னும் களத்தை அமைத்து அளித்த முக்கியமான நூல்களை வாசிக்கத்தான் சொல்கிறோம். அந்தப்பின்னணிப்புரிதலில் இருந்தே நாம் புனைவுகளின் உட்குறிப்புகளை புரிந்துகொள்கிறோம். இடைவெளிகளை நிரப்புகிறோம். கற்பனைசெய்து விரிவாக்குகிறோம். இலக்கியநுட்பங்களை ரசிக்கிறோம்.

மகாபாரதம் இரண்டாயிரமாண்டுக்காலமாக திரும்பத்திரும்ப எழுதப்படுகிறது. பாடப்படுகிறது, நடிக்கப்படுகிறது. பலவகையிலும் மறுஆக்கம் செய்யப்படுகிறது. அதுநவீன இலக்கியம் என நாம் சொல்வதுபோன்ற வேறு ஒரு பெரிய சதுரங்கக் களத்தை புனைவுக்குரிய பின்புலவெளியாகக உருவாக்கி வைத்திருக்கிறது. அதன் வாழ்க்கைத் தருணங்களும் படிமங்களும் அதனுள் புகுந்து எழுதுபவர்களால் தங்கள் அகவெளிப்பாட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எப்படி நவீன இலக்கியம் என்ற பொதுப்புனைவு வெளிக்குள் ஒருவன் நுழைகிறானோ அப்படி ஒருவாசகன் மகாபாரதம் என்னும் பொதுப் புனைவுவெளிக்குள் நுழைகிறான்.

மேலும் விரிந்த பின்னணிக் களமாக இந்தப்புலத்திற்கு ராமாயணம் உள்ளிட்ட பிற புராணங்களும் இந்தியப்பெருங்காவியங்களும் உள்ளன. அதைவிட  விரிந்த பின்புலமாக இலியட், ஒடிசி போன்ற காவியங்கள் உள்ளன. அவை அளிக்கும் பொதுவான மொழியமைப்பு, படிமஅமைப்பு, கதாபாத்திரங்கள் ஆழ்படிமங்களாக [ஆர்கிடைப்] ஆகும்தன்மை ஆகியவை இணைந்து ஓர் அழகியலை உருவாக்குகின்றன

உலக இலக்கியமறிந்து வெண்முரசை வாசிப்பவர்கள் அதில் சிலப்பதிகாரத்தை, விஷ்ணுபுராணத்தை, ஒடிசியை, டிவைன் காமெடியை பார்த்துக்கொண்டே செல்லமுடியும் . சொல்லாட்சிகளில்கூட. ஏனென்றால் அப்புனைவு அமர்ந்திருக்கும் பொதுக்களம் அது

அத்துடன் அது நவீனஇலக்கியத்தின் பின்னணியையும் தன் களஞ்சியமாகக் கொண்டிருக்கிறது. அது விக்டர் யூகோவுக்கும் தல்ஸ்தோய்க்கும் பின்னால் எழுதப்படுவது. செர்வான்டிசுக்கும், ஹெர்மன் மெல்வில்லுக்கும் நீட்சியாக அமைவது. ஹெர்மன் ஹெஸ், நிகாஸ் கஸந்ஸகீஸ் போன்றவர்களுக்கு அணுக்கமானது. ஆகவே சென்ற நூறாண்டுக்கால நவீன இலக்கியத்தின் நீட்சியாகவும் அது அமைகிறது. ஒரு விமர்சகன் மிக எளிதில் அதைக் கண்டடைய முடியும்.

இன்னொன்றும் உண்டு, காட்சிரீதியாக சென்ற இருநூறாண்டுகளின் கலைப்பரப்பின் செல்வாக்கு. நான் ரெம்பிராண்டின் ரசிகன். வெண்முரசின் வாசகர் ஒருவர் அதன் காட்சிவெளி ரெம்பிராண்டால் உருவாக்கப்படுவது என்பதை சுட்டிக்காட்டி எழுதியிருந்தபோதுதான் அது எதிலிருந்தெல்லாம் வேர்நீர் கொள்கிறது என உணர்ந்தேன். என் மகன் சென்ற நூறாண்டுக்கால திரைப்படங்கள் என்னும் மாபெரும் புனைவுவெளி உருவாக்கிய செல்வாக்கை அதில் சுட்டிக்காட்டியிருக்கிறான்.

அப்படியென்றால் எது பழைமை? எங்கே உள்ளது அது? இது இன்று, இதுவரை வளர்ந்து வந்து நின்றிருக்கும் பலவகையான புனைவுப்பரப்புகள், காட்சிக்கலைப்பரப்புகளில் இருந்து எழும் ஒரு கலைப்படைப்பு. இன்றையநிகழ்காலத்தில் நிற்பது. அதிலுள்ள பழைமை என்பது அதன் கதைமாந்தர், கதைத்தருணங்கள், படிமங்கள் தொன்மையானவை என்பது மட்டுமே.

ஆனால் இந்நூற்றாண்டின் பெரும்படைப்புகளெல்லாம் அத்தகைய காலநீட்சி கொண்டவைதான். மகாபாரதம் அளிக்கும் பிரம்மாண்டமான புனைவுத்தருணக்குவியல், படிமக்களஞ்சியம் எல்லா காலத்திலும் எழுத்தாளர்களுக்குரியதாகவே இருக்கும்.அவன் தன்னுள் கண்டடையும் பல்லாயிரம் நுண்மைகளுக்கான புறவயமான அடையாளம் அங்கே உள்ளது என்பதே காரணம்.

 

7இலக்கியமும் கடந்தகாலமும்

பொதுவாகவே புனைவு எழுத்துக்களின் பெரும்பகுதி சென்றகாலம் சார்ந்தவையாக இருப்பதைக் காணலாம். ஒரே ஒரு ஊரிலே என்றுதான் அவை எப்போதும் ஆரம்பிக்கின்றன. காரணம் சென்றகாலம் ஒரு கனவுவெளி. நிகழ்ந்து அழிந்துமறைவது. அதை அழியாமல் நிறுத்தும் மானுட விழைவிலிருந்தே கலை என்னும் வெளிப்பாடே உருவானது.

இலக்கியத்தைப் பொறுத்தவரை நிகழ்காலம் என்பது எண்ணங்கள் உணர்வுகள் எல்லாம் நேரடியாக கலந்துகிடப்பது. சென்றகாலம் படிமங்களால் மட்டுமே ஆனது. படிமங்களாக ஆகிவிட்டவை மட்டுமே எஞ்சுவது. ஆகவே புனைவுக்குரிய சமையல்பாதியளவுக்கு முன்னரே நடந்துவிட்ட களஞ்சியம் அது .அவை படிமங்களாகி ஆழ்படிமங்களாகி நினைவடுக்குகளுக்குள் ஊறிவிட்டிருக்கின்றன.

ஒருபோதும் யுலிஸஸோ ஏசுவோ பீமனோ கிருஷ்ணனோ புனைவெழுத்தாளர்களுக்கு கடந்தகாலமாக ஆகமாட்டார்கள். மதம், இலக்கியம், ஆன்மீகம் ஆகியவற்றின் நுண்ணிய தளங்களை அரசியலின், கல்விப்புலக் கோட்பாடுகளின் எளிய கருவிகள் முழுமையாக வகுத்துவிட முடியாது. அவற்றின் சில தளங்களை மட்டுமே தொடமுடியும்

ஏனென்றால் புனைவெழுத்தாளனின் உள்ளம் இருப்பது அரசியல்வாதிகள் அல்லது தத்துவவாதிகள் வகுத்து அளிக்கும் நிகழ்காலத்தில் அல்ல. ஆய்வாளர்கள் எல்லைஅமைக்கும் சொல்வெளியிலும் அல்ல. அது வேறு ஒர் அறுபடாத தொடர்ச்சியில் உள்ளது. அதை வாசகன் புனைவில் கற்பனைக்கான நுண்புலன்கள் கூர்மைகொண்டிருக்க நுழையும்போது உணரமுடியும்

 

 

முந்தைய கட்டுரைவளரும் வெறி
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 50