காலமின்மையின் கரையில்…

ch

1986 நவம்பருக்குப்பின் நான் கிட்டத்தட்ட இருபத்தெட்டாண்டுக்காலம் என் சொந்த ஊருக்குப்போனதில்லை. திருவரம்பைச்சுற்றியிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். திற்பரப்பு அருவிக்கு பலமுறை. அருவியிலிருந்து நான்கு கி.மீ தொலைவில்தான் என்னுடைய ஊர். ஆனால் ஊரைச்சுற்றிச் சென்றுவிடுவேன். என் ஊர்க்காரர்களைச் சந்திப்பதும் மிகக்குறைவு, அதற்கான வாய்ப்புக்களை தவிர்த்துவிடுவேன்

இருஆண்டுகளுக்கு முன்பு அரங்கசாமி திருவரம்புக்குச் சென்றே ஆகவேண்டும் என்று சொன்னதனால் ‘சரிதான் இனிமேல் என்ன?” என்று துணிந்து திருவரம்புக்குச் சென்றோம். ஈரோடு கிருஷ்ணன் உடனிருந்தார். சைதன்யாவும் வந்தாள். அது ஒரு கொந்தளிப்பான பயணம். பலவகையான உணர்வுச்சங்கள் வழியாகச் சென்றேன். பிறகு மீண்டும் செல்லத்தோன்றவில்லை

இன்று அஜிதனும் செல்வேந்திரனும் திருவரம்புக்குச் செல்லலாம் என்றனர். அஜிதன் சிலபுகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க விரும்பினான். என் காரில் காலை பத்துமணிக்குக் கிளம்பி சென்றோம். பதினொன்றரைக்குத் திருவரம்புக்குச் சென்றோம். திருவரம்பு எல்லைக்குள் நுழைகையிலேயே அந்த கிளர்ச்சி வந்து அழுத்தியது. இன்பமா  துன்பமா என்று தெரியாத நிலை. அமர்ந்திருக்க முடியாமல் நகங்களை கடித்தபடியே இருந்தேன்

IMG_2488

ஒவ்வொன்றும் மாறியிருந்ததை ஒரு மனம் அடையாளம் கண்டபடியே இருந்தது. மாறாதவற்றைத் தொட்டுத்தொட்டு பரவசம் அடைந்தது இன்னொரு மனம். ஏராளமான புதிய கான்கிரீட் வீடுகள். நடுவே ஆனைமலைக் கம்பவுண்டரின் இல்லமும் நல்லதம்பிநாடாரின் வீடும் மாறாமலிருந்தன. போஸ்டாபீஸ் அய்யரின் ரப்பர் தோட்டம் அப்படியே இருந்தது. போற்றியின் வீடு முன்பக்கம் கொட்டகையுடன்.

கோயில்முற்றத்தில் காரை நிறுத்தினோம். திருவரம்பு மகாதேவர் ஆலயம் காலமில்லாதது. நூறாண்டுகளுக்கு முன்பு மூலம்திருநாள் மகாராஜா காலத்தில் அலங்கார ஓடு போட்ட கூம்புவடிவக்கூரையுடன் அமைக்கப்பட்டது. அதனருகே ஒரு புதிய மேடை. அப்பால் என் வீடிருந்த இடம்.

திருவரம்பு போன்ற பகுதிகளில் வீடுகட்டும் நிலம் மதிப்பு மிக்கது. வீடுகள் உள்ள நிலத்தை கரை என்பார்கள். ஆழமான பகுதிகளில் நீர்புகுந்துவிடுமென்ற அச்சம் உண்டு. மறுபக்கம் அறப்புரையன் வீட்டை ஆழத்தில் இருந்து மண்ணைக்கொட்டி மேலே எழுப்பி கான்கிரீட் மேடையமைத்து விரிவாக்கம்செய்திருந்தனர். ஆனால் என் வீடுஇருந்த இடம் அப்படியே கைவிடப்பட்டு சருகுகள் குவிந்து கிடந்தது. அங்கே செல்லும் வழிகூட மூடப்பட்டிருந்தது.

1

அங்கே இருந்த கணபதியாம்வளாகத்து வீடுதான் அப்பாவின் குடும்பவீடு. குலப்பெயர் வயக்க வீடு [வயல்கரைவீடு] என் தாத்தா சங்கரப்பிள்ளை ஆசானின் குடும்பவீடு. அது மருமக்கள் முறைப்படிக் கைமாறிச்சென்று விற்கப்பட்டு வழக்கில் சிக்கி நின்றிருந்தது. அப்பா அதை வாங்கமுயன்றார். முடியாமலானபோது அருகிலிருந்த பூர்விக நிலத்தை வாங்கி அங்கே வீடுகட்டி கணபதியம்வளாகத்து மேற்கு வீடு என்று பெயரிட்டார்.

வெண்சுதைபூசப்பட்ட மிகப்பெரிய சுற்றுச்சுவர் கொண்ட அந்தப்பழைய வீடு நான் பத்தாம்வகுப்பு படிக்கும்காலம் வரை அங்கே இருந்தது. மலையாளத் தறவாட்டுவீடுகளின் பாணியில் சுவரும் மரத்தாலானது. தட்டும்நிரையும் என்பார்கள். ஓலைக்கூரை. ஆனால் மிகப்பெரிய வீடு. நுழைவாயிலில் கொட்டியம்பலம் என்னும் வாயில்மண்டபம். அங்கேதான் வாசற்காவலர்கள் இருப்பார்கள். உள்ளே ஆண்கள் மட்டும்தங்கும் பூமுகம். அதற்கடுத்து தாய்வீடு. அங்குதான் பத்தாயங்கள், கலவறைகள். அப்பால் பெண்கள் மட்டும் தங்கும் அறப்புரை. அதற்கப்பால் சமையற்கட்டும் வேலைக்காரர்களும் தங்கும் உரப்புரை.

2

அவ்வீடு இடிந்து பேய்மாளிகை போல அன்று கிடந்தது. இன்று இரு வீடுகளும் இல்லை. ரப்பர் தோட்டமாகிவிட்டிருந்தன. உடலெங்கும் குருதி உலர்ந்த காயங்களுடன் நின்றன ரப்பர் மரங்கள். கோடை தொடங்கும் காலம். மௌனமாக சருகுகள் உதிர்ந்துகொண்டிருந்தன.

அங்கு மனிதநடமாட்டமே இல்லை எனத்தெரிந்தது. ஒற்றையடிப்பாதை கூடத் தெரியவில்லை. இரட்டைத்தற்கொலை நடந்த வீடு. நான்காண்டுக்காலம் இருண்டு கிடந்து மெல்லமெல்ல இடிந்து நிலம்பரவியது. அதை பெருவட்டருக்கு விற்றோம். அந்த அவமரணங்களின் அதிர்ச்சியிலிருந்து திருவரம்பு இன்னும் மீண்டிருக்காது. முப்பது வருடமெல்லாம் அங்கு ஒரு பொருட்டே அல்ல. அது உறங்கும் ஊர். ஊரில் ஒரு பெரியகார் வந்து நின்று மூவர் இறங்கிச்சென்று இரண்டுமணிநேரம் உலவி திரும்பிச்செல்வதை ஊரில் எவருமே பார்க்கவில்லை. அதுதான் திருவரம்பின் அமைதி.

yyy

அப்போதும் அது அப்படித்தான் இருந்தது. அக்காலத்தில் காற்றும் நீரும் பறவைகளும் போடும் ஓசையன்றி மானுட ஓசையே அரிதாகத்தான் காதில்விழும். மானுடர் மெல்லப்பேசவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடும் இருந்தது. நான் அமர்ந்து படித்த படித்துறைகளில் அமர்ந்தேன். பிமல்மித்ராவின், தாராசங்கரின், விபூதிபூஷணின் நாவல்களை வெறிகொண்டு வாசித்து இரவெல்லாம் விவாதித்த இடங்கள். தல்ஸ்தோய் அறிமுகமான காலகட்டம்.

அன்று வேலையின்மை நிலவியது. எதிர்காலம் என்னவென்றே தெரியாத இளைஞர்கள் எல்லா முனைகளிலும் அமர்ந்து பேசி நேரத்தை உந்திக்கடத்தினர். வளைகுடா திறந்தமையால் அவர்களில் பலருக்கு வாழ்வு அமைந்தது. அருகருகே ஊர்களில்தான் கோபாலகிருஷ்ணன், மணி ஆசாரி, பாஸ்கரதாஸ். எங்கோ மிக அருகேதான் தற்கொலைசெய்துகொண்ட ராதாகிருஷ்ணனும் இருக்கக்கூடும். இவ்வூரைவிட்டு அகல அவனால் இயலாது. முப்பத்தைந்தாண்டுக்காலம்! அவனுக்கு முதுமையே இல்லை. இறந்தவர்களை காலம் தீண்டுவதேயில்லை

vargese

ஆறு மாறிவிட்டிருந்தது. அங்கே அதிகம்பேர் குளிப்பதாகத் தெரியவில்லை. ஆற்றின் இருகரைகளையும் வரம்பிட்டிருந்த கைதைப்புதர்கள் இல்லை. இருமருங்கும் ரப்பர். நடுவே அன்றிருந்த ஒரு தென்னையைப்பார்த்தேன். ரப்பரால் சத்து உறிஞ்சப்பட்டு வெறுந்தூணாக நின்றிருந்தது. குருதி உண்ணும் யக்ஷி ரப்பர்மரம்

நான் இழந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். செல்வேந்திரன் இருப்பவற்றை எண்ணி மருகினார். ”ஜெ, இந்தமாதிரி ஒரு படித்துறையிலே இந்தமாதிரி ஆற்றங்கரையிலே உக்காந்துதான் நாவல்களை படிக்கணும். உங்களுக்கு இருந்த அதிருஷ்டம் தமிழிலே எந்த எழுத்தாளனுக்கும் இல்லை… நான் நல்ல இயற்கைக்காட்சி உள்ள ஊருக்குப்போகிறப்பல்லாம் இங்கே பிறந்து வளர்ந்திருக்கணும்னு நினைப்பேன்…அந்தமாதிரி எடம் இது..” என்றார்.

சுசீந்திரம் கோபுரம் கட்டப்பட்ட அதே வருடம் மூலம்திருநாள் மகாராஜா கட்டிய கல்படிக்கட்டு. இருநூறாண்டு ஆகப்போகிறது. கொஞ்சம் சரிந்திருந்தது. அங்கேயே புத்தகங்களை குவித்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து வாசிப்பேன். அங்கேயே தூங்கிவிடுவேன். ஒருமுறை என்னை ராதாகிருஷ்ணன் மிதிப்பதாக உணர்ந்து எழுந்தேன். கோதுமைநாகம் என் மேல் ஏறி மறுபக்கம் வழிந்துகொண்டிருந்தது.

திருவரம்பில் பதற்றநிலையில் இருந்தேன். காரிலேறியபோதுதான் நகமே இல்லை என்று உணர்ந்தேன். கார் செல்லச்செல்ல மெல்ல எளிதானேன். அஜிதன் காட்சிகளை கணிப்பொறியில் ஏற்றினான். நான் என் உள்ளாழத்திற்கு ஏற்றி உள்ளத்தை விடுதலைசெய்தேன்.

vargese2

அங்கிருந்து திற்பரப்பு சென்றோம். கொட்டும் அருவியில் நீராடினோம். சிவன்கோயில் முகப்பில் அமர்ந்து பாறைவெளியில் நீர் கொப்பளிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா அம்மாவை அங்கேதான் பெண்பார்த்தார். பெண் பிடித்திருந்தது. அப்பாவுக்கு அப்போதே ஒரு கண்ணில் பார்வையில்லை. சிவந்து கலங்கி ஒரு தசைத்ததும்பலாக இருக்கும் அது. அதை ஒருகுறையென அம்மாவின் அத்தை ஒருத்தி சொன்னாள். “இதுவரை வந்தவர்களில் மெட்ரிக் வரை படித்த மாப்பிள்ளை இவர்மட்டுமே. கண்ணே இல்லையென்றாலும் பரவாயில்லை” என்று அம்மா சொன்னாள்.

ஆலயமன்றி அனைத்தும் மாறிவிட்டிருந்தன. எங்கும் கான்கிரீட். பிளாஸ்டிக். ஆற்றுக்குள் கோயில்யானையை பாகன்கள் குளிப்பாட்டிக்கொண்டிருந்தனர். மூக்குக்கண்ணாடி போட்ட பாகன். கருங்கல் அடுக்கி கட்டப்பட்ட கோயிலைப்போலவே யானையும் காலத்தை கடந்தததாக நின்றிருந்தது.

நீராடியபின்னரும் உள்ளம் அணையவில்லை. திற்பரப்பு மகாதேவரை கிராதமூர்த்தி என்பார்கள். காட்டாளன். காட்டின் பெரும்குரோதமும் கருணையும் கொண்டவன். செவ்வனல் தளும்பும் மூன்றாம் விழி கொண்டவன்.

திரும்பும்போது அருமனைக்குச் சென்று வற்கீஸைப் பார்த்தேன். அவருடைய மேனகா ஸ்டுடியோவில் தம்பி சேவியருடன் இருந்தார். ஓடிச்சென்று அணைத்துக்கொண்டோம்.பரவசமான ஒரு தருணம், இன்று அவருடைய ஐம்பத்தைந்தாம் பிறந்தநாள். “கர்த்தர் நினைச்சிருக்கார்” என்று என் கைகளைப்பற்றிக்கொண்டார். வாடா போடா என்றெல்லாம் பேசி ஒரே பெஞ்சில் அமர்ந்து படித்தவர்கள். இருவரும் பன்மையில் அழைக்கும்படி வயது ஆகிவிட்டிருக்கிறது.

வற்கீஸின் முகம் அக்கணம் வரை இருந்த எடைமிக்க எண்ணங்களை அகற்றியது. இறந்தகாலமே இனியமென்சாரல் கொண்டு சிலிர்த்த நிலமென ஆயிற்று. நாங்கள் இப்போதெல்லாம் பேசிக்கொள்வதே இல்லை. பார்த்தால் தழுவிக்கொள்வோம். வெறுமே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம்.

திரும்பும்போது சிதறால் மலைக்குச் சென்றுவரலாம் என்றார் செல்வேந்திரன். நான் அங்கே ஏழாவது படிக்கும்போது வற்கீஸுடன் பள்ளியிலிருந்து குறுக்குவழியாக ஓடிவந்தேன். அது மாங்காய் காலம். பச்சைமாங்காயை உப்புடன் அறைந்து உடைத்துத் தின்ற பாறைகள். பார்ஸ்வநாதரும் வர்த்தமானரும் புடைப்புச்சிலைகளாகச் செதுக்கப்பட்ட குடைவரை.

சிதறாலம்மை என்று அழைக்கப்படும் பகவதி உண்மையில் பத்மாவதி யக்ஷி. அங்குள்ள கல்கோயில் மிகப்பிற்காலத்தில் சோழர்களால் கட்டப்பட்டது. கல்தூண்களில் சிவலிங்கமும் பார்ஸ்வநாதரும் சேர்ந்தே தெரிந்தனர். மூன்றுகருவறைகளில் இரண்டில் பார்ஸ்வநாதரும் வர்த்தமானரும். ஓரக்கருவறையில் பகவதி. ஒரே ஒரு வெள்ளையர் மட்டுமே பயணியாக இருந்தார். அங்கே காலத்தை அறியாத கரிய பாறைகள் நடுவே ஏதோ ஒரு வரலாற்றுக்குமேல் நின்றிருந்தது ஆலயம்.

சிதறால் கி.மு இரண்டாம்நூற்றாண்டு முதலே புகழ்பெற்ற சமணத்தலம். சென்ற முந்நூறாண்டுக்காலமாக இங்கே சமணர்கள் எவரும் இல்லை. வர்த்தமானரோ பார்ஸ்வரோ எவரென்றே மக்களுக்குத்தெரியாது. பத்மாவதி யக்ஷி பகவதியாக உருக்கொண்டு அருள்புரிகிறாள். இத்தனை ஆண்டுகளில் மூன்றுகருவறைகளுக்கும் ஒருநாளும் விளக்கும் மலரும் இல்லாமலானதில்லை

அம்மாவை அக்காலத்தில் யக்ஷி என்பார்கள். அறிவின் வேகமும் அடங்காத கோபமும் கொண்டவள். அம்மா தற்கொலைசெய்துகொண்டபோது “அவள் யக்ஷி ஜாதகம். அது அப்படித்தான் முடியும். கொலையோ தற்கொலையோ” என்றார் சோதிடரான பெரியப்பா . அப்பாவின் ஆவியை அருந்திவிட்டுத்தான் போனாள்.

என்வரையில் வரலாறு கடந்துசென்ற நிலம் திருவரம்பு. ஆனால் ஒருநாளும் ஒழியாமல் நான் அங்கு மலரும் சுடரும் காட்டுகிறேன். யக்ஷி கனிந்து பகவதியாக ஆகியிருக்கவேண்டும்

மறுபிரசுரம் முதற்பிரசுரம்Jan 28, 2016 

முந்தைய கட்டுரைவள்ளலார்
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம், விவாதக்கூட்டம்