மாணவர்களும் தலித் அரசியலும்

1
அன்புள்ள ஜே ,

உங்களிடம் பலகாலமாக கேட்க வேண்டுமென்று எண்ணி வந்த ஒரு விஷயம். தற்போதைய சூழலில் தலித் அரசியலை மாணவர்கள் கையிலெடுப்பது அத்தியாவசியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா. ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வட்டம் விவகாரம் வந்த போதே கேட்க வேண்டும் என எண்ணினேன். இப்போது ரோஹித்வெமூலா தற்கொலைக்கு பிறகு மீண்டும் அந்த கேள்வி தோன்றியிருக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் தலித் மாணவர்கள் ஓர் அணியாக சேர்ந்து தங்களுக்கான அரசியலை முன்வைக்கிறார்கள். முதிர்ச்சியின்மையினாலும் மற்றும் சில தூண்டுதல்களினாலும் அவர்கள் சற்றே தேசவிரோதமான போக்கை கடைபிடிக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரியதாக இருந்தாலும் அவர்கள் அரசியலை முற்றிலுமாக ஒதுக்க முடியுமா? இதனால் மாணவர்களிடையே பூசல்களும் படிப்பில் போதிய கவனமும் இல்லாமல் போவதும் நடக்க கூடியதே.

ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வட்டம் சர்ச்சை எழுந்த போதே, இது பற்றி நண்பர்களிடம் விவாதித்த போது, அதிலொருவர், எப்பொழுது ஒரு மாணவன் தன் ஆசிரியரின் சாதியை அவருக்கு எதிராக நிறுத்துகிறானோ அப்பொழுதே அவன் மாணவனாக தகுதி இழக்கிறான் என்ற கருத்தை முன்வைத்தார். அக்கருத்து ஒருவகையில் சரியானதாக இருந்தாலும், ஆசிரியர்கள் அதே தவறை மாணவர்களுக்கு எதிராக செய்யும் பொழுது, மாணவர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

உங்கள் வலைதளத்தை தொடர்து படித்து வருகிறேன். மேலும் தங்களின் வெள்ளை யானை சமீபத்தில் வாசித்தேன். ஆகையால் தலித் அரசியல் குறித்து தங்கள் நிலைப்பாட்டை நன்கறிவேன். மாணவர்கள் தலித் அரசியலை கையெடுப்பதை பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

குறிப்பு: தமிழில் எழுதி பதினைந்து வருடங்கள் ஆகிறது, பிழையிருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு
நரேந்திரன்.

 

அன்புள்ள நரேந்திரன்,

ஜனநாயக அரசியலின் அடிப்படைகளில் ஒன்று சமூகத்தின் ஒவ்வொரு அலகும் தன் உரிமைக்காகப் போராடுவதேயாகும். பிறரது இருப்பை மறுக்காத அத்தகைய போராட்டங்கள் அனைத்துமே ஜனநாயகத்தை சரியான வழியில் இயங்கச் செய்பவைதான். ஒவ்வொரு விசையும் தன் எதிர்விசையுடன் முரண்பட்டு மோதி சமரசம் கொண்டுதான் தங்கள் இடத்தை அடைகின்றன.

இத்தகைய சூழலில் ஒரு சமூக அலகு தன் உரிமையையும் வலிமையையும் உணர்ந்திருக்கவில்லை என்றால், போராடவில்லை என்றால் அது தன்னை முற்றிலுமாகவே தோற்கடித்துக்கொள்ளும் என்பதே உண்மை. சாதாரணமாகவே நீங்கள் இதைப்பார்க்கலாம். அத்தனை தொழிலாளர்களும், அத்தனை சாதிகளும் தங்கள் உரிமைக்காகத் திரண்டு போராடிக்கொண்டேதான் இருக்கின்றனர் இங்கே அந்நிலையில் தலித் மாணவர்கள் மட்டும் போராடக்கூடாது என்பதைப்போன்ற அபத்தமான கூற்று பிறிதில்லை. போராடாது அவர்களுக்கான உரிமைகள் அளிக்கப்படமாட்டாது. அவர்களின் இடம் நிலைநிறுத்தப்படாது.

போராட்டம் என்பது எப்போதும் சமநிலை உணர்வுகள் கொண்டதாகவோ, சமரசநோக்கம் கொண்டதாகவோ இருக்கவேண்டும் என்பதில்லை. பலசமயம் வலுவான உணர்ச்சிகளாலேயே மக்களை ஒருங்கிணைக்கமுடியும். ஒற்றைப்படையான கோஷங்களே போராட்டத்தை கூர்மைப்படுத்த முடியும். அபூர்வமாக அது கட்டுமீறியும் செல்லலாம்

ஒரு சமநிலைகொண்ட சமூகப்பார்வையாளன் அந்த கட்டுமீறல்களைக்கொண்டு அப்போராட்டங்களைப் புரிந்துகொள்ள முயலமாட்டான். அவை மீறல்கள் நிலைகுலைவுகள் என்று பார்க்கமாட்டான். அவற்றின் தேவையை மட்டுமே கருத்தில்கொள்வான்

தலித் மாணவர்கள் திரண்டு போராடவேண்டிய தேவை நம் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளதா? ஐயத்திற்கிடமில்லாது உள்ளது. நூறுநாற்காலிகள் வெளிவந்தபின் பிரசுரிக்க விரும்பாத கடிதங்கள் என நூறாவது எனக்கு வந்திருக்கும். அவையனைத்துமே உயர்கல்வித்தளத்தில் நிகழும் சாதியப்பாகுபாட்டின் விளைவுகள்.

உயர்ஆய்வுச்சூழலில் குருகுலமுறை நிலவுகிறது. அங்கே ஒருவரின் ஆய்வுவழிகாட்டி தன் மாணவரின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவராக இருக்கிறார். அவரால் எதையும் செய்யமுடியும். உண்மையில் நம் பல்கலைகளில் உயராய்வுத் தளத்தில் நிகழும் ஊழல்களை வேறெந்த தளத்திலும் பார்க்கமுடியாது. மாணவர்களின் ஆய்வுகளை தான் எடுத்துக்கொள்வது முதல் மாணவர்களை வீட்டுவேலைக்கு அனுப்புவதுவரை அங்கே நிகழ்கிறது. பாலியல் சுரண்டல்களும் குறைவல்ல.

ஆனால் மிகவசதியாக இங்கே ஒரு சித்திரம் உருவாக்கப்பட்டுள்ளது, பிராமணர்கள் மட்டும்தான் சாதியப்பாகுபாட்டை உருவாக்குபவர்கள் என்று. இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மிகச்சாமர்த்தியமாக எதிர்ப்புகளை பிராமணர்களுக்கு எதிராக மடைமாற்ற நம் இடைநிலைச்சாதி அறிவுஜீவிகள் முயன்று வெற்றிபெறுகிறார்கள்.

நம் கல்விநிலையங்களில் இன்று பிராமணர்களின் பங்கு அனேகமாக ஒன்றுமில்லை. அவை இடைநிலைச்சாதியினரின் கோட்டைகள். அங்குதான் தலித் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள் உச்சகட்ட அவமதிப்பையும் சுரண்டலையும் அனுபவிக்கிறார்கள்.

ஓர் உதாரணம், என் இணையதளத்திலேயே பதிவுசெய்திருக்கிறேன். நாகர்கோயிலைச் சேர்ந்த ஒரு தலித்மாணவர், வேதாந்தத்தில் முக்தி என்னும் தலைப்பில் முனைவர்பட்ட ஆராய்ச்சி செய்தார். அவரை ஆற்றுப்படுத்தியவர் வெள்ளிமலை சுவாமிகள். அவருக்கு வழிகாட்டி. ஒரியப்பிராமணர். அவர் மேலாய்வுக்காக லண்டன் சென்றார்.

பதிலுக்கு வந்தவர் ஒரு தேவர். அவரும் வேதாந்தத்தில் உயர்கல்வி கற்றவர். ‘ஒரு தலித் என்னிடமிருந்து முனைவர் பட்டத்தை எக்காரணம் கொண்டும் பெறமாட்டார்” என்று அவர் அறிவித்தார். எட்டாண்டுக்காலம் முனைவர் பட்டத்தை நிறுத்திவைத்தார். மனமுடைந்து தற்கொலைமுனை வரை அம்மாணவர் சென்றபோது அந்த ஒரியப்பேராசிரியர் லண்டனில் இருந்து இதற்கென்றே மீண்டு வந்து மீண்டும் பொறுப்பேற்று தன்பொறுப்பில் முனைவர் பட்டம் அளித்தார். சென்னையில் ஒரு கல்லூரியில் தத்துவப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார் அந்த மாணவர்.

மதுரைப்பல்கலையில் ஒரு சர்வதேசப்புகழ்பெற்ற உயிரியல் பேராசிரியர் முதல் வகுப்பிலேயே ‘நான் கோனார். நான் பிறரை ஊக்குவிக்க மாட்டேன். தலித்துக்கள் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவேண்டாம்’ என வெளிப்படையாக அறிவிப்பார் என்று கேட்டேன். ஐஐடி போன்றவற்றில் பிராமண மேலாதிக்கம் நிலவுகிறது. அங்கும் இதேநிலைதான். பிராமணர் மனநிலையும் இதேதான். சற்றும் மேலும் அல்ல, கீழும் அல்ல.

உண்மையில் பிராமணர்களிடமிருக்கும் நெகிழ்வோ புரிதலோகூட இடைநிலைச்சாதியினரிடம் இல்லை. நானறிந்த ஒரு ஆயுர்வேத மருத்துவர் தன் மாணவர்களில் ஒருசாரார் தலித்துக்களாக இருக்கவேண்டும் என்று பல்லாண்டுக்காலமாக தெளிவாக இருக்கிறார். அவரது தலித் மாணவர்கள் பலர் இன்று தேர்ந்த மருத்துவர்கள். என் மனைவிக்கு சிகிழ்ச்சை அளித்தவர் உட்பட

சமீபத்தில் கோவையில் ஒரு கண்மருத்துவமனைக்குச் சென்றேன். எழுபது சதவீதம் இலவச சிகிழ்ச்சை அளிக்கும் நிறுவனம் அது. பிராமணர்களால் நடத்தப்படுவது. அவர்களே கணிசமான ஊழியர்கள், நோயாளிகள் தலித்துக்களாக இருக்கவேண்டுமென நெறி வகுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று இடைநிலைச்சாதியினரில் இப்போக்கைக் காணமுடியும் என நான் நினைக்கவில்லை.

ஆகவே அம்பேத்கர் பேரில் ஓர் அமைப்பு உருவாகி அது தலித் மாணவர்களின் உரிமைக்குப் போராடுவதை மிக இயல்பான ஜனநாயகச் செயல்பாடு என்றே நினைக்கிறேன். ஆனால் அதை பெரியார் அம்பேத்கர் படிப்புவட்டம் என அமைத்துக்கொள்கையில் தந்திரமாக பிராமணர்களை மட்டும் எதிரிகளாக்கி இடைநிலைச்சாதியினர் தங்கள் சாதிவெறியுடன் தப்பித்துக்கொள்ளும் முயற்சி என்றே காண்கிறேன்.

இதன் அடுத்தகட்ட வினாதான் தலித் முஸ்லீம் இணைப்பு என்பது. தலித்துக்களும் இஸ்லாமியரும் இயல்பான தோழர்களாக இருக்க முடியாது, எந்நிலையிலும் இணைந்து செயல்பட முடியாது, அது தலித் நலன்களை இஸ்லாமிய மதவெறிக்குப் பலியிடுவதாகவே ஆகும் என்பதை பலநூறு பக்கங்களில் மிகமிகத் தெளிவாக திரும்பத்திரும்ப எழுதிவைத்திருக்கிறார் அம்பேத்கர். வரலாறு யோகேந்திரநாத் மண்டல் போன்றவர்கள் வழியாக அதை வலுவாக நிரூபித்தும் இருக்கிறது

தலித்துக்கள் ஒடுக்கப்படுபவர்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிறரை வெறுக்க மட்டுமே கற்பிக்கும் தங்கள் மதவெறியினால், சர்வதேச இஸ்லாமிய தேசியம் என்னும் பொருந்தாக்கனவினால் தங்களை ஒதுக்கிக்கொண்டு பிற அனைவருடனும் போரில் இருப்பவர்கள். தலித்துக்கள் அவர்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதென்பது அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பொருளற்றதாக்கும். தலித் மக்களின் இழப்பின் மேல் இங்கே இஸ்லாமிய அடிப்படைவாதம் வளரவே அது வழிவகுக்கும்

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் நிகரற்ற பணபலமும், சர்வதேசத் தொடர்புகளும், வலுவாக ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் பின்புலமும் தலித்துக்களுக்கு அவர்களின் இக்கட்டான நிலையில் தற்காலிகமான லாபங்களை அளிக்கலாம். நீண்டகால அளவில் இழப்பு மட்டுமே எஞ்சும். தங்கள் உரிமைக்காக தாங்களே போராடவேண்டும் என்பது ஜனநாயகத்தின் விதிகளில் முதன்மையானது.

இந்தப்பின்னணியில் ரோஹித் வெமூலா குறித்து எனக்கு வந்த பல கடிதங்களில் உள்ள வினாக்களுக்கு என் பதிலை அளிக்கிறேன்

1 ரோஹித் வெமூலாவின் தாய் தந்தை சகோதரன் ஆகியோர் தலித் அல்ல. அவர் தலித் என்ற பேரில் பல்கலைக்கழக இடம் பெற்றவர் என்பது தெளிவாக நிரூபணமாகியிருக்கிறது. அவரது தந்தையின் வாக்குமூலம் பதிவாகியிருக்கிறது
தலித் என ஒருவரை அடையாளம் காட்டுவது அரசதிகாரிகளால் என்னும் நிலையில் பல சாதியினர் தலித்துக்களாக தங்களை முன்வைத்து ஒதுக்கீட்டினால் லாபம்பெறுவது இங்கே நிகழ்கிறது. அது தலித்துக்கள் கவனிக்கவேண்டிய விஷயம்

ஆனால் ரோஹித் வெமூலா  தன்னை தலித் என்றே கல்விச்சூழலில் முன்வைத்திருக்கிறார். ஆகவே தலித்துக்கள் அனுபவிக்கும் அனைத்து அவமதிப்புகளையும் அவர் அடைந்திருக்கலாம். அவரது அந்த ஆங்காரம் உண்மையானது என்றே நினைக்கிறேன். அவர் தலித்தா இல்லையா என்பது இப்பிரச்சினையின் முனையை திசைமாற்றுவது.

  1. ரோஹித் வெமூலாவின் அரசியல்நிலைப்பாடுகள் இரண்டு வருடங்களில் தலைகீழாக மாறியிருக்கின்றன. விவேகானந்தர் படத்தை தன் கல்லூரி அறையில் வைத்திருந்தவர், இந்திய ஜவான்களுக்கு வாழ்த்துச்சொல்லி முகநூலில் நிலைத்தகவல் போட்டவர் இரண்டாண்டுகளில் யாகூப் மேமனுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தார். பதான்கோட் தாக்குதலையே ஆதரித்தார். அவர் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்

என் இளமைக்காலத்தில் நானே ஆறுமாதம் ஓர் அரசியல்நிலைப்பாட்டில் இருந்ததில்லை. முதிரா இளமை என்பது அதிதீவிரமாக எதிலாவது ஈடுபடுவது. தன்னை எப்படி வரையறுத்துக்கொள்வது என்று தெரியாமல் இருப்பதனாலேயே உச்சகட்ட நிலைப்பாடுகளை எடுப்பது. அவை தனிப்பட்ட உணர்வுகளுடன் கலக்கையில் பலவகையான கட்டங்களைக் ரோஹித் வெமூலா  போன்ற இளைஞர்களை அரசியல் எதிரிகளாக அல்ல கொந்தளிக்கும் இளைஞர்களாக மட்டுமே ஒரு நியாயமான கல்விநிலையம் அணுகும். அவர்களை தந்தையின் இடத்திலிருந்துதான் துணைவேந்தர்கள் அணுகவேண்டும். அதில் அரசியல்வாதிகள் தலையிட்டதுதான் பிழை.

ஏனென்றால் நான் ரோஹித் வெமூலாவின் நிலையில் இருந்திருக்கிறேன். பலமுறை கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறேன். ஒருமுறை என் செயல்பாடுகளால் கடுமையாகப் புண்பட்ட வணிகவியல் பேராசிரியர் என்னை நிரந்தரமாக நீக்கும்படி கொந்தளித்தபோது பயோனியர் குமாரசாமி கலைக்கல்லூரி முதல்வர் மறைந்த ஆர்தர் டேவிஸ் “என் சொந்தப்பிள்ளைங்கன்னு நினைச்சுகிட்டுத்தான் நான் தண்டிப்பேன். இளைஞர்கள் அப்டித்தான். மண்டை கொதிக்கிற நிலையிலேதான் கர்த்தர் நம்மகிட்ட அனுப்புறார்” என்று சொன்னதை நானே கேட்டேன். இன்று அவரை எண்ணி தலைவணங்குகிறேன்.

3 அரசாங்கத்தின் நிதியைப் பெற்றபிறகு அரசுக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார் ரோஹித் வெமூலா .

இக்கூற்று உயர்கல்வித்துறை என்றால் என்ன என்றே தெரியாதவர்களின் கருத்து. அது ஆரம்பப்பள்ளி அல்ல. அங்கே அனைத்துவகையான சிந்தனைகளும் வந்து கொப்பளிப்பதே படைப்பூக்கம்கொண்ட நிலைமை. அராஜகசிந்தனைகளுக்கு இடமில்லாத ஒரு கல்விநிலையத்தில் புதியசிந்தனை என எதுவுமே எழாது. நாம் முன்னுதாரணங்களாகக் கொள்ளும் அனைத்து மேலைநாட்டுக் கல்விநிறுவனங்களும் அத்தகையவையே

அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருப்பதற்காக அளிக்கப்படுபவை அல்ல நிதிக்கொடைகள். கல்விக்காக அளிக்கப்படுபவை. அக்கல்வி என்பது பாடப்புத்தகக் கல்வி அல்ல. முட்டியும் மோதியும் போராடியும் அலைந்தும் மாணவன் கற்றுக்கொள்ளும் அனைத்துக் கல்விகளும்தான்

எவரெல்லாம் கல்வித்துறையிலிருந்து வெளிவந்து சாதனைகளை செய்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் சற்றே ‘பிறழ்ந்த’ மாணவர்கள்தான். அப்பிறழ்வு அவர்களிடமிருக்கும் தேடல் மற்றும் மிதமிஞ்சிய உணர்ச்சிகரத்தின் விளைவு. அங்கே கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டால் வெறும் குமாஸ்தா அரைப்பிணங்கள்தான் வெளிவரும்.

4 ரோஹித் வெமூலா பெரிதாகத் தண்டிக்கப்படவில்லை. இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறார்

தண்டனை என்பது அனைவருக்கும் ஒன்றல்ல. தலித் மாணவர்களைப் பொறுத்தவரை விடுதி மறுப்பதும் உதவித்தொகை மறுப்பதும் அவர்களின் இருப்பையே அழிப்பதாகும். இரண்டாண்டுகளுக்கு முன் இதேநிலையில் என் வாசகர் ஒருவர் என்னிடம் வந்தார். உதவித்தொகை மறுக்கப்பட்டது. ’ஊருக்குத்திரும்பி அப்பா கூட துப்புரவுவேலைக்குத்தான் சார் போகணும்’ என்றார். சிலநாட்களிலேயே அவர் திருப்பி எடுக்கப்பட்டார்

ரோஹித் வெமூலா  தன்னை திருப்பி எடுக்க கடுமையாகப் போராடியிருக்கிறார். அவரிடம் பல்கலைக்கழகம் இரக்கமற்ற நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது. அது ஓர் சிறைக்கொட்டடித் தலைவரின் நிலைப்பாடு. கல்விநிலையத் தலைவரின் நிலைப்பாடு அல்ல

இத்தகைய இரக்கமற்ற நிலைப்பாடுகள் கல்விச்சூழலில் உள்ள மிகமிக நுட்பமான படைப்பூக்கம் கொண்ட மாணவர்களையே அழிக்கும். பாடப்புத்தகங்களை மட்டுமே மேயும் சராசரிகள்தான் ஜெயிப்பார்கள். அறுபதுகளில் இறுதியில் இந்தியாவில் நக்ஸலைட் இயக்கம் அரசுக்கு எதிராக எழுந்தபோது அன்றைய இந்திராகாந்தி அரசு ஏறத்தாழ ஐம்பதாயிரம் இளைஞர்களை கொன்று அதை ஒடுக்கியது.

அந்த ஐம்பதாயிரம்பேரில் இந்தியாவின் அடுத்தகாலகட்டத்தின் கலைஞர்கள், அரசியல்செயல்பாட்டாளர்கள், சிந்தனையாளார்கள் பல்லாயிரம்பேர் இருந்தனர். ஒருவேளை கேரளத்திலும் அதே இரக்கமற்ற நிலை இருந்திருந்தால் சி.ஆர்.பரமேஸ்வரனோ கல்பற்றா நாராயணனோ இன்று இருந்திருப்பார்களா என எண்ணிப்பார்க்கிறேன்.

பாரதிய ஜனதாக்கட்சியின் தலைவர்கள் கல்லூரி அரசியலில் மிதமிஞ்சித் தலையிட்டனர். அது பெரும்பிழை. இந்தத் தற்கொலை காரணமாக அத்தலையீடு பெரிதாகத் தெரிகிறது. திமுக அதிமுக காங்கிரஸ் அனைத்துக்கட்சிகளும் செய்யும் செயல்தான் இது. இது களையப்படவேண்டும். கல்லூரிகள் ஆசிரியர்களால் மட்டுமே நடத்தப்படவேண்டும். அதற்கான துணிவும் பெருந்தன்மையும் உள்ள ஆசிரியர்கள் நம்மிடையே உள்ளனர்.

5 இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. இதை ஓர் அரசியல் பிரச்சினை மட்டுமாக சுருக்குகின்றன

இது உண்மை. ரோஹித் வெமூலா வழக்கை ’பாரதீய ஜனதாவின் அட்டூழியம் பாரீர்’ என்று மடைமாற்றுவது போல தலித்துக்களை ஏமாற்றும் வேலை பிறிதில்லை. இந்த கட்சிகள் அனைத்துமே தலித் விரோதப்போக்கை வாக்கரசியலுக்காக கண்டும் காணாமல் நடிப்பவைதான்.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தலித் வெறுப்பு அரசியலை நோக்கி, அதற்கான மாற்றுவழிகளை நோக்கி இவ்வுணர்ச்சிநிலையை கொண்டுசென்றாகவேண்டிய பொறுப்பு தலித் அமைப்புகளுக்கு உள்ளது.

*
கடைசியாக ஒரு தந்தையாக எனக்கு அந்தப்பையனின் அழகிய சிரிப்புதான் நெஞ்சைத்தாக்குகிறது. அது அஜிதனின் சிரிப்பு. என் அரசியல் அந்த உணர்விலிருந்து எழுவதே

ஜெ

 

முந்தைய கட்டுரைபுதியவாசகர்களின் கடிதங்கள் 10
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 40